வாழ்தலை முடிவுசெய்தல்…

Thomas Cole – The Voyage of Life Old Age, 1840

ஜெ,

உங்களிடம் மட்டுமே பகிரக்கூடியது..

எனது ரத்த சொந்தம் ஒருவர். வயது 80க்கு மேல் இருக்கும். Parkinson’s, Alzheimer’s போன்ற வியாதிகள். மொத்தத்தில் அவருக்கு சுய பிரக்ஞை சுத்தமாக இல்லை. எவரையும் அடையாளம் தெரியவில்லை. தானாக நகர கூட இயலாது. எழுந்து உட்கார உணவருந்த அனைத்திற்கும் ஒருவரின் துணை தேவை. கடன்கள், சுத்தம் செய்தல், குளியல் அனைத்தையும் செய்துவிடுவது மிகவும் உடலுழைப்பு கோரும் செயல். தினமும்.

என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி இப்படி செய்வதன் பயன் என்ன? அவரை இப்படி உயிர்பித்து வைப்பதால் அவரோ / இவர்களோ அடையப்போவது என்ன?

தனது கடமைகளை செய்த அப்பா, பாசமான தாத்தா எனவெல்லாம் இருந்தவர் இன்று இல்லையே. இன்றிருக்கும் உடலுக்கும் மனதிற்கும் இவர்கள் எவருக்கும் தொடர்பே இல்லை. அவர் இதை எதையும் உணர்வதே இல்லை.

இது கடமை என வீட்டில் எல்லாரும் செய்கிறார்கள். நானும் செய்கிறேன். ஆனால், இதன் பயன் என்ன என்று எனக்கு புரிவதே இல்லை. இவர் யார்? யாருக்கு நாங்கள் பணிவிடை செய்துக்கொண்டிருக்கிறோம்? அவருக்கு என்ன சென்று சேர்கிறது? செய்யாவிட்டால் பாவமா? மருந்து மருத்துவம் என அந்த உடலை இவ்வளவு வலிகளுக்கிடையே உயிர்ப்பித்து வைத்திருத்தல் பாவமா? அவரது மனம் மருமகள் முன்பு ஆடை அவிழ்வது கூட தெரியாமல் நிற்பதை ஏற்குமா? விரும்புமா?

இங்கு நாங்கள் எதனுடன் போரடிக்கொண்டிருக்கிறோம்? எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம்?

வேறு என்ன செய்யலாம் என கேட்க வேண்டாம். அதற்கும் பதில் இல்லை. அந்த அளவிற்கு குரூரமாகவில்லை இன்னும்.

இதற்கு நீங்கள் என்ன பதில் கொடுக்க முடியும் என தெரியவில்லை. சில சமயம் நமது மரபில் இருந்து முற்றிலும் ஒரு புதிய பார்வையை கொடுப்பவர் நீங்கள். அப்படி ஏதும் இல்லை எனறாலும்… இதை உங்களுக்கு எழுதுவது எனது அலைகழிப்பை கொஞ்சம் சமன் செய்யும்.

அன்புடன்

ஆர்

***

அன்புள்ள ஆர்,

இந்தவகையான கேள்விகள் அவ்வப்போது வருவதுண்டு. அதற்கு நான் இரண்டு பதில்களைச் சொல்வேன். ஒன்று, நான் ஓர் எழுத்தாளனாகக் கண்டடைந்தது. இன்னொன்று, நான் கற்றறிந்த என் அறிவுமரபின் கருத்து.எழுத்தாளனாக நான் அந்தச் சூழலில் அனைவராகவும் ‘நடித்து’ கண்டடைவதுதான் இலக்கிய உண்மை. அதற்கு பலசமயம் தர்க்கமதிப்பு இல்லை. இலக்கியவாசகன் அதை தன் நுண்ணுணர்வால் உணரமுடியலாம். அவனும் என்னுடன் நடித்து, என் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு அதைப்புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தன் வாழ்க்கையை முழுமையென உணர்ந்து நிறைவுசெய்து கொள்ளும்பொருட்டு உண்ணா நோன்பிருந்தோ, எரிபுகுந்தோ, நீர்புகுந்தோ உயிர்மாய்ப்பது இந்து மரபில் பிழையாக கருதப்படவில்லை. அது ‘தற்கொலை’ அல்ல. அதற்குரிய நோன்புகள், நெறிகள் சில உண்டு. அதாவது தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை ஒருவருக்கு உண்டு. அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான போராட்டங்களை நிறுத்திக்கொள்ளும் உரிமை உண்டு. இது ஒன்றும் அரிதானது அல்ல, நம் மூத்தவர்களில் பலர் ஒரு கட்டத்தில் மருந்துகளை நிறுத்திக்கொள்கிறார்கள் என நாம் அறிவோம்.

நீங்கள் இஸ்லாமியர், இஸ்லாமிய மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் அப்படி ஒருவர் முடிவெடுக்கக்கூட உரிமை இல்லை. முழுமையாக கடவுளிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டு, கடவுளின் விருப்பத்தை எதிர்பார்த்திருப்பதை மட்டுமே செய்யவேண்டும்.வேண்டுமென்றால் கடவுளின் ஆணைக்கு எதிராக போராடவேண்டாம் என்று எண்ணி மருந்துகளை தவிர்க்கலாம்.

ஆனால் அவையெல்லாம்கூட அவரே எடுக்கவேண்டிய முடிவுகள், இன்னொருவர் எடுக்கவேண்டிய முடிவுகள் அல்ல. இன்னொருவர், எவராயினும், அப்படி முடிவெடுக்க உரிமை இல்லை. ஏன் என சில காரணங்களைச் சொல்லலாம்

வாழ்வாசையை உயிர்களின் ஆதாரப்பண்பாக வைத்திருக்கிறது இயற்கை [அல்லது ஊழ் அல்லது கடவுள்] என் 19 வயதில் அக்காவின் கணவரின் அப்பா புற்றுநோய் வந்து மரணப்படுக்கையில் இருந்தபோது அவரைச் சிலநாட்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அன்றெல்லாம் புற்றுநோய் சிகிழ்ச்சை கொடுமையானது, அல்லது சிகிழ்ச்சையே இல்லை. அவர் வயிற்றில் கைநுழையும் அளவு ஓட்டை. அதில் ஒவ்வொருநாளும் பஞ்சுத்திரி நுழைத்து மறுநாள் சீழுடன் எடுப்பார்கள்.

வலி என்றால் சாதாரண வலி அல்ல, தொண்டை உடைய இரவும் பகலும் ஓலமிடுவார். அந்த வழியாகச் செல்லும் பேருந்துகளிலேயே அந்த ஓசை கேட்கும். அழுகும் தசையின் நாற்றம் அப்பகுதியெங்கும் நிறைந்திருக்கும். இன்று நான் குடியிருக்கும் பகுதிக்கு அருகேதான் அவர் வாழ்ந்தார், இப்போதும் அவ்வழிச் செல்கையில் அவர் அலறலை மனதுள் கேட்பேன்.

கம்பீரமான கனிவான மனிதராக வாழ்ந்தவர். இப்படி ஏன் வாழவேண்டும், ஏன் ஊசிபோட்டு கொல்லக்கூடாது என்று நான் பலமுறை நினைத்திருக்கிறேன். அவரே, என்னைக் கொன்றுவிடுங்கள் என்றுதான் கூவுவார். ஆனால் ஒருநாள் நள்ளிரவில் விழித்துக்கொண்டார். கனவுகண்டிருந்தார். புன்னகையுடன் “ஒன்றுமில்லை, இன்னும் நான்குமாதங்களில் சரியாகிவிடும். குமாரகோயிலில் ஒரு வெள்ளி உருவம் செய்து வைக்கவேண்டும், அவ்வளவுதான்” என்றார். பிரமித்துவிட்டேன்.

