உடையாள்- ஒரு குழந்தைக்கதை

ஒரு குழந்தைக்கதை எழுதவேண்டும் என்று தோன்றியது. என் மனதில் இயல்பாக ஓடும் மொழிநடையிலிருந்து வெளிவருவதற்கு அது ஒரு நல்ல வழி. என் வழக்கமான சிந்தனைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். இப்போது அந்த விடுதலை எனக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஆகவே இந்தக் கதையை எழுதத் தொடங்குகிறேன்.

பனிமனிதன் உட்பட என் குழந்தைக்கதைகளில் குழந்தைக் கதைகளுக்குரிய மொழியை திட்டமிட்டு பயின்று பயன்படுத்தியிருந்தேன். சராசரியாக எட்டு வார்த்தைகளுக்குள் அமையும் சொற்றொடர்கள்.மிஞ்சிப்போனால் பத்து வார்த்தைகள். கற்பனை எத்தனை மிஞ்சிப்போனாலும் அன்றாடத்தன்மை கொண்ட வர்ணனைகள். அந்நூல்கள் குழந்தைகளிடையே விரும்பி வாசிக்கப்பட்டமைக்குக் காரணம் அதுதான்

குழந்தைக் கதைகள் குழந்தைகளின் மொழியில் சொல்லப்பட்ட தீவிரமான புனைவுகளாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். நான் உத்தேசிப்பது சராசரிக்குழந்தைகளை அல்ல. கொஞ்சம் கூடுதலாகவே கற்பனையும் கல்வியும் உடைய, எதிர்காலத்து அறிவுஜீவிகளான  குழந்தைகளை.

நானறிந்தவரை நம் குழந்தைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நம்மைவிட அறிந்தவர்கள். ஆனால் மொழியறிவு, குறிப்பாக தமிழறிவு, குறைவானவர்கள். ஆகவே இந்நாவலின்  மொழி ஐந்தாம் வகுப்புக் குழந்தைக்குரியது, உள்ளடக்கம் மேலும் அறிவார்ந்தது. இங்கே வரும் பல சிறுவர்கதைகள் நேர் எதிரானவை, முதியவர்களுக்குரிய சிக்கலான மொழியில் குழந்தைகளுக்கான கதையைச் சொல்பவை.

ஒரு நல்ல குழந்தைக்கதை குழந்தை எளிதில் கடந்துசெல்லமுடியாததாக, யோசிப்பதாக, திரும்ப வாசிப்பதாக இருக்கவேண்டும். அக்குழந்தை வளர்ந்து ஒரு முப்பது வயதில் தன்னைப் பாதித்த நூல்களில் ஒன்றாக அக்கதையைச் சொல்லவேண்டும். இந்நூல் அதற்காகவே எழுதப்படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு- காலமும் வாசிப்பும்
அடுத்த கட்டுரைவல்லினம் வெண்முரசு சிறப்பிதழ்