தன்மீட்சி எனும் இயக்கம்

தன்மீட்சி வாங்க

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இப்பொழுதுவரைக்கும் யாரோ ஒருவரிடமிருந்து ‘தன்மீட்சி’ புத்தக வாசிப்பு குறித்த அனுபவங்கள் தொடர்ச்சியாக எங்களை வந்தடைந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் சமூகத்தின் வெவ்வேறு பொருளியில் அடுக்கு, விதவிதமான தத்துவநிலைப்பாடுகள் சார்ந்தவர்கள். ஆனால், அத்தகைய வேறுபாடுகளைக் கடந்தும் தனது வேரை இறக்கக்கூடிய ஏதோவொன்றை இப்புத்தகம் தனக்குள் கொண்டிருப்பதை எங்களால் முழுமையாக உணரமுடிகிறது. ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடித்தபிறகும், மனதைக் கையாளுதல் குறித்த ஒரு புதுத்தெளிவு ஞாபகத்திலும் செயலிலும் ஆழமாகப் பதிவாக வாசித்தவர்கள் சொல்கையில், ஆண்டுகள் சிலமுன்பு எங்களுக்கு உண்டான அதே அகமீள்வு நாட்களை மகிழ்வுடன் நினைத்துக் கொள்கிறோம்.

விலையில்லாமல் 200 தன்மீட்சி புத்தகங்களை வழங்க முடிவுசெய்த முகநூலில் பதிந்தபொழுது, நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிகமான நண்பர்கள் தங்களுடைய முகவரியை அனுப்பியிருந்ததால் எங்களுக்குள் ஒரு தேக்கநிலை உண்டானது. அச்சமயத்தில் தான், உங்களுடைய இணையவெளியில் அதற்கான பதிவு வெளியானது. அதன் விளைவுநீட்சியாக, வெவ்வேறு வாழ்வுச்சூழல் மட்டங்களிலுள்ள நண்பர்கள் சிலர் தாமே முன்வந்து, கூடுதலான தன்மீட்சி புத்தகங்கள் அனுப்புவதற்கான செவுகளுக்குப் பொறுப்பேற்றனர். அவ்வகையில், உங்கள் வலைதள வாசிப்பு நண்பர்களான ராமச்சந்திரன் நடராஜன், கார்த்திகேயன், பாலசுப்பிரமணியம் கோவை, விஷ்ணுகுமார், மது மற்றும் இன்னும் சில பெயரறியா தோழமைகள் தங்கள் கூட்டுப்பங்கெடுப்பாக தன்னறம் நூல்வெளிக்கு மொத்தமாக ரூ. 44,000 அளித்துள்ளனர்.

ஆகவே, முகவரி அனுப்பிக் காத்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் அவர்களுடைய வசிப்பிடங்களுக்ககு அஞ்சல் வழியாக புத்தகங்களை அனுப்பத் துவங்கி இன்றுவரை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறோம்.  எல்லை நிர்ணயம் என்பதைத்தாண்டி, புத்தகம் கோரியிருந்த எல்லோருக்கும் புத்தகம் சென்றடையக்கூடிய நற்சூழலை இந்த இக்கட்டான காலநெருக்கடியிலும் உருவாக்கித் தந்த அந்நண்பர்களின் உறுதுணைக்குப் பெருநன்றிகள்! தமிழறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலபேருக்கு அவரவர்களின் நண்பர்கள் சார்பாக இப்புத்தகம் சென்றடைந்தை அறிகிறோம். முகநூலில் ஒரு நாளைக்கு ஏதாவதொரு நபர் தன்மீட்சி குறித்த அனுபவங்களைப் பகிர்கிறார். இச்சமகாலத்தில், சென்றடைதலின் வழியாக எங்களுக்குள் வலுவான நம்பிக்கையையும் மகிழ்வையும் ஒருசேர அளித்த புத்தகப்படைப்பென்றால் அது தன்மீட்சிதான்.

தன்மீட்சி புத்தக அச்சுக்காலத்திலிருந்து, அப்புத்தகத்தை இயன்றவரை இளையோர்களிடம் சேர்ப்பிக்கிற ஒரு நீண்ட ஆவலின் ஈடேற்றமாக இதை மனதில் கொள்கிறோம். இவ்வாய்ப்பை சாத்தியப்படுத்திய உங்களின் கனிவுக்கும் அன்புக்கும் எக்காலத்தும் எங்கள் நன்றிக்கடன்.
யாவர்க்கும் நிறை சேர்க!

நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி

http://thannaram.in/


தன்மீட்சி- கடிதம்
தன்மீட்சியின் நெறிகள்
தன்மீட்சி வாசிப்பு
செயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி
முந்தைய கட்டுரைஅகுதாகவா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-11