ஏழாம் உலகம்: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
 
நான் ஒரு தீவிர வாசிப்பாளனில்லை. ப்ரென்சு இலக்கியத்திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் உள்ள பெயர்களுக்கும் அவர்கள் உணவுவகைகளுக்கும் வித்தியாசம் தெரியாது எனக்கு. ஏன் தமிழ் இலக்கியத்திலேயும் விருத்தம் வருத்தம் தரும், கலிப்பா கண்ணைக்கட்டும். உரைநடையிலேயுமே கூட கமா புல்ஸ்டாப் இல்லாத புத்தகங்கள் மீது தீராத கொலைவெறி. ஃபீல்குட் புத்தகங்கள் மட்டுமே பெரும்பாலும் படிப்பேன்.
 
தீவிர இலக்கியத்தின் பக்கம் ஒதுங்காமல் இருப்பதற்கு உண்மையான  காரணம் அவைதரும் வலியைத் தாங்கச் சக்தி இல்லாததுதான்.
 
ஏழாம் உலகம் புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன் படித்தேன் – மேலோட்டமாக. அந்த உலகம் காட்டிய வலி, ரத்தம், அலட்சியம், அருவருப்பு இவற்றை 50 பக்கங்களுக்கு மேல் ஜீரணிக்க முடியாமல் புத்தகத்தை மூடினேன், பரண் மேல் வைத்தேன். மறந்தேன் – அதாவது, மறக்க நினைத்தேன்.
 
சமீபத்திய உங்கள் Behindwoods பேட்டியில் நான் கடவுளின் பின்புலமாக வரும் ஏழாம் உலகத்தைப் பற்றிய விவரணை கண்டதும் மீண்டும் படிக்க ஆவல் துளிர்த்தாலும், வலியை வலியச் சென்று ஏற்பானேன் – மஸாக்கிஸமா என்ற கேள்வியும் துரத்த தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன்.
 
படிக்க எதுவும் இராத, பார்க்க எதுவும் இராத சனிக்கிழமை இரவில் சில பக்கங்களேனும் படிக்கலாம் என்று நேற்றிரவு 10 மணி போலத் தொடங்கினேன். ஞாயிறுகாலை வழக்கம்போல வேலைக்குப் போகவேண்டியதால் எப்படியும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடாது என்ற முன்முடிவுடன்.
 
இப்போது தெரிந்தே இறங்கினேன் உருப்படிகளின் வாழ்க்கைக்குள். போத்திவேலு பண்டாரத்தின் “நற்சிந்தனைகளுடன்” தோலை மணிபர்ஸ் ஆக்கும் உருப்படிகள், வித்து கொடுக்கும் தொரப்பன், பெத்து கொடுக்கும் முத்தம்மை, உருப்படி கொள்முதல் செய்யும் சகாவு, செந்தமிழ் பேசும் மாமியார், பலபட்டறை ஆன சின்னவள், பாயசச் சாப்பாடுக்கு ஏங்கும் குய்யன் – எவரையும் நான் நேரில் பார்த்ததில்லை. பார்த்ததில்லை எனச் சொல்ல முடியாது, கவனித்ததில்லை. அவர்களைப்பற்றிக் கவலைப்பட்டதில்லை. கவலைப்படத் தேவை இருக்கும் அளவுக்கு அவர்கள் என் கவனம் ஈர்த்ததில்லை.
 
இரவு இரண்டு மணி ஆனது நாவல் முடிய. மூடி வைத்தபிறகு அத்தனை பேரும் என் எதிரே வந்து வரிசையாக நின்று கேள்வி கேட்கிறார்கள். வெட்கப்படாமல் மின்குளிரை ஏற்றுகிறாயே.. கூச்சம் வேண்டாம்? காபி குடிக்கிறாயே? எங்கள் சவுகரியங்களை அபகரித்தவன் நீயா?
 
