இரவிலுழல்தல்

இரவு நாவல் வாங்க

வணக்கம் ஜெ

இரவு நாவல் இப்போதுதான் வாசித்தேன். பதற்றமும், பரவசமும் கலந்த அனுபவம். இரவு அழகானதும், அப்பட்டமானதும் கூட; கருநீல இரவில் தகதகக்கும் பொன்னிற விளக்கொளி- அதற்கு நிகரான அழகே இல்லை எனலாம். இரவின் கருநீலம், அமைதி அதற்கு என்ன காரணம்? அது பகலின் மறுபக்கமாக இருப்பதுதானே. ஏதுமற்ற வெளிக்கு அழகு உண்டா? அது வெறும் வெறுமை; கருமை. எனவே இருள், வெளி அல்ல; அது பகலின் மறுவடிவம்.

சரவணன் இரவுவாழ்க்கையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் போது அதை ஒருவித அமைதியின்மையோடுதான் படித்தேன். இரவு எவ்வளவு வசீகரமானதோ அவ்வளவு அச்சுறுத்தக்கூடியது. அதுவே அந்த அமைதியின்மைக்கு காரணம். உலகில் இதுபோல தீவிரத்தை நாடுபவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் பின்வாங்கி வந்திருப்பர்? எதோ ஒருவித தீவிரத்துக்குச் செல்ல நினைப்பவர்களை இழுக்கும் விசைகள் ஏராளம். கடலில் நீந்துவதை போன்ற அனுபவம்; நம்மைத் திணரச் செய்துவிடும். அதனாலேயே என்னுடைய எளிய மனம் ‘அதை நிராகரி’ என்கிறது. கதையின் போக்கில், உதயபானு, ‘ஓடிரு, நீ நசிஞ்சிடும்‘ என்று எச்சரித்தபோது இறுக்கம் தளர்ந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. அதுவரை அப்படி யாராவது எச்சரிக்கை செய்யமாட்டார்களா என்று எதிர்பார்த்து இருந்ததுபோல. பின்னிழுக்கும் விசை; இல்லை, காப்பாற்றும் விசை. பாதாள சாக்கடையின் முன் நின்று சரவணன் யோசித்துக் கொண்டிருந்த தருணம் – தங்களுக்கென்று ஒரு உலகை உருவாக்கிக் கொண்டு வாழும் பெருச்சாளிகள் கூட்டம்; வேறு ஒரு வாழ்க்கை. அதேபோன்றதொரு இறுக்கம் தளர்ந்த உணர்வை, கமலாவின் மரண செய்தியைக் கேட்டதும் அடைந்தேன். ‘அப்பாடா… ஒரு சம்பவம் நடந்துருச்சு’ என்று. ஏன் இந்த எண்ணம்? இரவைக் கண்டா? இல்லை; இரவும், இரவு வாழ்வும் இங்கு வெறும் உருவகங்களும், உதாரணமும் தான். இது ஒரு தீவிரத்தை நோக்கிய பயணம். அத்தன்மையில் ஒரு வாழ்க்கை. அதைக் கண்டு வரும் தயக்கம் தான். ஒருபக்கம் அனுபவங்களுக்கும், தீவிரத்துக்கும் ஏங்கும் மனம்; இன்னொருபுறம் அதெல்லாம் பொய், மாயை, வசியம், வேண்டாம் வா… என்று இழுக்கிறது. அதனாலேயே அவ்வமைப்பு தவறு என்று நிரூபிக்க முயல்கிறது. கமலாவின் மரணம் எனக்களித்த தளர்வு அதையே குறிக்கிறது. நான் இரவை வெறுக்கவில்லை; அதன் கிளர்ச்சியையும், ராட்சச அழகையும், அதற்கான அத்தனை உருவகங்களையும் தர்க்கங்களையும் என் மனம் ஏற்கிறது. இன்னொருபுறம் நான் வெயிலை விரும்புகிறேன்- சூரியனை- அதன் இளஞ்சூட்டை- அது ஆபாசமாக இருந்தாலும் கூட, கொட்டிக் கவிழ்க்கப்பட்டதாய் இருந்தாலும் கூட.

பகல் எல்லாவற்றையும் மூடி மறைந்துவிடுகிறது. அது கண்ணுக்கு காட்டுவது பொருள்களை மட்டும் தான். இரவே உணர்வுகளுக்கானது. அது அனைத்தையும் நிர்வாணமாகக் காட்டுவது; எதையும் மறைக்க முடியாது. பெண், யட்சியாவது அங்கேதான். அழகான, இனிமையான ஒருத்தி, நாகமாகி விஷம் கக்குவதும் அங்கேதான்.

