இந்த நினைவுகளை தொகுத்துக்கொள்கையில் ஞானிக்கு இணையாகவே சுந்தர ராமசாமியும் வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அது இயல்புதான். அவர்கள் இருவரும் இரு எல்லைகளாக இருந்து ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்டிருக்கிறார்கள். ஞானியை எப்போது பார்த்தாலும் “என்ன சொல்றார் உங்க சுரா?” என்றுதான் கேட்பார். சுரா பலசமயம் “என்ன சொல்றார்?” என்று கேட்பார், பெயர்கூடச் சொல்வதில்லை. ஒருவர் சொன்ன ஒரு கருத்தை இன்னொருவரிடம் சொன்னால் உடனே மறுத்துப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
ஞானியின் பார்வையில் சுந்தர ராமசாமி எல்லா பிரச்சினைகளையும் தனிமனித அகப்பிரச்சினைகளாக மாற்றிக்கொண்டவர். “வீட்டுக்கண்ணாடியிலே தெரியற வெளியுலகத்தை மாத்தணும்னா அந்தக்கண்ணாடியை மாத்திட்டாபோதும்னு நம்பறவர்”. சுந்தர ராமசாமியின் பார்வையில் ஞானி “எல்லாத்தையும் வரையறை செஞ்சு வகுத்துக்கலாம்ங்கிற மூடநம்பிக்கைக்குப் பலியானவர்”
சுந்தர ராமசாமி மேலோட்டமான நுண்அவதானிப்புகளால் அலைக்கழிபவர் என்றார் ஞானி. ஞானி எல்லாவற்றையும் உடைத்து புரிந்துகொள்ளமுடியும் என்று நினைப்பவர் என்றார் சுரா. “கோழிமுட்டையைக்கூட உடைச்சாத்தான் அவராலே புரிஞ்சுகிடமுடியும். கடைசிவரை ஆம்லெட்டையே முட்டைன்னு நினைச்சிட்டிருந்தார் .பாவம்” ஆனால் அவர்களுக்கிடையே கடைசிவரை நல்லுறவும் இருந்தது. அது அந்தக்கால வழக்கம்.
இருவரில் எவர் எனக்கு அணுக்கமானவர்? எவர் எனக்கு அதிகமாகக் கற்றுத்தந்தவர்? சிறு ஐயத்துடன் சுந்தர ராமசாமிதான் என்றே சொல்வேன். ஞானி எனக்கு என் காலகட்டத்தைய கருத்தியல் விவாதத்தை முழுமையாக அறிமுகம் செய்தவர், அவற்றை என்னுடன் தொடர்ந்து விவாதித்தது வழியாக என்னை முன்னெடுத்தவர். என் படைப்பியக்கத்தில் நான் முன்னகர்ந்தபோது அதை அடையாளம் கண்டுகொண்டவர், இடமளித்தவர். மாறாக சுந்தர ராமசாமி என்னை மட்டுமல்ல, என் காலகட்டத்தின் புதிய நகர்வுகள் எதையும் ஏற்கமுடியாதவராகவே இருந்தார். அஞ்சினார் என்றும் ஆகவே பதறினார் என்றும் சொல்வேன்.
ஆனாலும் சுந்தர ராமசாமி எனக்கு முன்னுதாரணமானவர். ஏனென்றால் ஒவ்வொரு அன்றாடச் செயலிலும் நுண்ணிய படைப்புத்தன்மையுடன் ஊடுருவும் பார்வை கொண்டவராக இருந்தார். அதன்பொருட்டு தீட்டப்பட்ட புலன்கள் கொண்டவர் அவர். [அந்தக் கோயிலிலே தீபம் அணைஞ்சு மணம் வருது, எண்ணையிலே பாமாயில் சேர்ந்திருந்தாத்தான் இந்த மணம் வரும்]. ஒவ்வொரு கணமும் தான் பேசும் மொழியைக்கூட கவனித்துக் கொண்டே இருந்தார். [பட்டுங்கிற சொல்லுக்கு வேர் படுறதாத்தான் இருந்திருக்கும். பட்டோட இனிமை மென்மையா படுறதிலேதான்] அழகியல் என்பதில் சமரசமற்றவராக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றார். [வாழையிலையை தட்டிலே வட்டமா வெட்டிவைக்கிறதிலே ஒரு வன்முறை இருக்கு. நீளவாழையிலைன்னா நீட்டின கை மாதிரி. அதிலே சாப்பிட்டா வாழையே பரிமாறுற மாதிரி தோணும்].