உயிரின் வாழ்வாசை அப்படிப்பட்டது. அதை அந்நாளில் ஒரு கதையாக எழுதி வெளியிட்டுமிருக்கிறேன். ஆனால் அதேபோல அவ்வுயிரே வாழ்ந்தது போதும் என முடிவெடுப்பதும் உண்டு. கடைசித்துளி உயிருக்காக போராடும் விலங்குகள்கூட அவ்வாறு போதும் என முடிவெடுப்பதுண்டு. அந்த விழைவு ஏன் நீடிக்கிறது, அந்த முடிவு ஏன் எடுக்கப்படுகிறது என எவராலும் சொல்லிவிடமுடியாது.

ஒருவர் உளநோயாளியா, மூளைச்சிதைவுநோயாளியா என்பதெல்லாம் நம் கணிப்பு. தன்னளவில் அவர் எப்படி இருக்கிறார் என நாம் என்ன கண்டோம்? அவர் வாழ்க்கையை நாம் எப்படி முடித்துவைக்கமுடியும்? எப்படி அதைப்பற்றி நாம் யோசிக்கமுடியும்?  ‘அவர் இதை எதையும் உணர்வதே இல்லை’ என்கிறீர்கள். அவர் நாம் நினைப்பதுபோல, ஏற்கனவே அறிந்திருப்பதுபோல, உணர்வதே இல்லை என்று சொல்லலாம். முற்றிலும் வேறுமாதிரியாக உணர்ந்திருக்கக் கூடும் அல்லவா?

1993ல் நான் ஊட்டியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு விபத்துக்குப்பின் 3 ஆண்டுகள் கோமாவில் இருந்தார். மீண்டுவந்தவர் துறவி ஆகிவிட்டார். அந்த மூன்று ஆண்டுகளும் மிக ஆழமானவை என்று அவர் சொன்னார். மூன்றாண்டுகளையும் நாள்வேறுபாடு இல்லாத, காலமில்லாத ஒரு வெளியாக, ஒரு நிமிடம்போல, அவர் நினைவுகூர்ந்தார்.

அங்கே அவர் அறிந்தவை மிக அரிதானவை. “நாள் என்றும், காலம் என்றும் ,புறவுலகம் என்றும், அதனுடன் சம்பந்தமான கடமைகள் உணர்வுகள் என்றும் நாம் உணரும் ஓர் உலகில் உள்ள உண்மைகளையே நாம் அறிகிறோம். அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மையை நான் உணர்ந்தேன். ஒருவேளை மரங்கள் எல்லாம் அறிந்த உண்மை’ என்று அவர் சொன்னார்.

இப்படிச் சொல்கிறேன். ஒருவர் தியானத்தில் இருக்கிறார். பலநாட்களாக. அவர் செத்துவிட்டார் என நினைத்து கொண்டுபோய் புதைத்துவிட்டால் என்ன பொருள் அதற்கு? ஓர் எழுத்தாளன் எழுத்தின் போதையில் அலைகிறான். அவனைக்கொண்டுபோய் மனநோய்விடுதியில் அடைத்தால் என்ன பொருள் அதற்கு?

இன்னொருவர் வாழ்க்கையைப் பற்றிய தீர்ப்புகளைச் சொல்ல நாம் யார்? நாம் விரும்புவதுபோல பிரபஞ்சம் இருக்கவேண்டும் என ஆசைப்படுவதுபோல அபத்தம் வேறு உண்டா?

நான் 1988ல் அப்படி ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன், அந்த இளமையில் நாம் நம்மை ஒட்டியே யோசிப்போம். உலகிலுள்ள  ‘உதவாக்கரைகள்’ எல்லாம் ஏன் உயிர்வாழவேண்டும், உலகில் எதற்காக இத்தனை மக்கள் என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு [இதே எண்ணம் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்நிகாஃபுக்கு வருகிறது]

