உடல்நான்-கடிதங்கள்

உடல்நான்

அன்புள்ள ஜெ!

வணக்கம்.

தொடர்ந்து கடிதங்கள் எழுதாவிடினும்  தங்கள் தள மற்றும் அகத் தொடர்புகளால் தொடர்ந்து இணைப்பில் இருந்து கொண்டிருக்கும் பல்வேறு நண்பர்களில் நானும் ஒருவன்!

உடல்நான் கட்டுரையை வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது! இத்தனை வருடங்கள் ஓடவில்லை, இனியெங்கே என்றில்லாமல் நீங்கள் இப்போது ஓட ஆரம்பித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாவிடினும் சலிக்காமல், தளராமல் மைல் கணக்கில் நடப்பவர், அதற்கான உறுதியான உடலை இயல்பிலேயே கொண்டிருப்பவர் என்று தெரியும்.

2016 இங்கிலாந்து பயணத்தில் Cornwall பகுதியில் நீங்கள் கரடுமுரடான மலைப் பாதைகளில் சிரமமே இல்லாமல் ஏறிச்சென்றதை கண்டு, இத்தனைக்கும் சரியான, மலைப்பாதைக்கான காலணிகள் இல்லாமல், சாதாரணமாக ஏறியதைக் கண்டு வியந்தது நினைவிற்கு வருகிறது.

எத்தனையோ மலைகளில் ஏறியாயிற்று, இதெல்லாம் ஒரு விஷயமா என்று புன்னகைத்தீர்கள்!இந்த புகைப்படங்களை சற்று நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். பல நினைவுகளை கிளறிவிட்டன…புகைப்படங்களை உங்களுக்கு பகிர்ந்திருந்தேன், உங்களிடம் இருக்கும் என நினைக்கிறேன். (உங்களிடம் இல்லையெனில் சொல்லுங்கள், திரும்ப அனுப்பி வைக்கிறேன்)

//உடற்பயிற்சியில் ஒரு பேரின்பம் உள்ளது. பலரும் அதற்கு அடிமையாகிவிடுவது அதனால்தான். உடற்களைப்பு ஒரு போதைபோல. அதன் இனியமயக்கத்தை அறிந்தவர்களுக்கு வேறெந்த போதையும் பெரிதாகத் தென்படாது.//

ஆம். என்னைப் பொறுத்தவரை ஓடி, வியர்த்து களைத்து விளையாடும் எந்த விளையாட்டையும் இன்னும் உயர்வாக கருதுவேன். அது கொடுக்கும் களிப்பு அபாரமானது. வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள்… ஓர் ஆரோக்கிய மனநிலையை தருபவை அவை.

விளையாட்டை வைத்து தமிழில் அதிகம் புனைவுகள் வந்ததில்லை என நினைக்கிறேன். (நானும் ஒரு சின்ன முயற்சி செய்து பார்த்திருக்கிறேன் – https://solvanam.com/2020/01/12/அலகுடைய-விளையாட்டு/)

மேலும் சுபஶ்ரீ தணிகாசலம் – QFR பற்றிய பதிவையும் வாசித்தேன் – நிறைவாக இருந்தது. கடந்த சில “உள்ளூர” வாழும் வாழ்க்கை மாதங்களில்  இப்பாடல்களை கேட்பது ஒரு தினசரி நிகழ்வாகவே ஆகிவிட்டது. அவர் வெளியிட்ட மூன்று நான்கு மணி நேரங்களுக்குப் பின் இங்கிலாந்து மாலை நடையில் தவறாமல் கேட்டு வருகிறேன்.

மூலத்தை நகல் செய்யும் இம்மாதிரியான முயற்சிகள் (பாடல்களை வெவ்வேறு இசைக் கருவிகளில் வாசித்துப் பார்ப்பது, உதா) இணையத்தில் ஏகப்பட்டவைகள் கிடைக்கின்றன. பெரும்பாலும் நன்றாகவே இருக்கின்றன. கிட்டதட்ட மொழிபெயர்ப்பு புனைவுகளை வாசிப்பது போல் இருக்கிறது!

முதலில் மூலத்தை வாசித்து அதன் மொழிபெயர்ப்பையும் வாசித்து… பல சமயங்களில்  மொழிபெயர்ப்பே நன்றாக இருக்கின்றன, திரும்ப வாசிக்க (கேட்க) ஆர்வமாக இருக்கிறது!