இலக்கியம் என்னும் இயக்கம் மீது முழுநம்பிக்கை கொண்டவராக, அதன்பொருட்டு வாழ்க்கையையே அளிக்கச் சித்தமானவராக இருந்தார் சுந்தர ராமசாமி. ஆனால் அத்தனை தீவிரத்திலும் அதன்பொருட்டு தன்னை ஒன்றாகக் குவித்துக் கொள்ளாதவராக, இறுக்கமாக ஆக்கிக் கொள்ளாதவராக இருந்தார். இயல்பான நகைச்சுவையும், பெரிதாக அலட்டிக்கொள்ளாத விளையாட்டுத்தனமும் கொண்டிருந்தார். எண்ணும்போது சுந்தர ராமசாமியிடமே மனம் மேலும் அணுக்கம் கொள்கிறது. என் பேச்சில் எப்போதும் எழுந்துவருவனவாக சுந்தர ராமசாமியின் சொற்களே திகழ்கின்றன
ஞானியுடனான என் உறவு சுந்தர ராமசாமியினுடனான உறவு போல தனிப்பட்ட சந்திப்புகள், விளையாட்டுப் பேச்சுகள் ஆகியவை நிறைந்ததாக இருக்கவில்லை. விளையாட்டும் வேடிக்கையும் சீண்டல்களும் என் இயல்பென்பதனால், அவருக்கு அவை விருப்பம் என்பதனால், அவை இருந்தன. ஆனால் அவருக்கும் எனக்குமிடையே பருவடிவான தூரம் என்று ஒன்று ஒன்று இருந்தது. நான் கோவையில் வாழவில்லை. அவ்வப்போது சென்று சில மணிநேரங்கள் கழிப்பதாகவே அவருடன் நான் நேரடி உரையாடல் இருந்தது. நாள் முழுக்க அவரிடம் இருப்பதும் அவருடன் நடை செல்வதுமெல்லாம் இயல்வது அல்ல.பலதருணங்களில் அவருடன் சென்று பேசிக்கொண்டிருக்கும்போதே வேறுவேறு நண்பர்கள் அங்கு வருவதும் அந்தரங்கமான பேச்சுகள் நிகழாமல் போவதும் வழக்கம்
மேலும் அவருடைய் உள்ளம் என்பது பெரும்பாலும் கோட்பாடுகள், கொள்கைகள், அரசியல் சார்ந்து இருந்ததனால் அது சார்ந்த விவாதங்களே மிகுதியாக நிகழ்ந்திருக்கின்றன. புனைவிலக்கியம் சார்ந்த பேச்சுக்கள்கூட அந்தக் கோட்பாடுகள் சார்ந்த விவாதங்களாகவே அமைந்தன. இன்று இக்குறிப்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நான் அவருடைய ஒரு பக்கத்தையே அறிந்திருக்கிறேன் என்று படுகிறது. அவர் ஒரு மார்க்சியச் சிந்தனையாளர், ஆனால் அது சார்ந்து குறைவாகவே பேசியிருக்கிறோம். இலக்கியம் என்னும் களத்திலேயே நாங்கள் சந்தித்துக் கொண்டோம். என்னுடைய புனைவுலகு சார்ந்தே பெரும்பாலும் பேசினோம். அவருடைய மார்க்ஸிய நண்பர்களை எனக்கு அறிமுகமே இல்லை. அவர் அவர்களிடம் என்ன பேசினார், எப்படி வெளிப்பட்டார் என்றே எனக்குத்தெரியாது.
