உடையாள்-5

9. தனிமை

நாமி வெளியே வந்து அந்த  பொன்னிறமான நிலத்தையும் வானத்தையும் பார்த்தாள். அவள் உள்ளே இருந்து அதுவரை பார்த்துவந்த நிலமும் வானமும்தான் என்று முதலில் தோன்றியது. ஆனால் சற்றுநேரத்திலேயே வேறுபாடுகள் தெரியத் தொடங்கின

வானம் மேலும் நீலமாக இருந்தது. மண் இளமஞ்சளாக தெரிந்தது. மலைகள் எல்லாம் இன்னும் பெரிதாக தெரிந்தன. அவற்றின் மடிப்புகள் ஆழமானவையாக இருந்தன. அவள் அவற்றை வியப்புடன் பார்த்துக்கொண்டே சென்றாள்.

அவளால் முதலில் அங்கே நிம்மதியாக உலவ முடியவில்லை. மனதுக்குள் ஒருவகையான படபடப்பு இருந்துகொண்டே இருந்தது. திரும்ப அந்த கண்ணாடிக்குமிழிக்குள் ஓடிவிடவேண்டும் என்று தோன்றியது

அவள் அதற்குமுன் அந்த திறந்த வெளிக்கு வந்ததில்லை. நான்குபக்கமும் மரங்களோ செடிகளோ இல்லாத வெட்டவெளி அவ்வாறு ஒரு பதற்றத்தை அளித்தது.

அது ஏனென்றால் அவளுக்குள் அபாயம் பற்றிய எச்சரிக்கையுணர்வு இருந்தது. அவள் எந்த அபாயத்தையும் அறிந்ததில்லை. ஆனால் அவள் உள்ளுணர்வில் அந்த எச்சரிக்கையுணர்ச்சி பதிவாகியிருந்தது. அது பூமியில் வாழ்ந்த அவளுடைய முன்னோரிடமிருந்து வந்தது.மனிதர்கள் குரங்குகள்போல காடுகளில் வாழ்ந்தவர்கள். அப்போது உருவான எச்சரிக்கையுணர்வு அது

கண்ணாடிக்குமிழிக்குள் வாழ்ந்த எல்லா உயிர்களிடமும் அந்த எச்சரிக்கையுணர்வு இருந்தது. முட்டையிலிருந்து வெளிவந்ததுமே குஞ்சுகள் எச்சரிக்கையுணர்ச்சி அடைந்தன. அவற்றுக்குமேலே ஏதாவது நிழல் ஆடினால் அஞ்சி ஒளிந்துகொண்டன.

நாமி முதல்நாள் சற்றுநேரம்தான் வெளியே உலவினாள். விரைவிலேயே திரும்பி ஓடிவந்துவிட்டாள். குமிழிக்குள் அமர்ந்து அன்று அவள் போன இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய காலடிச் சுவடுகள் அங்கே பதிந்திருந்தன. ஆனால் அவள் அகலமான காலடி கொண்ட கவச உடை அணிந்திருந்தாள். ஆகவே அந்த காலடிகள் பள்ளமாக பதியவில்லை. சிறு அச்சுப்படம் போலவே தெரிந்தன.அவை மெல்ல காற்றில் கலைந்து மறைந்தன

மறுநாளும் அவள் வெளியே சென்றாள். அன்று இன்னும் கொஞ்சம் தொலைவுக்குச் சென்றாள். அங்கே நின்று கையை விரித்து சுற்றிலும் பார்த்தாள். முதலில் இருந்த பயம் குறைந்திருந்தது. ஆகவே மகிழ்ச்சி கூடுதலாக இருந்தது

கைகளை விரித்து பறக்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. உரக்கக் கூச்சலிடவேண்டும் என்று மனதில் வெறி எழுந்தது. மகிழ்ச்சியால் அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள்.

