புரட்சித்தலைவர் பட்டம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,

கோவை ஞானி பற்றிய உங்கள் அஞ்சலித் தொடரில் இப்படி ஒரு வரி எழுதியிருந்தீர்கள்:

/எம்ஜிஆர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் பா.ராமமூர்த்தியால் புரட்சித்தலைவர் என பட்டம் சூட்டப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்]/

1972வில் அ.தி.மு.க கட்சி தொடங்கி முதல் பெருங்கூட்டம் நடந்தபோதே, அ.தி.மு.க’வின் நிறுவன உறுப்பினரான  கே.ஏ.கிருஷ்ணசாமி, இப்பட்டத்தை எம்.ஜி.ஆரு’க்கு வழங்கினார்.

பின் எப்போதாவது P.R. போன்ற ஒரு தலைவர் ஒருவேளை எம்.ஜி.ஆரை அவ்வாறு விளித்திருந்தார் என்றால் கூட அது ஏமாற்றம் தான் (அப்படி எல்லாம் நடந்ததா என்ன?) .  ஆனால் பட்டத்தை அவர் சூட்டவில்லை.

அன்புடன்,

பிரபு ராம்

***

“எம்ஜிஆர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் பா.ராமமூர்த்தியால் புரட்சித்தலைவர் என பட்டம் சூட்டப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்]”

எம்ஜிஆருக்கு அப்பட்டத்தை தந்தது கே.ஏ.கிருஷ்ணசாமி (அப்பொழுது சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகனின் சகோதரர்) அல்லவா?  அன்று அம்மேடையில் இருந்தது தோழர் எம்.கல்யாணசுந்தரம் தோழர் ராமமூர்த்தி இல்லை. மாற்றி எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

“போழ்வு” “பத்து லட்சம் காலடிகள்” வைக்கம் ஆலய போராட்டகள் போன்ற சரித்திர சம்பவங்களை நியாய தராசில் அமர்ந்து மெய் தோய்த்து அச்சு வார்க்கும் என் மனதிற்கு உவந்த இலக்கிய படைப்பாளி நீங்கள் என்ற அன்பிலும் உரிமையிலும் (மட்டுமே) இந்த மெயில்.

icf சந்துரு

கோவை – 19

***

அன்புள்ள சந்துரு அவர்களுக்கு

இதுசார்ந்து கடிதங்கள் வந்தன, நினைவுப்பிழைதான். திருத்திக்கொண்டிருக்கிறேன்

எம்.ஜி.ஆர் அவர்களை பலத்த ஆரவாரத்திற்கிடையே கல்யாணசுந்தரம் புரட்சித்தலைவர் என்று அழைத்தார். கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னது பிரச்சினை அல்ல, கம்யூனிஸ்டுத்தலைவர் சொன்னது அதிர்ச்சியை உருவாக்கியது. எழுபதுகளில் அது கம்யூனிஸ்டுத்தலைவர் அளித்த பட்டம் என்றே அ.தி.மு.க கூட்டங்களில் பேசப்பட்டது. அது அன்று பெரிய விவாதங்களை உருவாக்கியது. சோ துக்ளக்கில் கடுமையாக எழுதியது நினைவுள்ளது. 86ல் சுந்தர ராமசாமியும் அதைச் சுட்டி என்னிடம் பேசியிருக்கிறார். அது ஒரு திருப்புமுனை என்று அவர் சொன்னார் பின்னாளில் பா.ராமமூர்த்தியும் புரட்சித்தலைவர் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.

ஜெ

முந்தைய கட்டுரைநூறுகதைகள் பற்றி…
அடுத்த கட்டுரைஞானி-6