அவரை நான் என் படைப்புகளுக்கு அவர் அளித்த சிந்தனைப் பங்களிப்பு சார்ந்து மட்டுமே நினைவுகூர முடிகிறது. ஆகவே என்னுடைய ஆளுமையில் எஞ்சியிருக்கும் ஞானி எவர் என்றே நான் எழுதமுடியும். அவரைப்பற்றி ஒட்டுமொத்தமாக எதையும் என்னால் சொல்ல முடியாது. அவருடன் நெடுங்காலம் உடனிருந்த அறிவன் போன்ற நண்பர்கள் ஒருவேளை முழுமையாக அவரைப்பற்றி எழுதக்கூடும். அவர்கள் பார்வையில் ஒருவேளை ஞானியின் படைப்பிலக்கியம் சார்ந்த இந்த முகம் வெளிப்படாமலும் போகலாம். ஓர் ஆளுமை அப்படி பல பார்வைகள் வழியாகத் துலங்கி வரலாம்.
ஆனால் தீயூழ் என்பது ஞானி வாழ்நாளெல்லாம் எதிர்த்த இயந்திரவாத அணுகுமுறை கொண்டவர்களிலேயே ஒருசாரார் இன்று அவரை ஆதரித்துக் கொண்டாடுகிறார்கள், இன்னொரு சாரார் அவரை விமர்சித்துப் பழிக்கிறார்கள் என்பது. இந்நூல் அவர்கள் உருவாக்கும் போற்றல் தூற்றல்களுக்கு அப்பால் அவருடைய சிந்தனையும் ஆளுமையும் எப்படி இருந்தன என்று காட்டும் நோக்கம் கொண்டது.
இது புனைவிலக்கிய வாசகர்களுக்கு உரியது. புதியவாசகர்களை முன்னால் கண்டு எழுதப்படுவது. ஆகவே இந்நூலில் அன்றைய அரசியல் சூழலையும், கருத்தியல் விவாதச் சூழலையும் அடிப்படை நிலையிலேயே விளக்கியிருக்கிறேன். பலவற்றை முடிந்தவரை எளியவடிவில் அறிமுகம் செய்திருக்கிறேன். ஞானி எந்தெந்த சூழல்களில் இருந்து தன் அடிப்படை வினாக்களை அடைந்தார், அவற்றினூடாக எப்படி முன்னகர்ந்தார் என்று காட்ட முயன்றிருக்கிறேன்.
ஞானி என்னிடம் எப்போதுமே ஒரு மைந்தனுக்குரிய அணுக்கத்தை கொண்டிருந்தார். அதற்குரிய மோதல்கள் எப்போதும் இருந்தன. குறிப்பாக ஒவ்வொரு முறை நான் ஞானியை சந்திக்கும்போதும் அவர் ஏதோ ஒருவகை மனத்தாங்கலில் இருப்பதை தெரிந்து கொள்வேன். எனக்கும் அவருக்குமான உறவு அவரை சூழ்ந்திருந்த மார்க்சிய நண்பர்களுக்கும், பிற்பாடு அவரைச் சூழ்ந்துகொண்ட தமிழ்த்தேசியர்களுக்கும் மிகப்பெரிய உறுத்தலாக இருந்தது. அவர் எனக்களித்த இடம் பல இளம் எழுத்தாளர்களுக்கு ஒவ்வாமையை அளித்தது. ஆகவே எப்போதுமே ஞானியிடம் என்னைப் பற்றிய ஒர் எதிர்மறைப் பேச்சு சென்றபடியே இருந்தது.
