கொரோனா ஊரடங்கு போன்ற சூழல் ஏதாவது தலைகீழ் மாற்றங்களை உண்டுபண்ணுகிறதா என்று அடிக்கடி எவராவது எதையாவது சொல்லி பீதியை கிளப்புகிறார்கள். உண்மையோ பொய்யோ சுவாரசியமாக இருக்கிறதென்பதை எவரும் மறுக்கமுடியாது
நேற்று காலைநடை சென்றபோது வழக்கமாகப் பார்க்காத ஒரு காட்சி. தொலைவில் ஓர் ஆட்டுமந்தை, தனியாக.கூட இடையர் எவருமில்லை.பட்டியிலிருந்து அவையே உலாக் கிளம்பிவிட்டனவா?
ஆனால் மறுகணமே தெரிந்தது, ஆட்டுமந்தை அல்ல நாய் மந்தை. அப்படிச் சொல்லக்கூடாதோ? நாய்க்கூட்டம். நாய்ப் பற்றம் என்று தமிழ்ச்சொல். இத்தனை நாய்கள் இவ்வளவு ‘சொருமிப்பாய்’ சேர்ந்து செல்வதை முன்பு கண்டதில்லை
எல்லாமே ஆரோக்கியமான நாய்கள். மகிழ்ச்சியாகவேறு இருந்தன. ஒருவரை ஒருவர் மூக்கை வைத்து நோண்டி நோண்டி கொஞ்சுவதென்ன, துள்ளிக்குதிப்பதென்ன, பொய்க்கடி என்ன. வால்கள் சுழன்றுகொண்டே இருந்தன.
வழக்கமாக நாய்களுக்கு மனிதர்கள் முக்கியமானவர்கள். நம்மைக் கண்டால் தெரிந்த நாயெல்லாம் “அப்ப, எப்டி போகுது” என்றோ “சௌக்கியமா”என்றோ “பாத்து நாளாச்சே”என்றோ கேட்காமலிருப்பதில்லை. எனக்கு எல்லா நாய்களுமே தனிப்பட்ட முறையில் நண்பர்கள்தான். நாய்ப்பிரியர்களை நாய்களுக்குத் தெரியும்.
ஆனால் இவை என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் பார்த்துக்கொண்டிருப்பதையும் கருத்தில்கொள்ளவில்லை. சரி, தெரிந்த நாய்கள்தானா என்று பார்ப்போம் என்று நின்றேன். ஆச்சரியம், எல்லாமே தெரிந்த நாய்கள். ஆனால் எதுவுமே என்னை கணக்கில்கொள்ளவில்லை
நான் பார்த்துக்கொண்டே நின்றேன். யாராவது ஒருத்தர் என்னை பார்க்கிறார்களா? வெள்ளைநாய் அடிக்கடி என்னிடம் நலம் விசாரிப்பது. அது என்னை பார்த்துவிட்டு மற்றவர்களிடம் ஏதோ சொன்னது. “அந்தாள் பார்க்கிறான்”. மற்றநாய்கள் திரும்பிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டன “அவன் கிடக்கிறான்”
அவர்களுக்குள் விளையாடிக்கொண்டே சென்றனர். ஒருநாய் திடீரென்று ஓட மற்றவை பரபரவென நகங்கள் மண்ணில் உரச துரத்திச் சென்றன. ஓடிய நாயை மற்றநாய்கள் சேர்ந்து கவ்வி புரட்டிப்போட்டன. நாய் முகங்களில் சிரிப்பு உண்டு என்பதை நாயன்பர் அறிவர். நாய்கள் வாய்விட்டுச் சிரிக்கும், கெக்கலிக்கும் என்பதை அப்போது அறிந்தேன்
என்ன ஆயிற்று?ஏற்கனவே இவை மனிதர்களை நம்பி இல்லை. இப்பகுதியில் குப்பைகளில் மேய்ந்தும் இரவில் வயல்வெளிகளில் வேட்டையாடியும் வாழ்பவை. அவ்வப்போது வயல்களில் இருந்து தண்ணீர்ப்பாம்புகளை பிடித்து தின்பதுமுண்டு. கூட்டாக ஒரு பெரிய சாரைப்பாம்பை அவை புசிப்பதைக் கண்டிருக்கிறேன்
இந்த கூட்டமைப்பு வேட்டைக்கு உகந்ததாக இருக்கலாம். எதற்காக என்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அவை மகிழ்ச்சியாக இருக்கின்றன. இந்தச்சாலையில் போக்குவரத்து அனேகமாக இல்லை. அதிலும் காலையில் இது தார்ப்பாலைவனச் சாலைபோல தன்னந்தனிமையானது. தண்ணீர்ப்பாம்புகள் துணிச்சலாக கரையேற இதுவே காரணம்
கடைசிவரை அவை என்னை கண்டுகொள்ளவே இல்லை. நின்றதுதான் மிச்சம். வால்கள் தொலைவில் துடித்துவீசிச் சுழன்று அகன்று சென்றன. மனிதர்கள் தவிர எந்த உயிருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்ற கேள்வியே எழுவதில்லை.