திருமந்திரம் பற்றி…

திருமந்திரம் கற்பது

அண்ணன்,

வணக்கம். ஆறுமுகத்தமிழன். நலம் விழைகிறேன். ‘திருமந்திரம் கற்பது’ என்ற பதிவை ஒட்டி இதை எழுதுகிறேன்.

திருமந்திரம் இந்திய இடங்கைத் தந்திர (வாம மார்க்கத் தாந்திரீக) மரபின் பெருநூல்களில் ஒன்று என்று நீங்கள் எழுதியிருக்கக் கண்டேன். வியப்பாக இருந்தது. திருமந்திரம் வைதீக மரபைக் காட்டிலும் தந்திர மரபை உடன்படுகிற, தந்திர மரபில் கால்கொண்ட, தந்திர மரபைத் தழுவிக்கொள்கிற நூல்தான். ஆனால் அது இடங்கை மரபைப் பேணியது; அந்த மரபின் பெருநூலாக அது இருந்தது என்பதற்கு என்ன சான்று அண்ணே?

திருமந்திரம் புலால் மறுக்கிறது; கள் மறுக்கிறது; ‘வாமத்தோர் தாமும் மதுஉண்டு மாள்பவர்; காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர்’ என்று வெளிப்படவும் வாமத்தை மறுதலிக்கிறது.

ஒருவேளை விந்து சயம், போக சர ஓட்டம், விந்துவிடாப் புணர்ச்சி என்று பேசுவதால் திருமந்திரம் இடங்கைத் தந்திர மரபின் பெருநூல் என்று சொல்கிறீர்களோ? ‘மாதரிடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலினால் விடார் யோகம் கலந்தவர்’ என்று அது விதந்தோதுகிறது என்றாலும் அதையே முற்றான வழிமுறையாக வைத்த நூலா அது?

வாமம் வழி என்றால் வாமம் வழி; காமம் வழி என்றால் காமம் வழி; ஓமம் வழி என்றால் ஓமம் வழி; நாமம் வழி என்றால் நாமம் வழி; அவரவர் தமதமது அறிவறி வகைவகை என்று பேசுவதே அதன் நோக்கம் அல்லவா? ‘நான் சொன்னவாறு செய்யாவிட்டால் உய்தி பெறமாட்டாய்’ என்று தேடுகிறவர் தலையில் தன் வழிமுறையைக் கிட்டிக்காமல், தேடுகிறவருக்குத் தேட்ட அடிப்படைகளையும் அளவைகளையும் கற்றுக் கொடுத்து, ‘உன் வழி நீ தேர்; உன் தேர் நீ நடத்து; பார்த்தசாரதிகள் இதற்கெதற்கு’ என்று ஊக்கம் கொடுத்து, விடுதலை கொடுத்து, தேடுகிறவர் தானே தனது வழி காணச் செய்வதே அதன் இலக்கு என்றே தோன்றுகிறது. விடுதலைக்கு ஆற்றுப்படுத்துகிற நூல், கட்டளை நூலாக இல்லாமல் விடுதலை நூலாக இருப்பதுதானே முறை?

உரிய ஆசிரியர் இல்லாமல் திருமந்திரத்தைக் கற்க முடியாது; முயலவும் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். கூடவே திருமந்திரத்தைக் கற்பிக்கும் தகுதியுள்ள ஆசிரியர் ஒருவர்கூடக் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் திருமந்திரத்தைக் கல்லாமலே விட்டுவிடவேண்டுமா அண்ணே? கல்லாமல் பாகம் பட வாய்ப்புண்டா? கற்பிக்க ஆளில்லை என்று கல்லாமல் விட்டால், நீங்கள் சுட்டியிருப்பதைப்போல, ‘ஒரு சிந்தனை மரபின் ஊடாக உருத்திரண்டு வந்த’ மெய்யறிவு நூலான திருமந்திரம், கற்பாரே இல்லாமல் கடையழிந்து போகாதா? அது நல்லதா?

கற்பிக்கும் ஆசிரியர்க்குச் சில இலக்கணங்களை வரையறுத்திருக்கிறீர்கள்: ஓர் அறிவு மரபைத் தொடர்ச்சியாகக் கற்றுப் பேணிக் கைமாற்றி வரும் குரு மரபின் கண்ணியாக அந்த ஆசிரியர் இருக்க வேண்டும்; குறைந்தது மூன்று தலைமுறைக்கான ஆசிரிய-மாணவர் மரபில் அவர் கற்று வந்திருக்கவேண்டும். இதைப் படித்தபோது திருமந்திரம் கற்றலைப் படிக்கிறோமோ அன்றிக் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவுகளில் ஒன்றைப் படிக்கிறோமா என்று கொஞ்சம் குழம்பினேன். பிறகு தெளிந்து, ஒரு குறிப்பிட்ட அறிவு மரபில் வலுவாகக் கால் பாவிக் கிளை பரப்பும் ஆசிரியராக அவர் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.

