அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். தங்களின் மேலான நலம் விழைகிறேன்.தங்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய உங்களது குருநாதராகிய நித்ய சைதன்ய யதி அவர்களைப் பற்றி Google செய்ததில், அவர் நிறைய எழுதியுள்ளது தெரியவருகிறது. குரு முகமாக அன்றி ஒர் அத்வைத வேதாந்தியை உணர்ந்து கொள்வது கடினம் எனினும், அவரை படித்தறிய ஆவல் கொண்டுள்ளேன். அவரது ஆங்கில புத்தகங்கள் சிலவற்றை பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்,
சுந்தர மகாலிங்கம்,சென்னை.
நித்ய சைதன்ய யதி இணையத்தில்
அன்புள்ள சுந்தர மகாலிங்கம்
நித்யசைதன்ய யதியை பெருமளவுக்கு நூல்கள் வழியாக அறியலாம். அவரை இந்து ஞானமரபில் நவீனவேதாந்தப் போக்கைச் சேர்ந்தவர் என்று வரையறை செய்யலாம்.
நவீனவேதாந்தங்களின் அமைப்பு இரண்டு பகுதிகளால் ஆனது. ஒன்று அறிவுத்தளம், இன்னொன்று ஊழ்கம். முதன்மையான பெரும்பகுதி அறிவார்ந்தது, ஆய்வுகளும் விவாதங்களும் நிறைந்தது. அதை நூல்கள்வழியாகவே அறிந்துகொள்ள முடியும். ஊழ்கம் குருவிடமிருந்தே கற்கப்படவேண்டும் இது ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்,அரவிந்தர் போன்றவர்களுக்கும் பொருந்தும்
நவீன வேதாந்திகள் இரண்டு விஷயங்களை முதன்மைப்படுத்துவதில்லை. ஒன்று, மறைஞானம். இரண்டு, சடங்குமுறைகள். மெய்ஞானத்தை ரகசியக்குறியீடுகள் வழியாக தனிப்பட்டமுறையில் மட்டுமே தொடர்புறுத்துவது இந்துமெய்ஞான மரபில் இருக்கும் தொல்வழக்கம். அதை நாராயணகுருவும் வழிவந்தவர்களும் ஏற்றவர்கள் அல்ல. அதேபோல வேள்விகள், பூஜைகள், பலவகையான குறியீட்டுச் சடங்குகள் வழியாக மெய்யியலை பயில்வதையும் நவீன அத்வைதிகள் ஏற்பதில்லை. சங்கரரே இவ்விரண்டுக்கும் எதிரானவர்தான். பின்னர் அவர்முன்வைத்த தரிசனத்தின்மீது அவை ஏற்றப்பட்டன.
ஆகவே நித்யா போன்றவர்களை நூல்கள் வழியாக அணுகும்போது பெரிய அளவில் இழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அவ்வாறு உணர்வது என்பது ஓர் எல்லைவரைத்தான். அதற்கு அப்பாலிருப்பது அவருடைய ஆளுமை, அவருடைய சிந்தனைப்பாணி போன்றவை. அவை நேருறவு வழியாகவே அடையப்படுபவை.அதோடு எல்லைக்குட்பட்ட அளவில் நவீன அத்வைதத்திலும் மறைஞான அம்சமும், சடங்கு அம்சமும் உண்டு. அவை குருமுகத்தினூடாகவே கற்கத்தக்கவை.
ஓர் இலக்கியவாசகன் நித்ய சைதன்ய யதியை அணுகவேண்டும் தமிழில் வெளிவந்துள்ள குருவும்சீடனும், அனுபவங்கள் அறிதல்கள் ஆகியவை எளிமையான அறிமுகநூல்கள்.
தத்துவ- மெய்யியல் மாணவர் முறையாக நித்யாவை அறிமுகம் செய்துகொண்டு தொடர்ந்து பயிலவேண்டுமென்றால் ஒரு பாடத்திட்டத்தை பரிந்துரை செய்வேன்.
நித்யசைதன்ய யதியைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் முதலில் அத்வைதம் பற்றிய ஒரு பொதுவான அறிமுகநூலை வாசிக்கலாம். இந்தியமெய்யியலின் வளர்ச்சி, அதில் அத்வைதத்தின் இடம், அதை மறுத்து உருவான விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்றவற்றை அறிமுகம் செய்யும் நூல்களில் ஏதேனும் ஒன்று. The Essential Vedanta: A New Source Book of Advaita Vedanta . Eliot Deutsch, Rohit Dalvi எழுதியது. பொதுவாகச் சிபாரிசு செய்யப்படும் எளிமையான நூல். முனி நாராயணப்பிரசாத் அவர்களின் ஒரே நூலே சுருக்கமாக இவற்றை விளக்குகிறது. Three Acharyas and Narayana Guru: The Ongoing Revaluation of Vedanta
இந்நூல்களின் தேர்வில் ஒரு நவீனவாசகன் கவனமாக இருந்தாகவேண்டும். இன்று இவைபற்றி எழுதப்பட்டு கிடைப்பவற்றில் பெரும்பகுதி மரபான பிராமணச் சாதிய உள்நோக்கம்கொண்ட, மேட்டிமைப் பார்வை கொண்ட நூல்கள். அவர்களின் வழிமுறைகள் இரண்டு. ஒன்று, கூடுமானவரை சிக்கலான சொல்லாராய்ச்சி மற்றும் நுணுக்கமான பாடபேத ஆராய்ச்சி வழியாக அணுகமுடியாதவையாக நூல்களை ஆக்கிக்காட்டுவது. அதை தாங்கள் மட்டுமே அறியமுடியும் என்று பாவனை செய்வது. இரண்டு, அடிப்படைவாதப் பார்வை, எல்லாவகையான மாற்றங்களையும் எதிர்ப்பது, எல்லாவற்றையும் இறுதியில் தங்கள் மதசம்பிரதாயங்களுக்குள் கொண்டுசென்று சேர்ப்பது.