ஞானியும் அவருடைய உடல்நிலையால், தனிமையின் சோர்வால் அவர்களின் சொற்களுக்கு ஏற்ப எளிதில் திசைதிருப்பப் படுபவராகவே இருந்தார். நான் கூறியவை பலவாறாக திரிந்து அவரை சென்றடையும். அவரை நான் இழித்தும் பழித்தும் பேசியதாக பொய்யாக கூறப்பட்ட தருணங்களும் உண்டு. பெரும்பாலும் அவர் அவற்றை நம்புவதில்லை என்றாலும் தொடர்ச்சியாகக் கேட்கையில் மெல்ல மெல்ல உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைவார். அவருடைய தனிமை அதை பெருக்கும். கையறு நிலையின் இயல்பான சோர்வுகளில் அது பேருருக்கொள்ளும். என்னை மிக கடுமையாக அவர் வசைபாடிக் கொண்டிருக்கிறார் என்பதை வேறு சிலர் என்னிடம் சொல்வார்கள்.
பிறகு நான் நேரில் செல்வேன். முதல் இரண்டு நிமிடங்கள் வேறெங்கோ முகத்தை திருப்பிக் கொண்டிருப்பார். அருகமர்ந்து அவர் கையைப் பற்றும் வரைதான் அது நீடிக்கும். கைகளில் அவர் கைகளை எடுத்துக் கொண்டதும் என் கைமேல் தன் இன்னொரு கையை வைத்தவுடனே அவர் முகம் மலர்ந்துவிடும். அதன்பிறகு சீண்டல்கள் சிரிப்புகள் தொடங்கும். அவருடைய மனத்தாங்கலையே வேடிக்கையாகவும் கேலியாகவும் சொல்வார். அதற்கு நான் வேடிக்கையாகப் பதில் சொல்வேன். பின்னர் பேச்சு வளர்ந்து விவாதமாகி கொஞ்சல்கள் கூரிய முரண்பாடாகி கடைசியில் பேச்சை நிறுத்திக் கொள்வோம். பிறகு மீண்டும் பொதுவாகப் பேசுவோம். அன்புச் சொற்களில் விடைபெறுவோம். “அடிக்கடி வாங்க” என்று சொல்லி கைகளை தட்டி விடை கொடுப்பார். தொடர்ந்து இதுவே பலமுறை நிகழ்ந்திருக்கிறது.
லக்ஷ்மி மணிவண்ணன் சென்னையில் நிகழ்த்திய ‘ஒற்றை இந்துத்துவா கருத்தியலுக்கு எதிரான கண்டன கூட்ட’த்தில் நான் கலந்து கொண்டு சில நாட்களுக்குப் பிறகு ஞானியை சந்தித்தேன். இந்துத்துவம் இந்துமெய்யியலின் பன்மைத்தன்மையை ஒற்றை அரசியல் கோட்பாடாக சுருக்குகிறது, அதை எதிர்ப்பதே அந்த கருத்தரங்கின் நோக்கம். அது ஞானி சொல்லிவந்ததுதான். ஆனால் ஞானியிடம் எவரோ நான் இந்து மதத்தை ஒற்றை சக்தியாக திரட்டவேண்டும் என்று சொல்லி ஒரு கருத்தரங்கை கூட்டியதாக சொல்லியிருந்தார்கள்.
நான் ஞானியை சந்தித்தபோது “என்ன முழுமூச்சாக கட்சியில சேந்தாச்சா? மீட்புவாதி ஆகிட்டிங்க போல?” என்று கேட்டார். “என்ன?” என்று நான் கேட்டேன். “அதென்ன ஒற்றை இந்துத்துவம்?” என்றார். முதல் சில கணங்கள் எரிச்சலூட்டிய போதுகூட அவரிடம் எவரோ மொத்தத்தையும் தவறாக சொல்லியிருக்கிறார்கள் என்று உணர்ந்தபின் என்ன நிகழ்ந்தது என்று நான் விளக்கினேன். ஞானி நான் ஏற்கனவே அதை சொல்லி வருபவன் என்பதனால் நான் கூறுவதைப் புரிந்துகொண்டார்.
