நஞ்சின் அழகு- லோகமாதேவி

நஞ்சின் சிரிப்பு

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

உங்களின் காலை நடைப்பதிவுகள் வாசிப்பவர்களுக்கும் உற்சாகமாய் ஒரு நடை போய்விட்டு வந்த உணர்வை அளித்துவிடுகின்றன. இப்படி சூழலை கவனித்து எழுதும் உங்களின் பதிவுகள் எனக்கு மிக பிரியமானவை. சென்ற வருடம் ‘’மென்பூக்குலை சூடி காலை இளவெயிலில் சுடர்விடும் புற்களை’’பற்றி சொல்லியிருந்தீர்கள். மென்பூக்குலை என்னும் இந்த சொல்லை எப்போது புற்களின் பூக்களை பார்க்கையிலும் நினைத்துக்கொள்ளுவேன். மிகப்பொருத்தமான அழகான விவரிப்பு அது. கோரை, பசுமை உள்ளிட்ட இந்த நடைப்பதிவுகள் அனைத்துமே மிக சுவாரஸ்யம்.

நஞ்சின் சிரிப்பு-எருக்கு குறித்த பதிவு ஏராளமான அரிய விஷயங்களை கொண்டிருந்தது.  எருக்கின் மருத்துவப்பயன்களையும், சைவத்தில் அதன் இடத்தையும்  கொடுக்கப்பட்டிருந்த இணைப்பில் தெரிந்துகொள்ள முடிந்ததால் எருக்கைக்குறித்த ஏராளமான சுவாரஸ்யமான  தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

மிலிந்த் சோமன் திருமணம்

தாவர அறிவியலிலும் எருக்கு மிக  சுவாரஸ்யமானதுதான். மெழுகில் செய்தது போலிருக்கும் எருக்கு மலர்களின் நடுவிலிருக்கும் அழகிய  கிரீடம் போன்ற அமைப்பினால் ஆங்கிலத்தில் இது Crown flower என்று அழைக்கப்படுகின்றது. மலர்களின் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் ஐங்கோண வடிவில் ஒரு சிறு மேடைபோல் இணைந்து அதனடியிலிருந்து ஐந்து அழகான வளைவுகளுடன்  பீடம் போன்ற அமைப்பினால் தாங்கப்பட்டிருக்கும் இந்த பூச்சித்திரத்தை வகுப்பில் வரைகையில்  இந்த கிரீடம் தெய்வச்சிலைகள் வீற்றிருக்கும் அழகிய மலர்பீடத்தை போலிருப்பதாக தோன்றும். பிற மலர்களைப்போல மகரந்தம் இதில் துகள்களாக  இருக்காது.  ஐங்கோண மேடை இணைந்திருக்கும் ஐந்துபுள்ளிகளிலும் மகரந்தம் நிறைந்த தராசைப்போன்ற இரு பைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.

எருக்கின் தாவர சிற்றினங்களில் வெள்ளெருக்கான  Caotropis procera, இளம் ஊதா நிறமலர்களுடனான Calotropis  gigantea    இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் மிக நுண்ணியதாக,  தாவரவியலாளர்களாலேயே எளிதில் கண்டுபிடித்து விட முடியாதாக இருக்கும். அவர்களே இந்த இரண்டின் தாவர அடையாளங்களை அடிக்கடி குழப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் இன்று வரையிலுமே திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  மட்டும் வளரும், இதழ்களின் ஒரங்களில் மட்டும் அடர் ஊதா நிறம் தொட்டு வைத்தது போலிருக்கும் ஒருவகையும் இந்த இரண்டில் ஓன்றுதான் என்று கருதப்படுகின்றது.

கொங்கு வட்டாரங்களில் அநேகமாக எல்லா விநாயகர் கோவில்களிலும் வெள்ளை எருக்கு மலர் மாலை சாத்தும் வழக்கம் இருக்கின்றது, வரப்போகும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த மாலைகளுக்கு மிகவும் தேவை இருக்கும். வெள்ளெருக்கின் வேர்களில் விநாயகர் (ஒரளவிற்கு அவரைப்போல) செய்து விற்பார்கள். அதையும் வாங்க நிறையப்பேர் இருப்பதால் இப்போது வேரா, தண்டா என்றறியாதவர்களுக்கு தக்கையில் செய்து எருக்கின் வேரில் செய்ததாக விற்பனை செய்கிறார்கள்.

.வெளியே எடுக்க முடியாத ஆழத்தில் காலில் முள்தைத்தால் அங்கு எருக்கம்பாலை  வைத்து அதன்மீது எருக்கிலைகளின் மீதிருக்கும் மெழுகுப பூச்சை சுரண்டி வைக்கும் பழக்கமும் இந்தப்பகுதியில் உண்டு.

நவக்கிரக வனங்களில் 9 கோள்களுக்கான் தாவரங்களில் சூரியனுக்குரியதாக இருக்கும் தாவரம் எருக்குதான். சமஸ்கிருதத்திலும் இது Arka – சூரியனின் கதிர் என்றே குறிப்பிடப்படுகின்றது

பைபிளை தழுவி எழுதபட்ட ஜான் மில்டனின் இழந்த சொர்க்கத்தில் (Paradise lost) Sodom apple என்று குறிப்பிடப்படும் இச்செடியின் பழங்களைத்தான் ஆதாமையும் ஏவாளையும் விலக்கப்பட்ட கனியை சுவைக்க தூண்டியபின்னர் சாத்தான் புசித்ததாக சொல்லப்பட்டிருக்கின்றது.

திருமண தோஷமுள்ளவர்கள் முதலில் வாழைக்கு தாலி கட்டுவதைப்போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கின்றது.

எல்லா பாகங்களுமே சிறந்த மருத்துவப்பயன்களை உடைய இச்செடி, கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் உடல்நலனுக்கான கடவுளான அஸ்கிலிப்பியஸின் பெயரிலான ASCLEPIADACEAE என்னும் குடும்பத்தை சேர்ந்தது இந்த தாவரக்குடும்பத்தையே Milk weed family என்பார்கள்.

பழங்குடியினரில் பல இடங்களில் நோயுற்றவர்களின் ஒருசில தலைமுடியை எருக்கஞ்செடியில் கட்டிவிட்டால் நோயை செடி எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையும்  நிலவுகின்றது.

உயர் ரத்தச்சர்க்கரை பிரச்சனைக்கு phytotherapy எனப்படும் தாவரமருத்துவத்தில்,  இரண்டு பாதங்களிலும் உள்ளங்கால்களில் எருக்கிலையின் மேற்புறம் படுமாறு வைத்து அதன்மேல் சாக்ஸ் அணிந்து 1 வாரம் நடந்து கொண்டிருந்தால் சர்க்கரை அளவு சீராகிவிடும் என்று சொல்லப்படுகின்றது.

ஜமைக்கா, கம்போடியாவிலெல்லாம் பழுத்து வெடிக்கும் எருக்கின் கனியினுள்ளிருக்கும் விதைகள் வெடித்துப்பரவ உதவி செய்யும் பட்டுப்போல் மினுங்கும் இழைகளை அடைத்து தலையணை செய்கிறார்கள்.எருக்கஞ்செடியின் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் நார் , வில்லின் நாண், மீன் பிடி வலை, உடைகள்,போன்றவை தயாரிக்க உதவுகின்றது. நச்சுத்தன்மை கொண்ட எருக்கின் பாலை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடும் வழக்கமும் பழங்குடியினரிடம் இருக்கிறது ’வூடூ’ கலை தோன்றிய மேற்கு ஆப்ரிக்காவின் ’பெனின்’ நாட்டில் மட்டும் எருக்கின் பாலைக்கலந்து மிக அதிக விலையுடையுடைய ஆட்டுப்பால் சீஸ் செய்கிறார்கள்.

