17, பசுமை
நாமி நட்ட செடிகளெல்லாம் மிக விரைவாக வளர்ந்தன. ஒவ்வொரு நாளும் அவள் வெளியே போகும்போது செடிகள் வளர்ந்துகொண்டே இருப்பதை பார்த்தாள். இலைகள் பெருகி கிளைகள் விரிந்தன.
அச்செடிகள் விரைவிலேயே மரங்களாக மாறின. அவற்றில் காய்கள் போல பாக்டீரியாக் கொத்துக்கள் உருவாயின. அந்தக் கொத்துக்களில் இனிப்பான குளூக்கோஸ் இருந்தது.
அந்த இனிப்பு உருளைகளை அங்கிருந்த தியோக்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் தங்கள் கைகளை அந்த காய்கள் மேல் வைத்தனர். கையிலிருந்த அமீபாக்கள் கலைந்து காய்களைச் சூழ்ந்துகொண்டன. அந்த காய்களை உடலுக்குள் இழுத்துக்கொண்டன
உணவு பெருகியபோது தியோக்கள் மேலும் பெருகினார்கள். மரங்களுக்கு நடுவே நாமி நடந்தபோது அங்கே தியோக்கள் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். உணவு உண்டதும் அவை ஆங்காங்கே நிழலில் படுத்து ஓய்வெடுத்தன.
நாமி அதைப்பற்றி குருவிடம் கேட்டாள். “அவை தூங்குகின்றன. அவை அமீபாக்கள் அல்லவா? அமீபாக்களுக்கு தூக்கம் உண்டா?” என்று கேட்டாள்
குரு சொன்னது “இல்லை. அமீபாக்களுக்கு தூக்கம் கிடையாது. ஆனால் அமீபாக்கள் உடலை அசைப்பதில்லை. அவை எங்காவது ஒட்டியிருக்கின்றன. அல்லது மிதந்து செல்கின்றன. ஆனால் இவை உடல் வடிவம் எடுத்திருக்கின்றன. எல்லா இடங்களிலும் அலைகின்றன. ஓடவும் செய்கின்றன.”
“ஆமாம், எங்கும் இவை அலைகின்றன” என்று நாமி சொன்னாள்.
“அலைவதனால் இவற்றின் ஆற்றல் நிறைய செலவாகிறது. அந்த ஆற்றலை அடைய இவை நிறைய சாப்பிடவேண்டியிருக்கிறது. சாப்பிட்டவற்றை செரிப்பதற்கு அமீபாக்கள் ஓய்வெடுக்கவேண்டியிருக்கிறது” என்று குரு சொன்னது.
நாமி ஒருநாள் அந்த மரங்களைப் பார்க்கப்போனாள். அவை அவளுடைய தலைக்குமேல் வளர்ந்திருந்தன. அவற்றில் மொட்டுக்கள் வந்திருப்பதை அவள் கண்டாள்.
அவள் ஓடிவந்து குருவிடம் கேட்டாள். “அந்த மரங்களில் மொட்டுக்கள் வந்திருக்கின்றன!” என்று அவள் கூவினாள்.
“ஆமாம், அவை அரும்பாக மாறும். அதன்பின் மலராக விரியும்” என்று குரு சொன்னது.
“அவை காயாக மாறுமா?” என்று நாமி கேட்டாள்
“ஆமாம். காய்கள் உருவாகும், கனிகளும் உருவாகும். ஏனென்றால் அந்த மரங்கள் உணவை பாக்டீயாவிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. மற்றபடி அவற்றுக்கும் பூமியிலிருந்த செடிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.”
“அப்படியென்றால் அவற்றின் விதைகள் முளைக்கும், அவை காடாக மாறி இந்த கோளத்தின் மண்ணை மூடிவிடும் இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம். ஆனால் அந்த மலர்கள் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டும். அந்த மலர்களில் உருவாகும் கனிகளை பறவைகள் உண்ணவேண்டும். பறவைகள்தான் விதைகளை எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்ல முடியும்” என்று குரு சொன்னது.
