காந்தியைப் பற்றிய அவதூறுகள்

இந்த இணையதளத்தின் விவாதப்பக்கத்தில் காந்தியைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்கிறது. காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் ஒன்றை சுட்டி கொடுத்து இவர்களை என்ன செய்வதென்று ஒருவர் கேட்டிருந்தார். நான் அதற்கு ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தேன். அதற்கு அரவிந்தன் நீலகண்டன் நீண்ட பதில்கடிம் ஒன்றை எழுதினார்.

இவ்விஷயத்தைப்பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார். ‘இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் மற்றபண்பாடுகளின் விழுமியங்களை அழிப்பதை மட்டும்தான். இதை கருத்தாடல் என்றே கொள்ளமுடியாது. காந்தியின் சிந்தனைகளை பலகோணங்களில் பேசுவதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் இந்த அவதூறுகள் இல்லாமல் செய்கின்றன. அவதூறுகளை விளக்கிக்கொண்டிருப்பதற்கே நேரம் செலவாகிவிடும். இப்படி தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான அவதூறுக்குரல்கள் வழியாக அந்த ஆளுமையையே சொற்களால் ஆன குப்பைக்குள் போட்டு மறைத்துவிடுவார்கள். நபியை அப்படிச்செய்ய நாங்கள்விடமாட்டோம்’

உண்மைதான் என்று தோன்றுகிறது. காந்திக்கு எதிராக இந்தியாவிலும் வெளியிலும் அவதூறுகளை எழுதிக்குவிப்பவர்கள் அடிப்படைத்தகவல்களைப்பற்றியோ , குறைந்தபட்ச தர்க்கஒழுங்கைப்பற்றியோ அல்லது சாதாரண அறவுணர்ச்சியைப் பற்றியோகூட கவலைப்படுவதில்லை. இந்தவகையான அவதூறுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தால்மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவில் எழுதும் இந்த நூலாசிரியர் அவற்றை இந்தியாவில் எதிரொலிக்கும் எஸ்.வி.ராஜதுரை, மீனாகந்தசாமி வரை எல்லா கடைநிலை அவதூறாளர்களுக்கும் பொருந்தும் .

ஆனால் காந்தியை அவ்வாறு ’பாதுகாக்க’ வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அது காந்தியின் வழி அல்ல. காந்தியை புரிந்துகொள்ள, பின்பற்றமுயல்வோம். அதற்காகவே நாம் காந்தியைப்பற்றி பேசவேண்டும். இந்த கீழ்த்தர அவதூறுகளால் காந்தி தோற்கடிக்கப்படுவார் என்றால் காந்தியத்திற்கே பொருள் இல்லை, அது வெறும் அபத்தமான இலட்சியவாதம் மட்டும்தான் என்றல்லவா பொருள்? காந்தியம் அப்படி தரம்கெட்டமனிதர்களின் முயற்சிகளால் அழிக்கப்படுமென்றால் ஏன் அதை கட்டிக்காத்து ஒரு மதமாக நிறுத்தவேண்டும். இது ஒரு வாய்ப்பு, காந்தியை இவர்கள் முன் விட்டுவிட்டு அவரை கவனிப்போம். இந்த சந்தர்ப்பத்தை வைத்தே அது நிற்குமா என்று பார்ப்ப்போம். மனிதர்களின் உள்ளாந்ந்த நல்லியல்பை, இயற்கையின் மாபெரும் கருணையை நம்பி செயல்படமுயலும் அந்த ஆன்மீகமும் அரசியலும் எதுவரை செல்லுபடியாகுமென்று பார்ப்போம்

ஆம், அப்படித்தான் நினைத்துக்கொள்கிறேன்

ஜெ

எனது எதிர்வினை :

விவேகானந்தர், நேதாஜி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, அரவிந்தர், ரமணர், ராமகிருஷ்ண
பரமஹம்சர் அனைவரைப்பற்றியும் கேவலமான அவதூறு நூல்கள் வந்துள்ளன. அவர்கள் தங்கள் சீடர்களிடம் ஒரு பால் உறவு கொண்டிருந்தார்கள் [ஆதாரம் சீடர்கள்
குருவின் தொடுகை, அல்லது தோற்றம்  பற்றி எங்காவது எழுதியிருப்பது]
அவர்கள் மனநோயாளிகள் [காரணம் அவர்களின் தியானநிலை பற்றிய வர்ணனைகள்] அவர்களுக்கு கள்ள உறவுகள் இருந்தது [ஏதாவது ஒரு மாணவியின் இல்லத்துக்கு அவர் ஒருமுறை சென்றாலே போதும்…]

ஆனால் இப்போது காந்தியைப்பற்றி தொடர்ச்சியாக அவதூறுநூல்கள் வந்து
குவிகின்றன. காரணம் இப்போது காந்தியை முன்வைக்கும் நூல்கள் நிறைய
வருகின்றன. மண்டேலாவின் எழுச்சிக்குப்பின் காந்தி ஒரு தத்துவஞானியாக,
அரசியல் வழிகாட்டியாக மேல்நாடுகளில் முன்வைக்கப்படுகிறார். சர்வதேச
அளவில் கவனப்படுத்தப்பட்ட எல்லா அரசியல்ஞானிகளும் காந்தியர்கள்.
மார்க்ஸியத்தின் தோல்விக்குப்பின் இந்நூற்றாண்டின் சிந்தனையாளராக காந்தி
பலதரப்புகளில் முன்வைக்கப்படுகிறார். அற்புதமான நூல்கள் உள்ளன

ஆகவே அவற்றுக்கு எதிர்வினையாக இந்நூல்கள் உருவாக்கப்படுகின்றன. காந்தியை
ஆளுமைக்கொலை செய்வது இவற்றின் இலக்கு. மேல்நாட்டில்
[கத்தோலிக்கர்களாலும், யூதர்களாலும், சுதந்திரவாதிகளாலும்]  எந்தெந்த
விஷயங்கள் அருவருப்புடன் பார்க்கப்படுகின்றனவோ [ஓரினச்சேர்க்கை, ஹிட்லர்
ஆதரவு, இனவெறி ஆதரவு, பழைமைவாதம், மதவெறி] அவை எல்லாம் காந்தி மேல்
ஏற்றப்படுகின்றன.

இவற்றுக்கு நிதியுதவிகள் பல்வேறு அமைப்புகளால் அளிக்கப்படுகின்றன. இவற்றை
வாங்கி வாசிக்க ஒரு பெரும் வட்டம் உள்ளது.

மேல்நாட்டில் இன்றுள்ள கிறித்தவ அடிப்படைவாதிகளால் காந்தி இந்தியாவில்
கிறித்தவ மதப்பரப்பலுக்கு முதல்பெரும்தடையாக கணிக்கப்படுகிறார்.
அவர்மீதான ஆளுமைக்கொலைக்கு இதுவே முக்கியமான காரணம்.

நாம் இங்கே கவனிக்கப்படவேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. இந்த அப்பட்டமான அவதூறுகளை இந்திய ’முற்போக்கு’ தரப்பு அப்படியே ஏற்றுக்கொண்டு திருப்பிக் கக்குகிறது என்பது. மேல்நாடுகள் சொல்லும் எதையும் ஏகாதிபத்தியச்சதி
என்பவர்கள் எவருக்கும் இந்த அவதூறுகளை ஏற்பதில் தயக்கம் இல்லை. இந்த
அவதூறுகள் இந்த ஆளுமைகள் மேல் மட்டும் அல்ல இந்திய என்ற அமைப்பின் மீது,
பண்பாட்டின் மீது, இந்த கோடிக்கணக்கான மக்களின் ஆன்மா மீது முன்வைக்கப்படும் தாக்குதல்கள் என்பதை இவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த மேல்நாட்டு அவதூறாளர்கள் அளவுக்கே ஆன்மா செத்தவர்கள் இவர்கள்.

மேல்நாடுகளில் சென்று உயர்கல்வியும் ஆய்வும் செய்யும் பல்லாயிரம்
இந்தியர்கள் உண்டு. அவர்களில் பலர் இந்தியா திரும்பி ஆய்வாளர்களாக
அரசியல்-சிந்தனை தளத்தில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால் எவருமே
இந்த மோசடிகளை எதிர்கொள்வதில்லை. மாறாக பலர் இவற்றை அப்படியே தங்கள்
கருத்தாக திரும்ப கக்கவே செய்கிறார்கள். காஞ்சா இளையா முதல் எம் எஸ் எஸ்
பாண்டியன் வரை. அதற்காக பெரும் நிதியுதவி பெற்றுக்கொள்கிறார்கள்

இரண்டாவதாக இந்தியாவின் முகமாக மேல்நாடுகளில் ஏற்கப்படும் நம் ஆங்கில
இந்திய எழுத்தாளர்கள் எவரும் இவற்றை எதிர்கொள்வதில்லை. அப்படி மௌனம்
காத்தால் அல்லது ஆதரித்தால் மட்டுமே அவர்கள் இந்தியாவின்
இலக்கியக்குரல்களாக ஏற்கப்படுவார்கள். இந்த இந்திய ஆங்கில
எழுத்தாளர்களுக்கு இருக்கும் மொழித்திறனும் ஆளுமையும் இந்தியாவின்
ஆன்மாவை வசைபாடும் இந்த முயற்சிகளுக்கு எதிராக மெல்லிய  எதிர்ப்பை
முன்வைத்தால் கூட எவ்வளவு நல்ல விளைவு ஏற்படும். செய்ய மாட்டார்கள்.
அவர்களிடம் ஆன்மாவை விற்றுவிட்ட அந்த ஆட்களை நம்முடைய பேரிலக்கியவாதிகளாக
அவர்கள் சொல்வார்கள். அவர்கள் சொல்வதனால் நாம் அதை ஏற்றுக்
கொண்டாடுகிறோம்

