அன்புள்ள ஜெ
நலம்தானே?
நூறுகதைகளில் சிலகதைகளை அப்போது வாசிக்கவில்லை. அதிலொன்று, ஏழாவது.சமன்குலைக்கவைக்கும் கதை. ஒருவனின் உள்ளே இருந்து எழுந்துவருவது உண்மையில் என்ன என்பது கேள்வி. அது உள்ளே அமுதாக இருந்து வெளியே நஞ்சகா வெளிவருமா? உள்ளே ஏசு, வெளிப்படுவது சாத்தானா? ஏழாவது முத்திரை என்பது மனிதனின் ஆத்மாதான் இல்லையா?
கார்த்திக் மணி
***
அன்புள்ள ஜெ
ஏழாவது கதையை வாசிக்கும்போது எனக்கு பர்க்மானின் செவெந்த்ஸீல் சினிமா ஞாபகம் வந்தது. ஏழாவது முத்திரை என அவர் சொல்வது சாவு. அல்லது the peak of penury. இங்கேயும் அதுதான். அதில் கிறிஸ்து வெளிப்படுவதைக் காட்டித்தான் அந்தப்படம் முடிவடைகிறது. இந்தக்கதை அது எது என்று கேட்டு நிறுத்திவிடுகிறது. கொடூரமான ஒரு ஆன்மீகக்கதை
ராபர்ட் சிங்
அன்புள்ள ஜெ
முதுநாவல் என் மனசை மிகவும் கவர்ந்த கதை. உண்மையில் அந்தக்கதைக்கு ஒருவர் லிங் அனுப்பினார். படித்தபின்னர்தான் மற்றகதைகளை எல்லாம் படித்தேன். மீண்டும் முதுநாவல் கதைக்கே வந்துசேர்ந்தேன். என்னால் அதைக் கடந்துசெல்லவே முடியவில்லை. சிலபறவைகள் அப்படித்தான் என்ற முடிப்பு வரியில் நெஞ்சில் ஒரு உலுக்கு நடந்தது. அது ஒரு ஆழமான அனுபவம். சூபி இசையில் சில இடங்களில் அந்தமாதிரி ஒரு உச்சம் நிகழும்
அப்துல் வகாப்
***
அன்புள்ள ஜெ
முதுநாவல் கதையை வாசிக்கும்போது எனக்கு ஓர் அனுபவம் இருந்தது. ஆனால் ஆன்லைன் தியான வகுப்பில் சுவாமி ஒரு விஷயம் சொன்னார். ஆன்மிகத்தின் attainmentவருவதற்கு முன்னாடி ஒரு கொந்தளிப்பு உண்டு. ஒரு பெரிய போராட்டம். அந்தப்போராட்டமே அங்கே நிகழும் அந்தச் சண்டை. இரு ராட்சதர்களின் சண்டை. அந்த நீர்தான் குருவருள், இருவருக்குமே attainment சாத்தியமாகிறது. மிக அழகானா விளக்கமாகத் தோன்றியது
ஸ்ரீனிவாஸ் முகுந்த்
***