காசியில் முப்பதாண்டுகளுக்கு முன் காலபைரவர் கோயில்வாசலில் ஒருவர் விசித்திரமான ஒரு மாலையை விற்றுக்கொண்டிருந்தார். ஊதாநிறமான மணிகளைக்கொண்டு முடையப்பட்டது. கனமானது என்று தெரிந்தது. நான் அதை ஏதோ பெரிய பாசிமணிமாலை என்றே நினைத்தேன்.
ஆனால் அருகே சென்றபின் தெரிந்தது, அது எருக்குமொட்டுகளால் ஆன மாலை. எருக்குமொட்டுகளை கோத்து இடைவெளியில்லாமல் நீளுருளைவடிவில் கட்டப்பட்டது. என்ன விலை என்று கேட்டேன். இருநூறுநூபாய், அன்று அது திகைக்கச்செய்யும் தொகை
ஆனால் அவர் விற்றுக்கொண்டே இருந்தார். அருகே அவர் மனைவி பெரிய கூடையில் எருக்குமொட்டுக்களை வைத்து கண்ணால் தொடரமுடியாத விரலசைவால் கட்டிக்கொண்டிருந்தாள். ஆட்கள் வாங்கிக்கொண்டு சென்றனர். காலபைரவருக்கு உகந்த மலர் அது
எருக்கு ஒரேசமயம் வழிபாட்டுக்குரியதாகவும், நச்சுச்செடியாகவும் நம் மரபில் குறிப்பிடப்படுகிறது. “வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே” என்று ஔவையார் அழியும் வீட்டின் சித்திரத்தைச் சொல்கிறார். எருக்கு பயனற்ற செடி. எந்த விலங்கும் அதை உண்ணாது. நச்சுப்பால் கொண்டது. ஆழமாக வேர் செல்வது, ஆகவே அழிக்கமுடியாத களை. பாலையிலும் வளர்வது, பெருவேனிலிலும் செழிப்பது.
ஆனால் அது அருமருந்து.அருக்கன், ஆள்மிரட்டி என அது சித்தமருத்துவநூல்களில் சொல்லப்படுகிறது. முதன்மையாக அது நச்சுநீக்கி. அதன் பால் பல்வேறு பூச்சிக்கடிகளின் நஞ்சை நீக்குவது. அதற்கு நெஞ்சுச்சளியையும் கபச்சிக்கல்களையும் நீக்கும் தன்மை உண்டு. பல்வேறு தோல்நோய்களுக்கும் நரம்புநோய்களுக்கும் எருக்கம்பால் மருந்தாகிறது. குதிகால்வலிக்கும் மூட்டுவலிக்கும் எருக்கம் இலைகளைச் சூடுபண்ணி வைத்துக் கட்டும் மருத்துவம் உண்டு.
அதர்வ வேதம் சிவனை எருக்குமாலை சூடியவன் என குறிப்பிடுகிறது. எருக்கு சுடுகாட்டில் வளர்வது, சிவன் சுடுகாடுடையோன். சிவபூசனைக்கு எருக்கு தொன்றுதொட்டு பயன்படுத்தப்படுகிறது. தென்னாட்டில் பிள்ளையாருக்கும் எருக்குமாலை சூட்டப்படுகிறது.
சைவ தாந்த்ரீக மதங்களில் பூசனைக்குரிய முதன்மையான மலர் எருக்கு. காபாலிகர், காளாமுகர் போன்ற சைவமதப் பிரிவினர் எருக்குமலர் தவிர அனைத்துமே ஒதுக்கப்படவேண்டியவை என்னும் கொள்கை கொண்டவர்கள்.எருக்குமாலை சூடியவர்கள்.
எருக்கு தமிழகத்தில் திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் , திருமங்கலக்குடி ஆகிய திருக்கோயில்களில்ஆகிய கோயில்களில் தலமரமாக உள்ளது. எருக்கத்தம்புலியூர் பற்றிய பாடல்
இலையார் தருசூலப் படைஎம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே
எருக்கு சிவனுடைய மலர்களாகிய கொன்றை வன்னி ஊமத்தம் கூவிளம் ஆகியவற்றில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. “வண்டணை கொன்றை வன்னி ஊமத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க கொண்டணி சடையர்” என
அன்று, காலபைரவர் ஆலயத்துக்கு வெளியே சில அகோரிகள் உள்ளே சூட்டப்பட்டு எடுக்கப்பட்ட எருக்குமாலையைச் சூடி அமர்ந்திருந்தனர். தனியாகப் பார்த்தால் மலர் என்றே தோன்றாதது எருக்கு. நம் மனதில் அதற்கு ஓர் எதிர்மறை அர்த்தமும் இருப்பதனால் நாம் எருக்கமலர்களை ரசிப்பதில்லை.
ஆனால் இன்று நான் காலைநடை செல்லும் இடங்களில் செழித்து பூத்துநிற்கும் எருக்கு எனக்கு காசியின் நினைவை அளிக்கிறது. அதன் வண்ணமும் தண்மையும் நெஞ்சை கவர்கின்றன. எருக்கின் அருகே சென்று சற்றுநேரம் நிற்காமல் கடந்துசெல்வதில்லை
காசியில் அத்தனை எருக்கு எங்கிருந்து வருகிறது என்று கண்டடைந்தேன். அங்கே ஒருவர் எட்டு ஏக்கரில் எருக்குத்தோட்டமே வைத்திருந்தார். நிலம்முழுதும் எருக்குச்செடிகள் பூத்து ஊதாவாகச் செறிந்திருந்தன. “நஞ்சின்நிறம் கொண்டது”என்று அங்கிருந்த காவலர் சொன்னார். நஞ்சின் சிரிப்பு என நினைத்துக்கொண்டேன். நஞ்செல்லாம் மருந்து, மருந்தெல்லாம் நஞ்சு என்று ஆயுர்வேதச் சொல் ஒன்று உண்டு. நஞ்சானாலும் சிரிப்பு அழகுதான்.இது பித்தனின் சிரிப்பு. இதிலொரு வெறி உள்ளது.