அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது
சிவக்குமார் எம்
***
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடன் சந்திப்பு இந்த நாளை உற்சாகமாக ஆக்கியது. அவருடைய உரையாடல்களை தொடர்ந்து பார்ப்பவன். ஆகவே பெரும்பாலானவற்றில் அவர் என்ன சொல்வார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. இருந்தாலும் அவருடைய முகத்தின் தீவிரமும், சட்டென்று அது சிரிப்பாக மலர்வதும் அருமையான அனுபவம். அவரை பார்த்துக்கொண்டிருந்தபோது சிறுவனாகவும் முதியவராகவும் மாறிமாறி தோற்றமளித்தார். அவருக்கு என் வணக்கம்
அருள் வி
***
அன்புள்ள ஜெ,
நாஞ்சில்நாடன் சூம் உரையாடல் அ.முத்துலிங்கம் அவர்களின் சூம் உரையாடலைப்போலவே உற்சாகமாக இருந்தது. நாஞ்சிலின் பேச்சுமுறையும் அவருடைய இயல்பான நகைச்சுவையும் மனசுக்கு நிறைவூட்டின. அருமையாக பேசினார். எதையுமே யோசிக்கவோ குழம்பவோ இல்லை. எதையுமே ஒளிக்கவுமில்லை. எல்லா பதில்களும் நேரடியாக மனசிலிருந்து வந்தவை.
அதேபோல எல்லா கேள்விகளும் நேரடியானவை, படித்துவிட்டுக் கேட்கப்பட்டவை. ஆகவே கேள்விகள் குழப்பாமல் சுருக்கமாக இருந்தன. நாஞ்சிலின் பதில்களும் விளக்கமாகவும் அழகாகவும் அமைந்தன. அவ்வப்போது வந்த உவமைகள், செடிகள் பற்றிய செய்திகள் எல்லாமே அருமையான அனுபவத்தை அளித்தன
செந்தில்ராஜ்
***