ஒருநாள் சாலைவழியாகச் செல்கையில் ஒரு பிச்சைக்காரரைப் பார்த்தேன். தொழுநோயாளி, அனாதை. அவர் ஏன் உயிர்வாழவேண்டும் என நான் நினைத்தேன். பலமுறை அப்படி நினைத்தேன். ஒருநாள் இரவில் கடும்பசியில் திரும்பி வருகையில் அவர் ஒரு தெருநாய்க்கு உணவுபோடுவதை கண்டேன். அந்தக் கனிவால் அவர் எனக்கு மிகமிக அணுக்கமான ஒருவராக ஆனார். நான் சந்தித்த பெரியமனிதர்களில் ஒருவர் அவர். ஏழாம் உலகம் நாவலில் ஒரு விவேகம் மிக்க கதாபாத்திரமாக அவரை நீங்கள் காணலாம், நான்கடவுள் சினிமாவில் அக்கதாபாத்திரத்தை கவிஞர் விக்ரமாதித்யன் செய்தார்.

அந்த நாய்க்கு அன்றைய உணவு அவர் அளிக்கவேண்டுமென இருந்திருக்கிறது. பின்னாளில் அவர் எனக்கும் உணவளித்திருக்கிறார். பணம் தந்து உதவியிருக்கிறார். அந்த மாபெரும் செயல்திட்டத்தை ஒன்றுமறியாமல் விமர்சிக்க நான் யார்? அந்த ஆணவத்தின் பொருளென்ன? அன்று பெரிய மனஎழுச்சி ஒன்றை அடைந்தேன். கண்ணீர்விட்டேன். அந்நிகழ்வை ஒரு கதையாகவும் அதை எழுதினேன்.

நீங்கள் கேட்ட கேள்வியை கேட்டவர் ஓர் இந்து என்றால் அவரிடம் இப்படிச் சொல்வேன். பிறப்பு-இறப்பின் சுழல்வழிப்பாதையில் அந்த ஆத்மா அது ஆற்றியே ஆகவேண்டிய ஒன்றை ஆற்றிக்கொண்டிருக்கிறது. மிகப்பிரம்மாண்டமான வலையின் ஒரு கண்ணி அது. ஒவ்வொன்றும் எங்கோ வரவும் எங்கோ செலவும் ஆகும். எங்கோ கழியும், எங்கோ கூடும். ஆகவே கண்ணுக்குத் தெரிந்ததை வைத்து கணக்குபாராதீர்கள்.

இஸ்லாமியர் என்றால் நான் சொல்வேன், பெருமழையின் ஒவ்வொரு நீர்த்துளியையும் எண்ணிவைத்த அல்லாவின் கணக்கை உங்கள் கணக்கால் மதிப்பிடாதீர்கள். நம் வாழ்க்கையிலேயே நாம் அறிந்தவை, நம்மால் தர்க்கபூர்வமாகப் புரிந்துகொள்ளக்கூடியவை மிகமிகக்குறைவு. மானுடர்க்கான காலம், மானுடர்க்கான வாழ்க்கை அளந்தே அளிக்கப்பட்டுள்ளது என நம்புங்கள்.

அவரைப் பேணுவதன் சிக்கல் அடுத்த கேள்வி. அதற்கும் மேலே சொன்னதே பதில். இந்து என்றால் அவர் அவ்வண்ணம் இருப்பது அவரைப் பேணவேண்டியவர்களின் ஊழின் ஒரு பகுதி. அவர்களுக்கு, அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாத பவசக்கரம் அளிக்கும் கடமை. அதைச் செய்துதான் ஆகவேண்டும்.

அதை துறந்தால் அது இல்லாமலாவதில்லை, துறக்கப்பட்டது என்ற வடிவில் எஞ்சும். கடமையைச் செய்வதன் அல்லலைவிட செய்யாமல் விட்டுவிடுவதன் அல்லல் பெரிது. பெரியவரை ஒரு இரண்டு ஆண்டுக்காலம் பார்த்துக்கொள்ளவேண்டும். விட்டுவிட்டால் அதன் பின் எஞ்சிய வாழ்நாள்முழுக்க அதை எண்ணி வருந்தவேண்டும்.பிறவிச்சுழலில் அதை ஈடுசெய்யவும் வேண்டும்

