மதமும் நல்லாட்சியும்

அன்புள்ள ஜெ

இன்று தன் முகநூல் பக்கத்தில் உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் ஒரு கட்டுரை பற்றிய செய்தியைப் பகிர்ந்திருந்தார். ‘Foreign Affairs’ magazine, Sep-Oct 2020  இதழில் வந்த கட்டுரை. அதில் மதநம்பிக்கையில் இருந்து வெளியே சென்றுவிட்ட நாடுகள்தான் பொருளியலிலும் சமூகநீதியிலும் முன்னேறியிருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். இந்தியாவை அக்கட்டுரை குறிப்பிடவில்லை என்றாலும் இந்தியா மதநம்பிக்கை ஆழமாக வேரூன்றிய நாடாக இருப்பதனால்தான் இங்கே ஊழல் மிகுந்திருக்கிறது என்று அவர் கருதுகிறார். உங்கள் கருத்து என்ன?

எஸ்

***

அன்புள்ள எஸ்

உங்கள் பெயரை குறிப்பிடவில்லை. சங்கடம் புரிகிறது

நான் அரவிந்தன் கண்ணையன் சொல்லியிருக்கும் அதே கருத்தை குறைந்தது இருபது முறையாவது இதே தளத்தில் சொல்லியிருப்பேன். சிலநாட்களுக்கு முன்புகூட எழுதியிருந்தேன். மதம் அரசியலின் அடிப்படையாக அமையும் அத்தனை நாடுகளும் பொருளியல் வீழ்ச்சியைச் சந்திக்கும், சமூகநீதியும் உடன் அழியும் என்பதையே உலகவரலாறு இதுவரை காட்டுகிறது.

ஏனென்றால் மதம்வேறு, அரசியல் வேறு. மதம் மனிதனின் பண்பாட்டு நினைவுகளின் தொகுதி, அவனுடைய ஆன்மிகத்தேடல்களின் களம். அது நேரடியாக உலகியலுடன் தொடர்புகொள்ளும் இடம் குறைவாகவே இருக்கவேண்டும்.  முழுக்க தவிர்க்கமுடியாது என்பதனால், கூடுமானவரை குறைவாக.

ஏன்? மதத்தின் மேலே சொன்ன இரு அடிப்படைகளுமே உலகியல்மீறிய தன்மை கொண்டவை. மதம் பேசும் பண்பாட்டுநினைவுகள் மிக நுண்மையானவை, அதன் ஆன்மிக வழிகாட்டல் அந்தரங்கமானது. அவற்றை அது உலகியல் அதிகாரமாக ஆக்கிக் கொள்ளும் என்றால் உலகியலில் அதை கட்டுப்படுத்த எதிர்விசையே இல்லை. விளைவாக வரம்பில்லா அதிகாரமே நிகழும். அது அழிவையே கொண்டுவரும்.

மதம் சார்ந்து உருவாக்கப்பட்ட உலகியல் அமைப்புகள் அனைத்திலுமே மெல்லமெல்ல ஒருவகை சர்வாதிகாரம் உருவாவதை காணலாம்.  எந்த ஆன்மிக இயக்கமும் அமைப்பாக ஆகும்போது அதில் பிற அமைப்புகளைவிட விரைவாகவே ஊழலும் சீர்கேடுகளும் பெருகுவதைக் கண்டு நாம் அதிர்ச்சி அடைந்திருப்போம். அது இதனால்தான்

நம்முடைய தொன்மையான மடங்களின் வரலாறே இதுதான். ஏனென்றால் மடாதிபதியின் அதிகாரம் குறியீட்டுரீதியானது, மறுக்கமுடியாதது. ஆகவே அவர் கேள்விக்கு அப்பாற்பட்டவர் ஆகிறார். அங்கே ஜனநாயகம் என்பதற்கே இடமிருக்கமுடியாது. தட்டிக்கேட்கவே எவரும் இருக்க மாட்டார்கள். ஆளிபிடித்தல்களும் போட்டுக்கொடுத்தல்களும் குழுச்சண்டைகளும்தான் எஞ்சும்

நம் மடங்களின் ஊழல்கள், அதிகாரச்சீரழிவுகள், ஒழுக்கச்சீரழிவுகள் எல்லாமே இந்த முற்றதிகாரத்தின் விளைவுகள். அது அரசாங்கத்துக்கு நீடிக்குமென்றால் என்ன ஆகும்? ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், இந்தியாவின் மடங்களைப்போல இந்தியப் பிரதமரின் பதவியும் ஆகுமென்றால் இந்தியா என்ன ஆகும்? இப்போது மடாதிபதிகளே அரசியல் தலைவர்களாகவும் ஆவது தொடங்கிவிட்டது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