நெடுநேரம் அவள் அங்கே துள்ளிக்குதித்து கூச்சலிட்டு விளையாடினாள். அவளுடைய ஓசை அந்த கவச உடைக்குள்தான் ஒலித்தது. ஆனாலும் அவள் கூவிக்கொண்டே இருந்தாள். முதலில் கூ கூ கூ என்று கூவினாள். அதன்பின் நாமி நாமி என தன்பெயரை கூவினாள். காலிகை காலிகை என்று கூச்சலிட்டாள்

மீண்டும் அந்தக் கண்ணாடிக்குமிழிக்குள் வந்து அமர்ந்தாள். அப்போதுதான் அந்த கோளில் வேறு எவராவது இருக்கிறார்களா என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. அங்கே எந்த உயிரும் இல்லை என்று அவள் கணிப்பொறியில் இருந்து அறிந்திருந்தாள். இருந்தாலும் எவராவது இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தாள்

நாமி மறுநாள் வெளியே சென்றபோது தனிமையாக உணர்ந்தாள். மனம் ஏக்கம்கொண்டது. எங்கே போனாலும் அவள் அங்கே தன்னந்தனிமையில் இருக்கிறாள் என்று உணர்ந்தாள். அந்த தனிமை பெருகிக்கொண்டே இருந்தது

ஏனென்றால் அங்கேதான் அவள் திறந்தவானத்தைப் பார்த்தாள். வானம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. வெளியே சென்று நின்றபோது வானத்தில் விண்கற்கள் மின்னிக்கொண்டு செல்வதை காணமுடிந்தது. அவை நிறமில்லாத நீர்க்குமிழிகள் போலிருந்தன.

நாமி பெருமூச்சுவிட்டாள். “நான் தனிமையானவள்”என்று சொல்லிக்கொண்டாள். கண்ணாடிக்குமிழிக்குள் திரும்பி வந்ததும் கணிப்பொறியை திறந்து தேடினாள். அதிலிருந்து தனக்கு இன்னொரு பெயரை கண்டுபிடித்தாள். ஏகை. தனிமையானவள் என்று பொருள்.

அவள் மறுநாள் வெளியே சென்றபோது “நான் ஏகை! நான் ஏகை!”என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். முதலில் அது துயரத்தை அளித்தது. பிறகு அவ்வெண்ணம் இனிமையாக ஆகியது. அவள் உள்ளம் மலர்ந்தது. அந்த கோளில் எவருமே இல்லை. அப்படியென்றால் அது முழுக்க அவளுடையதுதான். அவள் அங்கே என்ன வேண்டுமென்றாலும் செய்யமுடியும். எங்கு வேண்டுமென்றாலும் போகமுடியும்.

மறுநாள் நாமி உற்சாகமாக அந்த கோளின் நிலத்தில் நடந்தாள். துள்ளி ஓடி விளையாடினாள். மண்ணை அள்ளி வீசினாள். கற்களை எடுத்து எறிந்தாள். “நான் நாமி!நான் ஏகை! நான் காலிகை!”என்று கூவிக்கொண்டே இருந்தாள்

10 துணை

நாமி  ஒவ்வொருநாளும்  வெளியே வந்து திறந்தவெளியில் விளையாடினாள்.முதலில் அவள் எச்சரிக்கையாக கவசஆடைகளை அணிந்தாள். அதன்பிறகு கொஞ்சம் எச்சரிக்கை குறைந்தது. விளையாட்டின் வேகத்தில் அவள் எதையும் கவனிக்கவில்லை

ஒருநாள் அவள் வேகமாக ஓடினாள். அவளுடைய காலில் இருந்து காலணி கழன்றுவிட்டது. வெறும் மண்ணில் காலை வைத்து ஓடிவந்து காலணியை எடுத்தாள். அதை மீண்டும் அணிந்துகொண்டாள். திரும்ப ஓடி கண்ணாடிக்குமிழிக்குள் வந்துவிட்டாள்.

அன்று அவள் தன் காலில் புண் வரும் என்று நினைத்தாள். கணிப்பொறியில் இருந்த செய்தியில் அவ்வாறுதான் சொல்லப்பட்டிருந்தது. அங்கே கதிரியக்கம் உண்டு.ஓர் உறுப்பில் வெளிக்காற்று பட்டால் கதிரியக்கத்தால் அங்கே புண்கள் வரும். புண் பெரிதாகி அந்த உறுப்பே அழுகிவிடும். மனிதர்கள் செத்துவிடுவார்கள்

கண்ணாடிக்குமிழிக்குள் வந்தபிறகு நாமி தன் காலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஒன்றுமே ஆகவில்லை. அவள் இரண்டுநாள் வெளியே போகாமல் காலையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றுமே ஆகவில்லை. புண் வரவில்லை. வலியும் வரவில்லை.

அப்படியென்றால் வெளியே கதிரியக்கம் இல்லையா? கதிரியக்கம் இருக்கிறதா என்று ஆராயவேண்டும் என அவள் முடிவு செய்தாள். அடுத்த முறை வெளியே போனபோது அங்கிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு வந்தாள். அதை கதிரியக்கத்தை அளக்கும் கருவியில் வைத்து ஆராய்ந்தாள். அதில் கதிரியக்கம் இல்லை என்று அந்தக்கருவி சொல்லியது.

நாமி கதிரியக்கத்தை அளவிடும் கருவிகளைப் பார்த்தாள். உண்மையாகவே வெளியே கதிரியக்கம் இல்லை என்று தெரிந்தது.

நாமி அந்த கதிரியக்கம் எப்படி இல்லாமலாகியிருக்கும் என்று ஆராய்ந்தாள். அந்தக்கல்லில் இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன்புவரை கதிரியக்கம் இருந்திருக்கிறது என்று தெரிந்தது. பின்னர் கதிரியக்கம் இல்லாமலாகிவிட்டது.

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்று அவள் யோசித்தாள். அப்போதுதான் மஞ்சள்குள்ளனில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது.கடுமையான கதிரியக்கத்தால் தங்கத்துளி என்னும் அந்தக்கோள் எரிந்தது. மனிதர்கள் அதை கைவிட்டுவிட்டுச் சென்றார்கள். அந்தச் செய்திகள் கணிப்பொறியில் இருந்தன.

அந்த கடுமையான கதிரியக்கத்திற்குப் பின் அந்த கோளில் கதிரியக்கம் நின்றுவிட்டது. அங்கே ஏற்கனவே இருந்த கதிரியக்கத்தை அது சமப்படுத்திவிட்டது. வெளியே கதிரியக்கமே இல்லை

நாமி மறுநாள் வெளியே சென்றாள். கொஞ்சதூரம் சென்றபின் காலில் இருந்த காலணிகளை கழற்றினாள். வெறுங்காலுடன் புழுதியில் நடந்தாள். மிகமென்மையான புழுதி அது. அதில் நடப்பது சுகமாக இருந்தது.

பிறகு அவள் தன் கவச உடைகளையும் கழற்றினாள். வெறும் உடலுடன் அந்த காற்றில் நடந்தாள். துள்ளி விளையாடினாள். அப்படி வெளியே விளையாடமுடிந்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்தக்கோள் முழுக்க சென்று பார்க்கவேண்டும் என்று நாமி முடிவுசெய்தாள். அடுத்தநாள் அவள் நிறைய உணவும் நீரும் எடுத்துக்கொண்டாள். அவற்றை அங்கிருந்த ஒரு சிறு வண்டியில் வைத்தாள். அதை இழுத்துக்கொண்டு நடந்தாள்.

நாமி நீண்டதூரம் நடந்து சென்றாள். மலைகளின் அடிவாரம் வரைக்கும் சென்றாள். பொன்னிறமான புழுதியில் அவள் காலடித்தடங்கள் மாலைபோல பதிந்து கிடந்தன.

மலையின்மேல் பாறைகள் செதில்களைப்போல எழுந்து நின்றன. உடைந்தும் விரிசலிட்டும் அடுக்கடுக்காகத் தெரிந்தன. அவை வெயிலில் நிறம் மாறிக்கொண்டிருந்தன.

நாமி மலை ஒன்றின்மேல் ஏறினாள். கண்ணாடிக் குமிழிக்குள் பூமியளவுக்கே மண்ணின் ஈர்ப்புவிசை இயந்திரங்களால் உருவாக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் அதுதான் பறவைகளுக்கும் செடிகளுக்கும் உகந்தது. வெளியே மண்ணின் ஈர்ப்புவிசை பாதிதான். ஆகவே நாமியின் எடை அங்கே  பாதி அளவுதான். அதனால் நாமியால் மிக எளிதாக ஏறமுடிந்தது

அவள் மலையுச்சியில் ஏறிநின்றாள். அங்கே நின்றபடி அவள் சுற்றிலும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த அந்த நிலம் அவளை ஏனோ மகிழ்ச்சி அடையச்செய்தது. தங்கநிறமாக விரிந்திருந்தது அது. தொடுவானம்  அரைவட்டமாகத் தெரிந்தது. பொன்னாலான ஒரு வில் போல அது தோன்றியது.

அன்று அவள் மலையுச்சியிலேயே இருந்தாள். மஞ்சள்குள்ளன் என்னும் சூரியன் வடக்கே சென்று மறைந்தது. சூழ்ந்திருந்த நிலம் இருட்டிக்கொண்டே வந்தது. வானமும் இருட்டாகியது. முற்றிலும் இருண்டபோது வானிலிருந்த விண்கற்கள் சிவப்புநிறமாக ஒளிரத் தொடங்கின

கண்ணாடிக் குமிழிக்கு உள்ளே இருந்து பார்த்தபோது தெரிந்ததை விட மேலும் பலமடங்கு விண்கற்களும் நட்சத்திரங்களும் தெரிந்தன. வானமே அவற்றால் ஒளிகொண்டிருந்தது. சில விண்கற்கள் நீண்ட சிவந்த வாலுடன் பறந்து சென்றன.மிக அருகே செல்வதுபோல அவை தோன்றின

நாமி வானைப்பார்த்துக்கொண்டு ஒரு பாறைமேல் மல்லாந்து கிடந்தாள். அவளுக்கு ஏனோ அழுகை வந்தது. கண்ணீர் வழிந்து கன்னங்களில் கொட்டியது. ஆனால் அது துயரத்தால் வந்த கண்ணீர் அல்ல. அவள் மனம் மகிழ்ச்சியாகவே இருந்தது. மகிழ்ச்சியினால் வரும் கண்ணீர் அது.

நாமி அப்படியே தூங்கிவிட்டாள். காலையில் முகத்தில் வெயில்பட்டபோது அவள் எழுந்தாள். தெற்கே மிகப்பெரிய கோபுரம்போல மஞ்சள்குள்ளன் நின்றது. சிவந்த ஒளியில் மலைகளெல்லாம் எரிந்துகொண்டிருப்பவை போல தோன்றின

அவள் கீழே இறங்கி நடந்து வந்தாள். அவள் மிகவும் களைப்பு அடைந்திருந்தாள். ஆகவே மெல்ல நடந்தாள். அவளைச் சுற்றியிருந்த மென்மையான புழுதியில் அலையலையாக காற்றின் தடம் பதிந்திருந்தது.

அவள் எதையோ கண்டு திடுக்கிட்டாள். எதைக் கண்டோம் என்று அதற்குப்பிறகே சுற்றிலும் பார்த்தாள். முதலில் எதுவும் தென்படவில்லை. ஆனால் அவள் எதையோ பார்த்துவிட்டாள் என்று அவளுடைய மனம் சொல்லிவிட்டிருந்தது.

அவள் பார்த்துக்கொண்டே நடந்தாள். அதன்பின் அது என்ன என்று கண்டுபிடித்துவிட்டாள். அப்படியே அசைவில்லாமல் நின்றுவிட்டாள். அந்தப்புழுதியில் சிறிய அசைவுகள் தெரிந்தன.

காற்றில் புழுதி அலையடிக்கும் அசைவு அல்ல அது.ஏதோ உயிரின் நடமாட்டம் என்று தெரிந்தது. அவள் மிகமெல்ல அதைப்பார்த்தபடி நடந்தாள். அவள் அருகே சென்றபோதும் அந்த உயிர் எங்கும் ஓடவில்லை

அவள் அருகே சென்று பார்த்தபோது ஆச்சரியம் அடைந்தாள். அது ஆமைபோன்ற ஒர் உயிர். ஆனால் ஆமை அல்ல. அது விசித்திரமாக நகர்ந்தது. அதை எங்கோ பார்த்ததுபோலிருந்தது

நாமி குனிந்து அமர்ந்து அதைப்பார்த்தாள்.சட்டென்று அது என்ன என்று அவளுக்கு தெரிந்தது. அது ஒரு கால்பாதம். மனிதக்காலின் பாதம்போலவே இருந்தது. குதிகால்,உள்ளங்கால், ஐந்து விரல்கள் ஆகிவரை இருந்தன. முன்னாலிருந்த ஐந்து விரல்களை அசைத்து அசைத்து அது நடந்தது.

அருகே இன்னொரு உயிர் அதேபோல நடந்தது. ஆனால் அது வேறுமாதிரி இருந்தது. அந்த வேறுபாடு என்ன என்று அவள் கூர்ந்து பார்த்தாள். முதலில் அவள் பார்த்த பிராணி இடதுகால் வடிவில் இருந்தது. இரண்டாவது பிராணி வலதுகால் வடிவிலிருந்தது.

அந்தப் பிராணிகள் எப்படி வந்தன? அவள் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள். அவை பொன்னிறமான புழுதியாலானவை போலிருந்தன. கூர்ந்து பார்த்தபோது அவை மிகச்சிறிய பொடியால் ஆனவை என்று தெரிந்தது. அவற்றின் உடலில் ஒருவிதமான அலை இருந்தது. அதாவது அவற்றின் உடல் மஞ்சள்நிறமான நீர்ப்பரப்பு போல தெரிந்தது.