யட்சி- என்னைச் சீண்டியவள். அந்தச் சீற்றம், அவளை அடைந்து, அனுபவித்து, வெல்ல வேண்டும் என்ற ஆவேசத்தை ஏற்படுத்தியது.

//…உலகத்திலே  எல்லா பொண்ணும் ஆம்பிளைங்களை அருவருக்கிறா. உலகத்திலே எந்தப்பொண்ணுக்கும் ஆண் உள்ளூர ஒரு பொருட்டே கெடையாது. ஆனால் அதை காமம் மூடியிருக்கு. அவளுக்கு பிள்ளை பெத்துக்கணும்னு ஆசை. அதுக்கு அவனோட ஸ்பெர்ம் தேவை. அதுக்காக அவனை நக்கிட்டிருக்காஎல்லா பொண்ணும் ஆம்பிளைய உறிஞ்சி குடிச்சிட்டிருக்கா. வயிறு நெறைஞ்சதும் சக்கையா துப்பிடுவாயூ நோதுப்பிடுவாங்கதூ…”//

எவ்வளவு அப்பட்டமான உண்மை! எனக்கிது அதிர்ச்சியளித்ததைக் காட்டிலும், ஒன்றை உறுதிப்படுத்தியது. நான் பலமுறை புகைமூட்டமாக யோசித்தும், கற்பனை செய்தும் இருந்ததை இது உறுதிப்படுத்தியது. பெண்ணுக்கு ஆண் என்பவன் யார்? உண்மையில் ஒன்றுமே இல்லையே. ஆண்-பெண் உறவு எவ்வளவு அபத்தமானது. இருவரது பொய்யான எதிர்பார்ப்புகளையும் இருவருமே நிறைவேற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீலிமா நுட்பமானவள் என்பதால், அதை அதன் தூய வடிவில் அப்படியே சொல்லிவிட்டாள். ஆனால் பலருக்கு அதைக் கண்டடைந்து, உணர்ந்து சொல்ல முடியவில்லை. அதனால், வேறு வேறு பேச்சுகள், உணர்ச்சிகள் வழியாக அதை வெளிப்படுத்துகின்றனர்.

சாமானிய வாழ்க்கையிலே ஆண்-பெண் உறவு எவ்வளவு போலித்தனம் நிறைந்ததாக இருக்கிறது. ஏதேதோ சமூக நிர்பந்தங்கள். இவனுக்கு காமம் வேண்டும்; அதற்கு அவள் வேண்டும். பொண்டாட்டி, பிள்ளைகள் எல்லாம் ஆணுக்கு சமூக அந்தஸ்துக்கான அலங்காரப் பொருள்கள். அவளுக்கோ, தனது பிள்ளை பெற்றுக்கொள்ளும் திராணியை ஊரார் முன் பறைசாற்ற ஒரு ஆண் வேண்டும். நல்லவேளை, விந்து மரத்தில் காய்ப்பதில்லை ; இல்லையெனில் ஆண்களுக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும். காமத்திற்காக மட்டுமே அத்தனைக் குட்டிக்கரணங்களும்! பெண்ணுக்கு ஆண் எப்படி ஒரு பொருட்டில்லையோ, அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணா? பெண்- காமத்தின் பொருள்வடிவம்.

நீலிமா யட்சியாகி அவனிடம் உண்மையைக் கொட்டிய பின்பு, சரவணன் அவள் காதருகே சென்று, ”ஆமாண்டி, நீயும் எனக்கு அப்படித்தான்; வெறும் தடவவும், நக்கவும் மட்டும்தான். வேறு ஒரு மயிரும் இல்ல”, என்று சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவன் பரிதாபமாய் நின்றிருக்கிறான். அதைக் கேட்டபோது எனக்கு என்ன தோன்றியது தெரியுமா ஜெ… ‘அத்தனை யட்சிகளையும் புணர்ந்து வீசியெறிய வேண்டும் என்று; யட்சிகளின் அழகையும், ஆவேசத்தையும் உறிஞ்சியெடுத்து, அவளை ஒன்றுமில்லாதவளாகத் தூக்கி வீசவேண்டும் என்று…’ ஆம்! எவ்வளவு அபத்தம்; ஆண்கள் எவ்வளவு கையாலாகாதவர்கள்! ச்சீ… கேவலமான ஒரு படைப்பு…

ஆண்களைச் சுற்றி எவ்வளவு யட்சிகள்? ‘அனல்காற்று சந்திரா’ ஒரு யட்சி. அவளுக்கு ஆண்களைச் சீண்டத் தெரியும்; அவனை எங்கு குத்தினால் அவனுக்கு வலிக்கும் என்று தெரியும். ஆனால் சுசிக்கு அது தெரியாது. அவள் இன்னும் யட்சியாகப் பழுத்துக் கனியவில்லை. அதனாலேயே அழுதுகொண்டே சென்றுவிட்டாள். ‘நூறு நாற்காலிகள்’ கலெக்டரின் அம்மா வேறொரு யட்சி. தன் மகனை ஒரு யட்சியிடமிருந்து காப்பாற்ற முயலும் இன்னொரு யட்சி அவள்.