மதம் அகவயமானது என்பதனாலேயே அது குறியீடுகள் வழியாகவே இயங்கமுடியும். அக்குறியீடுகள் மரபில் ஆழமாக வேரூன்றியவை. அவற்றை அரசியலுக்குப் பயன்படுத்தினால் அவற்றுக்கு எதிர்த்திசையாக வைக்கத்தக்க குறியீடுகள் இருக்கமுடியுமா என்ன?

காந்தி ராமராஜ்யம் என்று சொன்னதையே பிழையான முன்னுதாரணம் என்று நான் நினைக்கிறேன். அன்று அதை அவர் தேர்தலரசியல் சார்ந்து யோசித்திருக்க மாட்டார். ஓம் என்ற ஒலியையோ ராம் என்ற பெயரையோ அரசியல் குறியீடாக்கினால் அக்குறியீடுகள் நூற்றாண்டுகளாகத் திரட்டிக்கொண்டிருக்கும் அத்தனை நுண்மையான உணர்வுகளையும் அதைப் பயன்படுத்தும் கட்சிகள்  தங்களுக்காக எடுத்துக்கொள்கின்றன. அவை எதிர்க்க முடியாதவையாக ஆகின்றன.

உதாரணமாக, காவிக்கொடி என்பது இங்கே இந்துமரபின் கொடி, அதை மத அமைப்புகள் அல்லாதவை பயன்படுத்துவதை தடுக்கவேண்டிய பொறுப்பு இந்துக்களுக்கு உள்ளது. அந்தப்போக்கை அனுமதித்தால் காலப்போக்கில் இந்து அடையாளங்களின் மதம்சார்ந்த முக்கியத்துவம் அழியும். நாளை இன்னொரு கட்சி எழுந்து வந்து விஷ்ணுவின் சுதர்சனத்தை தங்கள் அடையாளமாக ஆக்குகிறது என்று கொள்வோம். இன்னொரு அமைப்பு சிவனின் உடுக்கை ஆயுதமாக்குகிறது என்று கொள்வோம். இங்கே என்ன அரசியல் நடக்கும்?

மதக்குறியீடுகளை அரசியல்கட்சிகள் பயன்படுத்தும்போது அவ்வாறு பயன்படுத்துவதை மட்டும்தான் நாம் எதிர்க்கமுடியும், அக்குறியீடுகளை எதிர்க்கமுடியாது, ஏனென்றால் அவை வரலாற்றின் ஆழத்தில், சமூகக்கூட்டுமனதில் இடம்பெற்றிருப்பவை. ஆனால் தேர்தரலசியலில் என்ன நிகழுமென்றால் எதிர்க்கட்சியினர் அந்த மதக்குறியீடுகளை எதிர்ப்பார்கள், அவற்றை சிறுமையும் செய்வார்கள்.அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் ‘அய்யோ மதக்குறியீடுகளை அவமதிக்கிறார்களே” என்று கூச்சலிடுவார்கள். அந்த எதிர்ப்பால் மதநம்பிக்கை கொண்டவர்கள் மேலும் அக்குறியீடுகளை பயன்படுத்துபவர்களை நோக்கிச் சாய்வார்கள்.

அரசியலில் மதம் ஊடுருவும்போது அது அரசியலின் அடிப்படைகளை அழித்துவிடுகிறது. நாம் நம் வரிப்பணத்தைக் கொண்டு அரசை நடத்தவே ஆட்சியாளர்களை தேர்வுசெய்கிறோம். அவர்கள் மதக்குறியீடுகளைக் கொண்டு, மதஉணர்வுகளைக் கொண்டும் ஆட்சியை அடையமுடியும் என்றால், அவர்களின் ஏற்புக்கு அது மட்டுமே காரணமாகும் என்றால் அவர்கள் எதற்காக நல்லாட்சி அளிக்கவேண்டும்? எதற்காக பொருளியல் நன்மைகளை செய்யவேண்டும்? அவர்கள் என்னதான் பொருளியலழிவை உருவாக்கினாலும் மதம்சார்ந்து அதிகாரம் கைக்கு வரும் என்றால் மக்கள்நலனே கருத்தில் கொள்ளப்படாது. உலகமெங்கும் மதம் அரசியலில் ஓங்கியிருக்கும் நாடுகள் அழிந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான்.

