விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
அன்புள்ள ஜெ
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.விருதுகளில் இருவகை உண்டு. ஒட்டுமொத்தச் சமூகத்தின் ஏற்பை தெரிவிக்கும் விருதுகள் ஒருவகை. அவை புகழ்பெற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. அவை முக்கியமானவைதான். புகழ்பெற்ற விருதுகள் அப்படித்தான் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக சாகித்ய அக்காதமி, ஞானபீடம் போன்றவை ஓர் எழுத்தாளர் அதற்குமுன்பு எவ்வளவு கொண்டாடப்பட்டார், எவ்வளவு முக்கியமாக கருதப்பட்டார் என்ற அளவுகோலையே முக்கியமாக கருதுகின்றன. ஒரு சூழலில் ஏற்கப்பட்டவர்களுக்கே அவை அளிக்கப்படுகின்றன. அவை சமூகத்தின் குரல்களாக ஒலிக்கும் விருதுகள்.
இன்னொருவகை விருதுகள் ஒரு சமூகத்திற்கு எழுத்தாளர்களைச் சுட்டிக்காட்டும் விருதுகள். அவை சமூகத்தைவிட மேலே நின்றிருக்கும் கலாச்சார அமைப்புக்களால், பீர் ரிவியூ குழுவினரால் அளிக்கப்படுபவை. அவை முன்னோடி விருதுகள். முன்னோடிவிருதுகளால் அடையாளம் காட்டப்பட்ட பிறகே எழுத்தாளர்கள் புகழ்பெறுகிறார்கள். அதன்பிறகே சமூகவிருதுகள் தொடர்ந்து வருகின்றன.
பதினொரு ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருதுகள் முன்னோடி விருதுகளாகத் திகழ்ந்து படைப்பாளிகளை அடையாளம் காட்டி வருகின்றன. சுரேஷ்குமார இந்திரஜித் வெளியே தெரியாமல் எழுதிக்கொண்டிருப்பவர். நுணுக்கமான உள்ளடங்கிய கதைகள் அவை. தொடர்ச்சியாக உங்கள் தளம் அவரைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பதனால் அவர் விருதுபெறுவது எதிர்பார்க்கத்தக்கதே.
சுரேஷ்குமார இந்திரஜித் மேலும் விருதுகள் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்
ஆர்.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது உண்மையில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. 1982 முதல் தொகுப்பு வெளியானது முதல் இன்று வரை அவருக்கு ஒரேயொரு விருது கூட வழங்கப்பட்டதில்லை. நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். இத்தனைக்கும் பரவலாக அவர் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் எனும் அபிப்பியாமே எல்லோருள்ளும் உள்ளது. ஆனாலும் எல்லா விருது பட்டியல்களிலும் இருந்து அவர் விடுபட்டவராகவே இருந்து வந்திருக்கிறார்.. விருதுகளை தீர்மானிக்கும் நடுவராக கூட அவர் செயல்பட்டிருக்கிறார்.
ஆனால் இது பற்றி அவருக்கு எவ்வித மனக் குறையும் வருத்தமும் இல்லை. பெரிதாக எங்கும் அவர் தன்னை முன்னிறுத்தி கொள்பவர் இல்லை. விருது எதையும் தீர்மானிக்கப்போவதில்லை தான். எழுத்தாளருக்கு அளிக்கப்படும் விருது என்பது அவர் மீது கவனத்தை குவிப்பது, பெருமைப்படுத்துவது என்பதெல்லாவற்றையும் விட முக்கியமாக வாசகனாக நாம் காட்டும் நன்றியறிதல் எனும் நம்பிக்கை எனக்குண்டு. அவ்வகையில் இது ஒரு சரியான தேர்வு என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
சுரேஷ்குமார இந்திரஜித்தை முதன்முறையாக மதுரையில் உங்கள் அறையில் தான் சந்தித்தேன். அதன் பிறகு நடன மங்கை வாசித்தேன். பிறகு மற்றொரு முறை மதுரையில் உங்களுடன் சந்தித்து பேசும்போதுதான் அவருக்கான பதாகை சிறப்பிதழை கொண்டு வரும் திட்டம் உருகொண்டது. அதன் பொருட்டு அதுவரை வெளிவந்த அனைத்து தொகுப்புகளிலும் உள்ள 84 கதைகளையும் வாசித்தேன். பிறகு பின் நவீனத்துவவாதியின் மனைவி எனும் தேர்ந்தெடுத்த கதைகள் கொண்ட தொகுப்புக்காக மீண்டும் ஒருமுறை எல்லா கதைகளையும் வாசித்தேன். அத்தொகுப்பில் உள்ள கதைகளை தவிர்த்து இன்னும் ஒரு பதினைந்து கதைகளாவது நல்ல கதைகள் என சொல்லிவிட முடியும்.