இஸ்லாமியர் என்றால் சொல்லவேண்டியது இதுதான், அதை கடமையென விதித்த அல்லாவின் ஆணைக்கு எதிராக செல்ல எவருக்கும் உரிமை இல்லை. துறக்கப்பட்ட பொறுப்புகளெல்லாம் அவன் கணக்கில் இருந்துகொண்டுதான் இருக்கும்

இதேபோல ஒரு பேச்சு பத்தாண்டுகளுக்கு முன் வந்தது. சொந்தக்காரர்களில் ஒருவர் ஒரு நோயுற்ற பெரியவரைப் பார்த்துக்கொள்வதில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றிச் சொன்னார். எங்காவது ‘தள்ளிவிட’ முடியுமா என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னேன். ‘அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இந்தமாதிரியான நோயாளிகளை பாத்துக்கொள்ள மாதம் 20000 ரூ தருது. நாம் வேலைக்கு ஆள்வைத்துக்கொள்ளலாம்”. அவர் உடனே “அவ்ளவு ரூபாயா, அப்டீன்னா நாமளே பாத்துக்கிடலாமே” என்றார். “அப்ப பிரச்சினை, உங்க உழைப்புக்கு சம்பளம் இல்லாம வீணாகப்போகுது என்பதுதானே?”என்று நான் கேட்டேன்.

இதுதான் பிரச்சினை. நம் தொழிலில் இதைவிட பலமடங்கு சிக்கல்களைச் சந்திக்கிறோம், உழைக்கிறோம். நம் சொந்தவாழ்க்கையில் பல இன்னல்கள் வழியாக கடந்து செல்கிறோம். அவை தவிர்க்கமுடியாதவை என நினைக்கிறோம். ஆனால் இது உபரியாகச் செய்யும் பணி என தோன்றுகிறது, அதுவே ஒரு வெறுமையை அர்த்தமின்மையை உருவாக்குகிறது

ஆனால் இதைப்போன்ற எத்தனை ‘வீண்களால்’ ஆனது வாழ்க்கை. சிலநாட்களுக்கு முன் ஒரு நண்பர் கேட்டார். அவர் 22 ஆண்டுகள் ஒரு தொழிலைச் செய்தார். வெறிகொண்டு, இரவுபகலாக. கடைசியில் நஷ்டம், மூடிவிட்டார். “என் வாழ்க்கையின் 22 ஆண்டுகளுக்கு என்ன பொருள்”என்றார். இதே பதிலைத்தான் சொன்னேன். “அப்படி அர்த்தம் தெரிந்தா வாழமுடியும்? அது அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது, அதை ஆற்றிவிட்டோம். கடன்முடிந்தது, அதற்குமேல் எண்ணவோ புரிந்துகொள்ளவோ முடியாது”.

வாழ்க்கையின் எல்லா செயல்பாடுகளையும்போல இதுவும் ஒரு வாழ்க்கைக்கடன்தான். தீர்த்தாகவேண்டியது, தவிர்க்கமுடியாதது.

ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல்களை நான் அறிவேன். அச்சிக்கல்களைச் சந்தித்து தீர்த்துக்கொண்ட சிலரையும் கண்டிருக்கிறேன். அவர்கள் அதை முடிந்தவரை எளிதாக, முடிந்தவரை பொறுப்பு குறைவாகச் செய்ய கற்றுக்கொண்டார்கள். முடிந்தவரை அதை வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியாக, அன்றாடத்தின் அம்சமாக ஆக்கிக்கொண்டார்கள். அதற்காக பெரிதாக எதையும் இழக்கவில்லை, அதன்பொருட்டு கூடுமானவரை எதையும் சமரசம் செய்துகொள்ளவில்லை. முக்கியமாக அதை உணர்ச்சிகரமாக எடுத்துக்கொள்ளவில்லை. சலிப்பை சொல்லிக்கொள்ள தொடங்கினால் அது பெருகி தாளவே முடியாமலாகும். எளிதாகக் கடந்துசெல்லவேண்டும் என முயல்பவர்களால் அது இயலும்.

ஜெ

முந்தைய கட்டுரைஞானி-12
அடுத்த கட்டுரைவெண்முரசின் உன்மத்தம்-லஓசி