ராமர்கோயில்- கடிதங்கள்

ராமர் கோயில்

அன்புள்ள ஜெ

ஒரிரு நாட்களுக்கு முன்பு இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி அவர்கள் வருவதை செய்தியில் கேட்டுக் கொண்டிருந்தேன். அது காலை நேரம் அப்பாவும் உடனிருந்தார். நான் அந்நிகழ்வை நோக்கி ‘இது இந்தியாவின் கருப்பு சின்னம்’ என்றேன். உடனே அப்பா என்னிடம் அதற்கு எதிர்நிலையாக பேச ஆரம்பித்தார். அப்பாவுக்கும் எனக்கும் பத்து நிமிடம் வாதம் நடந்ததில், முடிவில் சொல் இன்றி மௌனமாகி விட்டேன்.

அந்த வாதத்தில் மையமாக நான் கேட்ட கேள்வி என்னவெனில், பாபர் நம் கோயிலை இடித்து மசூதி கட்டியது வன்முறை என்றால் நாம் அவர்களின் மசூதியை இடித்து கோயில் கட்டுவதும் வன்முறை தானே? பின்  ஜனநாயகத்தில் வாழும் நமக்கும் அவருக்கும் என்ன தான் வித்தியாசம்? என்பதே அந்த கேள்வி. என் அப்பாவின் பதில் என்னவென்றால், அந்த மக்கள் நீண்ட காலமாக அங்கே போராடி வந்திருக்கிறார்கள் என்பதை நீயே சொல்கிறாய், அதனை ஒத்துக்கொள்ளவும் செய்கிறாய். அங்கே ஏற்கெனவே ராமர் கோயில் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் கிடைத்துள்ளன. நிலத்திற்கு சொந்தக்காரரிடமிருந்து அவர் பலமில்லாத போது பக்கத்து வீட்டுக்காரன் பிடுங்கி கொண்டானெனில், மீண்டும் உரிமையாளர் தன் பலத்தை திரட்டி கொண்டு இழந்த நிலத்தை கேட்டால் யாருக்கு தர வேண்டும்? முதலில் சொந்தமானவர்க்குத் தானே, அதே போல இந்த வழக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அது தான் என்றார். அதன்பிறகு என்னால் எதுவும் பேச முடியவில்லை. உண்மையை சொன்னால் இந்த வயதிற்கே உரிய என் கர்வமும் சற்று அடிவாங்கியது. ஒன்றை அறிந்து கொள்வதற்கு நம் சொந்த கர்வம் தடையாய் இருக்கும் என்பதை அறிந்திருந்தும் அவ்வப்போது என்னை மீறிவிடுகின்றன.

அன்று உடனடியாக முன்பு தாங்கள் இதுபற்றி கூறியது நினைவுக்கு வரவே தங்கள் தளத்தில் இது சம்மந்தமான சென்ற வருடத்தின் கட்டுரையை எடுத்து படித்தேன். நீதிமன்றத்திற்கு சென்றால் இப்படி தான் தீர்ப்பு வர முடியும் என நீங்கள் எழுதியிருந்ததை படித்த பிறகு கொஞ்சம் அமைதியானேன். ஆனாலும் முழுகட்டுரையையும் படிக்காமல் ஓடிவிட்டேன். எல்லாம் என் ஆணவத்தினால் தான்.

இன்று ராமர் கோயில் பதிவை படித்த பின் தங்களுக்கு கடிதம் எழுதி பேச வேண்டும் என தோன்றியது. அதனால் நீங்கள் கொடுத்திருந்த எல்லா பதிவுகளையும் முழுமையாக படித்தேன். அது இன்னும் எனக்கு தெளிவை ஏற்படுத்தியது.

சென்ற ஆண்டு கட்டுரையில் அடிக்கடி கும்மட்டம் என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தீர்கள். அச்சொல்லின் பொருள் என்னவென்று எனக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்ள எத்தனிக்கவும் இல்லை. நானே மசூதியை குறிக்கும் தனித்தமிழ் சொல் என்று கற்பனை செய்து கொண்டேன். இன்று அரசியல் சரிநிலைகள் கட்டுரையை வாசித்த பின்னர் தான் அச்சொல்லின் பொருளை முழுதாக புரிந்நு கொள்ள முடிகிறது.

இங்குள்ள ஊடகங்களால் பொய்யாக திரித்து கூறப்பட்ட ஒரு கருத்தே என்னை போன்ற அதிகம் வாசித்தறியாதவனுக்கு வந்து சேரும் போது ஓர் இந்து மாணவனுக்கு இந்த தேசம் சிறுபான்மையினர் மேல் கட்டற்ற வன்முறையை  ஏற்படுத்துவதாக மன பிம்பத்தை கட்டமைக்கிறது. அப்படியெனில் முஸ்லிம் மாணவன் ஒருவனை இவை ஏன் வன்முறைக்கு தூண்டாது?

இன்னொரு பக்கம் இவர்களது இந்த பிரச்சாரமே என் அப்பா போன்றவர்களை இந்துத்துவம்  பக்கத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

எங்கள் விவாதத்திலேயே  இருவருக்கும் அல்லாது அருங்காட்சியமாக மாற்றிவிடலாம் என்றும் ஆனாலும் சர்ச்சை தொடர்கொண்டு தானிருக்கும் அதனால் இதுவே நல்லது என்றும் அப்பா கூறினார். அப்போதைக்கு ஓர் அரை மனதுடனேயே எற்று கொண்டேன். ஆனால் இன்று நீங்கள் சொல்லும் தரப்பே எனக்கு உவப்பானதாக உள்ளது.

மாண்புள்ள அரசு எனில் அதனை தொல்லியல் சின்னமாகவே பராமரிக்க வேண்டும். அதை எதிர்க்கும் மக்களுக்கு அச்செயலின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். வழக்கமான அடிதடி ஒடுக்குமுறை மேலும் வன்முறையை மட்டுமே தூண்டும். காந்திய வழிமுறைகளை தான் கையாள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அது ஆரம்பத்தில் சோர்வளிப்பதாக இருந்தாலும் அதுவே மிகச்சிறந்தது. ஏனெனில் எதிரி என்றல்லாமல் எதிர் தரப்பு என கொண்டு தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் தீர்வை நோக்கி செல்கிறது.

எங்கள் விவாதத்திலிருந்து மட்டுமல்ல இன்று நீங்கள் சொல்வது போல எந்த ஊடகங்களிலுமே பாபர் கும்மட்டம் இடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்டவர்களின் மேலான எந்த எதிர்ப்பு குரலுமே வரவில்லை. நீதிமன்றங்களிலும் அவை கிடப்பில் தான் கிடக்கும்.

காந்தியோ, காந்திய கனவுகளோ நீங்கள் சொல்வது போல எங்கோ ஆங்காங்கே உதிரியாக  இருப்பதோடு சரி. பொதுவில் அவை காணமலாகிவிட்டன. ரூபாய் நோட்டில் இருக்கும் அவர் சிலருக்கு தான் மனதில் இருக்கிறார்.

அன்புடன்

சக்திவேல்  

இரட்டைமுகம்

முந்தைய கட்டுரைநீலம் யாருக்காக?
அடுத்த கட்டுரைபாலியல் முகம் -கடிதம்