நாமி ஒரு சிறிய கல்லை எடுத்து அந்தப் பிராணியின்மேல் போட்டாள். அந்தக்கல் அந்தப்பிராணியின் உடலில் பதிந்து உள்ளே சென்றது. நீர்ப்பரப்பில் கல் விழுந்ததுபோல தோன்றியது. கல் விழுந்த இடத்தில் அந்தப் பிராணியின் உடல் கலைந்தது.கல் கீழே கிடந்தது. பிராணி மீண்டும் தன்னை ஒன்றாக ஆக்கிக்கொண்டு மெதுவாக மேலே சென்றது.

நாமி ஆச்சரியத்துடன் தன் கையில் இருந்த குச்சியால் அதை இரண்டாக வெட்டினாள். அது இரண்டு பகுதியாக மாறியது. குச்சியை எடுத்ததும் மீண்டும் ஒன்றாகியது

அது ஒரே உடல் அல்ல என்று அவளுக்குத் தெரிந்தது. அந்த மஞ்சள்நிறப்புழுதி இணைந்து ஒரு பிராணி போல ஆகியிருந்தது. எறும்புகள் கூட்டமாக மாறி ஒரு பந்துபோல ஆகிவிடுவதுபோலத்தான் அது ஆகியிருந்தது

ஆனால் அது மணலால் ஆனது அல்ல. மிகச்சிறிய பல்லாயிரம் உயிர்கள் இணைந்து அந்த கால்பாத வடிவில் இருக்கின்றன என்று அவள் தெரிந்துகொண்டாள்

மிகச்சிறிய உயிர்கள் அவை. தூசு அளவுக்கே சிறியவை. அவை ஏன் பாதங்களின் வடிவில் இருக்கின்றன என்று அவள் எண்ணினாள். வேறு எந்த வடிவிலும் அவை இல்லை.

எழுந்து நின்று பார்த்தபோது மேலும் நிறைய பிராணிகள் அங்கே அசைந்துகொண்டிருப்பதை நாமி கண்டாள். எல்லாமே பாதங்களின் வடிவில்தான் இருந்தன.

நாமி அவை என்ன என்று யோசித்துக்கொண்டு நின்றாள். அப்படி ஓர் உயிரினம் அங்கே இருப்பதைப் பற்றி கணிப்பொறிகளில் இருக்கவில்லை. அவளும் அதற்கு முன்பு பார்த்ததில்லை.

அது என்ன என்று அவள் யோசித்தபடி நடந்தாள். அவை எல்லாமே ஒரே அளவாக இருந்தன. திடீரென்று அவளுக்கு ஒன்று தெரிந்தது. அவை அவளுடைய கால்பாதங்களின் அளவே இருந்தன

“என்னுடைய காலின் பாதங்களா? அது எப்படி!” என்று நாமி வியந்தாள். ஆனால் அவை அவளுடைய கால்களின் பாதங்களேதான்.

நாமி திரும்பி தன் கால்கள் பதிந்த இடத்தைப் பார்த்தாள். அவளுடைய கால்கள் புழுதியில் பதிந்த இடம் குழியாக இருந்தது. அந்த குழியில் மணல் வந்து விழுந்து நிறைந்துகொண்டிருந்தது

அவள் குனிந்து கூர்ந்து பார்த்தாள். மணல் அல்ல அது. மணல் போலவே இருந்த ஒரு சிற்றுயிர்.  அந்த காலடித்தடத்தில் மிகமிக மெல்ல அந்தச் சிற்றுயிர் சேர்ந்துகொண்டிருந்தது

அவள் அதைப்பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தச் சிற்றுயிர் பாதத்தின் வடிவை அடைந்தது. அந்தச் சிற்றுயிர் புழுதியில் இருந்து பிரிந்து வந்தது. உள்ளிருந்து எழுந்து விரல்களை அசைத்து நடக்க ஆரம்பித்தது

நாமி குடிநீர்ப் புட்டியை திறந்தாள். அந்தச் சிற்றுயிரில் ஒரு சிறு துளியை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டாள். மீண்டும் தன் கண்ணாடிக்குமிழி நோக்கிச் சென்றாள்.

[மேலும்]

முந்தைய கட்டுரைமூலநூல்களின் மொழியாக்கமும் மறுபதிப்பும்
அடுத்த கட்டுரைமலையும் குகையும்