இதோ இன்று கூட,  சுதந்திர தினத்தில் ஓர் அழகான பாடற்குவியல்.

https://www.facebook.com/2537115/posts/10111055510669816/?d=n

சிவா கிருஷ்ணமூர்த்தி

 

இனிய ஜெ,

பிப்ரவரியின் துவக்கத்தில் மருத்துவர் சர்க்கரை ஜாக்கிரதை என்றார். உடனே காபி துறந்து, கடலை மிட்டாய் மறந்து கடும் தவம் புரிந்து ஓடத் துவங்கினேன். 73 லிருந்து சரெலென 65. உன்னை மாதிரி ஒவ்வொருத்தனும் இருந்தா நான் க்ளினிக்கைப் பூட்டிட்டு உன்கூட ஓட வந்துறவேண்டியதுதான் என்றார் டாக்டர். அப்படியே ஓட்டத்தை நீட்டி மாரத்தான் பயிற்சி பெறும் எண்ணத்தில் விலையேறின ஷூக்கள் வாங்கினேன். வந்தான் கொரானா.

தற்சிறை நாட்களில் இறகுப் பந்து விளையாட கற்றுக்கொண்டேன். வெறித்தனமான ஆட்டம். நாளொன்றுக்கு மூன்றரை மணி நேரங்கள். அதுவும் சிமெண்ட் தளத்தில். உடலெல்லாம் தெப்பலாகி மைதானத்திலே வீழும் வரை. சரக் 62.

ஓடவும் ஆடவும் சாடவும் செய்கையில் உணவின் மீதான வெறி குறைந்தது. ஒரு கட்டத்தில் வெள்ளையாக எதைக் கண்டாலும் ச்சை உவ்வேக் என மனம் கோணும். திடீரென ஒரு நாள் வலது கால் முட்டு மடக்க ஏலவில்லை. ஊணவோ, நடக்கவோ, படியேறவோ முடியாத வலி. அங்கே இங்கே சுற்றி ஒண்ணும் விளங்காது போகவே நாஞ்சிலாரின் மருமகன் மருத்துவர் விவேகானந்தரிடம் காலைக் காட்டினேன். சிமெண்ட் தரையில் முறையான ஸ்ட்ரெச்சுகள் செய்யாமல் பல மணி நேரங்கள் பாட்மிட்டண் ஆடியதன் விளைவு. மூட்டுத்தொப்பி அணிந்துகொள்ளுங்கள் என்றார். குழம்பாண்டாம். நீ-கேப் என்பதற்குத்தான் அப்படி தமிழ் தந்திருக்கிறேன்.

மே, ஜூன், ஜூலை என மூன்று மாதங்கள் நடக்கவே முடியவில்லை. மனசுக்குள்ளே வாக்கிங் போய் பார்த்தேன். இனி வெளங்காது என்று முடிவெடுப்பதற்குள் தோராயமாக நாற்பது மட்டன் சுக்காக்கள், அன்றாடம் நான்கு காபி வயிற்றுக்குள் பாய்ந்து படக் 74. இப்போது சரணடைந்திருப்பது யோகி செளந்தர்ஜியிடம். ஆன்லைனிலேயே அடிக்கப் பாய்கிறார். பயந்து பாயில் உருண்டு கொண்டிருக்கிறேன். இப்போது என்ன தோன்றுகிறதென்றால் மாரத்தான், பாட்மிட்டன்களுக்குப் பதிலாக சுமோவுக்குத் தயாராகலாமே?!

அடியேன் திருவுள்ளம் சொல்ல வருவதென்னவென்றால் தாங்கள் தட்டுத்தடுமாறி ஓடும் ஓட்ட வீடியோக்களைப் பார்த்தேன்.  ஓட்டமும் சாட்டமும் நம் போன்ற ஞானியர்க்குத் தேவைதானா என்பதை மறுபரிசீலனை செய்யவும். மலை மேலமர்ந்து மாங்காய்ப்பால் குடிப்பவர்கள் கட்சியில் சேராண்டாம். நாம் வழமை போல தெருவழியே சென்று தேங்காய்ப்பாலே குடிக்கலாம்.

கேட்கமாட்டீர். நாயன்மார் டிசைன் அப்படி. குறைந்தபட்சம் ஸ்ட்ரெச்சிங்காவது செய்யவும். எளிய உபாயம் காலை ஓட்டத்திற்கு முன் ராஜமாணிக்கத்திற்கு போன் செய்து ‘எதுனா அரிய திட்டம் வச்சிருக்கீங்களா நாட்ட வளத்தறதுக்கு’ என்று கேட்கலாம். உடல் தானே அதிர்ந்து குலுங்கி எதற்கும் தயாராகி விடும்.

12-வது நூலை எழுதிக்கொண்டிருக்கும் அர்த்த ராத்திரியில் (நீ என்ன ஏ.ஆர்.ரஹ்மானா? ராவானா லைட்டை போட்டு உசிர எடுக்கீயே – திரு) கோகுலாஷ்டமிக்கு செய்து மீந்த பாயாசத்தை ரகசியமாக சூடு பண்ணி சப்புக் கொட்டி குடித்தபடியே ‘நான் என் உடலே’ எனும் வரியை வாசித்தபோது எனக்குத் தோன்றிய தரிசனம் ‘நான் என்பது என் நாக்கே’

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. மானே தேனே பொன்மானே.

 

செல்வேந்திரன்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைஞானி-15