ஞாநி இறந்த போது அவர் சார்ந்து எழுதிய நினைவு குறிப்புகள் சீரிஸில் ஒரு பதிவு இது. அவர் பரிசளிக்க விரும்பியபோது, ” உங்களுக்கு விருப்பமான புத்தகங்கள் வாங்கிவாருங்கள், ஞாநி” என்று நான் சொன்னபோது அவர் வாங்கிவந்து பரிசளித்தது எல்லாம் சுரேஷ்குமார இந்திரஜித் புத்தகங்கள்
2020ம் ஆண்டு விஸ்ணுபுரம் விருது பெரும் எழுத்தாளர். சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்.
சரவணன் விவேகானந்தன்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியை அளித்தது. சம்பிரதாயமான ஒரு வாழ்த்தாக அமையக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே அவருடைய கதைகளை தொடர்ச்சியாக படித்துவருகிறேன். சுரேஷ்குமரா இந்திரஜித் தமிழில் ஒரு தனித்த நிலைபாடு கொண்டு எழுதிவருகிறார்.
அவருடைய கதைகளின் பாணி சுருக்கமான, எளிமையான, நேரடியான கதைகள் என்று உள்ளது. ஆனால் அக்கதைகள் வாழ்க்கையின் ஒரு சில தருணங்களைக் கூர்ந்து பார்க்கவைக்கின்றன. கொஞ்சம்கூட பார்க்கப்படாதது எது என்றால் மிக அதிகமாகக் கண்ணுக்குப் படுவதுதான் என்று சொல்லலாம். நமக்கு கண்பழகும் பொருள் வழக்கமான அர்த்தத்தைக் கொண்டுவிடுகிறது. இன்னொரு அர்த்தம் நிகழவேண்டுமென்றால் நாம் பார்க்கும் பார்வை மாறவேண்டும். நாம் வேறொரு அனுபவத்தின்வழியாக அதை அணுகவேண்டும்.
நான் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவன். Defamiliarization என்ற ஒரு கான்செப்ட் உண்டு. நமக்கு தெரிந்த ஒன்றை கொஞ்சம் கோணம் மாற்றிவைத்தோ இன்னொன்றுடன் சேர்த்துவைத்தோ அறிமுகத்தை அழிப்பது. அது கொஞ்சம் புதிதாக ஆனதுமே அர்த்தம்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. அதைத்தான் அவருடைய கதைகள் செய்கின்றன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அன்றாடத்தின் நிகழ்வுகளை உணர்ச்சியே இல்லாமல் சொல்லும்போது அந்த புதுமை உருவாகிவிடுகிறது. அவருடைய நானும் ஒருவன் தொகுப்பிலிருக்கும் எல்லா கதைகளும் இவ்வியல்பையே கொண்டிருக்கின்றன.
கே.ஆர்.சந்தானம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கொஞ்சம் பிந்தித்தான் ஒரு சின்ன விஷயம் உறைத்தது. இவருடைய கதைகளில் மதுரைநகரமே பெரும்பாலும் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் மதுரை பற்றிய வர்ணனைகளே இல்லை. பெரும்பாலும் இடங்களின் பெயர்கள்தான் உள்ளன. மதுரையின் எக்ஸோட்டிக் ஆன இடங்களோ, அல்லது அபூர்வமான இடங்களோ இவருடைய படைப்புக்களில் சொல்லப்படவே இல்லை.
அதேபோல இவருடைய கதைகளில் எங்கேயுமே மதுரையின் பேச்சுமொழி இல்லை. வட்டாரவழக்கு இல்லை. மதுரையின் வட்டாரவழக்கு ப.சிங்காரம் படைப்புகளிலே உள்ளது. மற்றபடி அதைச் சிறப்பாக எழுதிய எழுத்தாளர் எவரும் இருப்பதாக எனக்கு நினைவில் இல்லை. இவர் ஒரு மதுரை எழுத்தாளர் என்றாலும் நாம் அறியும் மதுரையே இவர் படைப்பில் இல்லை. மனிதர்களை இந்தமாதிரியான மொழி, நிலம் சார்ந்த அடையாளங்களிலிருந்து விடுவித்து எழுத நினைக்கிறாரா என்ற சந்தேகம் வந்துகொண்டே இருந்தது. இவருடைய படைப்புக்களை இந்த தனித்தன்மையை வைத்துத்தான் வாசிக்கவேண்டுமா?
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளைப் பற்றி காளிப்பிரசாத் எழுதிய கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. வாசகனாக என் பார்வையில் சுரேஷ் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று அது. என் வாழ்த்துக்கள்
ராஜ்குமார் ஜே
an