இவர்களின் கல்வித்தகுதி நம்மை கவரலாம், ஆனால் அத்தனை கல்வியுடனும் கூடவே அடிப்படையில் எளிமையான சாதியப்பித்துடன் இருப்பவர்கள். எல்லாவற்றையும் கடைசியாக அங்கே கொண்டுசென்று சேர்ப்பார்கள். இவர்களின் நூல்கள் நம்மையறியாமலேயே அவற்றை எழுதியவர்கள்மேல் ஒவ்வாமை கொள்ளச் செய்கின்றன. அந்த ஒவ்வாமை காலப்போக்கில் வேதாந்த மெய்யியல் சிந்தனைகள் மேலேயே ஒவ்வாமைகொள்ளச் செய்கிறது.
என்னிடம் வருபவர்களில் பெரும்பகுதியினர் இந்த ஒவ்வாமையால் ஒட்டுமொத்தமாக இந்து மெய்யியல்மேலேயே கசப்புகொண்டு விலகிச்சென்றபின், என் எழுத்துக்கள் வழியாக மெல்லிய ஆர்வம் கொண்டு திரும்ப வருபவர்கள். அவர்களிடமிருந்து நான் புரிந்துகொண்டது இது. ஆகவே நூல்களை கவனமாக தெரிவுசெய்யுங்கள். பிராமண அடிப்படைவாதம் வெளிப்படும் நூல்களை முழுமையாகவே இன்றைய வாசகன் விலக்கிக்கொள்ளவேண்டும். அவை ஒரு சிறு தரப்புக்கானவை, அத்தரப்பு என்றும் இங்கே இருக்கும், அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.
நவீனவாசகன் மேலைநாட்டுக் கல்வியாளர்களால், அந்த முறைமைகொண்ட இந்திய ஆய்வாளர்களால், எழுதப்பட்ட நூல்களை நம்பலாம். அவற்றில் வரலாற்றுப்பார்வையும் ஒட்டுமொத்தமான புறவயத்தன்மையும் இருப்பதனால் அவை நமக்கு உகந்தவை. செய்திகளை நேர்மையாக அளிப்பவை. வரலாற்றுச் சித்திரத்தை ஒட்டுமொத்த வரைபடத்தை உருவாக்கிக்கொள்ள உகந்தவை
அவற்றிலுள்ள அடிப்படைப்பார்வை உலகியல் சார்ந்ததாகவும், ஐரோப்பியத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஆகவே அவற்றால் இந்து மெய்யியலின் அடிப்படையான தளங்களை தொட்டுப்பேசமுடியாது. அவை அவ்வண்ணம்தான் இருக்கும் என்று நாம் முன்னரே உணர்ந்திருந்தாலே போதும், அவற்றின் உலகியல் பார்வையையும் ஐரோப்பிய அணுகுமுறையையும் கடந்து அந்நூல்களை பயனுறக் கற்கமுடியும்.
அதன்பின் நாராயணகுருவின் இயக்கத்தை ஒட்டுமொத்தமாக அறியும் ஒரு நூலை வாசிக்கலாம்.அது மிகையுணர்ச்சிகள் அற்றதாக, வரலாற்றுப்பார்வை கொண்டதாக இருக்கவேண்டும். எளியநூல் என்றால் Sree Narayana Guru – Life and Times (Biography) உதவும் நூல். M K Sanoo எழுதியது நாராயணகுருவின் தத்துவப்பார்வையையும் உள்ளடக்கிய தீவிரமான நூல் என்றால் முனி நாராயணப் பிரசாத் எழுதிய The Word of the Guru: Life and Teachings of Narayana Guru. தமிழில் மா.சுப்ரமணியம் மொழியாக்கம் செய்த ‘நாராயணகுரு’ ஒரு நல்ல நூல்.
நடராஜகுருவின் இரண்டு நூல்களை படிக்கலாம். அவை அவருடைய அணுகுமுறை என்ன என்பதைக் காட்டுபவை. Wisdom: The Absolute is Adorable அழகான சிறிய நூல். அவருடைய தன்வரலாறான Autobiography of an Absolutist முக்கியமானது.
அதன்பின் நித்யசைதன்ய யதியின் நூல்களுக்கு வரலாம். அவருடைய தன்வரலாறான Nityacaitanya Yati Love and Blessings: The Autobiography of Guru Nitya Chaitanya Yati ஒரு முக்கியமான தொடக்க நூல். அவர் யார் என்பதைக் காட்டுவது.
இந்துமெய்யியல் வழக்கம் என்பது மெய்யியலாளர் தங்கள் முந்தையவர்களின் நூல்களுக்கு எழுதப்படும் உரைகள் வழியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வது. நித்யா நாராயணகுருவின் ஆத்மோபதேச சதகம் பற்றி எழுதிய விளக்கமான That Alone, the Core of Wisdom: A Commentary on Atmopadesa Satakam, the One Hundred Verses of Self-instruction of Narayana Guru. [D.K. Printworld.] அவருடைய தத்துவப்பார்வைக்குச் சிறந்த அறிமுகம். Psychology of Darsana Mala அவ்வகையில் முதன்மையானது.
அதன் பின் நித்யாவின் உபநிடத உரைகளுக்குள் செல்லலாம்.சாந்தோக்ய உபநிடத உரை எளிமையானது. பிருஹதாரண்யக உபநிடத உரை பெரியது, அவருடைய பார்வையை முழுமையாக முன்வைப்பது.
ஜெ
இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி
ரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு