வரலாறு ,ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

 

வாழ்த்துக்கள். நான் செல்வா. நீங்கள் என்னுடைய மிக அபிமான எழுத்தாள்ர். உங்கள் கட்டுரைகள் எதையுமே நான் விடுவதில்லை. பெரும்பாலான கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை, ஆர்வமூட்டுபவை. நான் தமிழ்ப்பண்பாடு வரலாறு ஆகியவற்றைச் சார்ந்து நிறையவே வாசிக்க எண்ணுகிறேன். நான் வாசிக்கத்தக்க சில நூல்களை நீங்கள் அறிமுகம்செய்ய முடியுமா?

 

செல்வா ஜெயபாரதி  

அன்புள்ள செல்வா

அன்புள்ள செல்வா

 

உங்கள் கடிதம். தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

தமிழ் பண்பாடு வரலாறு சார்ந்து ஏராளம நல்ல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரே கடிதத்தில் ஒரு பட்டியல் போடுவது எளிய விஷயம் அல்ல. ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விவாதத்தை இந்த இணையதளத்தில் ஆரம்பிக்கலாமென எண்ணுகிறேன்.

வரலாறு குறித்தவிவாதத்துக்காக http://www.sishri.org/ http://www.varalaaru.com  போன்ற இணைய இதழ்கள் இயங்குகின்றன. தமிழின் வரலாற்று எழுத்தில் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றை இந்திய வரலாற்று எழுத்திலும் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

 

அவற்றைப்பறறி மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

வரலாற்று எழுத்து என்பது நேரடியாகவே அரசியலுடனும் அதிகாரத்துடனும் சம்பந்தம் உடையது. ஆகவே புறவயமான வரலாறு என்பது பெரிதும் சாத்தியமாவதே இல்லை. வரலாற்றை எழுதுவதில் உள்நோக்கங்களும் அவற்றின் விளைவுகளான திரிபுகளும் மிக மிக அதிகம் . பலகோணங்களில் முன்வைக்கப்படும் வரலாற்று எழுத்துக்களில் இருந்து நம் ஆய்வுமனத்தால் நாம்தான் வரலாற்றை உருவகித்துக்கொள்ள வேண்டும். ‘எந்த வரலாற்றெழுத்தும் நேரடியானது அல்லஎன்று மட்டும் உங்களுக்குள் தெளிவுகொண்டாக வேண்டும்.

 

நம்முடைய வரலாற்று எழுத்துக்கு நான்கு காலகட்டங்கள், நான்கு தளங்கள்முதல்தளம் வெள்ளையரால் எழுதப்பட்ட நம்முடைய வரலாறு. இதைகாலனியாதிக்க வரலாற்றெழுத்துஎனலாம். இந்த காலகட்டத்தில் நம்மை ஆண்ட வெள்ளையர் அவர்களின் நிர்வாக வசதிக்காகவும் நம்மை புரிந்துகொள்ளும் முயற்சியாகவும் நம்மைப்பற்றிய வரலாற்றுச் சித்திரங்களை உருவாக்கினார்கள்.

 

இவர்கள் வரலாற்றை எழுதுவதற்குப் பயிற்சி பெற்றவர்கள். குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மாணவர்கள் மிகச்சிறப்பான முறையில் வரலாற்றை எழுதுபவர்களாக இருந்தார்கள்.

 

முறைப்படி தரவுகளைச் சேகரிப்பது, அவற்றை ஒழுங்குபடுத்தி முடிவுகளை அடைவது, அவற்றை ஆர்வமூடும் முறையில் முன்வைப்பது ஆகியவற்றில் இவர்கள் நிபுணர்கள். புராணங்கள் தொன்மங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றை தவிர்த்து வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் எழுத நமக்குக் கற்பித்தவர்கள் இவர்களே. ஜெ.எச்.நெல்சன், கால்டுவெல் போன்றவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள். நம் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்தவர்கள் என்ற முறையில் இவர்கள் முக்கியமானவர்கள்.

 

இவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால் இவர்கள் நம்மை அடிமைகளாகவே கண்டார்கள். நம் பண்பாட்டையும் வரலாற்றையும் எப்போதும் குறைத்து மதிப்பிட்டார்கள். நம்மை இயல்பிலேயே கீழானவர்களாக எண்ணினார்கள். அந்த எண்ணத்துக்கு எதிராக எழுந்ததே இரண்டாவது காலகட்டம். இதைதேசிய வரலாற்றெழுத்துஎனலாம். நம் தேசியவரலாற்றை சற்றே பெருமிதத்துடன் எழுதும் முறை இது. நம்முடைய சிறந்த காலங்களைக் கண்டடைவதும் நம்முடைய சிறப்புகளை முன்வைப்பதும் இதன் இயல்பு. சதாசிவப்பண்டாரத்தார் ஸ்ரீனிவாச சாஸ்திரி  முதலியவர்கள் இதன் உதாரணங்கள்.