நல்லதண்ணே! அவ்வாறு ஓர் அறிவு மரபில் கால் ஊன்றிக் கிளை பரப்பும் ஆசிரியர் ஒருவர் சிக்காதபோது, ஆறு மதங்களையும் கற்கும் கொள்கை கொண்ட தூய அத்துவைத மரபின் ஆசிரியரிடமிருந்து திருமந்திரத்தைக் கற்கலாம் என்பது எவ்வாறு சரி? அது மரபுச் சோரம் இல்லையா? தன் கண் கொண்டு பார்க்கையில் வறண்டு தெரியும் உலகம், பச்சைக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் பசேலென்று தெரியும் என்பதைப்போல இல்லையா இது? அத்துவைதத்தின் மறுதலை மரபுகளான விசிட்டாத்துவைதத்தையும் துவைதத்தையும் அத்துவைத ஆசிரியப் பீடமான சங்கர மடத்தில் படிக்க வேண்டும் என்று சொல்வதைப்போல இல்லையா இது? அத்துவைத ஆசிரியர் ஒருவரிடம் இராமானுசர் படித்த கதை நாம் அறிந்ததுதானே?

மேலும் அண்ணே, அத்துவைத மரபு அனைத்தையும் உள்ளடக்கிய மரபு என்றால் ஏன் இத்தனை மறுதலை மரபுகள் பெருகின? ஒருவேளை மறுதலைகள் எல்லாம் மாயையோ? உள்ளதையெல்லாம் இல்லதாகவும் இல்லதையெல்லாம் உள்ளதாகவும் கருதி மயங்குகிறோமோ? அத்துவைத ஆசிரியரே அனைத்தையும் கற்பிப்பார் என்றால் வேற்றுமைகள் களையப்பட்டு ஒற்றைமை தலைப்படுமோ?

திருமந்திரத்தைக் குறித்து நல்ல நூல்கள் எழுதப்படவில்லை; நல்ல பேச்சுக்கள் பேசப்படவிலை என்பதை உங்கள் கருத்தாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் எண்ணுவதுபோல எல்லாம் பொருளற்ற உளறல்கள் என்றே வைத்துக்கொண்டாலும், பொறி அனைந்துவிடாமல் பாதுகாத்து வைத்தவை என்ற வகையில் அவை போற்றப்படவும், ஓர் அறிவு மரபு அழிந்து போய்விடாமல் பாதுகாத்து வைத்த வகையில் கொண்டாடப்படவும் வேண்டியவையே. அவற்றுக்கு நெஞ்சார ஒரு போற்றி.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லவேண்டும் அண்ணே: திருமந்திரத்துக்கு உரைகள் எழுதிய அருணை வடிவேல் முதலியார், தண்டபாணி தேசிகர், இராமநாத பிள்ளை, G.வரதராசன் அனைவரும் நீங்கள் நயக்கிற மூன்று தலைமுறை ஆசிரிய-மாணவ மரபின் கண்ணிகளே. முதல் இருவரின் உரைகளைச் சைவ சித்தாந்த ஆசிரிய மரபின் பலப்பல கண்ணிகளைச் சுமந்த முதன்மைச் சைவ மடங்களே வெளியிட்டிருக்கின்றன.

‘இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை’ என்ற திருமந்திரப் பாட்டுக்கு நீங்கள் சுட்டியிருக்கும் உரை அருணை வடிவேல் முதலியார் எழுதியது. திருமந்திரத்தில் ஓரிடத்தில் உடம்பின் வகைகள் சொல்லப்படுகையில், நீங்கள் சுட்டும் வைப்புமுறைப்படி, தூல உடம்பு, சூக்கும உடம்பு என்று இருவகைகள் காட்டப்படுகின்றன. தொடர்ச்சியாகத் தூல உடம்பின் இலக்கணமும் சூக்கும உடம்பின் இலக்கணமும் சுட்டப்படுகின்றன. தூல உடம்பு அல்லது பருவுடல் என்பது இரதம், அதாவது இரசம், அதாவது சாரம் (அன்ன சாரம் / உண்டி முதற்றே உணவின் பிண்டம்), குருதி, இறைச்சி, தோல், மேதை போன்ற நிலையற்ற, அழுக்குப் பொருள்களால் ஆன தொகுதி; சூக்கும உடம்பு என்பது வேறு வகைச் சேர்மானங்களால் ஆனது என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகிறார். ஆகவே அந்தப் பாடலுக்கு எழுதப்பட்ட உரை திருமந்திரப் பாடல்களின் முன்பின் தொடர்ச்சி கண்டு எழுதப்பட்டது. பிழைபட்டதும் இல்லை; அபத்தக் களஞ்சியமும் இல்லை. மேலும் இரதம் என்பதற்கு உரையாசிரியர் தேர் என்று பொருள் கொள்ளவும் இல்லை. இரசம் என்றுதான் பொருள் கொள்கிறார் (இரதம் – இரசம்; அஃதாவது, உண்ணப்படும் உணவிலிருந்து ஊறிக் குருதி முதலியவாய்ப் பரிணமிப்பது அதுவே; குருதி முதலியன நிலைபெறுவதற்குத் துணையாதல் பற்றி முதற்கண் கூறப்பட்டது). இந்த விளக்கம் மேற்படிப் பாட்டின் பொழிப்புரையில் இடம்பெறாமல் குறிப்புரையில் இடம் பெறுகிறது. கவனம் பிசகியிருக்க வாய்ப்புண்டு.

அவ்வாறிருக்க, “அச்சொல்லை ரதம் – தேர் என பொருத்தமே இல்லாமல் பொருள்கொண்டுதான் நிலையாமல் ஓடுவதாகிய உடல் என்று விளக்குகிறார்கள். இலக்கணப்படிக்கூட அப்படி பொருள் கொள்வது பொருந்தாது என்றாலும் அவர்களுக்கு வேறேதும் தெரியவில்லை” என்பது, நம் கவனக் குறைவுக்கு அவர்களைப் பழிப்பதாகவே கொள்ளப்படும். அருணை வடிவேலர் பெரும் அறிஞர்; அவரை ஒன்றும் தெரியாதவர் என்பது முறையானதில்லை அண்ணே.

மேற்படிப் பாட்டுக்கு நீங்கள் சொல்லும் உரை நயமாகவே உள்ளது. பாட்டைக் கவிதைப்படுத்த முயல்கிறது. சிறப்பே. ஆனால் அதற்கான அருணையார் உரை பிழையற்றது. அது நீங்கள் விதந்தோதுகிற மரபுரை. அப்படித்தான் இருக்கும். திருமந்திரம் சூத்திர நூல் இல்லையா? சூத்திரம் என்றால் சரடு அல்லது நூலிழை இல்லையா? வகுக்கப்பட்டது இல்லையா? தூல உடம்பு, சூக்கும உடம்பு, இவற்றின் தன்மை இன்னின்ன என்று வகுத்துச் சொல்லும் சரட்டில் கோக்கப்பட்ட ஒரு பாட்டுக்கு அவர் வேறு எப்படி உரை சொல்லுவார்? மரபுப்படிச் சொல்கிறார். குற்றமென்ன?

ஒரு மெய்ந்நூல் பற்றிய ஆய்வை வாசித்து மனம் முழுக்க இனவெறுப்பை, மொழி வெறுப்பை, அரசியல் காழ்ப்பை, தாழ்வுணர்ச்சிகளை நிறைத்துக்கொள்வது பொன்ற அறிவின்மை வேறு உண்டா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள். சரிதான். ஆனால் அண்ணே, மெய்க்காட்சி நூல்களும் காட்சி மரபுகளும் முற்ற முடிந்த உண்மைகள் அல்ல; அவை தங்கள் காட்சியை வைக்கின்றன; அவ்வளவே. அந்தக் காட்சியின் பின்புலம் என்ன? அது முழுமையான காட்சியா? ஏற்கத்தக்க காட்சியா? முரண்கள் என்ன? நோக்கம் என்ன? தன்னை ஏற்கும் ஒருவரை அது செலுத்தக் கருதும் இடம் எது? அந்த இடம் விடுதலையா? கட்டுறுத்தலா? என்றெல்லாம் தேட முயல்வது காழ்ப்பாகுமா? எனில் காழ்ப்பின்மை என்பது என்னண்ணே? கைகட்டி வாய்பொத்திக் கும்பிட்டுப் போவதா? ஓர் அறிவுக் காட்சி அடக்கம் என்ற பெயரில் ஆதிக்கத்தை முன்வைக்கும் என்றால் அதன் எதிராய் மற்றோர் அறிவுக் காட்சி மீறலை முன்வைக்காதா?

திருமூலரின் மெய்ஞ்ஞானம் முழுமையாக அழிந்து, அதைக் கற்பிக்கும் ஆசிரியரே இல்லாமல் ஆகிவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அது தமிழின் ஊழ் எனில் அதுவும் அவன் ஆடலே என்பவை சுவைக் குறைவான வரிகள் அண்ணே. தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு திருமூலனை ஏவிவிட்ட கடவுள் அவ்வளவு அயோக்கியப் பயலாக இருப்பான் என்று நான் நினைக்கவில்லை. அறிவு என்பது ஆசிரியர்களாலேயே புரக்கப்படுகிறது என்பது ஆகாவரிக் கருத்து. கற்பிக்க ஆளில்லாவிட்டால் கற்பவர்கள் தாங்களே கற்பார்கள்; சிலர் அதன் செவ்வியும் தலைப்படுவார்கள்; புதிய மரபுகளையும் காட்சிகளையும்கூட உருவாக்குவார்கள்.

‘தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே’ என்பதும், ‘உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்’ என்பதும் ‘ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை’ என்பதும் திருமந்திர வரிகள். வணக்கம் அண்ணே.

