என்றும் புதியவை என…

ஆசிரியருக்கு,

நான் தட்டச்சு பழகும் போது எனக்கு ஒரு obsession  இருந்தது, சிலிண்டரின் நாபை அழுத்தி திருகித் திருகி ஒன்றுக்கும் இரண்டுக்கும் ஆன இடைவெளியை சாத்தியமானவரை பகுத்துக் கொண்டே சென்று எழுத்துக்களை தட்டச்சு செய்து ஒரு வரிக்கும் அடுத்ததற்கும் ஆன இடை வெளியில் பல்வேறு அலகுகளை தேடுவது. 1, 1.5 என்னை திருப்தி படுத்துவதில்லை.

பின்னர் இலக்கியம் வாசிக்க வந்த பிறகு உணர்வு நிலைகளில் இப்படி உள்ள பல்வேறு பதத்தை தேடுவது என் obsession. இதை மொழி வயப்படுத்துதல் என்பது ஒரு எழுத்தாளன் சந்திக்கும் பெரிய சவால். கவிதையில் இதை சாத்தியப்படுத்த ஒரு நீரோட்டம் பார்க்கும் நிபுணனின் அடி உணர்வும் ஒரு கணிதத் திரணாளனின் துல்லியமும் ஒருங்கே தேவை. மோகனரங்கனின் சமீபத்திய சில கவிதைகளில் இது நிகழ்ந்துள்ளது. முதலாவது மறு மலர், இரண்டாவது வலியறிதல் அடுத்தது பாற்கடல்.

இக்கவிதைகளின் தரிசனம் அதன் வடிவத்தை தானே தேர்ந்துள்ளது. கடந்தகால ஏக்கத்திற்கும் வசந்தத்திற்கும் இடையில் விழுவது மறுமலர். தொந்தரவுக்கும் ரணத்திற்கும் இடையில் விழுவது வலியறிதல். கூடாமல் குறையாமல் நிற்கிறது பாற்கடல். ஆகவே தன்னியல்பாகவே plain poetry க்கும் Imagery க்கும்   இடையில் விழுகிறது இக் கவிதைகளின் வடிவம்.

மறு மலர்

உறக்கத்திலிருக்கும்

குழந்தை முன்

மிருதுவான ரோஜாவை

நீட்டுகிறார்

கடவுள்

கண் திறவாமலே

சிரிக்கிறது குழந்தை

மறு நிமிடம்

மலர் இருந்த கையை

மறைத்துக் கொள்கிறார் அவர்

கண் திறவாமலே

சிணுங்குகிறது குழந்தை

குமரி வடிவாயிருந்த

குழந்தையொருத்தி

சொன்ன கதையை

அகல விரிந்த விழிகளோடு

அதிசயம் என்பதாய் கேட்டிருந்தவனுக்கு

அப்போது தெரியாது

கடவுள் தன் முன்

காட்டி மறைக்கும்

இளஞ் சிவப்பு வண்ணப்

புதிர்

அதுவென.

இப்போதும்

முடிவிலே இன்பம் தொனிக்கும்

கதைகளைப் படிக்கும்போது

நினைவின் மடிப்பினின்றும்

வாடிய மலர் ஒன்றின்

வாசனையை நுகர்கிறான்

அவன்.

ஒரு கவிதைக்கு ஒரு பாராட்டு விழா எடுப்பது என்றால் நான்  மறு மலர் கவிதையில்  மலர் இருந்த கையை மறைத்துக் கொள்ளும் கடவுள் என்கிற வரிக்காகவும், வாடிய மலரின் வாசனையை நுகர்கிறான் என்கிற வரிக்காகவும் இதை செய்வேன். காலத்தில் வாடி உதிர்ந்த காதல்  கற்பனையில் அதன் செழுமையையும் வாசத்தையும் கொண்டுள்ளது. இது வாடா மலர்.

வ‌லிய‌றித‌ல்

பார்த்த‌

வ‌ண்ணமிருக்க‌

வெடித்த‌ நில‌த்தில்

விழுந்த‌ விதை

செடி

ம‌ர‌மென‌

பொழிந்த‌ ம‌ழைக்கு

த‌ழைந்த‌து

நிழ‌லுக்கு இற‌ங்கிய‌

ம‌ர‌ங்கொத்தி ஒன்று

க‌ழுத்தை வாகாய் சாய்த்து

நிறுத்தி

நிதானமாய்

துளையிடுகிற‌து

இத‌ய‌த்தை

குடையும‌ந்த‌

வ‌லி

அப்ப‌டியொன்றும் அதிக‌முமில்லை

அப்ப‌டியொன்றும் குறைவுமில்லை.

 பாற்கடல்

விதிக்கப்பட்டதற்கும்

கூடுதலாக ஒரு

நாழிகைக்கும் ஆசைப்படவில்லை.

மெய்யாகவே,

தாக மேலீட்டினால் தான்

அதுவும் கூட‌

ஒரு மிடறுதான் இருக்கும்

பதைத்து நீண்ட உன்

மெலிந்த கைகள்

நெறித்து நிறுத்த‌

விக்கித்துப் போனேன்

அறையின் நடுவே

கொட்டிக் கவிழ்ந்த கலயத்தினை

வெறித்த வண்ணம்

முணுமுணுக்கிறாய்

விதிக்கப் பட்டதற்கும்

குறைவாக ஒரு

நாழிகைக்கும் ஆசைப்படாதே

மேலே சொன்னது போல மரங்கொத்தி, வாடிய மலர், கவிழ்ந்த கலயம் ஆகியவை வெறும் காட்சி வீச்சாக நில்லாமலும் படிம நிலையை அடையாமலும் இடையில் நிற்கின்றன. என்னை பூமுள்ளாய் தீண்டியவை இக்கவிதைகள். மோகனரங்ககனின் புது மலர்வு இக்கவிதைகள், தமிழ் நவீன கவிதை புலத்திற்கும்.