நானில்லை எனத் தோன்றினாலும் அவர்களுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. அவர்கள் இன்னும் சில நாள் என் மனதின் விருந்தாளிகள். விரட்ட நினைத்தாலும் போகமாட்டார்கள்.  நான் அனுபவிக்கும் எல்லா வசதிகள் மேலும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
 
200 பக்கம் அச்சடித்த காகிதங்களுக்கு இவ்வளவு வலிமையா? எப்படி முத்தம்மையும் எருக்குவும் முழு உடலோடு என் முன் நிற்கிறார்கள்? எப்படி துபாய் இல்லத்துக்குள் இப்படி ஒரு நாற்றம் வந்தது? இட்லி ஏன் வாந்தி கிளப்புகிறது? இப்படி ஒரு எழுத்து வலிமையா?
 
ஆனால், நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். சும்மா டிடெக்டிவ் நாவல் படித்துக்கொண்டிருந்த என் மேல் தேவையில்லாத(?) குற்ற உணர்ச்சியை ஏற்றி வைத்ததற்கு உங்கள் மேல் வழக்குப் போடாமல் இருப்பேனா என்பதே சந்தேகம்.
 
அன்புடன்,
சுரேஷ்.
அன்புள்ள ஜெயனுக்கு,

நான் ஏழாம் உலகத்தை படித்து அதிர்ந்து போனேன் ஐந்து வருடங்கள் இருக்கும்.பின் போன வருடம் அது குறித்து சிலாகித்து நான் உங்களுக்கு கடிதம் எழுதியபோது அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல் நீங்கள் அடக்கத்துடன் எழுதிய கடிதம் இன்னும் என்னிடம் உள்ளது.தமிழின் தலைசிறந்த படைப்புகளை வரிசைப்படுத்தினால் அதில் ஏழாம் உலகம் நிச்சயம் முதல் ஐந்து இடத்திற்க்குள் இருக்கும்.ஆனால் தமிழ் இலக்கிய இதழ்களோ அல்லது வெகுசன பத்திரிக்கைகளோ அதைப் பற்றி இன்று வரை குறிப்பிடாதது எனக்கு வருத்தமே.புயலிலே ஒரு தோணி,மோகமுள்,சாய்வு நாற்காலி வரிசையில் ஒரு பெரிய படைப்பு.என்னைக் கேட்டால் விஷ்ணுபுரத்தை விட சிறந்த படைப்பு.நீங்கள் கோபித்துக் கொண்டாலும் சரி.
 
                                                                                                  முரளி,இலால்குடி.
**
அன்புள்ள ஜெயமோகன்
நான் இன்னும் ஏழாம் உலகம் படிக்கவில்லை. என் மகள் எழுதிய மதிப்புரை ஒன்று என் ஆர்வத்தை தூண்டியது.
 
அவள் உங்கள் நூலை மதுரை புத்தகக் கண்காட்சியில் வாங்கியதாகச் சொன்னாள். ஒரே மூச்சில் வாசித்தாள். அவள் உங்கள் தீவிரமான வாசகி என்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன்.
ஐதராபாதில் அமெரிக்கன் ஃபிலிம் டிசைன் பயிலும் என் மூத்த மகள்தான் உங்கள் பெயரை எங்கள் வீட்டில் பழக்கபப்டுத்தியவள். அவள் நீங்கள் கோவை பி எஸ் ஜி பொறியியல் கல்லூரிக்கு வந்தபோது உங்களிடம் உரையாடியிருப்பதாகச் சொன்னாள்.  அப்போது அவள் அங்கே காட்சிக்கலை தொழில்நுட்ப மாணவியாக இருந்தாள். ஆயிரம்கால் மண்டபம் என்ற தொகுப்பில் உள்ள உங்கள் கதை ஒன்றை ‘மாபெரும் கம்பளம் பற்றிய கனவு’ அவள் ஒரு அனிமேஷன் சித்திரமாக ஆக்கியிருந்தாள்
கந்தசாமி சங்கரநாராயணன்
 

முந்தைய கட்டுரைவரலாறு ,ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி