அரசியல்கூச்சல்கள்- கடிதம்

இரட்டைமுகம்

அன்புள்ள ஜெ

உங்கள் மீதான அரசியல்தாக்குதல்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எந்த மதிப்புக்கும் தகுதியற்ற எளிமையான அரசியல்தொண்டைகள். புறக்கணித்துப்போகலாம். ஆனால் இவர்கள் சூழலில் உருவாக்குவது மிகப்பெரிய சத்தத்தை. இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நாம் பேசவேண்டும். இவர்கள் கூடச்சொன்ன இடத்தில் கூடவேண்டும். இல்லாவிட்டால் வசை, அவதூறு, திரிப்பு, நக்கல் நையாண்டி.

இப்போது தேர்தல்வரப்போகிறது. இன்னும் ஓராண்டு, தேர்தல் முடியும்வரை வேறெதையும் யோசிக்கவிடமாட்டார்கள். அதன்பிறகும் தேர்தலுக்கு உருவாக்கப்பட்ட இந்த மிஷின் வேலைசெய்துகொண்டேதான் இருக்கும். இந்தச் சத்தங்களிலிருந்து நமக்கு விமோசனமே இல்லை.

ஓர் உதாரணம் சொல்கிறேன். நேற்று மாலை நாங்கள் இரு நண்பர்கள் ஹோமியோபதி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அது பயனுள்ளதா இல்லையா என்பதைவிட அது ஒரு பெரிய அதிகார அமைப்பாக இல்லாமலிருப்பதே ஒரு நல்ல விஷயம் என்று பேசினோம்.

மார்க்சிய நண்பர் வந்தார். இப்போது மார்க்சியர்களும் திகக்காரர்களும் ஒன்றுதானே? ‘இது ஒரு சங்கி ஐடியாலஜி. மக்களுக்கு சிகிச்சைகிடைக்கக்கூடாது என நினைக்கிறீர்கள்’ என்றார். ஒருமணிநேரம் கழித்து இந்துத்துவ நண்பர் வந்தார். ‘நக்சலைட்டுகள் ஹோமியோபதியை ஆயுதமாகக்கொண்டு ஆதிவாசிகளை ஏமாற்றுகிறார்கள்’ என்றார்.

யோசிக்கவே விடமாட்டார்கள். நைநை என்று ஒரே பாட்டு. இவர்களுக்கு சலிப்பதே இல்லை. எதைக்கண்டாலும் இந்துத்துவா,சங்கி, அர்பன் நக்சலைட், தேசத்துரோகி, நடுநிலைநக்கி.ஐந்தே ஐந்து வார்த்தைகள்தான். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த கும்பலையும் அப்பால்தள்ளி இலக்கியம் தத்துவம் பேச ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை என்றால் ஒரு தலைமுறையையே வீணாக்கிவிடுவார்கள்

ஆர்.பாஸ்கர்

இனிய ஜெயம்

பல விஷயங்களை நான் உங்களுக்கு தெரிவிப்பதில்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவு முக்கியம் கொண்டவை அல்ல ஆனால் தீவிரமானவை.

உதாரணம் ஜெயமோகனை நன்கு வாசித்த வாசகர் ஒருவர். தொலைபேசி வழியே நண்பர் ஆனவர்.   திருமா மீதான உங்கள் நிபந்தனையற்ற ஆதரவு பதிவு வெளியான அன்று அழைத்திருந்தார். அவர் குடும்பத்தில் ஒரு நாடக காதல் சிக்கல் வந்ததாம் திருமா தலைமை எனும் ஒரே காரணத்தால் அவர் கட்சியினர் நடந்து கொண்ட விதம் குறித்து பொருமினார். ஜெமோக்கு உண்மையில் அவரது தெருவில் நடக்கும் விஷயங்களாவது தெரியுமா? அவர் வீட்டில் இப்படி ஒன்று நடந்தால் மட்டும்தான் அவருக்கு இந்த வலி புரியும். இந்த வலி குறித்தெல்லாம் அவருக்கு எதுவுமே தெரியாததால்தான் பலருக்கு இந்த வலியை தந்த திருமாவுக்கு இப்படி பட்டவர்த்தனமாக ஜெமொ ஆதரவு தெரிவிக்கிறார். இப்படி தொடர்ந்து கொண்டே போனார் நான் துண்டித்து விட்டேன். அதன் பிறகு அவர் தொடர்பு கொண்டும் நான் பேசவில்லை.