ஞானி தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதங்களில் எஸ்.வி.ராஜதுரை பற்றிய கடுமையான வரிகள் இருப்பதைக் காண்கிறேன். அவற்றை அவருடைய தரப்பாக என்னால் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை ஞானியை கடுமையாக விமர்சனம் செய்தாலும்கூட ஞானி ஒருபோதும் எஸ்.வி.ராஜதுரையை மானசீகமாக விட்டுக்கொடுக்கமாட்டார் என்றும், எஸ்.வி.ஆர் அவருக்கு உள்ளூர மிக அணுக்கமானவர் என்றும் நான் அறிவேன். இதை அறிவதுதான் அவரை அறிவது.
எஸ்.வி.ராஜதுரை குறித்து நான் எழுதிய குறிப்பு நீதிமன்ற வழக்கு வரைச் சென்றபோது ஞானி எனக்கு என்னை கடுமையாகக் கண்டித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். நான் அவரைச் சந்தித்த போதும் கடுமையாகப் பேசினார். ‘எஸ்.வி.ராஜதுரை பற்றி அவருடைய இடதுசாரித் தோழர்கள் சொன்னதையே நான் சொன்னேன், என்னிடமிருக்கும் சான்றுகளெல்லாம் அவர்கள் எழுதியவைதான், அவர்கள் உங்களுக்கும் நெருக்கமானவர்களே’ என்றேன். “அது இடதுசாரிக் கூட்டத்தோட மனநோய். ஆனா அவங்கள்லாம் ஒரே தலைமுறை. நீங்க அவரோட மாணவர் நிலையிலே இருக்கிறவர்’ என்றார் ஞானி.
எரிச்சலுடன் “நான் என்ன செய்யணும்?” என்றேன். “நேரா கோத்தகிரிக்குப் போய் மன்னிப்பு கேட்டு சரணடையுங்க. நான் அதைத்தான் சொல்வேன்” என்றார் ஞானி. நான் “நான் நேர்ல போயி அவர்ட்ட திட்டு வாங்கணும்னு சொல்றீங்க” என்றேன். “திட்டமாட்டார், அவருக்கு நீங்க யாருன்னு தெரியும்” என்றார் ஞானி. நான் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன?” என்றார் ஞானி. “அவர் எனக்கு பெரிசா ஒண்ணும் கத்துக்குடுக்கலை” என்றேன். “அது பொய், உங்களுக்கே தெரியும்”. நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. ஞானியும் அதன்பின் என்னிடம் அதைப் பற்றிப் பேசியதில்லை.
தொடர்ச்சியாக இத்தகைய உரசல்களும் முரண்பாடுகளுமாக எங்கள் உறவு சென்று கொண்டிருந்தது. எனக்கும் சுந்தர ராமசாமிக்குமான முரண்பாடு வந்தபோது ஞானி நான் சுந்தர ராமசாமியின் உறவை எக்காரணம் கொண்டும் சிதிலமடைய விடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தார். சுந்தர ராமசாமியின் உறவை வன்முறையாக மாற்றுவதில் சிலர் ஆற்றிய பங்களிப்பை நான் ஞானியிடம் கூறினேன். ஞானி அது இயல்பானதுதான், அதை ஒன்றும் செய்யமுடியாது என்றார்.
