வாழ்தலை முடிவுசெய்தல்- இரு கேள்விகள்

வாழ்தலை முடிவுசெய்தல்…

அன்புள்ள ஜெ.

வாழ்தலை முடிவு செய்தல் கடிதம் படித்தேன். என் கருத்தை பகிரலாமா வேண்டாமா  என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு எழுதி விடலாம் என முடிவு செய்து இதை எழுதுகிறேன்.

ஏனெனில் கிட்டத்தட்ட எனது சூழலும் அதேதான்.அது பற்றிய என் சிந்தனை ஓட்டத்தை உங்கள் பதில் அப்படியே பிரதிபலித்துள்ளது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் நடந்த ஸ்கூட்டர் விபத்தில் எனக்குக் கையில் அடி. என் மனைவிக்குத் தலையில் பலத்த அடி.நான் மூன்று மாதங்களில் ஓரளவு தேறி விட்டேன். என் மனைவி அறுவை சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தாள். ஆனால் கோமாவில். அவளுக்கு வயது ஐம்பது. கண்கள் திறக்க இரண்டு மாதமாகியது.என் குரலுக்கு மட்டும் கண் விழிப்பாள். ஐந்து மாதங்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை பெரிதாக இனி ஒன்றுமில்லை. அடிபட்ட மூளை நரம்புகளின் செயல்பாடுகளை மற்ற நரம்புகள் அவதானித்து தானாக மீண்டு வர வவேண்டும் (Neuro plasticity). அதன் காலத்தை நிர்ணயிக்க முடியாதென்று சொல்லி விட்டார்கள்.

அதன் பின் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். வயிற்றில் டியூப் வழி உணவு. தொண்டயில் டிரக்யாஸ்டமி டியூப் வழி சுவாசம். இந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு மயிரிழை அளவு முன்னேற்றம் காண பல மாதங்கள் ஆனது. இப்போது எல்லார் குரலுக்கும் ண் திறந்து கழுத்தை லேசகாத் திருப்பிப் பார்க்கும் அளவு முன்னேற்றம். அவ்வளவே. மற்றபடி எல்லாம் படுக்கையில்தான். வீட்டோடு நர்ஸ். தினமும் பிசியோதெரபி.பெரும் சவால்தான்.நம்பிக்கையை நான் விடவில்லை.  சமாளிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மனப்பூர்வமாக எடுப்பது ஒன்றே நான் செய்ய வேண்டியது என இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

சாதரணமாக இருப்பது போலவே பாவித்து எல்லாத் தகவல்களையும் என் மனைவியிடம் பகிர்ந்து கொள்வேன்.அதில் எவ்வளவு உள்ளே செல்கிறது என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. நீங்கள் கூறியுள்ளது போல் தேவையா என்ற கேள்விக்கே இடமில்லை. எப்படி சமாளிப்பதென்பது மட்டுமே எனக்கானது.அடிபட்ட நேரத்திலிருந்து நமது குருமார்களின் கூற்றுப்படி  இன்பம் துன்பம் என எதற்கும் பொருந்தும் “அடுத்தது என்ன” என்ற ஒற்றைக் கேள்வியை மட்டும் முன் வைத்தபடி இயங்கி வருகிறேன்.

நடுவில் சிறு தொய்வைத் தவிர வெண் முரசு மற்றும் உங்கள் தளத்தை விடாமல் வாசித்து வருகிறேன். வேறு முகநூல் தளங்களிலும் கதை  கட்டுரைகள்  பதிவிடத் தொடங்கியிருக்கிறேன்.

எழுதத் தோன்றியது. எழுதி விட்டேன். நீண்ட மின்னஞ்சலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்

ஆர்.கே

***

அன்புள்ள ஆர்.கே

உங்கள் நிலைமையை புரிந்துகொள்கிறேன். நம் மரபின் பார்வையில் பிராப்தம் என்பதற்கு அப்பால் ஒன்றும் எண்ணுவதற்கில்லை. அதைக் கடந்துசெல்லவேண்டியதுதான். நமக்கே ஒரு நோய் என்றால் என்ன செய்வோம்?

நாம் செய்யவேண்டியதைச் செய்யலாம், ஆனால் உணர்வுரீதியாக மிகுதியாக ஈடுபடவேண்டாம். அதைச்சுற்றியே மொத்த வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளவேண்டாம். அன்றாடக் கடமைகளில் ஒரு பகுதியாக, வாழ்க்கையின் பல வட்டங்களில் ஒன்றாக மட்டும் அதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அதிலிருந்து எத்தனை தூரம் உணர்வுரீதியாக விலக்கிக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு அதைச் சிறப்பாக செய்யமுடியும். அன்பு, கனிவு, எதிர்பார்ப்பு ,நம்பிக்கை ஆகியவை கூட தேவையில்லை. ஏனென்றால் உணர்வுகளின் ஊசல் மறு எல்லைக்குச் செல்லும்போது அவை எதிர்மறை உணர்வுகளாகவும் ஆகலாம், உளச்சோர்வை அளிக்கலாம். அதில் எரிச்சலோ பின் குற்றவுணர்ச்சியோ கொள்ளாமல் செயல்பட முடிந்தால் நீங்கள் அதை சிறப்பாகச் செய்து, வெற்றிகரமாகக் கடந்துசெல்கிறீர்கள்.