“அப்படியென்றால் நான் வெளியே பறவைகளை உருவாக்குகிறேன்” என்று நாமி சொன்னாள்.
உடனே குரு வியாசரின் முகமாக மாறியது. “நீ உருவாக்குகிறேன் என்று சொல்லாதே” என்றது.
“ஏன் நான்தானே உருவாக்குகிறேன்?” என்றாள் நாமி.
“இந்த மலர்களில் தேன்குடிக்கும் வண்டுகள் மகரந்தச்சேர்க்கை செய்கின்றன. பறவைகள்தான் விதைகளை கொண்டுசென்று பரப்புகின்றன. அப்படியென்றால் காட்டை வண்டுகளும் பறவைகளும்தான் உருவாக்குகின்றனவா?” என்று குரு கேட்டது
“இல்லை. அவை காடு பரவுவதற்கு உதவிசெய்கின்றன” என்று நாமி சொன்னாள்.
“காட்டிலிருந்து வண்டுகளையும் பறவைகளையும் பிரித்துப் பார்க்கமுடியுமா? காடு இல்லாமல் அவை வாழமுடியுமா?” என்று குரு சொன்னது.
“முடியாது” என்று நாமி சொன்னாள்.
“அப்படியென்றால் வண்டுகளும் பூச்சிகளும் பறவைகளும் சேர்ந்ததுதானே காடு?” என்று குரு சொன்னது.
“ஆமாம்” என்று நாமி சொன்னாள்.
“அதாவது காடு தன்னைத்தானே பரப்பிக்கொள்கிறது. தன் மகரந்தத்தைக் கொண்டுபோக பூச்சிகளை பயன்படுத்துகிறது. விதைகளை கொண்டுபோக பறவைகளை பயன்படுத்துகிறது”
“ஆமாம்” என்று நாமி சொன்னாள்.
”அதேபோலத்தான் நீயும். காடு வெளியே போவதற்கு நீ ஒரு கருவியாக இருக்கிறாய்” என்று குரு சொன்னது.
“உண்மைதான்” என்று நாமி சொன்னாள்.
நாமி உள்ளே இருந்து பூச்சிகளின் கூட்டுப்புழுக்களை வெளியே எடுத்துச் சென்றாள். வெளியே நின்ற மரங்களின் இலைகளில் வைத்தாள். கூட்டுப்புழுக்கள் உள்ளே இருந்து வெளியே வந்தன. அவை பட்டாம்பூச்சிகளாக இருந்தன.
அவை அந்த மரங்களில் மலர்ந்திருந்த பூக்களில் தேன் குடித்தன. மகரந்தங்களை வேறு பூக்களுக்கு கொண்டு சென்றன. அவை ஏராளமான முட்டைகளை இட்டன. அந்த முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளியே வந்தன. அவை மரங்களின் இலைகளை சாப்பிட்டன.
இலைகளில் பாக்டீரியாக்கள் குளூக்கோசை சேமித்திருந்தன,அந்த இனிப்பான மாவு அவற்றுக்கு சிறந்த உணவாக இருந்தது. அவை விரைவாக வளர்ந்தன.
வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறின. சிறகுகள் வளர்ந்ததும் அவை கூட்டை உடைத்து வெளிவந்தன. சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சிகளாக மாறி பறந்தன.
நாமி ஒவ்வொரு பூச்சியாக வெளியே கொண்டுசென்று விட்டுக்கொண்டே இருந்தாள்.அவை வெளியே இருந்த காட்டில் பெருகின.
புழுக்கள் பெருக ஆரம்பித்ததும் நாமி உள்ளே இருந்து பறவைகளின் முட்டைகளை வெளியே கொண்டுசென்று வைத்தாள். அவை விரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அக்குஞ்சுகள் புழுக்களை சாப்பிட்டன. புழுக்கள் ஏராளமாக இருந்ததனால் பறவைகளும் பெருகின. அவை வளர்ந்து சிறகடித்து பறந்தன.