 

இவர்களே நாம் இன்றுகாணும் நம் வரலாற்றுச் சித்திரத்தை முழுமையாக ஆக்கியவர்கள். நம்மை நமக்குக் காட்டியவர்கள். ஆனால் இவர்கள் நம்முடைய சில எதிர்மறைக்கூறுகளை  மழுப்பினார்கள் அல்லது மறைத்தார்கள். ஆகவே அவற்றை முன்வைக்கும்

 

மூன்றாம்காலகட்டத்து எழுத்துமுறை உருவானது. இதைமறுபரிசீலனை வரலாற்றெழுத்துஎனலாம். இவர்கள் நம் மரபில் உள்ள உள்முரண்பாடுகளையும் சிக்கல்களையும் ஆழ்ந்து கவனித்தார்கள். கெ.கெ.பிள்ளை., நொபுரு கரஷிமா போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

நான்காம் காலகட்டம்நிராகரிப்பு வரலாற்றெழுத்துஎனலாம். இன்று மேலைநாடுகள் நம்முடைய எல்லா வரலாற்று அடையாளங்களையும் நிராகரிக்கவும், நம்முடைய பெருமிதங்களை எல்லாம் முற்றாக மறுக்கவும் விரும்புகின்றன. நம்மை இரண்ட , பண்பாடற்ற

 

மனிதர்களாகச் சித்தரிக்கவும் மேலைநாட்டுத்தொடர்பால்தான் நமக்கு நாகரீகம் வந்தது என்றும் சொல்ல விரும்புகின்றன. அதாவது காலனியாதிக்க வரலாற்று எழுத்தை மீண்டும் நம் மீது திணிக்கின்றன. நீண்டகால பண்பாட்டுப் படையெடுப்பு ஒன்று இப்போது நம் மீது நடத்தப்படுகிறது.

அதற்கு ஏகாதிபத்திய சக்திகள் நம்மையே பயன்படுத்துகின்றன. பெரும் நிதியுதவியுடன் அவை அமைப்புகளை உருவாக்கி அங்கே ஆய்வாளர்களை அமர்த்தி இத்தகைய ஆய்வுகளை நூற்றுக்கணக்கில் உருவாக்குகின்றன.

 

இந்த கூலி வரலாற்றாசிரியர்கள் தங்களை தலித் சார்பானவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானவர்கள் என்றும் பாதுகாப்பான முகமூடிகளைப் போட்டபடி நம் நாகரீகம் ஒட்டுமொத்தமாகவே ஒரு இனவெறிமதவெறி நாகரீகம்தான் என்றும், நமக்கு பண்பாடென்றே ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள். மிக நுட்பமாகவும் பூடகமாகவும் நீண்டகால அடிப்படையிலும் இந்த திரிபு வேலை நடந்துவருகிறது.

 

இவர்கள் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களைமறுவாசிப்புசெய்கிறார்கள். அவர்களைமீட்டுஎடுக்கிறார்கள். தேசிய வரலாற்றாசிரியர்களை சாதியவாதிகள்,ஆதிக்கவாதிகள் என்று முத்திரை குத்தி நிராகரிக்கிறார்கள். மூன்றாம் கட்ட மறுபரிசீலனை வரலாற்றாசிரியர்களையும் தேசிய வரலாற்றாசிரியர்களின் வரிசையில் சேர்த்து விடுகிறார்கள்இந்தியதமிழ்ச் சூழலில் உள்ள முரண்பாடுகளை மேலும் அழுத்திக் காட்டுகிறார்கள். இங்கிருந்த சுரண்டலையும் அடிமைத்தனத்தையும் மிகைப்படுத்தி பூதாகரமாகக் காட்டுகிறார்கள். இங்குள்ள எல்லா சாதக அம்சங்களையும் அந்தச் சுரண்டலுக்கான உத்திகளாக மட்டும் சுருக்கிக் காட்டுகிறார்கள். சிறந்த உதாரணம் எம்.எஸ்.எஸ்.பண்டியன் போன்றவர்கள்.

 

இந்த நான்காவது கட்ட வரலாற்றையே நாம் இன்று அதிகமாக வாசிக்க முடிகிறது. அதைப்பற்றிப் பேசினால் நமக்கு முற்போக்கு முகமூடியும் கிடைக்கும். ஆனால் இதன்பின் உள்ள ஏகாதிபத்தியச் சதி நம்மை நெடுங்காலத்து அடிமைத்தனத்துக்குக் கொண்டு செல்வது என நாம் உணரவேண்டும். பாரபட்சம் இல்லாமல் முன்னோடி எழுத்துக்களை வாசித்து  நம்முடைய சொந்தவரலாற்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும்அதுவே இன்றைய தேவையாகும்

இந்த அடிபப்டையில் நாம் நம்முடைய வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்த நான்கு அடுக்குகளிலும் உள்ள வரலாற்று நூல்களை வாசிப்பது அவசியம். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் அமர்த்தவும் வேண்டும்.

 

முந்தைய கட்டுரைஜெயகாந்தன்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்: கடிதங்கள்