வாழ்வுக்குப் பொறுப்பேற்கும் உங்கள் துணிவுக்கும் பொறுமைக்கும் வணக்கம். வெண்முரசு உடன் வரட்டும்.

அன்புடன்

ஜெ

அன்புள்ள ஜெ

கருவில் குறைபாடு இருப்பதை அறிய அறிவியல் வளர்ந்துள்ளது.  அவ்வாறு இருப்பின் கருக்கலைப்பு  ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு செய்வது பிரபஞ்சத்தின் மாபெரும் செயல் திட்டத்திற்கு எதிரானது இல்லையா. ஆனால்  அந்த அறிவியலும் செயல்திட்டத்தின் ஒரு பகுதி தானே என்று தோன்றுகிறது.

அன்புள்ள த

நீங்கள் கேட்பதற்கு இரண்டு பதில்களைச் சொல்லவேண்டும்.இம்மாதிரி கேள்விகளுக்கு நித்யா என்ன பதில்சொல்வார் என்று கற்பனைசெய்தே நான் சொல்கிறேன் –என்னால் எல்லாவற்றுக்கும் பதில்சொல்லமுடியாது. நான் அதற்கான தகுதிகொண்டவன் அல்ல.

நெறிகளின்படி எந்நிலையிலும் அக்கருவை அழிக்க நமக்கு உரிமை இல்லை. அது பிறக்கவேண்டும் என்பது ஊழ். அதில் நாம் தலையிடமுடியாது, மாற்றியமைக்கவும் முடியாது. அதுவே மரபான பதிலாக இருக்கமுடியும்.

ஆனால் நீங்கள் மரபின்மேல் அத்தனை ஆழமான நம்பிக்கை கொண்டவர் என்றால், அதன்படி மொத்த வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள உறுதியாக முடிவெடுப்பீர்கள் என்றால், அதை கலைக்காமலிருக்கலாம். பெற்றுக்கொண்டு எந்த விதமான உளச்சிக்கலும் துயரும் இல்லாமல் அதை வளர்க்கலாம். அதுவும் வாழ்வின் நாடகத்தின் ஒருபகுதியே என்று இயல்பாக எடுத்துக்கொள்ளமுடியுமென்றால் அதைச்செய்யலாம்.

ஆனால் நாம் எளிய மானுடர், உணர்வுரீதியான அலைக்கழிப்புகளால் கொண்டுசெல்லப்படுவோர். அவ்வாறு கலைக்க ஒரு வாய்ப்பிருந்து, அதைமீறி அக்குழந்தையை பெற்றுவிட்டு, அதன் துயர்கண்டு நாளெல்லாம் வருந்துவோம் என்றால் கலைப்பதே சிறந்தது. அக்குழந்தையின் வாழ்க்கையையும் நம்மால் பேணமுடியாது என்றால் வேறுவழியே இல்லை. அதுவே சிறந்த நடைமுறை முடிவு. நித்யா அந்தக் கேள்வியை கேட்பவரை ஒட்டியே பதிலைச் சொல்வார்.

நெறிநூல்களை ‘அப்படியே’ கொள்வோமென்றால் நாம் குடும்பக்கட்டுப்பாடும் செய்துகொள்ளலாகாது. ஆனால் செய்துகொள்கிறோம், நம் ஞானாசிரியர்களிலும் பெரும்பாலானவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதையும் அதன் இன்னொருவடிவமாகக் கொள்ளவேண்டியதுதான்.

இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், கருவின் தொடக்கத்தில், அதாவது அதற்கு தன்னிலை உருவாவதற்கு முன்பு, அதைக் கலைப்பதென்பது குடும்பக்கட்டுப்பாடுக்குச் சமானமானதுதான் என்று கொள்ளலலாம்.

ஆசாரங்களில் நம்பிக்கையுள்ள இந்து என்றால் அச்செயலுக்கான பரிகாரங்கள் சில உண்டு.இங்கு வராமல் மறைந்தவர் வந்தவர் என்றே கொண்டு செய்யும் சில சடங்குகள். உரியவர்களிடம் விசாரித்து அவற்றைச் செய்து கடந்து செல்லவேண்டியதுதான்.

வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொண்டு மேலும் துன்பத்தையும் பழியையும் தேடிக்கொள்வதைவிட அது மேல்

ஜெ

முந்தைய கட்டுரைஞானி,கீழைமார்க்சியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…