இது ஒரே ஒரு உதாரணம். இப்படி பல.தீவிர இலக்கியத்தின் வாசகர் எனும் நிலை ஒரு புறம்.( சொந்த காரணம் துவங்கி தேச மத  நலன் உள்ளிட்ட உன்னத காரணங்கள் வரை கொண்ட)  அதி தீவிர அரசியல் வெறி மறுபுறம். இந்த இணைப்பு கொண்டவர் எவரையும் என் உரையாடல் களத்திலிருந்து துண்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன்.  துரதிஷ்ட வசமாக எனது நெருங்கிய நண்பர்கள் சிலரே இத்தகு இணைப்பு கொண்டவர்கள் என்பதை சில காலமாக கவனித்து வருகிறேன். (என்னுடன் இலக்கியம். முகநூல் உள்ளிட்ட சமுக ஊடகங்களில் அரசியல் மட்டும். கண் துடைப்பாக கூட இலக்கியம் இல்லை)

இந்தியத் தேர்தலில் ஒட்டு மை தடவுவதற்கான ஒரு விரல் என்பதை தாண்டி இன்று எந்த சாமானியனுக்கும் அரசியல் அதிகாரம் அதை நெறிப்படும் வகைமை என எதிலும் எந்த அதிகாரமும் இல்லை. உண்மையில் ஓட்டு போடுவதன்றி வேறு ஏதேனும் நாம்  செய்திருக்கிறோமா என்ன? இந்த   யதார்த்த நிலை அளிக்கும் சிறுமை இருக்கிறதே அங்கிருந்தே துவங்குகிறது இந்த அரசியல் வெறி. ‘நான்’ வெறும் ஓட்டு போடும் விரல் அல்ல என்பதை நிரூபிக்க நிகழும் போராட்டம்.

சமூகஅரசியல் அவதானமாக இருந்து, சமூகஅரசியல் கருத்துக்கள் என திரண்டு, அரசியல் நிலைப்பாடு என வளர்ந்து, அரசியல் வெறி என வளர்ந்து நிற்கிறது அது எனது  சில நண்பர்கள் மத்தியில். சமீபத்தில் அவர்களது சில வாட்சாப் முகநூல் கருத்து மோதல்களை கண்டேன். தெருவில் இறங்கி செருப்பால் அடித்துக்கொள்ளாத குறைதான்.

நேற்று நாம் ஒரே பந்தியில் அமர்ந்து சிரித்துப் பேசி உணவருந்தினோம். நாளையும் அதே பந்தி உண்டு. அங்கே நாம் ஒருவருக்கு ஒருவர்  என்ன முகம் காட்டுவோம்? இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் வேறு என்பதை போல, இந்த இலக்கிய ஈடுபாடும் அந்த அரசியல் வெறியும் வேறு வேறு என்று சொல்லி அதற்கான முகத்தை சூடிக்கொள்வோமா?

நேற்று இருந்து, இன்று வாழ்ந்து, நாளை மாயும் ஆயிரம் ஆயிரம் அற்ப அரசியல்வாதிகளால் நிறைந்ததுதான் வரலாறு. அந்த அரசியல்வாதியின் பொருட்டு, காலத்தை தன் முன் மூத்து நரைத்து மண்டியிட வைக்கும் கலைஆளுமை ஒருவரை அவரது அரசியல் நிலைப்பாடு ஒன்றைக் கண்டுகொண்டு அணுகி நிற்பவரோ  விலகி செல்பவரோ இலக்கியத்துக்கானவர் இல்லை. அவருக்கு இலக்கியத்துக்கான மூளைஅமைப்பு கிடையாது. அரசியல் வாதிக்கு ஓட்டு போடும் விரல் மட்டுமே அவர்.

அவரது அரசியல் வெறியை தனியே வைத்துக்கொண்டு, தனியே இலக்கியம் பேசுவது சுய ஏமாற்று மட்டுமே. அரசியல் வெறி நிலைத்த மனதில் இலக்கியம் வாழாது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
அடுத்த கட்டுரைஞானி-12