எருக்கின் எல்லா பாகங்களுமே வேதிப்பொருட்கள் நிறைந்திருப்பதால் ஏராளமான மருத்துவப்பயன்கள் இருக்கின்றன. காமம் பெருக்கும் (Aphrodisiac) குணத்திற்காகவும் இச்செடி பாரம்பரிய மருத்துவ முறையில் உபயோகிக்கபடுகின்றது. அரிதினும் அரிதான   keratoconjunctivitis எனப்படும் பார்வையிழப்பு எருக்கின் பால் கண்களில் படுவதால் ஏற்படுகின்றது.   ஆங்கிலத்தில் Crownflower  keratitis  என்றே குறிப்பிடப்படும் இக்குறைபாடு எருக்குமலர் மாலைகளை மிக அதிகமாக தயார்செய்யும் தாய்லாந்து மற்றும் ஹவாய் பகுதியில் மட்டும் அரிதாக ஏற்படும்.

மலர்களை பறிக்கையிலோ அல்லது மலர்களை மாலையாக தொடுக்கையிலோ, விரல்களில் ஒட்டியிருக்கும் பால் தவறுதலாக கண்களில் பட்டால் இக்குறைபாடு ஏற்படுகின்றது.

ஹவாயில் எருக்குமலரில் செய்யபப்டும் leis எனப்படும் மாலைகளும்,  மலராபரணங்களும், விசிறி, வளையல் போன்றவையும் மிகப்பிரபலம் ஹவாய் அரசின் கடைசி மகாராணியான   லில்லியொ கலானி (Liliʻuokalani) எருக்கு மலராபரணங்களை வளமை மற்றும் செல்வத்தின் குறியீடாக  அணிந்து வந்ததால், ஹவாய் கலாச்சாரத்திலேயே இம்மலர்மாலைகள் மிகசிறப்பான இடம் பெற்றிருக்கின்றன.

இம்மலர்களின் வெளிஅடுக்குகளை மட்டும் கோர்த்தும், உள்ளிருக்கும் கிரீடம் போன்ற அமைப்பை மட்டும், அல்லது முழுமலரையுமே கோர்த்து, அரும்புகளை மட்டும் கோர்த்து என ஹவாயில் எருக்கமலர் மாலைகளும் ஆபரணங்களும் பல அழகிய நிறங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கும். ஹவாயின் எருக்கு மலரலங்காரங்களைப் பார்க்கையில் கண்ணை நிறைக்கின்றது  நஞ்சின் அழகு

ஹவாயிலும் இன்னும் பல நாடுகளிலும், இந்தியாவின் அஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பழங்குடிச்சமூகத்தில் பரவலாக திருமணம் மற்றும் இறப்பு  சடங்குகளில் எருக்கு மலர் மாலைகளை பயன்படுத்துகிறார்கள். பிரபல பாலிவுட் மாடலும் நடிகருமான் மிலிந்த் சோமன் திருமணத்திலும் மணமக்கள் இருவருமே எருக்கு மலர்களிலான மாலைகளும் தலையலங்காரங்களும் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. அவரது மனைவி அஸ்ஸாமியப்பெண்

லோகமாதேவி

எருக்கின் இலையை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு எருக்கிலைகளின் அடியில் முட்டையிடும் மொனார்க் வகை பட்டுப்பூச்சிகளும் எருக்கையே நம்பியுள்ளன. புறநகர் பகுதிகளிலெல்லாம் நகரம் விரிந்துகொண்டே வருவதால் வெகுவிரைவாக அழிந்து வருகின்றன எருக்கும் மொனார்க் பட்டுப்பூச்சிகளும்.

அறியாச்சிறுவயதில் எருக்குமலர்க்கொத்துக்களின் சின்னஞ்சிறு கொழுக்கட்டைகளைப் ‘போலிருக்கும் மொட்டுக்களை அழுத்தி ’டப்’ என்னும் ஒலியுடன் அவை வெடிக்கும் ஒலி கேட்டால் மனதில் நினைப்பது நடக்கும் என்னும் நம்பிக்கை இருந்தது. நினைத்தது நடந்ததே இல்லை எனினும் எருக்குமொட்டுக்களை எங்கு பார்த்தாலும் அழுத்தி வெடிக்க வைப்பது மட்டும் இன்றும் நடக்கிறது.

நன்றி

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைநித்ய சைதன்ய யதியை அறிய…
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-8