கிருஷ்ணன்.

ஈரோடு

***

அன்புள்ள கிருஷ்ணன்,

ஆமாம், மூன்றுமே அரிய கவிதைகள். கவிதைப்படுத்துவது என்ற ஒரு செயல் உண்டு. நுட்பமான ஒரு வார்த்தையாக அதை நான் எண்ணிக்கொள்வதுண்டு.

எதைக் கவிதைப்படுத்துவது என்பது கவிஞனின் தெரிவு. அது அன்றாடத்தின் மிகச்சிறிய தருணமாக இருக்கலாம். ஒரு செய்தியாக இருக்கலாம். மிகக்கூரிய அனுபவமாக இருக்கலாம். ஒரு நினைவாக இருக்கலாம்.

ஆனால் கவிதைப்படுத்தப்பட்ட பின் அது என்றென்றைக்கும் உரியதாக, எளிய அறிதல்களைக் கடந்த ஒரு வெளிப்பாடாக, ‘மற்றொன்றாக’ மட்டுமே இருக்கமுடியும். அந்த மாறுதலைத்தான் கவிதை என்று சொல்கிறோம்.அது நிகழ்ந்தபின் எது கவிதைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியமே அல்ல.

இந்த எளியவிஷயத்தைத்தான் கவிதையை அறியாதவர்களுக்குச் சொல்லி புரியவைக்க முடியாமல் தவிக்கிறோம். பலசமயம் கவிஞர்களுக்கே புரியவைக்க முடிவதில்லை. கவிதைப்படுத்தப்படும் ஒன்று கவிதையாக ஆகாதபோது மிகச்சாதாரணமானதாகத் தோற்றமளிக்கிறது. அது கவிதையல்ல என்று நாம் சொன்னதுமே இதையெல்லாம் ஏன் கவிதையாக்கக்கூடாது என்று கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

நாம் கவிதையை வாசிக்கும்போது கவிதையிலிருந்து பின்னால் சென்று கவிதையாக்கப்பட்ட பேசுபொருளை அடைகிறோம். கவிதையாக்கப்படுவதற்கு முந்தைய தருணத்தையேகூட நாம் சென்றடைந்துவிடக்கூடும். அதன்பின் திரும்பி வந்து அது எப்படி கவிதையாகியிருக்கிறது என்று பார்க்கிறோம்.

ஊசல் இப்படி சென்று திரும்பி முழுமையான கவிதையனுபவத்தை அளிக்கிறது. கவிதையனுபவம் என்பது கவிதையாக்கம் நிகழும் தருணத்தை வாசகன் அடையும் அனுபவம்தான்.

கவிதைப்படுத்துதலின் மர்மங்களில் ஒன்று பல கவிதைத் தருணங்கள், பலகவிதைக்கருக்கள், பல படிமங்கள் மிகத்தொன்மையானவை என்பது. மாறுபட்டவையும் புதியவையுமான பேசுபொருட்கள்தான் புதியகவிதை ஆகவேண்டும் என்பதில்லை. ஏற்கனவே பல ஆயிரம் முறை கவிதையாக்கப்பட்ட ஒன்று மீண்டும் புத்தம்புதிய கவிதையாக ஆகமுடியும்

நம் சூழலில் புதியகவிதைக்காக புதிய பேசுபொருட்களை தேடிச்செல்லும் வாசகர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அன்றாட அரசியலில், சமூகநிகழ்வுகளில் இருந்து புதியவற்றைக் கண்டடைகிறார்கள். இதுவரை பேசப்படாத பேசுபொருள் இது என்று சொல்கிறார்கள்.

ஆனால் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான கவிதைகள் பெரும்பாலும் பழமையான, சொல்லப்போனால் தொன்மையான கவிதைக்கருக்கள் மட்டுமல்ல தொன்மையான படிமங்களும் கொண்டவை. கவிதையாக்கம்தான் புத்தம்புதியது. இம்மூன்றும் அத்தகைய கவிதைகள்

குழந்தைக்கு தெய்வம் மலர்காட்டி சிரிக்கவைத்து பின்னிழுத்து அழவைப்பது என்னும் நம்பிக்கையை பலர் கவிதையாக எழுதியிருக்கிறார்கள்.காதலின் வாடியமலர்களின் எஞ்சும் நறுமணத்தையும் எழுதியிருக்கிறார்கள். அவை இணையும் விதம் இக்கவிதையில் இப்போது நிகழ்கிறது

‘குன்றாக்குறையா’ என்னும் சொல்லாட்சி பௌத்தமெய்ப்பொருள் காலம் முதல் இருந்துவருவது. அதன் பலநூறு வடிவபேதங்கள் உள்ளன. ஒருகணம் கூட முடியாதது குறையவும் கூடாதது. இக்கவிதையில் அது பிறிதொன்றைச் சுட்டி விரிகிறது.

எப்போதும் பேசப்படும் ஒன்றை இன்றுபுதிதென ஆக்கும் கலைதான் கவிதையோ என்று நினைத்துக்கொண்டேன்

ஜெ

முந்தைய கட்டுரைஞானி-18
அடுத்த கட்டுரைதன்மீட்சி- அலைவுகள்,கண்டடைதல்கள்