இளைஞர்களுக்கு ‘சுதந்திரத்தின் நிறம்’ : விலையில்லா 300 பிரதிகள்

வணங்குதல்

தோழமையுறவுகளுக்கு அன்பு வணக்கங்கள்! சமகாலத் தமிழ்ச்சமூகம் எவ்வகையிலும் தவறவிட்டுவிடக் கூடாத இருபெரும் காந்தியர்களான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகன்னாதன் அவர்களின் வாழ்வுவரலாற்று நூல் ‘சுதந்திரத்தின் நிறம்’. வாழ்வின் மீதும் செயலின் மீதும் துளியும் சலிப்புகொள்ளாத இவ்விரு மனிதர்களின் நிறைவாழ்வையும் களப்போராட்டங்களையும் அறிதலென்பது, நமக்கு அகவலு அளித்து செயலாற்றத் தூண்டுவதற்கான ஊக்கத்துணை.

ஏற்கெனவே 350+ ‘தன்மீட்சி’ புத்தகங்கள் விலையில்லா பிரதிகளாக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தையும் விலையில்லாமல் அனுப்பிவைக்கும் முடிவுக்குத் துணிந்திருக்கிறோம். தற்காலச்சூழலில் இப்புத்தகம் சென்றடையவேண்டிய பேரிலக்காக நாங்கள் கருதுவது ‘இளைஞர்களை’த்தான். தமிழ்ச்சூழலில் காந்தியத்தின் தாக்கத்தை அறிந்துகொள்ள விழைகிற ஒவ்வொரு இளைய மனதுக்குள்ளும், ‘செயல்வழி ஞானம்’ குறித்த அகவுரையாடலை இப்புத்தகம் நிச்சயம் துவங்கிவைக்கும்.

ஆகவே, நாங்கள் உங்களிடம் முன்வைக்கிற கோரிக்கை ஒன்றுள்ளது. குக்கூ காட்டுப்பள்ளியின் செயற்பாடுகளை அறிந்து எங்களோடு தொடர்பிலிருக்கும் இளைஞர்களில் ஏறத்தாழ 150 பேருக்கும், பொதுவெளியைச் சார்ந்த இளைஞர்கள் 150 பேருக்கும் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தை அனுப்பிவைக்கும் பெருங்கனவுக்கு பொறுப்பேற்கிறோம். புத்தகத்தின் உற்பத்திச்செலவு மற்றும் அஞ்சல் வழியாக அனுப்புதல் செலவு ஆகியன சேர்ந்து புத்தகம் ஒன்றுக்கு ரூ.320 ஆகிறது. உங்களுக்கோ, உங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது முகமறியாத ஏதோவொரு மனிதருக்கு இப்புத்தகத்தை அனுப்பிவைப்பதற்கான தொகைக்கு நீங்கள் பொறுப்பேற்றால், இப்புத்தகம் அச்சிடப்பட்டதன் மெய்நோக்கம் நிறைவேறும் என நாங்கள் தீர்க்கமாக நம்புகிறோம்.

ஒரு புத்தகத்துக்கோ அல்லது சில புத்தகங்களுக்கோ உரிய செலவுத்தொகையை நட்புறவுகள் பகிர்ந்துகொள்கையில், நிர்ணயிக்கப்பட்ட 300 இளைஞர்களுக்கும் புத்தகத்தை சேர்ப்பிக்க முடியும். இந்த நோயச்சகாலம் எவ்வகையிலும் எதிர்மைகள் சூழ்ந்த காலகட்டமாக நம் மனதுள் பதிந்துவிடக்கூடாது என்பதற்கான அகப்பதற்றத்திலிருந்து இந்த ஒவ்வொரு அசைவையும் முன்னெடுக்கிறோம். நாம் முதலடி வைக்கத் தயங்கும் இப்பாதையில் நமக்கு முன் பயணித்து மலையுச்சி கடந்த இரு மகத்தான சாட்சிமனிதர்களின் வாழ்வுச்சரிதையை அறியநேர்கையில், நமக்கு நாமே இட்டுக்கொண்டுள்ள அகத்தாழ் அதுவாய்த் திறவுகொள்ளும்!

கரங்கோர்க்க விரும்பும் தோழமையுறவுகள், பின்வரும் இணைப்பின்வழி உதவுக:

*
THUMBI
Acc.no : 59510200000031
Bank of Baroda
Branch : Moolapalayam – erode
IFSC : BARB0MOOLAP (fifth letter is zero)

Gpay : 9843870059
*

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி

சுதந்திரத்தின் நிறம்
சுதந்திரத்தின் நிறம் – கடிதம்
சுதந்திரத்தின் நிறம் – கடிதம்

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-13