சுந்தர ராமசாமியின் நட்பைப் பற்றி சில ஆண்டுகளுக்குமுன் பேசிக்கொண்டிருந்த போது “ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது அப்படி செஞ்சிருக்கலாம் என்று தோணும். ஆனா காலம்கடந்த பிறகு தெரியும் அதெல்லாம் அப்படித்தான் நடந்திருக்க முடியும்னு” என்றார். “பேர்யாற்று நீர்வழிப்படும் புணைபோல” என்று சொல்லி புன்னகைத்தார்
”நல்லவேளை சார், அதேமாதிரி உங்ககூட ஆகல்ல” என்று நான் அவரிடம் சொன்னேன். “அவர்ட்ட ஒரே முறை அப்படி பெரிசா ஆச்சு. நம்மகிட்ட நூறுமுறை குட்டிகுட்டியா ஆச்சு. அதனாலே அப்டியே கடந்து போயிடுச்சு” என்று சொல்லி ஞானி சிரித்தார். “அதோட நான் அடிப்படையிலே வாத்தியார். பசங்களை மேய்ச்சு மேய்ச்சு பழகிப்போனவன். உங்களைவிட பொறுக்கிப் பசங்கள்லாம் எங்கிட்ட படிச்சிருக்காங்க”
ஒட்டுமொத்தமாக ஞானியின் தத்துவ முயற்சிகளை ஒருங்கிணைப்புவாதம் என்று சொல்லலாம். சிந்தனையின் இயங்கியலிலேயே இரண்டு போக்குகள் உண்டு. பிரிந்து தனித்துவம் கொள்ளல், தொகுத்துக்கொண்டு ஒருங்கிணைவை அடைதல். மதங்களின் வரலாற்றை பார்த்தால் இது தெரியும். ஒரு தத்துவக்கொள்கை அல்லது தரிசனம் தனக்கென ஓர் அடையாளத்தைக் கண்டடைந்ததும் அதுவரையிலான பொதுப்போக்கிலிருந்து பிரிகிறது. தன்னை பிரித்துக் காட்டவும், தனித்து வரையறை செய்துகொள்ளவும் முயல்கிறது. அதுவே அதன் உருவாக்கக் காலகட்டம்
உருவாக்கக் காலகட்டம் முழுக்க அத்தனை தத்துவங்களும் தரிசனங்களும் தங்கள் தனியடையாளங்களையும் தனிப்போக்குகளையும் வலியுறுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. தங்கள் தரப்பை தெளிவாக வரையறை செய்கின்றன. தங்களுக்கு எதிரானவற்றை திட்டவட்டமாக மறுக்கின்றன. அந்த வேகம் காரணமாக தங்களுடன் முரண்படுவனவற்றையும் கடுமையாக எதிர்க்கின்றன. ஆகவே கருத்துப்பூசல் தன்மை [polemics] அவற்றில் ஓங்கியிருக்கும். வளரும் தன்மைகொண்ட சிந்தனைகளிலெல்லாம் இந்த கூறு உண்டு. ஆகவே சிறிய சிந்தனைக் குழுக்களின் இயல்பு இது.
தத்துவமோ தரிசனமோ உரியவளர்ச்சியை அடைந்தபின் அவற்றின் இயல்பில் மாறுதல் உருவாகிறது. அவை பெரிய அடித்தளக் கட்டமைப்பு கொண்டவையாக ஆகிவிட்டிருக்கும். அவற்றில் உட்பிரிவுகளும் உள்விவாதங்களும் பெருகியிருக்கும். தொடர்ச்சியான உள்சமரசங்கள் நிகழ்ந்துகொண்டும் இருக்கும். அந்நிலையில் அவை தொகுப்பு- ஒருங்கிணைவு என்னும் வடிவை கைக்கொள்கின்றன. தன் அடிப்படைகளை கொஞ்சம் நெகிழ்வாக்கிக் கொள்கின்றன. தன்னுடன் ஒத்துப்போகும் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ள முயல்கின்றன.
இந்து மதத்தின் வரலாற்றிலேயே அப்படி பல தொகுப்பு- ஒருங்கிணைவு காலகட்டங்களைக் காணலாம். பகவத்கீதை அப்படிப்பட்ட ஒரு தொகுப்பு- ஒருங்கிணைப்பு நூல். சங்கரர் நிகழ்த்தியதும் அதுவே. பின்னர் வித்யாரண்யர் நிகழ்த்தியது அந்த ஒருங்கிணைப்பு. பதினெட்டாம் நூற்றாண்டின் இந்துமறுமலர்ச்சியும் அதையே நிகழ்த்தியது. இதை சமன்வயம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார்கள். பௌத்த, சமண மதங்களிலும் தொகுப்பு–ஒருங்கிணைப்புக் காலகட்டம் உண்டு. அடிப்படைகளை இறுக்கமாக வைத்திருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிலேயே தொகுப்பு – ஒருங்கிணைப்பு காலகட்டங்கள் உண்டு
மார்க்ஸியத்தின் தொடக்க காலகட்டம் முடிந்துவிட்டது, அது உலகளாவியதாக ஆகிவிட்டது, ஆகவே அதை ஒரு வலுவான மாற்றுத்தரப்பாக இறுக்கி வரையறுத்து நிலைநிறுத்தும் முயற்சிகளை கடந்து செல்லவேண்டும் என ஞானி நினைத்தார் என புரிந்துகொள்கிறேன். மார்க்ஸியத்தின் அடித்தளம் உலகளாவ நிறுவப்பட்டுவிட்டது, அதன் இறுக்கமான நிலைபாடு பயன்தராது என ருஷ்ய- சீன முயற்சிகள் காட்டிவிட்டன, ஆகவே அது தன்னை மாபெரும் தொகுப்பு- ஒருங்கிணைப்புச் செயல்பாட்டுக்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார்
தொகுப்பு – ஒருங்கிணைப்பு என்பது எப்போதுமே உள்ளிழுத்துக் கொள்வதாகவே நிகழ்கிறது. இணையானவற்றை உள்ளிழுத்துக் கொள்வது, எளியவற்றை உருமாற்றி உள்ளிழுத்துக்கொள்வது தத்துவத்திலும் தரிசனத்திலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மார்க்ஸியம் அதன் மானுட சமத்துவம், சேவை, உலகியல்தளத்து விடுதலை ஆகிய மூன்று அடிப்படை இலட்சியங்களிலும் ஒத்துப்போகும் அத்தனை சிந்தனைகளையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். அவற்றை மார்க்சிய மெய்யியலின் பகுதியாக உருமாற்றிக் கொள்ளவேண்டும். அதன் வழியாக உலகிலுள்ள அத்தனை செயலூக்கம் கொண்ட சிந்தனைகளிலும் மார்க்ஸியம் ஊடுருவிவிடவேண்டும்– ஞானி சொன்னது இதுதான்.
ஆனால் இதில் ஒரு கேள்வி உண்டு. எப்போதுமே இந்த தொகுப்பு- ஒருங்கிணைப்பு முயற்சி நிகழ்கையில் ‘தூய்மைவாதிகள்’ அல்லது ‘அடிப்படைவாதிகள்’ அது கரைத்தழிப்பு முயற்சி என்றும், கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்வது என்றும் குற்றம் சாட்டுவார்கள். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஏனென்றால் சமரசம் இல்லாமல் ஒருங்கிணைப்பு இல்லை. எந்த எல்லைவரை சமரசம் நிகழலாம்? மார்க்சியம் பிற சிந்தனைகளை எந்த அளவுக்கு உள்ளிழுக்கலாம்?
ஞானியிடம் அதைப்பற்றி ஒருமுறை பேசினேன். ஞானி “தத்துவத்துக்கு ரெண்டு அமைப்பு உண்டு. ஒண்ணு, அதோட ஐடியல், இன்னொண்ணு பிராக்டிக்கல். மார்க்சிய இலட்சியவாதம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு அடிப்படையான வரலாற்று ஆய்வுமுறையும் இருக்கு. அதான் ஐடியல். அதை அடையறதுக்காக அது ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கு. அந்த அமைப்புக்கு பல சட்டங்களும் வழக்கங்களும் இருக்கு. அந்த அமைப்பிலே மாற்றங்கள் வரலாம், அந்த இலட்சியத்திலேயும் வரலாற்றுப் பார்வையிலேயும் அது மாறாம இருக்கணும்” என்றார். ஆனால் இதெல்லாம் எங்கே இத்தனை தெளிவாக இரண்டாக இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஐயம்தான்.