யட்சிகள் குடிப்பது ஆணின் சிவப்பு ரத்தத்தை அல்ல; வெள்ளை ரத்தத்தை- விந்து. விந்து ஆணுக்கு, அவனுடைய ஆற்றல்; அவனுடைய உயிர் சக்தி; அவனுடைய திராணி; அவனுடைய ஆண்மை; அவனுடைய ஆணவம். அது போன பின்பு அவன் வெறும் சக்கை. ஆண்மையின் திராணியை உட்கொண்டு யட்சி வலிமையடைகிறாள். எவ்வளவு பாரபட்சமானது இந்தப் படைப்பு!

பெண்களின் இந்த யட்சித் தனத்தை உணர்ந்த ஆண்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். பெண்களிடம் போய் யாரும் ‘ஆணாசை’ பற்றி எச்சரிப்பதில்லை; ஆனால், ஆண்களிடம் ‘பெண்ணாசை’ பற்றிய எச்சரிக்கை சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உங்கள் அப்பா உங்களிடம் கூறியதாகக் கூறினீர்கள்: ”உனக்கு ஒரு பெண் போதும்; பெண்களை நீ தேடிச் செல்லாதே, அவர்கள் உன்னை ஆட்டிப்படைப்பார்கள்” என்று. எவ்வளவு சத்தியமான வார்த்தை! இவர்கள் அனைவரும் பெண்களின் யட்சித்தனத்தை உணர்ந்தவர்கள். அது பெண் வெறுப்பு அல்ல.

வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. ‘டேய்… இனிமே கூல்ட்ரிங்ஸ் குடிக்கும் போதெல்லாம் மூத்திரம் ஞாபகம் தாண்டா வரும்’. அதுமாதிரி, ‘இனி பெண்களை பார்க்கும் போதெல்லாம் யட்சி ஞாபகம்தான் வரும்போல…’

உண்மைகளை எல்லோரும் விருப்புகின்றோம்;  இருப்பினும் அதற்கு அச்சப்படுகிறோம். மேனன் சொல்வதுபோல சிலருக்கு உண்மை உண்மையாய் இருந்தால் போதாது; அது முகத்தில் வந்து அறைய வேண்டும். அப்பட்டமாக, அப்படியே எல்லாவற்றையும் கழட்டிப் போட்டு அம்மணமாக நம் முன் உண்மை வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அதை எதிர்கொள்ள பலரால் முடிவதில்லை. தாந்த்ரீக பூஜையில் சரவணன் மயங்கி விழுவதை போல விழுந்து விடுகிறோம்; பின்வாங்கியும் விடுகிறோம். மேனன் பின்வாங்கச் சொல்லிவிட்டார்; சரவணன் அப்படிச் செய்யவில்லை. தனக்கு முன்பிருந்த பாகனை கொன்றது இதுதான் என்று தெரிந்தும் அதனிடம் மீண்டும் செல்கிறான் இன்னொரு பாகன். யானை- இரவு- யட்சி- அதன் தீவிரம்- எதுவும் நம் கைகளுக்குள் முழுமையாக சிக்கவில்லை. சாமியாருக்கு ஏற்பட்ட கோரமான முடிவு; இருப்பினும் அவரது உணர்தல்களும், அறிதல்களும் பொய்யாகிவிடப் போவதில்லை. எத்தனை பாகன்கள் செத்தாலும் மீண்டும் மீண்டும் பாகன்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். யானை என்னும் அறியமுடியாமையை அறிய; அதன் தீவிரத்துடன் போராட…

விவேக்ராஜ்

***

இரவு – திறனாய்வு

இரவு பற்றி…

இரவு ஒரு கடிதம்

இரவு – நாவல் குறித்து.

இரவு எனும் தொடக்கம்

முந்தைய கட்டுரைவெண்முரசின் காவியத் தருணங்கள்:–ராஜமாணிக்கம்
அடுத்த கட்டுரைபூலான்தேவி -கடிதங்கள்