எவருடன் பகை- கடிதங்கள்

எவருடன் என்ன பகை?

நலம் தானே?

சமீபத்தில் “எவருடன் என்ன பகை?” என்ற கட்டுரையை உங்கள் பக்கத்தில் படித்தேன்.மிகவும் பயனுள்ள கட்டுரை அது.கடைசியில் நீங்கள் சொல்லி இருந்த வம்பிலிருந்து தற்காத்துக் கொள்ள சில குறிப்புகளைச் சொல்லி இருந்தீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இனி வரும் காலங்களில்.

அதில் நீங்கள் மேலே சொல்லி இருந்த கருத்துகள் போலிகளைப் பார்க்கும் போது கோபம் வரும் என்பது மிகவும் சரியே.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும் சில போலிகளைப் பார்த்தால் தான் மிகவும் சினமாகும்.அதுவும் முகநூலில் கவிதை என்ற பெயரில் கொலை செய்பவர்களை பார்த்தால் அய்யோ என இருக்கும்.அதை நாம் புரியவில்லை எனக் கேட்டால்.   அது இசங்கள் ,படித்தால் புரியும் எனக் கூறுவார்கள்.அவர்களுக்கு இசைபாட ஒரு கூட்டம் இருக்கும்.

அவர்களிடமும் கவிதை விளக்கம் கேட்டால் சொல்ல மாட்டார்கள். புரிவில்லை என்று நாம் சொன்னால். அவர்கள் மீது உள்ள காழ்ப்பில் சொல்கிறோம் என்பார்கள்.சில பேர் அவர்களுக்கு எதிராகக் கருத்து கூறினால் போன் செய்து மிரட்டுகிறார்கள்.இனி இப்படிப்பட்ட வம்பிலிருந்து தப்பிக்க இருந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்

நன்றி

இர.நவின் குமார்

வாலாஜாப்பேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்

***

அன்புள்ள ஜெ

யாருடன் என்ன பகை என்பது ஒரு பெரிய தரிசனம். ஜெயகாந்தனுடன் அதை நினைத்துப்பார்த்தால் மேலும் பெரிதாக ஆகிறது.

நான் சமூகவலைத்தளங்களில் இருந்த காலங்களில் தொடர்ச்சியாக பலவகையான சண்டை. வசைபாடல்கள், மட்டம்தட்டல்கள். எல்லாம் ‘கொள்கை’க்காகத்தான். ஆனால் ஓராண்டு கடந்தபின் பின்னால் சென்று எடுத்துப்பார்த்தால் எல்லாம் அபத்தமானவையாக இருந்தன. பைசாபெறாத ஈகோச்சண்டைகள். இங்கே கொள்கை என்பதெல்லாம் ஒன்று சாதி, மதப்பற்று. அல்லது ஈகோ. அவ்வளவுதான். வேறொன்றுமே இல்லை. இதையெல்லாம் பகையாக எடுத்துக்கொண்டு உழன்றால் அதைப்போல நஷ்டம் வேறில்லை.

ஆனால் இந்த ஞானத்தை அடைவதற்குள் பலரை பகைத்துக்கொண்டு பலரை விட்டு விலகி வரவேண்டியிருக்கிறது.

சா.முரளி

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -கடிதம்
அடுத்த கட்டுரைஞானி-17