அன்பன்,

கரு.ஆறுமுகத்தமிழன்

அன்புள்ள தம்பி ஆறுமுகம்,

உங்கள் கடிதம் கண்டேன். நயம்படச் சொல்லியிருந்தாலும் அங்கதம் ஊடாடியிருப்பதையும் அறிந்தேன். அறிந்த பழைய ஆறுமுகம் மேலும் கூர் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன்.

என்னுடைய குறிப்பே திருமந்திரம் போன்ற நூல்களை சமகாலத்தில் வைத்து வழக்கமான கட்சிகட்டல்களுக்குள் கொண்டுசென்றுவிடக் கூடாது என்பதுதான். அது ஏன் என்பதற்காகவே ஒரு பாடலைச் சுட்டினேன், அறுதியான, சரியான பொருள் இது என்பதற்காக அல்ல. அத்தனை உய்த்துணர்வாய்ப்புகள் உள்ளன என்பதைக் காட்டுவது மட்டுமே இலக்கு. ஏனென்றால் நாமும் அந்த வெற்றுவிவாதங்களைச் செய்யவேண்டாம் என நினைக்கிறேன்.

இது விவாதம் அல்ல, திருமூலத்திற்கு வெளியே சில எளிய விளக்கங்களை மட்டும் அளிக்கிறேன்.

வாமம் பற்றிய என் புரிதல் இது. தட்சிணாச்சாரம், வாமாச்சாரம் போன்ற சொற்கள் வெவ்வேறு மரபுகளில், வெவ்வேறு பேசுதளங்களில் வெவ்வேறுவகையில் பொருள்கொள்ளப்படுகின்றன. தொடக்க காலத்தில் தாந்த்ரீகம் பற்றி எழுதிய வங்காளிகள் அதை சாக்தத்தை மட்டுமே கொண்டு பொருள்கொண்டனர். ஆர்தர் ஆவ்லோன் போன்றவர்கள் அதை ஆதாரமாகக் கொண்டனர். ஆனால் அகேகானந்த பாரதி போன்றவர்களில் இன்னும் விரிவான பார்வை உள்ளது.

நான் பேசிக்கொண்டிருப்பது என் ஆசிரியமரபு எவ்வண்ணம் பொருள்கொள்கிறது என்பதைச் சார்ந்து. அதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படும் சில தெற்கத்திய தாந்த்ரீக நூல்கள் உண்டு. நான் அவற்றை ஐயமறக் கற்றவன் அல்ல, அவற்றை சார்ந்து என் ஆசிரியர்களால் பேசப்பட்ட சொற்களையே முற்கோளாக எடுத்துக்கொள்கிறேன்

தாந்த்ரீக மரபு என்பது மேதினி கோசம் அளிக்கும் ‘தன்யதே விஸ்தார்யதே இதி தந்த்ர’ என்னும் வரையறையை அடிப்படையாகக் கொண்டு வேதாந்த மரபில் பொருள்கொள்ளப்படுகிறது. மானுடன் தன்னுள் திகழ்வதை துலங்கச் செய்வது தந்த்ரம், அதாவது மெய்மையை தன்னுள் இருந்து எடுப்பது. அது ஐந்து வகை; தட்சிணம், வாமம், சமயம்,திவ்யம்,கௌளம் என அறிந்திருப்பீர்கள். உண்மையில் தட்சிணம், வாமம் என்னும் இரண்டுதான் பிரிவினை.  மற்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டவை

தட்சிணம் என்றால் தென்னகத்தே எழுந்தது என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. ’தக்ஷிணா தக்ஷிணாராத்ய தரஸ்மேர முகாம்புஜ:’. வாமம் என்பது அப்பெயர் பெற்றது  நிலப்பகுதியினால் என்றும், இடக்கையை சடங்குகளுக்குப் பயன்படுத்துவதனால் என்றும் பலவாறாக விளக்கப்படுகிறது. இரண்டாம்பட்சமானது, மறைவானது என்ற பொருளில் அச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்பது என் ஆசிரியர்களின் கொள்கை

தாந்த்ரீகச் சடங்குகள் ஆறுமதங்களிலும் உண்டு. சாக்தமதத்திலேயே அவை வலுவாக இன்றும் நீடிக்கின்றன. தட்சிணம்,வாமம் என்னும் பிரிவினை அந்தந்த மதங்களுக்கு ஏற்ப , பேசப்படும் இடங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. சாக்த மதத்தில் தட்சிண ஆசாரம் என்பது ஸ்ரீவித்யா போன்ற மங்கல அம்சம் உடைய சடங்குகள் மட்டும் கொண்டதாக உள்ளது. வாம ஆசாரம் என்பது பஞ்சமகாரம் எனப்படும் மது,காமம் போன்ற முறைகள் கொண்டதாக உள்ளது. நீங்கள் உங்கள் குறிப்பில் கூறும் வாமம் என்பது அதுவே

பிறமரபுகளில் தட்சிணம் என்பது பொதுவாக மங்கலஅம்சம் கொண்டதும், பக்திமரபுக்குள் உள்ளிழுக்கப்பட்டதும், அன்றாடவழிபாட்டின் அம்சமாக மாறிவிட்டதும்,எளிய இல்லறத்தோருக்கும் உரியதுமான தாந்த்ரீகச் சடங்குகளைக் குறிக்கிறது. கேரளத்து ஆலயங்கள் தாந்த்ரீக மரபுப்படி வழிபாடு நிகழ்பவை.எல்லா பக்தி-வழிபாட்டு மரபுகளுக்குள்ளும் தட்சிண ஆசாரம் சற்றேனும் இருக்கும்.இந்த உருமாற்றம் தென்னகத்தில் நடந்தது என்பதனால் இதை தட்சிணம் என்கிறார்கள் என்று ஒரு தரப்பு உண்டு.

இந்த உருமாற்றம் நிகழாமல் நீடிப்பதே வாமம். அது மங்கல-அமங்கலப் பிரிவினையை பொருட்படுத்தாதது, பக்திமரபுக்கு அப்பால் நிலைகொள்வது,  முற்றிலும் மறைமுகச் சடங்குகளால் ஆனது, ஆசிரியரிடமிருந்து சாதகன் நேரடியாக கற்கும் தன்மை கொண்டது, யோகசாதகர்களுக்கு மட்டுமே உரியது.

நாம் பேச்சுவழக்கில் சாக்தத்தின் வாம மார்க்கத்தை மட்டுமே வாமம் என்கிறோம்.ஆகவே காமத்தை அதன் முதன்மையான பயிற்சியாகக் கருதுகிறோம். அப்படி அதை விளக்கும் ஏராளமான நூல்களும் எழுதப்பட்டுள்ளன. சாக்தத்திலேயேகூட வாமமார்க்கத்தில் காமம் முதன்மையான பயிற்சியோ, தவிர்க்கமுடியாததோ அல்ல. என் குடும்பமரபில் நாங்கள் சாக்த வாமமார்க்கிகள்.

என் முந்தைய குறிப்பில் திருமந்திரம் இரு மரபுகளுக்கு மூலநூல் என கருதப்படுகிறது என்று கூறுகிறேன். அதாவது இரு தரப்பினர் அவற்றை மூலநூலென கொள்கிறார்கள். தூயசைவசித்தாந்திகள் முதல்தரப்பு. சைவ வாமமார்க்கிகள் இரண்டாம் தரப்பு. சைவ வாமமார்க்கிகளிடமிருந்தே நான் திருமந்திரத்தின் சில பாடல்களை பாடம்கேட்டதுண்டு.அவ்வாறு ஒரு காலம் எனக்கு இருந்தது என அறிந்திருப்பீர்கள்.

சைவத்தின் வாமமார்க்கத்தில் யோகமே முதன்மையானது. [அது பதஞ்சலி யோகம் அல்ல. அதன் வேர்கள் வேறு. அது தென்றிசைமுதல்வனிலிருந்து தொடங்குவது என்பார்கள்] அதில் காமம் என்பது முதன்மையான பயிற்சியோ பேசுபொருளோ அல்ல, அதுவும் உண்டு, அவ்வளவுதான். வெவ்வேறு வகையான நாடிநிலைகளும் வாசி என்னும் மூச்சுநிலைகளுமே அதில் முதன்மையாக பேசப்படுகின்றன. அத்துடன் இன்று என்னவென்றே அறியமுடியாத மறைமருத்துவ,யோகநுட்பங்களும் அதில் பேசப்பட்டுள்ளன.

நான் ஏன் திருமந்திரத்தை வாமமார்க்கம் சார்ந்தது என்கிறேன் என்பதற்கு திருமந்திரம் கற்ற நீங்களே சான்று காணமுடியும். அது தந்த்ரநூல் என்று அதுவே வகுக்கிறது. அதன் பெரும்பகுதி மறைபொருள் சார்ந்தது. பக்திக்குள், வழிபாட்டுமுறைகளுக்குள் வந்தமைந்த தாந்த்ரீகத்தை அது பெரும்பாலும் முன்வைப்பதில்லை. அது பேசுவது பெரும்பாலும் நாடிகளையும் வாசிகளையும் குறித்து. ஆகவே அதன் மிகப்பெரும்பகுதி உரிய குருவின் உதவியின்றி கற்கமுடியாதது, கற்கக்கூடாதது.

அதை தூயசைவசித்தாந்திகள் கற்கவும் கற்பிக்கவும் கூடும். ஆனால் அவர்கள் அதிலுள்ள வாமமார்க்க அம்சங்களை தொடும் வழக்கமில்லை. அவர்கள் முதல் இருநூறுக்குள் தேர்வுசெய்த பாடல்களைக்கொண்டே நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் அது ஒரு மெய்யியல்மரபு. அந்தப்பார்வையில் ஒட்டுமொத்த திருமந்திரத்தையும் பொருள்கொண்டு அவ்வளவே திருமந்திரம் என்று வகுக்கலாகாது. அப்பாலுள்ள பாடல்களை விளக்க முற்படுகையில் அறியாமையே விளையும்.