அந்தக் காடு முழுக்க பூச்சிகளும் பறவைகளும் பெருகி நிறைந்தன. காற்றும் வெளிச்சமும் அவற்றைப் பெருகவைத்தன. அங்கே அவை எப்படிவேண்டுமென்றாலும் பெருக இடமிருந்தது.
அந்த கண்ணாடிக்குமிழிக்குள் அதிக இடம் இருக்கவில்லை. ஆகவே அங்கே செடிகளும் மரங்களும் நெருக்கியடித்து நின்றிருந்தன. பூச்சிகளும் பறவைகளும் ஏராளமாக பெருக முடியவில்லை. அந்த சிறிய அரையுருண்டை அமைப்புக்குள்ளேயே அவை தங்களை கட்டுப்படுத்திக் கொண்டன.
உயிர்களை கட்டுப்படுத்துவது உணவு. உணவு நிறைய இருந்தால் அவை பெருகி வளரும். உணவு குறைந்தால் அவையும் குறையும். உணவை உருவாக்குபவை தாவரங்கள். தாவரங்களுக்குத் தேவை நிலமும் காற்றும் வெயிலும். ஆகவே நிலமும் காற்றும் வெயிலும்தான் உயிர்களின் அளவை தீர்மானிக்கின்றன.
தங்கத்துளி கோளத்தில் இடம் ஏராளமாக இருந்தது. காற்றும் வெயிலும் சிறப்பாக இருந்தன. ஆகவே மரங்கள் செழித்து வளர்ந்தன. மரங்கள் வளர்ந்தபோது பாக்டீரியாக்கள் பெருகின. பாக்டீரியாக்கள் பெருகியபோது மரங்கள் மேலும் பெருகின.
மரங்கள் பெருகியபோது பூச்சிகள் பலமடங்காகப் பெருகின. பூச்சிகளும் புழுக்களுமே பறவைகளின் உணவு. அந்த உணவு நிறைய கிடைத்ததால் பறவைகள் பெருகின.
பறவைகள் மரங்களின் விதைகளைக் கொண்டுசென்று புதிய புதிய இடங்களில் போட்டன. அங்கெல்லாம் காடு பரவியது. காடு பரவியபோது பாக்டீரியாக்கள் பெருகின. அவை மேலும் மேலும் ஆக்ஸிஜனை வெளிவிட்டன. ஆக்ஸிஜன் பெருகப்பெருக உயிர்கள் பெருகின.
இவையெல்லாம் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஆகவே அவை ஒன்றையொன்று வளர்த்தன. மிக விரைவாகவே தங்கத்துளி என்ற அந்த கோள் பச்சைக்காடாக மாறிவிட்டது.
தங்கத்துளியில் மண்ணின் ஈர்ப்புவிசை குறைவாக இருந்தது. ஆகவே மரங்கள் மிகப்பெரிதாக வளர்ந்தன. பூமியில் அவை எந்த அளவுக்கு வளருமோ அதற்கு நாலில் ஒரு பங்குதான் கண்ணாடிக்குமிழிக்குள் வளர்ந்தன. வெளியே அவை இருபது மடங்கு பெரிதாக வளர்ந்தன.
தங்கத்துளியின் ஈர்ப்புவிசை குறைவாக இருந்ததனால் பறவைகள் மிக உயரமாக பறந்தன. மரங்களின் இலைகளும் கிளைகளும் கூரைபோல வானத்தை மூடின.
தியோக்கள் மரங்களில் ஏறி பாக்டீரியா குலைகளை சாப்பிட்டனர். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மரங்களின் கனிகளையும் சாப்பிட ஆரம்பித்தனர்.
முன்பெல்லாம் அவர்கள் தனியாகவே வாழ்ந்தனர். ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினார்கள். கூட்டமாக வாழ்ந்தால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளமுடியும் என்று அறிந்திருந்தனர்.
அந்த கோளத்தின் தரை எப்படி வெறும் புழுதியாக இருந்தது என்று நாமிக்கு நினைவில் இருந்தது. ஆனால் காடு முழுக்க அதை மூடிவிட்டது. அந்த கோளத்தின் மண் முழுக்க வெட்டவெளியாக இருந்தது என்று சிலசமயம் அவளுக்கே நம்பமுடியவில்லை.
18, உயிர்
நாமி அந்தக் கண்ணாடிக்குமிழிக்குள் வாழ்ந்தாள். வெளியே சென்றாலும் விரைவில் அங்கே அவள் திரும்பி வந்துவிடுவாள். ஏனென்றால் அங்கேதான் குரு இருந்தார்.
நாமி அந்த கோளத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். அங்கே பல்லாயிரக்கணக்கான தியோக்கள் வாழ்ந்தன. அவளுடைய அதே உருவம் கொண்டிருந்தன அவை.
ஆனால் நாமிக்கு வயதாகிக்கொண்டே இருந்தது. அவள் வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனாள். அதன்பின் முதுமையை அடைந்தாள். அவளுடைய உடலில் தசைகள் தளர்ந்தன. உடலில் சுருக்கங்கள் வந்தன. தலையில் முடி நரைத்தது.
வெளியே வாழ்ந்த தியோக்களுக்கு வயதே ஆகவில்லை. ஏனென்றால் அவை அமீபாக்கள். உடலில் இருந்த அமீபாக்கள் வயதாகி அழிந்தால் அந்த இடத்தில் வேறு அமீபாக்கள் வந்தன. ஆகவே அவை ஒரே வடிவத்திலேயே நீடித்தன.
பூமியில் வாழ்ந்த மனிதர்கள் ஏற்கனவே ஏராளமான நோய்களை முழுமையாக அழித்துவிட்டிருந்தார்கள். அதற்கு அவர்கள் முதலில் பலவகையான மருந்துகளை பயன்படுத்தினார்கள். அதன்பிறகு மரபணுமருத்துவம் உருவாகியது.
மரபணுவாக வரும் நோய்களை அவர்கள் கண்டுபிடித்து ஒவ்வொன்றாக இல்லாமலாக்கினார்கள். நோய் வர வாய்ப்புள்ள மரபணுக்கள் இல்லாத குழந்தைகள் மட்டுமே பிறக்கச் செய்யப்பட்டன. பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்க்கும் சக்தி மரபணுவிலேயே உருவாக்கப்பட்டது.
ஆகவே பூமியிலிருந்த மனிதர்கள் இருநூறுவருடம் வரை வாழ்ந்தார்கள். நாமி மேலும் சிறந்த சூழலில் வாழ்ந்தாள். தங்கத்துளியில் தீங்கை அளிக்கும் பாக்டீரியாக்களோ வைரஸ்களோ கதிரியக்கமோ இல்லை. ஆகவே அவள் நானூறு ஆண்டுகள் வாழ்ந்தாள்.
நாநூறு வயது தாண்டியபோது அவள் மிகவும் வயதாகிவிட்டாள். அவள் வெளியே செல்வது குறைந்தது. வெளியே சென்றாலும் கொஞ்சதூரம் போய்விட்டு திரும்பி வந்துவிடுவாள். கொஞ்சதூரம் போனாலே அவளுக்கு மூச்சிளைப்பு வந்தது.
நாமி ஒருநாள் காலையில் எழுந்ததும் மிகவும் களைப்பாக உணர்ந்தாள். அவளால் எழவே முடியவில்லை. அவள் தன் கைகால்களை அசைக்க முயன்றாள். அவளுடைய இடதுகால் மட்டும் அசைந்தது
அவள் அதைக்கொண்டு கணிப்பொறியை இயக்கினாள். அதில் குரு தோன்றியது. அது டார்வினின் தோற்றத்துடன் இருந்தது.
“குரு, எனக்கு களைப்பாக இருக்கிறது. என் உடலில் என்ன நிகழ்கிறது?” என்று நாமி கேட்டாள்
“நாமி, உன் உடலுக்கு வயதாகிவிட்டது.உன் இதயத்தின் விசை குறைந்து வருகிறது. உன் மூளைக்கு ரத்தம் குறைவாகச் செல்கிறது. நீ இன்னும் சற்றுநேரத்தில் இறந்துவிடுவாய்” என்று குரு சொன்னது.
“நானும் அதை நினைத்தேன். இறப்பதுதான் நல்லது. என் உடல் மிகவும் நலிந்துவிட்டது” என்று நாமி சொன்னாள்.
“பிறப்பு போலவே ஓர் இயல்பான நிகழ்வுதான் இறப்பும்” என்று குரு சொன்னது. அப்போது அது தத்துவஞானியான ஷோப்பனோவரின் வடிவில் இருந்தது.
நாமி வெளியே பார்த்தாள். அந்த கண்ணாடிக்குமிழி அடர்ந்த காட்டுக்குள் இருந்தது. வெளியே லட்சக்கணக்கான தியோக்கள் பரவியிருந்தன.
“குரு தியோக்கள் இங்கே எவ்வளவுகாலம் நீடிக்கும்?” என்று நாமி கேட்டாள்.
“அதை நான் சொல்லமுடியாது. அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. சூழலுக்கேற்ப அவை மாறிக்கொண்டிருப்பதுவரை இங்கே அவை நீடிக்கும்” என்று குரு சொன்னது. அப்போது அது டார்வினின் முகத்துடன் இருந்தது.
“என்னென்ன மாறுதல்கள் அவற்றில் வரக்கூடும்?” என்று நாமி கேட்டாள்.
“பூமியில் பரிணாமத்தில் என்ன நிகழ்ந்ததோ அதுவே இங்கும் நிகழலாம். அதற்கான சில அடையாளங்களும் தெரிகின்றன” என்று குரு சொன்னது.
“என்னென்ன நிகழலாம்? சொல்லுங்கள்”என்று நாமி கேட்டாள்.
“இந்த உடல்கள் அமீபாக்களாலான குவியலாகவே இதுவரை இருந்தன. அமீபாக்கள் தேவையென்றால் தனித்தனியாக பிரிந்து மீண்டும் இணைந்துகொண்டன. ஆனால் இப்போது இந்த உடலின் வடிவில் இருப்பதுதான் சிறப்பானது என்று அவை அறிந்துவிட்டன” என்று குரு சொன்னது.
“ஆமாம், அவை கலைவது மிக அரிதாகவே இப்போது நடைபெறுகிறது” என்று நாமி சொன்னாள்.
“ஆகவே அவை இப்போது ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இணைந்து வருகின்றன. மனித உடலில் செல்கள் இணைந்திருப்பதுபோல அவை ஒரே உடலாக ஆகிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் அவை ஒரே உடலாகவே இருக்கும்” என்று குரு சொன்னது.
“அதாவது இப்போது அவை வரிசையான எறும்புக்கூட்டம் போல உள்ளன. எதிர்காலத்தில் மணிகளைக் கோத்த மாலைபோல ஆகிவிடும். இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம். அதன்பின் அவை ஒரே உடலாகவே ஆகிவிடும். அந்தமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று குரு சொன்னது.
”அது எப்படி நிகழும்?” என்றாள் நாமி
“அமீபாக்களின் டி.என்.ஏ என்னும் மரபணுக்கூறு மாறிவிடும். அவை ஒரே உடலாகவே வாழமுடியும் என்ற நிலை வரும்”
“வேறு என்னென்ன மாற்றங்கள் நிகழும்?”என்று நாமி கேட்டாள்.
“இந்த அமீபாக்களாலான உடல் இதுவரை உடலின் எல்லா பகுதியாலும் ஒளியை உணர்ந்தது. எல்லா அமீபாக்களும் ஒளியை தங்கள் உடலால் உணர்ந்தன” என்று குரு சொன்னது.
“ஆமாம், அவை ஒளி ஊடுருபுபவை” என்று நாமி சொன்னாள்.
“அப்படி முழு உடலிலும் ஒளி நுழையும்படி இனிமேல் இருக்கமுடியாது. அவற்றின் உடலின்மேல் காற்றும் மணலும் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆகவே அவற்றின் உடலின் மேல்பகுதி கடினமாக ஆகிக்கொண்டிருக்கிறது” என்று குரு சொன்னது
“அதாவது அவற்றுக்கு தோல் உருவாகிறது, இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம். அவற்றின் மேல்பகுதியிலிருக்கும் அமீபாக்கள் கடினமான ஒரு தோல்பரப்பாக மாறிக்கொண்டிருக்கின்றன. அவை உடலை மூடுகின்றன. ஆகவே அவற்றால் பாறைமேல் கூட ஏறமுடிகிறது. காற்றில் நிற்க முடிகிறது” என்று குரு சொன்னது.
“ஆமாம், அதை நான் கவனித்தேன்” என்று நாமி சொன்னாள்.
“இதன்விளைவாக இப்போது அவற்றின் முகத்தில் உள்ள அமீபாக்கள் மட்டுமே ஒளியை உணர்கின்றன. அங்கே மட்டும் ஒளி உள்ளே போகிறது” என்று குரு சொன்னது.
“அதாவது , இப்போது முகமே கண்ணாக இருக்கிறது இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆம், ஆனால் அதுவும் இன்னும் நீண்டநாள் அப்படியே இருக்காது. முகத்திலேயே ஒரு பகுதியில் மட்டும் நன்றாக ஒளி உள்ளே போனால் போதும். மற்றபகுதிகளில் ஒளி உள்ளே போகவேண்டியதில்லை என்று ஆகும். ஒளி ஊடுருவும் அந்தப்பகுதி கண்களாக மாறிவிடும்…”என்று குரு சொன்னது.
“மனிதனைப் போலவே கண்கள் உருவாகி வருமா?” என்று நாமி கேட்டாள்
“ஆமாம். ஒளியே கண்களை உருவாக்குகிறது. ஒளி எல்லா இடங்களிலும் ஒன்றே. ஆகவே கண்களும் எல்லா இடங்களிலும் ஒன்றுதான்” என்றது குரு
“ஒளியா கண்களை உருவாக்குகிறது?” என்றாள் நாமி
“ஆமாம். கண்கள் ஒளியை அறிகின்றன. ஒளியை அறியும்படி கண்கள் உருவாகின்றன. ஒளியே கண்களை உருவாக்குகிறது”
“அந்தக் கண்கள் முகத்தில்தான் உருவாகுமா?” என்றாள் நாமி
“ஆமாம், ஏனென்றால் அப்படி கண்கள் உருவாக அவசியமான அமைப்பு முகத்தில் ஏற்கனவே உள்ளது. ஒரு நீரோடை இருந்தால் அதன் வழியாகத்தானே நீர் வழிந்தோடும்? அதைப்போல இந்த உடல்களின் அமைப்பு இப்படி இருப்பதனால் அதுவே நிகழ்வதற்கு வாய்ப்பு மிகுதி” என்று குரு சொன்னது.
“அடுத்தபடியாக என்ன நிகழும்?” என்று நாமி கேட்டாள்.
“இதேபோல வாயும் உருவாகி வரும். முன்பு இவை முழு உடலாலும் உண்டன. உணவின்மேல் உடலை வைத்து அப்படியே உள்ளே இழுத்துக்கொண்டன. இப்போது உணவின்மேல் கைகளை மட்டும் வைக்கின்றன. கை கலைந்து உணவைச் சூழ்ந்துகொண்டு உள்ளே இழுக்கிறது.”
“ஆமாம். ஆனால் அவற்றின் கை இப்படி கலைந்துகொண்டே இருக்கமுடியாது. கைகள் உறுதியாக மாறினால்தான் அவற்றால் உணவை பொறுக்க முடியும்” என்று நாமி சொன்னாள்.
“இப்போதே அவற்றின் கைகள் உறுதியானவையாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சில தியோக்கள் கைகளால் உண்பதற்குப் பதிலாக முகத்தால் உண்ண ஆரம்பித்திருக்கின்றன” என்று குரு சொன்னது
“அவற்றின் கைகளில் அந்தப் பழக்கம் பதிவாகியிருக்கிறது இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம், உணவைக் கைகளால் அள்ளி உடலுக்குக் கொண்டுபோக அவை முயன்றன. ஆனால் கை நேராக முகத்துக்குத்தான் போயிற்று. ஏனென்றால் மனிதனின் கைகள் பரிணாமத்தில் அப்படித்தான் உருவாகியிருக்கின்றன” என்று குரு சொன்னது.
“முகத்தில் வாய் உருவாகிவருமா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம். வாய் உருவாகி வரும். இப்போதே சில தியோக்களில் வாய்போன்ற துளை உருவாகிறது. வாய் உருவானால் வயிறு உருவாகி வரும். இரைப்பை, குடல்கள் எல்லாமே உருவாகும்” என்று குரு சொன்னது.
“கண்ணும் வாயும் உருவானால் அவை மனிதர்களைப் போலவே ஆகிவிடும். அறிவும் உருவாகலாம் இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம். அவற்றின் அறிவு என்பது இப்போது உடல்முழுக்க எல்லா அமீபாக்களிலும் பதிவாகிறது. இனி கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த உறுப்புகளுக்குத் தேவையான அறிவு மட்டும் அந்தந்த உறுப்புகளில் இருக்கும். மற்ற அறிவு முழுக்க ஒரே இடத்தில் சேமிக்கப்படும்.அந்த உறுப்பு அறிவைச் சேமிப்பதை மட்டுமே செய்யும்” என்று குரு சொன்னது.
“அதாவது மூளை உருவாகிவிடும் இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“ஆமாம், மூளை உருவாகிவிடும். ஏனென்றால் இந்த உடலில் மூளை இருப்பதற்கான வசதி இதன் அமைப்பிலேயே உள்ளது.” என்று குரு சொன்னது.
நாமி புன்னகைத்தாள். அவளுக்கு நீண்ட பெருமூச்சு ஒன்று வந்தது.
“இனி இந்த உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்டவேலையை மட்டுமே செய்யும்” என்று குரு சொன்னது.
“அதன்பின் அவை தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் என நினைக்கிறேன்” என்றாள் நாமி.
“ஆமாம். சூழலுக்கு ஏற்ப மாறுவது உயிர்களின் முதல் திறமை. தனக்கு ஏற்ப சூழலை மாற்றிக்கொள்வது இரண்டாவது திறமை” என்று குரு சொன்னது.
“இங்கே மனிதர்களின் இன்னொரு வடிவம் உருவாகிறது இல்லையா?” என்று நாமி கேட்டாள்.
“இந்த உடலின் அமைப்பே இவர்களை மனிதர்களாக ஆக்கிவிடும்” என்று குரு சொன்னது.
“மனிதன் என்பவன் அவன் உடல்தானா?” என்று நாமி கேட்டாள்.
குரு ஷோப்பனோவராக மாறியது. குரு சொன்னது “உடல் மட்டும் அல்ல. மனிதனின் எந்த ஒரு விஷயமும் ஒட்டுமொத்த மனிதனையே காட்டுகிறது. மனிதனின் ஒரு விரல் மட்டும் இருந்தாலே முழு மனிதனை அதிலிருந்து உருவாக்க முடியும்” என்று சொன்னது.
“ஏன்?” என்றாள் நாமி.
“ஏனென்றால் ஒட்டுமொத்தமும் அதன் ஒரு பகுதியும் வேறுவேறல்ல. கடலின் ஒரு துளிகூட கடல்தான்.”
“ஆமாம், மனிதனின் ஒரு செல் இருந்தாலே மனிதனை மீண்டும் உருவாக்க முடியும். அதற்குள் இருக்கும் டிஎன்ஏயிலேயே மனிதனின் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. அவனுடைய உருவம் நிறம் மட்டுமல்ல குணங்களும் அறிவும் எல்லாம் அதில் உள்ளன” என்றாள் நாமி.
குரு வியாசராக மாறியது. குரு சொன்னது “அந்த ஒரு செல்லிலேயே வாழவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான அடிப்படையான பண்புகள் உள்ளன.”
நாமி “உண்மைதான்” என்றாள்.
“ஆலமரத்தின் சின்னஞ்சிறு விதைக்குள் ஆலமரம் இருக்கிறது. விதை முளைத்து ஆலமரம் வெளிவருகிறது. அப்படியென்றால் அந்த ஆலமரம் விதைக்குள் எந்த வடிவில் இருக்கின்றது?” என்று குரு கேட்டது.
“எந்தவடிவில்?” என்றாள் நாமி.
“விதைக்குள் மரம் நுண்வடிவில் உள்ளது. விதை வளரும்போது அந்த நுண்வடிவம் மரம் ஆக மாறுகின்றது. அதாவது பார்க்கமுடியாத வடிவில் மரம் உள்ளது.”
“ஆமாம்” என்றாள் நாமி.
“எந்த ஒருவிஷயமும் முதலில் நுண்வடிவில் உள்ளது. அதன்பிறகு பருவடிவத்தை அடைகிறது. பருவடிவம் அழிந்தால் மீண்டும் நுண்வடிவுக்கே திரும்பச் செல்கின்றது.”
நாமி அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள். பிறகு கேட்டாள். “குரு இந்த பிரபஞ்சம் மிகமிகமிகப் பிரம்மாண்டமானது. நினைத்துப் பார்க்க முடியாத அளவு பெரியது. இதில் கோடானுகோடி நட்சத்திரங்கள் உள்ளன. கோடிகோடி கோள்கள் உள்ளன. இந்த பிரபஞ்சமும் அப்படி நுண்வடிவில் இருந்ததா?”
“ஆமாம். இந்தப்பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு நுண்வடிவில் இருந்திருக்கவேண்டும். இது இல்லாமலானால் மீண்டும் தன் நுண்வடிவத்தை அடையும். இருப்பது இல்லாமலாகாது. இல்லாமல் இருப்பது தோன்றியும் வராது.நுண்வடிவில் இருப்பது பருவடிவத்தை அடையும். பருவடிவத்திலிருப்பது நுண்வடிவத்தையும் அடையும்.”
நாமி கேட்டாள். “பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே இருக்கும் அந்த நுண்வடிவத்திற்கு என்ன பெயர்? அதன் இயல்புகள் என்ன?”
“அது நம்மால் அறியப்பட முடியாதது. அதுதான் இந்தப் பிரபஞ்சம். இந்தப்பிரபஞ்சத்தை வைத்து அதற்குப் பெயரிடலாம். அதன் இயல்புகளையும் இந்தப்பிரபஞ்சத்தை வைத்து விளங்கிக்கொள்ளலாம்” குரு சொன்னது.
‘ஆனால் அது இந்தப்பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டது அல்லவா?” என்றாள் நாமி
“ஆமாம். ஆகவே நாம் என்ன சொன்னாலும் அது நம்முடைய புரிதல்தான். அது என்ன என்று நம்மால் அறியவே முடியாது” என்று குரு சொன்னது.
நாமி நீண்டநேரம் கண்கலை மூடி அமர்ந்திருந்தாள். பிறகு “நான் பருவடிவத்தை இழக்கப்போகிறேன். நுண்வடிவத்தை அடையப்போகிறேன்” என்றாள்
குரு ஒன்றும் சொல்லவில்லை. நாமி நீண்ட மூச்சை இழுத்துவிட்டாள். அவள் உயிர் பிரிந்தது. குரு கணிப்பொறியில் இருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு அது தானாகவே தன்னை அணைத்துக்கொண்டது.
வெளியே தங்கத்துளியின்மேல் சூரியன் எழுந்தது. அந்த வெளிச்சத்தில் கீழே விரிந்திருந்த காடு ஒளிகொண்டது.
[மேலும்]