விஷ்ணுபுரம் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.

விஷ்ணுபுரம் – காலச்சுவடு கூட்டம் பற்றிய கட்டுரையை உங்கள் தளத்தில் படித்தேன்.

‘அக்கூட்டத்தில் தேவதேவன் ஒருவரைத்தவிர பேசிய அனைவருமே விஷ்ணுபுரம் ஒரு நாவலே அல்ல, எவ்வகையிலும் பொருட்படுத்தப்படவேண்டிய நூல் அல்ல என்று பேசினர்.’

என்று ஓரிடத்தில் வருகிறது. இதற்கான என் மறுப்பைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

அக்கூட்டத்தில் நான் விஷ்ணுபுரம் நாவலைப் பாராட்டிப் பேசினேன். பாவண்ணன், ராஜமார்த்தாண்டன் ஆகியோரும் விஷ்ணுபுரம் நாவலைப் பாராட்டியே பேசினார்கள். தேவதேவன் பாராட்டிப் பேசியதைப் பற்றி நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேதசகாயகுமாரின் பேச்சு எனக்கு நினைவில் இல்லை. அனைவருடைய உரைகளின் சுருக்கம் காலச்சுவடிலும் வெளியானது.

ராஜமார்த்தாண்டன், பாவண்ணன், நான் முதலானோர் விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி உயர்வான கருத்தைக் கொண்டிருப்பது காலச்சுவடு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நாவலை விழத்தட்டுவதற்காகக் கூட்டம் ஏற்பாடு செய்பவர்கள் நாவலைப் பாராட்டிப் பேசக்கூடிய இத்தனை பேரை அழைத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அந்தக் கூட்டம் முடிந்த பிறகு நானும் என் மனைவியும் உங்கள் வீட்டுக்கு வந்திருந்ததும் கூட்டத்தைப் பற்றி நாம் விரிவாகப் பேசியதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்றுவரை விஷ்ணுபுரம் நாவலைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இன்று அதில் சில போதாமைகளும் குறைபாடுகளும் எனக்குத் தட்டுப்பட்டாலும் அது நல்ல படைப்பு என்பதிலும் தமிழில் முன்னோடியற்ற முயற்சி என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.

மேற்படிக் கூட்டம் பற்றி உங்கள் கட்டுரையில் வந்துள்ள கருத்துக்குத் தகவல் சார்ந்து நான் முன்வைக்கும் இந்த மறுப்பை உங்கள் தளத்தில் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.

மிகுந்த அன்புடன்

அரவிந்தன்

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-5
அடுத்த கட்டுரைஎவருடன் பகை- கடிதங்கள்