அதைக் கற்பிக்க எவருமில்லை என்று நான் சொல்லவில்லை, இன்றையசூழலில் அவ்வாறு ஆகக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். அது தொடர்ச்சியாக கற்பிக்கப்படும், என்றென்றும் மறைஞானமாக நின்றிருக்கவும் செய்யும் என்றே என் நம்பிக்கை. அதை பொதுவான சமயச்சழக்குகளுக்குள், அரசியல்விவாதங்களுக்குள் இழுத்தடிப்பதனால் அதை முற்றாக இழக்கவே வழியமைக்கிறோம். நான் சுட்டுவது அதையே.

ஏன் மூன்று தலைமுறை குருமரபு என்கிறேன் என்றால் அவ்வளவுதான் நமக்கு உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதனால்தான். இது மறைபொருளாக உரைக்கப்படுவது, அதை பொதுவில்வைத்து விவாதிக்கவோ புறவயமாக ஆராயவோ முடியாது. ஆகவே அதில் பிழைகள் மிகுதியாக நிகழலாம். அதை உறுதிசெய்ய ஒரே வாய்ப்பு ஆசிரியரின் மரபுநீட்சிதான்.

அந்த ஆசிரியர் தமிழறிஞராக இருப்பதைப் பற்றி நான் சொல்லவில்லை — வெறுந்தமிழறிஞர்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் நம்புகிறேன். அவர்கள் திருமந்திரத்தின் அறிவுப்புலத்தை கற்றவர்களாக இருக்கவேண்டும். அனுபூதிநிலையில், யோகநிலையில் உணர்ந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.

கண்டிப்பாக மந்திர உபதேசமும், நெறியாணையும்,நோன்பும் இன்றி திருமந்திரத்தை கற்கக்கூடாது. ஒரிரு புகழ்பெற்ற செய்யுட்களைக் கற்பதைப் பற்றிச் சொல்லவில்லை. பொதுவான ஒரு புரிதலை அடைவதுபற்றியும் சொல்லவில்லை. திருமந்திரக்கல்வி என்பது வேறு. இது நான் அறிந்தது, நீங்கள் ஏற்கவில்லை என்றால் நான் விவாதிக்க மாட்டேன்

திருமந்திரத்தை இன்றுள்ள பக்திசார்ந்த சைவப்பொதுமரபுக்குள் கொண்டுவந்து உரைவழங்கும்போது அதற்கு மிகப்பெரிய பொருள்மாறுபாடு உருவாகிறது. ஒவ்வொரு சொல்லையும் இழுத்துக்கொண்டுவந்து ஒடித்து வளைத்து பக்திசார்ந்து விளக்குகிறார்கள். தாந்த்ரீகப்பொருள் கொண்ட சொற்களுக்கு வழக்குப்பொருள் கொள்கிறார்கள். நான் உதாரணத்திற்காகச் சுட்டியது இணையத்தில்  கைபோன போக்கில் தேடியபோது கிடைத்த முதற்செய்யுளின் உரையை. அப்படி எல்லா பாடல்களுமே குறைவுபட பொருள்கொளப்பட்டிருப்பதுதான் நான் சுட்ட விழைந்தது. ஆனால் அதைவைத்து மீண்டுமொரு  விவாதத்திற்கு நான் ஒருக்கமல்ல.

அருணையார் உள்ளிட்டோரின் உரைகளின் ‘பிழைகளை’ நான் சுட்டவில்லை.மாறாக, திருமூலம் ஒரு மெய்ஞானநூல் என்னும் நிலையில் இவ்வுரைகளின் போதாமையைச் சுட்டுகிறேன். நீங்கள் சுட்டியபின் அருணையாரின் உரைக்குறிப்பு அது என்று கண்டு அப்பகுதி முழுக்க படித்தேன், இன்னும் போதாமைகளே தெரிந்தன. நன்று, இரசம் என எடுத்துக்கொண்டாலும் அது குறைப்பொருளே.அந்தப் பாடற்பொருள் மருத்துவம் சார்ந்தது, அங்கே இரசத்துக்குப் பின் உதிரம் வராது.இதைச்சொல்லும் தகுதியாக எனக்கு குடும்பமரபாக கொஞ்சம் மருதுவமும் சோதிடமும் உண்டு எனக் கொள்க.