ஆனால் இது மதத்திற்கு மட்டும் அல்ல, இனம் மொழி நிறம் உட்பட ஏதேனும் கூட்டுவெறியின் மேல் ஏறி அதிகாரத்தை அடையமுடியும் என்றாலே அங்கே நல்லாட்சிக்கான வாய்ப்பு இல்லாமலாகிவிடுகிறது. நீங்கள் ஒரு கட்சிக்கோ ஒரு மனிதருக்கோ வாக்களிப்பது அவரது செயல்பாட்டால் அல்ல, உங்கள் இனம், மதம், மொழி அடையாளம் சார்ந்துதான் என்றாலே திரும்ப எதையுமே எதிர்பார்க்க முடியாமலாகிவிடுகிறது.

மதநம்பிக்கையாளர்கள் அறமற்றவர்கள், ஊழல்செய்ய மதமே துணையாகிறது என்பதுபோன்ற எளிமைப்படுத்தல்கள் அபத்தமானவை. மதமற்றவர்களும் ஒன்றும் அறத்தில் வேரூன்றியவர்கள் அல்ல. மதத்தை கடந்தவர்களால் இன, நிறவெறிகளைக் கடக்கமுடியவில்லை என்பதை நாம் காண்கிறோம். மதத்தை கடந்த பலநாடுகளின் ஒட்டுமொத்தச் சமூகமும் அந்நாடுகள் ஏழைநாடுகள்மேல் செய்யும் கொடூரமான பொருளியலாதிக்கத்தை கண்டும் காணாமல் இருப்பதைக் காண்கிறோம். மதமற்ற சமூகங்களின் கூட்டான உளச்சோர்வுகளை, உளத்திரிபுகளையும் காண்கிறோம்.

மதங்களின் வன்முறை பற்றிப் பேசுபவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஆயிரமாண்டுகளில் மதங்கள் செய்த வன்முறைக்குச் சமானமான வன்முறையை நூறாண்டுகளில் மதநம்பிக்கை அற்ற ஏகாதிபத்தியவாதிகளும் சர்வாதிகாரிகளும் செய்திருக்கிறார்கள். ஸ்டாலினும் போல்பாட்டும் ஹிட்லரும் ஆத்திகர்கள் அல்ல. அந்தப் பேரழிவுகள் மதத்திற்காக நிகழ்ந்தவையும் அல்ல.

உண்மை என்னவென்றால் மதத்தை பொதுவாழ்க்கையில் நிலைநிறுத்தாத நாடுகளில் மக்கள் தன்னலத்தையாவது நாடுகிறார்கள். நாங்கள் கட்டும் வரிப்பணத்திற்கு எங்களுக்கு திருப்பிச் செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். ஆட்சியாளர்கள் ஓரளவு செய்தேயாகவேண்டும். ஏதேனும் அடிப்படையில் மக்கள் உணர்ச்சித்தூண்டல் அடைந்து கூட்டாக வாக்களிப்பார்கள் என்றால் அது நிகழ்வதில்லை. அவ்வளவுதான்.

மதம் பொதுவெளி அடையாளமாக ஆகாமலிருக்கையில், அது தனிநபரின் பண்பாட்டு அடையாளமாகவும் ஆன்மிகத்தேடலாகவும் இருகையில், மட்டும்தான் அது மதமாகவே நீடிக்கமுடியும். அரசியலுக்கு வந்துவிட்ட மதச்சின்னங்கள் காலப்போக்கில் மதத்திற்கான ஆழத்தையும் அர்த்தத்தையும் இழக்கும். அவ்வடையாளங்களை அரசியலடையாளங்களாக ஆக்கிக்கொள்ளும் சமூகங்கள் தங்கள் அரசியலதிகாரத்தை முதலில் இழக்கிறார்கள். காலப்போக்கில் மதத்தையும் இழப்பார்கள். ஓர் அடையாளவெறி மட்டுமே எஞ்சியிருக்கும்.

ஜெ

மரபைச் சிறுமைசெய்தல்

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

முந்தைய கட்டுரைஞானி-15
அடுத்த கட்டுரைவெண்முரசில் கனவுகள் – அருணாச்சலம் மகாராஜன்