இந்த கொரோனா காலத்தில் சுமார் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார்.வாழ்நாளில் தன்னால் நாவல் எழுத முடியுமா எனத் தெரியவில்லை என்றவர் ‘கடலும் வண்ணத்துபூச்சிகளும்’ எனும் முதல் நாவலை கடந்த ஆண்டு வெளியிட்டார். அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ எனும் ஒரு நாவலையும் எழுதி முடித்து விட்டார். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது. புதிய நாவல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் அசலான பங்களிப்பு சிறுகதைகளில் தான். சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர் என தயங்காமல் சொல்ல முடியும். நில காட்சியோ புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே வெளிப்படும். அவருடைய தத்துவ தளம். இருத்தலியல் சார்ந்தது. கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள் நாடகீய உச்சங்கள் போன்றச்வையும் அவருடைய கதைகளில் அரிதுதான். கட்டுப்பாட்டை மீறி ஒரு சொல்லையும் கதையில் விழ விடமாட்டார் என்பதால் பித்து கணம் எதுவும் கதைகளில் வெளிப்படுவதில்லை.
எல்லைகள் என உள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறு முறையில் இயல்பான இடைவெளிகளின் வழியாக அகத்தின் உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள் சுட்டிக்காட்டுபவை. என சொல்லலாம். வெளிப்படுத்தப்படுபவை உள்ளே எப்படி தலைகீழாக உள்ளன என்பதை அவருடைய கதைகள் மீள மீள சொல்கின்றன. அவருடைய சிறுகதைகளில் மிக நீளமான கதை என்பது பன்னிரண்டு பக்கங்கள் நீளும்.
சொற் சிக்கனம் என்பது அவருடைய கதைகளின் மிக முக்கியமான இயல்பு. அபாரமான அங்கதம் வெளிப்படும் சில கதைகள் உண்டு. சுரேஷ்குமார இந்திரஜித் பலவிதமான வடிவங்களில் கதைகளை கூறியுள்ளார். அவ்வடிவங்கள் மிக வெற்றிகரமாக கதையின் வாசிப்பை மேம்படுத்த பங்களிப்பு ஆற்றியுள்ளன.
இந்த கொரோனா சூழலில் விழா நடத்த முடியாது என்பதே குறை. சிரஸ்தார் சுரேஷ்குமாருக்கு, சுரேஷ்குமார இந்திரஜித் எனும் தமிழ் எழுத்தாளராக வேறொரு இடமும் மதிப்பும் உண்டு என உணர்த்தியிருக்க முடியும்.
சுரேஷ்குமார இந்திரஜித் புத்தகங்கள்
மாபெரும் சூதாட்டம்- காலச்சுவடு- சிறுகதைகள்
நானும் ஒருவன்- காலச்சுவடு- சிறுகதைகள்
அவரவர் வழி- உயிர்மை- சிறுகதைகள்
நடன மங்கை- உயிர்மை – சிறுகதைகள்
இடப்பக்க மூக்குத்தி- உயிர்மை- சிறுகதைகள்
நள்ளிரவில் சூரியன்- தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்- நற்றிணை
பின் நவீனத்துவவாதியின் மனைவி- தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்- தொகுப்பாசிரியர்- சுனில் கிருஷ்ணன் – காலச்சுவடு
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்- நாவல் – காலச்சுவடு
அன்புடன்
சுனில் கிருஷ்ணன்