அதோடு ஞானி பேசிக் கொண்டிருந்ததெல்லாம் ஓர் உயரிய தளத்தில். இந்தியாவின் அனைத்துச் சிந்தனைகளிலும் மார்க்ஸியம் ஏதோ ஒருவகையில் ஊடுருவி உள்ளே வாழ்வதைப்பற்றி, அதன்விளைவாக இந்தியாவின் எல்லா செயல்பாடுகளிலும் வரும் மாற்றம் பற்றி அவர் கனவுகண்டார். ஆனால் நடைமுறையில் மார்க்சியத்தின் அன்றாட அரசியலுக்கு அப்பால் எதையேனும் பேசுபவர்கள் இன்று எவருமில்லை.
சொல்லப்போனால் மார்க்ஸிய இலட்சியவாதம், மார்க்ஸிய வரலாற்றுவாதம் இரண்டுக்குமே இங்கே இன்று எந்த இடமும் இல்லை. ஒருவார்த்தைகூட இன்று அவற்றைப்பற்றிப் பேசப்படுவதில்லை. மார்க்ஸியம் பிற சிந்தனைகளை உள்ளிழுப்பதை ஞானி கனவு கண்டார், மார்க்சியம் இன்று எளிமையான திராவிட இனவாத அரசியலால் உள்ளிழுக்கப்பட்டு, இரண்டாம்நிலை திராவிடவாதமாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையே நாம் காண்கிறோம்.
ஞானி பேசிய கருத்தியல் தளம் ஏற்கனவே கரைந்து போய்விட்டது. ஞானி கடைசிநாட்களில் அந்தரத்தில், வெறுமையில் நின்றார். எதிர்காலத்தில் ஒருவேளை சூழலின் அழுத்தத்தால் ஞானி கனவுகண்ட செயலூக்கம் கொண்டதும் எங்கும் ஊடுருவி நிறையும்தன்மை கொண்டதுமான மார்க்சியம் இங்கே வருமென்றால் அரசியல் கோட்பாட்டுத் தளத்தில் அவருடைய பங்களிப்பு நியாயப்படுத்தப்படுகிறது. இல்லையென்றால் அவரை நவீன இலக்கியத்தில் அவர் ஆற்றிய செல்வாக்கு காரணமாக மட்டுமே நினைவுகூர வேண்டியிருக்கும்.
இன்று ஞானியின் நினைவுக்ளை தொகுத்துக் கொள்ளும்போது அவரை மார்க்சியத்தின் மெய்யியல் என்ன என்று தேடியவராக, இந்தியாவின் மெய்யியலுடன் உரையாடி அதை உள்ளிழுத்துக் கொண்டு மார்க்சியத்தை மக்களின் மெய்யியலாக வருங்காலத்தில் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டவராக, அதன் பொருட்டு இலக்கியத்தை ஆய்வு செய்தவராக, அந்த மெய்யியலை தமிழர் மெய்யியலாக மறுவரையறை செய்து கொண்டவராக, தமிழர் மெய்யியலின் சில அடிப்படைப் பார்வைகளை துலக்க முயன்ற முன்னோடி அறிஞராக, அதன்பொருட்டு வெவ்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைக்க முயன்றவராக மதிப்பிடுகிறேன்.அதற்கப்பால், வாங்கக் கலம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசு என எனக்கு தானறிந்த அனைத்தையும் வழங்கியவராக. அவருக்கு என் வணக்கம்.
[நிறைவு]
***