தனிமைக்கால இசை

அருண்மொழிக்கு ஒருநாளில் இரண்டு மணிநேரம் பாட்டுகேட்பது, ஆறுமணிநேரம் படிப்பது இதுதான் வாழ்க்கை. அதற்காகத்தான் வேலையை விட்டதே. பாட்டுகேட்பதில் ஒருமணிநேரம் சினிமாப்பாட்டு- தமிழ் மலையாளம். எல்லாம் ஒரு சுற்று கேட்டுவந்தபின்னர் பாடலை நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் மேல் ஆர்வம்.

இந்தமாதிரி நிகழ்ச்சிகள் பொதுவாக தங்களை பாடகர்கள் என உள்ளூர நினைத்துக்கொள்பவர்களை பெரிதும் கவர்கின்றன. பாட்டு மட்டுமல்ல, பாடகர்களின் உடலசைவுகள் பாவனைகள் எல்லாமே கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. தங்களை அப்பாடகர்களாக கற்பனை செய்துகொள்கிறார்கள் என நினைக்கிறேன். ஆகவே அது இசைநிகழ்வு மட்டுமல்ல இசைநடிப்பும்கூட

இப்போது அருண்மொழியின் பித்து சுபஸ்ரீ தணிகாசலம் நிகழ்த்தும் Quarantine from Reality என்னும் நிகழ்ச்சி. நூறு நாட்களைக் கடந்து யூடியூபில் ஓடிக்கொண்டிருக்கிறது. அருண்மொழி அதில் ஒருநாளுக்கு நாலைந்து பாட்டுக்களை தெரிவுசெய்து வைப்பாள். இரவுச் சாப்பாட்டுக்குப்பின் அதைப் பார்ப்போம். எனக்கும் அது ஒரு அரிய அனுபவம். ஒன்று, நினைவில் மலர்தல். இன்னொன்று இசையனுபவம்.

நான் அந்த பாடல்களை யூடியூபில் சினிமாக்காட்சிகளாகப் பார்ப்பதே இல்லை, காட்சியை அணைத்துவிட்டே பாட்டைக் கேட்பேன். திரைப்படப் பாடலாக்கத்தில் வண்ணம் வந்த பின்பு மணிரத்னம் பாலா வருவதற்கு முன்பு ஒரு பெரிய வீழ்ச்சி இருந்தது. அவ்வப்போது சில விதிவிலக்குகள். அதிலும் எழுபதுகளின் பாடல்படமாக்கம், பெற்றம்மை தாங்கமுடியாத தரம் கொண்டவை. பழைய கறுப்புவெள்ளை படமாக்கல்களில் எல்லைமீறாத நேர்த்தி அமைந்ததுண்டு.

சுபஸ்ரீ தணிகாசலத்தின் நிகழ்ச்சி பலவகையிலும் அபாரமானது. ஒன்று புதுப்புது பாடகர்கள். இந்த இணைய யுகத்தில்தான் அவர்களை பாடவைக்கமுடியும். பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள். ஆனால் முழுநேர இசைக்கலைஞர்கள் அளவுக்கே தேர்ச்சி பெற்றவர்கள். திறமைக்குறைவான ஒருவரைக்கூட நான் பார்க்க நேரிட்டதில்லை. இசைக்கருவிகளை மீட்டுவதில், குரல்பழக்கத்தில் மிகச்சிறந்த பயிற்சி வெளிப்படுகிறது

தனித்தனியாக அவர்கள் பாடியதை ஒருங்கிணைத்து அமைக்கு ஷியாம் மிகவும் பாராட்டத்தக்க பணியைச் செய்கிறார். பெரும்பாலும் கீபோர்டுதான் இசைக்கருவி. குழல், வீணை, வயலின் எல்லாம் அவ்வப்போது வருகிறது. ஒருவகையில் கீபோர்டின் சாத்தியங்கள் என்னென்ன என்று காட்டுவது இந்நிகழ்ச்சி. விதவிதமான தாளக்கருவிகளை வாசிக்கும் வெங்கட் மலர்ச்சி தரும் ஓர் ஆளுமை.

பாடகர்களை தனித்தனியாக எடுத்துச் சொல்லவேண்டும். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சாயல்கொண்ட குரல்கள் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் டி.எம்.எஸ், சீர்காழி, சிதம்பரம் ஜெயராமன் குரல்களில் அமைந்த பாடல்களைக்கூட அழகாக பாடும் இளைஞர்களைக் காண்கையில் இசையின் அழிவின்மை ஒரு பிரமிப்பை அளிக்கிறது.

அதிகமாக கேட்காத பாடல்களை பாடவைப்பது  என்பது சுபஸ்ரீ தணிகாசலத்தின் கொள்கை. ஆனால் யூடியூப் வந்தபின் அவையும் அவ்வப்போது கேட்டவைதான். ஆனாலும்கூட நான் கேட்டபாடல்களில் நாலைந்து பழைய பாடல்களை நான் முதல்முறையாக கேட்டேன் என்பதும் ஆச்சரியம்தான்.

ஆரம்பகால பாடல்களில் குறைவான இசைக்கருவிகளுடன் நிகழ்ந்த நிகழ்ச்சி இப்போது ஒரு முழுமையான இசைக்குழுவைக் கொண்டதாக, தெளிவான ஒளிப்பதிவும் ஒலிப்பதிவுத்தரமும் கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு நாட்களில் நான் பார்த்த மிகச்சிறந்த தமிழ் கேளிக்கைநிகழ்ச்சி இதுதான்

சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி

***

முந்தைய கட்டுரைஞானி-5
அடுத்த கட்டுரைவெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை