சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-5

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களைப் பற்றி இணையத்தில் தேடினேன். அவருடைய கதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. ஓர் எழுத்தாளரை நாம் விமர்சனரீதியாக அடையாளப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமானது. அவருடைய அரசியல் என்று கண்டுபிடிப்பதைச் சொல்லவில்லை. அவருடைய அழகியல் என்ன என்று வகுத்துக்கொள்வதைச் சொல்கிறேன்.

இதில் அவருடைய படைப்புக்களை தமிழ் இலக்கியத்திலும் உலக இலக்கியத்திலும் உள்ள முந்தைய படைப்புகளில் எந்த ஸ்கூலுடன் சம்பந்தப்படுத்துவது என்பது முக்கியமானது. அதன்பின் அந்த ஸ்கூலின் பொதுப்போக்கிலிருந்து அவரை எப்படி வேறுபடுத்திப்பார்ப்பது என்பது முக்கியமானது.

நான் அவருடைய சிறுகதைகளில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவரை சுகுமாரன் போன்றவர்கள் மௌனியுடன் சேர்த்து யோசித்திருந்தார்கள். நீண்டகாலம் முன்பு நீங்களும் அவ்வண்ணம் எழுதியிருந்தீர்கள். நான் அலையும் சிறகுகள் தொகுதியை வாசிக்கவில்லை. ஆனால் பிறகுவந்த சிறுகதைகளின் அடிப்படையில் அவ்வண்ணம் சொல்லிவிடமுடியாது.

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் ரொமாண்டிஸிஸம் இல்லை. ஆன்டி-ரொமாண்டிக் எழுத்து என்றே சொல்லிவிடமுடியும். அதேபோல அவரிடம் சிக்கலான மொழியும் இல்லை. குறைவான சொற்கள்தான் இருக்கின்றன.

அவரை தமிழில் சா.கந்தசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன் ஆகியோருடன் ஒப்பிடலாம். எனக்கு அவரை எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுத்துக்களுடனும் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் ஹெமிங்வே, சால்பெல்லோ சிறுகதைகளில் இந்தவகையான அப்ஜெக்டிவிட்டி, நேரடியான மொழி, சுருக்கமான கதைப்பரப்பு ஆகியவை உண்டு.

இந்த வகையான ஒப்பிடுதல்கள் வழியாகத்தான் ஒரு படைப்பாளியை நம்மால் மதிப்பிடமுடியும். அவர் முன்னோடியே இல்லாத எழுத்தாளர் என்று சொன்னார்கள். அப்படி ஓர் எழுத்தாளர் இருக்கவே முடியாது. அந்தவகையான தமாஷ்களை எல்லாம் விட்டுவிட்டு நல்ல ஆய்வுகள் இனிமேல் வந்தால் நல்லது

ராஜசேகர்

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை இந்த விருது அறிவிப்புக்குப் பிறகுதான் வாசிக்க ஆரம்பித்தேன். இக்கதைகளின் எல்லை மிகக்குறுகியது. அதற்குள் நின்றுகொண்டு சிறுசிறு நுட்பங்களையும் வண்ணவேறுபாடுகளையும் அவர் உருவாக்கிக் காட்டுகிறார். அவருக்கு கவித்துவம் சிந்தனை ஆகியவை கதைகளுக்குள் அமையவில்லை. நிறைய கதைகள் எளிமையான நிகழ்ச்சிகளாலானவையாக உள்ளன. அவற்றிலிருந்து ஒரு சிறு சரடைப் பற்றிக்கொண்டு மேலே செல்லமுயலவேண்டியது வாசகனின் வழிமுறையாக இருக்கிறது. கவனமாக படிக்கவேண்டிய எழுத்தாளர் என்னும் எண்ணம் ஏற்பட்டது

விருதுக்கு வாழ்த்துக்கள்

கே.ராஜ்குமார்

அன்புள்ள ஜெ,

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டமைக்கு என் வாழ்த்துக்கள். அவருடைய சிறப்பிதழ் பதாகை இதழில் வெளிவந்ததை ஒட்டி அவருடைய கதைகளை வாசித்தேன். அவற்றில் ஓரிரு கட்டுரைகள் தவிர மற்றவை எல்லாம் சிறுபத்திரிகை ஜார்கன்கள் என்ற எண்ணம் வந்தது. ஒரு எழுத்து வாசகனுக்கு என்ன செய்கிறது என்பது முக்கியம். வாசகனாகவே விமர்சகன்கூட தன் மதிப்பீட்டைச் சொல்லவேண்டும்

சுரேஷ்குமார இந்திரஜித்தின் திரை”, “கடந்து கொண்டிருக்கும் தொலைவு போன்ற கதைகளை வாசிக்கையில் எளிமையான ஒரு வாழ்க்கைத்தருணத்தை சில சம்பவங்கள் வழியாகச் சொல்லமுயல்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. வாழ்க்கையின் அர்த்தமின்மை, சலிப்பு ஆகியவற்றை சொல்லும் முறைவழியாகவும், சம்பவங்களை இணைக்கும் வகையிலும் உருவாக்குகிறார்.

இந்தப் பார்வையும், இந்த கதைசொல்லும் முறையும் உலக இலக்கியத்தில் எழுபதுகளில் ஓங்கி நின்றவை.எண்பதுகளின் தொடக்கம் வரை நீடித்திருந்த ஒரு மனநிலை. இவர்களிடம் வரலாறே இல்லை. எந்த வாழ்க்கைக்கும் அதற்கு முந்தைய வாழ்க்கையின் தொடர்ச்சி இருப்பதை இவர்கள் உணர்வதில்லை. வரலாறு பண்பாடு ஏதும் இல்லாமல் மனிதர்களை அந்தந்த சந்தர்ப்பத்தில் வைத்துப்பார்க்கும் பார்வை

[நான் வாசித்த 9 விமர்சனக் கட்டுரைகளில் ஒருவர் கூட இதைச் சுட்டிக்காட்டவில்லை. உண்மையில் சுட்டிக்காட்டவேண்டியது இதுமட்டும்தான் என்பது என் எண்ணம்]

இந்தப்பார்வையை இலக்கியம் கடந்துவந்துவிட்டது. இன்றைக்கு வரலாற்றுமனிதனே பேசப்படுகிறான். ஆனால் இந்த ஃப்ளாஷ்லைஃப் சித்திரங்கள் மனிதர்களை வேறொரு ஒளியிலே அழகாக காட்டுகின்றன

சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஆர்.ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைவெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் -கடிதம்