விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-2

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது. இலக்கிய உலகம் என்பது வெவ்வேறுவகையான அழகுகள் கொண்டது. தனித்தன்மைதான் இலக்கியத்தின் முதல் சிறப்பு. அவ்வகையில் தன்னைப்போல் இன்னொருவர் இல்லாத எழுத்தாளர் என்று சுரேஷ்குமரா இந்திரஜித் அவர்களைச் சொல்லலாம்

சுருக்கமாக எழுதப்பட்டவை அவருடைய கதைகள். பெரிதாக எதையும் கதைகளில் சொல்பவை அல்ல. ஆனால் வாசகன் தானறிந்த வாழ்க்கையின் ஒரு பரப்பிலே அவற்றை வைத்துப்பார்த்தால் அவை அர்த்தமாகின்றன. நம் கையில் ஒரு பொருள் கிடைக்கிறது. அதை நாம் கற்பனையில் ஒரு சிற்பத்தின் பகுதி என்று அடையாளப்படுத்திக்கொண்டால் அந்தப்பொருளின் அர்த்தம் மேலும் வளர்கிறது. அந்தவகையான வாசிப்பில் வளரும் கதைகளை எழுதியவர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள். விருதுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஜெ,   வணக்கம்.

எங்கள் மதுரைப் படைப்பாளி திரு.சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு 2020க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் பிரியமான எழுத்தாளர், நண்பர். அவரின் மெய்யான அன்பு என்னை அவரை நெருங்க வைத்தது.

உங்களின் தகுதியான தேர்வு அந்தந்தக் காலகட்டங்களில் அடுத்தடுத்து என்கின்ற வரிசையில் மிகச் சரியாகவே இருந்து வந்திருக்கிறது.

ஜெ.யைப் போல் ஜெ மட்டும்தான் எழுத முடியும். வண்ணதாசன் போல் வண்ணதாசன் மட்டுமே. நாஞ்சில் நாடன் போல் நாஞ்சில்நாடன் மட்டுமே. அதுபோல சுரேஷ்குமார இந்திரஜித் போல் சுரேஷ்குமார் மட்டுமே…என்கிற தனித்துவம் மிக்கவர்களைத் நீங்கள் தேர்வு செய்வது மிகுந்த அறிவுபூர்வமானது என்றே நான் கருதுகிறேன்.

மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார் சுரேஷ்குமார். ஆனால் மற்றவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மற்றவர் யாரும் தொடமுடியாத, தொட முயற்சிக்காத ஒரு வகைமையைத் தன் எழுத்துக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறார் என்பதே அவரின் பெருமை.

இனி வரும் மாதங்களில் அவரின் எழுத்தின் மீது நம் வாசகர்களின் கவனம் குவிய வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள்.  தொடர்ந்து கவனம் குவித்து வருபவன் நான்.  அவ்வப்போது தொடர்ந்து கொண்டேயிருப்பவன் என்கின்ற முறையில்…அவரின் ஒரு சிறுகதை குறித்து நான் எழுதிய வாசிப்பு அனுபவத்தை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

நன்றி

உஷாதீபன்

சுரேஷ்குமார இந்திரஜித் ‘கணியன் பூங்குன்றனார்”சிறுகதை பற்றி.. உஷாதீபன்

போலியான நட்பு. இந்த வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்தது மற்றொருவருக்குக் கிடைப்பதில்லை. உறவுகளிலேயேகூட அப்படித்தான். பிறகு நட்பிலே இருக்காதா? பலரின் வாழ்க்கை இப்படி மனதுக்குள்ளேயே புழுங்கும் தன்மையாகத்தான் இருக்கிறது. யாரும் வெளியே சொல்வதில்லை. எல்லா மனிதர்க்கும் ரெண்டு மனசு உண்டு. ஆழ் மனசு ஒன்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். அதில் பெரும்பாலும் பொறாமையும், மன அரிப்புமே மண்டிக் கிடக்கும். அந்த ஆழ் மனசைச் சுத்தப் படுத்தும் பயிற்சிதான் ஆன்மீகம் என்பேன் நான். அதெல்லாமில்லை என்றுகூட நீங்கள் நினைக்கலாம். தொடர்ந்து நல்ல விஷயங்களாய்ப் போட்டு நிரப்புவதன் மூலம் இது சாத்தியமாகும் என்பது என் தரப்பு. எது நல்ல விஷயம்னு யார் நிர்ணயம் பண்றது என்றும் நீங்கள் கேட்கலாம். அதை ஏற்றுக் கொள்வதற்கும் ஒரு பயிற்சி தேவைப்படும்.

தன்னைச் சுற்றி இயன்றவரை நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்வது அதன் முதல்படி. பிறகு படிப்படியாக அது வளரும். நம்மைச் செம்மைப் படுத்தும்.
இந்தக் கதையில் தோழிகளாய் போலியாக இருக்கிறார்கள் இருவரும். அவரவர் மனசு அவரவர்க்குக் கிடைக்காததைப்பற்றிப் பொறாமை கொள்கிறது. ஆனாலும் அதை மீறி நட்பு நீடிக்கிறது. ஆனால் அங்கே ஆழ்மனதின் எண்ணங்கள்தான் அடுத்தடுத்து வெற்றி கொள்கிறது. அதுதான் கடைசியில் கற்பனையாய் ஒருவரையொருவர் எதிர்பாராத தருணத்தில் கத்தியை எடுத்துக் குத்துவது. ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் சாத்தான் குடியிருக்கிறான். அவனுக்கு அதிக இடம் கொடுக்கக் கொடுக்க அவன்தான் வெற்றி கொள்வான். நம்மை ஆக்ரமிப்பான்.

அதனால்தான் நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும் பயிற்சியை, நியமங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தது. சராசரி மனிதர்களின் மனப்போக்கு எப்படியிருக்கும் என்று சரியாகக் கணித்திருக்கிறார் கதையில். அலங்காரமில்லா, கலையம்சம் தேடாத, நேரடிக் கதை சொல்லல் பிடித்திருந்தது. வெற்று அலங்காரங்களுக்கோ, கற்பனைகளுக்கோ இடமில்லை. கதை சொல்லும் முறை அவருக்கு மட்டுமே உள்ள தனித்தன்மை. அதுதான் இங்கே சிறப்பு.

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு சிறுகதை வடிவமே நேர்த்தியாக வசப்பட்டிருக்கிறது. சிறுகதைகள் மூலம் மட்டுமே அவர் நம்மை அதிகம் கவர்கிறார். இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தப்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் நடனமங்கை பற்றி- வினோத்ராஜ்

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கதையில் எழுத்தாளனின் கனவுகள் தறிகெட்டு போகின்றன. இந்தக் கதை முடிவில் சிறிய புன்னகை விரிகிறது. ஒரு முக்கியமான கேள்வியையும் விட்டு செல்கிறது. ‘மனிதர்களை நம்புவது அத்தனை சிக்கலானதா’ என்பதே அந்த கேள்வி. எழுத்தாளனின் பகற்கனவுகளைப் பார்க்கும்போது, ஆம், அத்தனை எளிதில் நம்பிவிடக்கூடாது, என்றே தோன்றுகிறது. இந்தக் கதை எழுதக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வை இந்திரஜித் முன்னுரையில் சொல்கிறார்.

நடன மங்கை – சுரேஷ்குமார் இந்திரஜித்- மதிப்புரை

முந்தைய கட்டுரைVENMURASU- SUCHITHRA
அடுத்த கட்டுரைஇருள்- கடிதங்கள்