பக்திசார்ந்த சைவமரபின்மேல் எனக்கு பெரும் ஈடுபாடுண்டு. ஆனால் அது திருமந்திரம் முன்வைக்கும் மறைஞானத்திலிருந்து வேறுபட்டது, அதற்கு எதிரானதும்கூட. நெடுங்காலமாக தாந்த்ரீக மரபுக்கு எதிரானதாகவே பக்திமரபு இருந்துள்ளது என நீங்கள் அறிவீர்கள். பிற சைவத்திருமுறைகளுக்கு உரைவழங்குவதுபோல திருமந்திரத்திற்கு உரைவழங்க முடியாது. நான் சொல்லவருவது அதை மட்டுமே.

திருமந்திரத்தின் சொற்கள் புழக்கச் சொற்கள் அல்ல, அவை கலைச்சொற்கள். அது ஒரு தனி அறிவுப்பரப்பின் மெய்நூல். கற்பிப்பவர் அந்த அறிவுமரபை சேர்ந்தவரா, அதை அறிந்தவரா என்பது முக்கியம். அவ்வளவே.

ஏன் வேதாந்தமரபு அதைக் கற்கலாம்? வேதாந்த மரபுக்கு சைவத்தின் எல்லா சமயப்பிரிவுகளும் ஏற்புடையனவே. ஒன்றை பிடித்துக்கொண்டு பிறிதை நிராகரிக்கவேண்டிய தேவை அதற்கில்லை. அதன்பொருட்டு எதையும் உருமாற்றவேண்டியதுமில்லை.எல்லா ஞானமரபுகளையும் ஊழ்க – அனுபூதி துணைகொண்டு அறியும் ஒரு நீண்டமரபு அதற்கு உண்டு. தாந்த்ரீகநூல்களைப் பொருள்கொள்ளவும் அதில் வழிமுறை உண்டு. நிகமாகம நூல்கள்கூட அதற்கு வெளியே இருப்பவை அல்ல.

ஆனால் அது வேதாந்தவழி ஞானம் மட்டுமே, சைவஞானத்திற்கு சைவர் தூயசைவத்தின் வழியையே தேர்வுசெய்யவேண்டும். தாந்த்ரீகர் அதற்கான வழிமுறையை தேர்வுசெய்யலாம். வேதாந்த முறை சைவ முறைக்கோ தாந்த்ரீகமுறைக்கோ மாற்று அல்ல. கற்பதென்றால் அது இன்னொரு வழிமுறை, அவ்வளவே நான் கூறியது.

திருமந்திரத்தின் காலம், வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டுச்சூழல் ஆகியவற்றை புறவயமான சான்றுகளின் அடிப்படையில், மிகைக்கூற்றுகளும் சார்புநிலைகளுமின்றி, ஆய்வுசெய்து எழுதலாம். நீங்களேகூட செய்யலாம். அது கல்வித்துறை ஆய்வு, அதற்கான எல்லா வழிமுறைகளும் இன்றுள்ளன.நீங்கள் தத்துவப்பேராசிரியராக நின்று பேசுவதென்றால் அது அந்த ஆய்வுத்தளத்திலேயே இயல்வது. திருமந்திர மெய்யுணர்ந்து உரைசொல்ல முயல்வீர்கள் எனில் உங்கள் மரபு என்ன என்பதே முதன்மைக் கேள்வி.அதற்குப்பிறகே எஞ்சியது.

சமகால பண்பாட்டுச் சூழல் சார்ந்து, இன்றைய அரசியல்சார்ந்து திருமந்திரத்திற்குப் பொருள் கொள்ளத் தொடங்கினால் அது எல்லாப் பக்கத்திலும் நிகழும். நீங்கள் தமிழிய அரசியலை கையாள்வீர்கள், இன்னொரு சாரார் இந்துத்துவ அரசியலைக் கையாள்வார்கள். நடுவே அந்த மறைஞானப்பிரதி மறைந்தேபோகும். நான் கூறுவது அதைத்தான்.

சென்ற சிலநாட்களாக மின்னஞ்சலையே திறக்கமுடியாத அளவு கடிதங்கள். பெரும்பாலானவை வசைகள், ஏளனங்கள், தர்க்கத்துக்கு அழைக்கும் தொடைதட்டல்கள். சொற்பொருள்கொள்வதில் தமிழில் ஒரு கட்டற்ற பாய்ச்சலே உண்டு போலும். மதச்சழக்கில் நமக்கு ஆயிரமாண்டுப் பாரம்பரியம் உள்ளது.இத்தனை ஆணவம் நவீனச் சிந்தனைகளில் வாழ்நாள் முழுக்க செலவிட்டவர்களுக்குக் கூட வருவதில்லை. உங்கள் கடிதத்தின் இனியமொழி மகிழ்விக்கிறது. இந்த வினாக்கள் உங்களை நெடுந்தொலைவு கொண்டுசெல்லட்டும்.

எந்த மெய்ஞான நூலையும் எது ஒன்றுக்கும் எதிராக நின்று கற்பதுபோல் பொருளற்ற செயல்வேறில்லை.உலகியலில் நின்று விளக்குவதுபோல பிழையும் வேறில்லை. நாம் கொண்டுள்ள மனநிலையை வளர்க்கும் சான்றுகளையே அதில் கண்டடைவோம். அதன் மெய்யை அறியும் பார்வையையே நான் நாடுவேன். அதற்கு இத்தகைய அணுகுமுறைகள் மிகமிக எதிரானவை. நான் உங்களுக்குச் சொல்லவிருப்பது அதையே.

உங்கள் நிலைபாடு எனக்கு புரிகிறது. நான் என் குறிப்பில் நான் திருமந்திரம் தூயசைவசித்தாந்தம், சைவ வாமமார்க்கம் ஆகியவற்றுக்கான மெய்நூல் என்கிறேன். நீங்கள் தூயசைவசித்தாந்தத்தின் தரப்பில் நிற்பவர் என்பது என் புரிதல். அவ்வண்ணமென்றால் அதை அம்மரபின் குருவின் முன்னிருந்து மேலும் ஆழ்ந்து பயில்க.அதன் மெய்ப்பொருளைச் சொல்பவராக உயர்க. அப்போது உங்கள் அடிபணிந்து வந்தமர்வது எனக்கும் உவப்பானதே.

அது எவராலேனும் திரிக்கப்படுகிறது ,குறைக்கப்படுகிறது என்று என்று உணர்வீர்கள் என்றால் உங்கள் தரப்பில் அதைவிட மேலான, அதைவிட மெய்மையை தொடக்கூடிய அறிதலை முன்வையுங்கள்.ஞானம் எதிர்மறைப் பண்பற்றதாகவே இலங்க முடியும். உங்கள் சொற்கள் உங்கள் ஆழ்ந்த அறிவுநிலையில் இருந்து, அனுபூதியிலிருந்து எழுவதாகட்டும். திருமந்திரம் பண்பாட்டு அரசியலுக்கான நூலல்ல, வீடுபேறுக்கான வழிகாட்டிநூல். இதில் எனக்கு ஐயமே இல்லை.

நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், இது வாதிடுவதற்கான பொருள் அல்ல. இந்தப் பொருளில் விவாதம் ஆணவத்தையே முன்வைக்கச்செய்யும். ஒன்று மட்டும் சொல்கிறேன். நீங்கள் நின்றிருக்கும் பகுத்தறிவுத் தளத்தில் இருந்து நான் சொல்வது பொருளற்றதாகத் தெரியலாம். நான் பகுத்தறிவிலிருந்து கொஞ்சம் வெளியே சென்றுவிட்டேன். திருமந்திரம் கூறுவது இங்கே பொதுவெளியில் பேசப்படுவதிலிருந்து முற்றிலும் வேறொன்றை- பக்திக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை.

வாழ்த்துக்கள் தம்பி.நலம் திகழ்க.

ஜெ

 

பிகு: இக்கடிதத்தை எழுதியபின்னரே நீங்கள் முகநூலிலிலும் இதை எழுதியிருக்கிறீர்கள் என அறிந்தேன். ஆகவேதான் இதை வெளியிடுகிறேன். தம்பி, உங்கள் முகநூல்குறிப்புக்குக் கீழே உள்ள எதிர்வினைகளைப் பாருங்கள். இதுவா நீங்கள் விழைவது? நான் அஞ்சுவது, தவிர்ப்பது இதையேதான். ஏதுமறியாத பேதைக்கும்பல் மூவாயிரத்துக்குமேல் பாடல்கள் கொண்ட, அவற்றில் பெரும்பாலானவற்றில் ஆழ்ந்த பொருள்மயக்கம் உள்ள, திருமந்திரத்தை கற்றுத்துறைபோகியவர்கள்போல சழக்கு பேசுகிறது.நான் திருமந்திரத்தை கற்றேன்’ என்றெல்லாம் ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் அந்நூலை புரட்டியாவது பார்த்திருப்பாரா? எட்டங்கமும் இரண்டற உணர்ந்த மெய்ஞானியா அவர்? என்ன பேதைத்தனம் இது!

இந்த தளத்தில் ஓர் அடிப்படைக்கல்விக்கே எத்தனை ஆண்டுகள் தேடலும் வழிகாட்டலும் தேவை என இவர்கள் அறியமாட்டார்கள். ஒரு பெருங்கும்பல்  அன்றாடஅரசியல் காழ்ப்புகளை கொண்டுவந்து இங்கேயும் கொட்டுகிறது. திருமந்திரத்தை முன்வைத்து இது நிகழ்லாகாது என்பதே நான் சொல்வது. மெய்நாடல் கொண்டு ஒருவர் உங்கள் தரப்பைப் பார்க்கவந்து இந்தக் கெக்கலிப்புகளில் சிக்கிக்கொண்டால் அவருக்கு ஏது விடுதலை?  இதை நீங்கள் ஊக்குவிக்கலாகாது. இது என் வேண்டுகோள், உளம்கொண்டால் மகிழ்ச்சி.

 

முந்தைய கட்டுரைஞானி-21
அடுத்த கட்டுரைவெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்