இந்திய அறிவுஜீவிகளாகிய நாம் நம்மையே உள்ளூர வெறுத்து கூசிச்சுருங்கி
இருக்கும் அற்ப உயிர்கள். மேலைநாடுகளால் வளர்க்கப்படும் போன்சாய்
மரங்கள். பிராய்லர்கோழிகள்

இன்றும் இந்த மண்மேலும் பண்பாடுமேலும் பாரம்பரியம் மேலும் நம்பிக்கையுடன்
வாழும் எளிய மக்களால் தான் நம் தேசம் வாழ்கிறது. காந்தி அவர்கள்நடுவேதான்
உயிருடன் இருக்கிறார்.

************

அரவிந்தன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. கச்சிதமான வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள்.

காந்தியைக் குறித்த நூல்களில் விமர்சனம் எனும் தளத்திலிருந்து அவதூறு எனும் தளத்துக்கு இவை மெதுவாக முன்னகர்கின்றன. உதாரணமாக வேத் மேத்தாவால் அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து எழுதப்பட்டது. அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதே நேரத்தில் டாமினிக் லாப்பயர் லாரி காலின்ஸ் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ நூலில் காந்தியை சுற்றியிருக்கும் இந்தியர்களால் புரியப்படாத, ஆனால் வெள்ளையர்களால் புரிந்து கொள்ள முடிந்த ஒரு மகத்தான ஆளுமையாக முன்வைத்தார். மேற்கில் காந்தி குறித்த சித்திரத்தை அடுத்து உருவாக்கிய முக்கியமானவர் ரிச்சர்ட் அட்டன்பரோ. இதுவும் நேர்மறையான சித்திரமே. ஓரளவுக்கு வரலாற்று நேர்மையுடன் காட்டப்பட்டிருந்தாலும், அதில் காந்தியின் இந்திய வேர்கள் முடிந்தவரை மழுங்கடிக்கப்பட்டே காட்டப்பட்டன. (இதற்கு முன்னால் மற்றொரு சர்ச்சைக்குரிய திரைப்படம் ‘Nine hours to Rama’ : காந்தி கொலையுடன் பின்னிப் பிணைந்து இந்தியாவில் தடை படுத்தப்பட்ட படம்.) டாமினிக் லாப்பயர் முன்வைக்கும் காந்தியையே ராமச் சந்திர குஹாவும் முன்வைக்கிறார். உதாரணமாக ஆழ் சூழலியலாளரான அர்னே நயீஸ் காந்தியின் வேதாந்தத்தின் அடிப்படையில் தன் சூழலியல் தத்துவத்தினை வடிவமைக்கிறார். தன் வேர்களை காந்தியிலும் காந்தியின் வேர்களை வேதாந்தத்தை அவர் உள்வாங்கி தன் சூழலுக்கு ஏற்ப தகவமைத்தமையையும் சுட்டுகிறார். குஹா இதை மறுக்கிறார். காந்தியின் கருத்துக்களில் இருப்பது கிறிஸ்தவ மற்றும் நவீனத்துவ தாக்கமே, அதை இந்திய மனதுக்கு கொண்டு செல்லவே மேம்பூச்சாக காந்தி இந்திய தத்துவங்களின் வார்த்தையாடல்களை பயன்படுத்தினார் என்பது போன்ற கருத்தாக்கத்தை குஹா முன்வைக்கிறார்.(பார்க்க: குஹா, Radical American Environmentalism: A Third World Critique: Environmental Ethics, 1989: இந்த கட்டுரையில் குஹா காந்தியை ‘தீவிர அரசியல்த்தனமும், யதார்த்தவாதமும் கொண்டு கிறிஸ்தவத் தாக்கத்தை ஆழமாகக் கொண்ட காந்திக்கு…ஆழ்-சூழலியல் துறையில் தகுதியேயில்லாத உயர்விடம் கொடுக்கப்பட்டுள்ளது ‘என்கிறார்)

இனி இந்தியாவில் காந்தியின் மீதான அவதூறை நிறுவன ரீதியாக ஒரு கோட்பாடாகவே வளர்த்தெடுத்த அமைப்புகள் மிஷினரி ஆதரவில் செயல்படும் தலித் அமைப்புகள். எம்.சி.ராஜா, பாபு ஜெகஜீவன் ராம் போன்ற தலித் சமுதாய தலைவர்கள் தேசியத்தலைவர்களாக செயல்படும் இந்திய ஜனநாயகமே சாதியத்தை கடுமையாக எதிர்த்து தலித் குரல்களும் இயக்கங்களும் வல்லமையுடன் மேலெழ அஸ்திவாரம் அமைத்தது என்பதையும் அந்த பாரம்பரியத்தையுமே மறுதலித்தே இந்த அமைப்புகளால் செயல்பட முடியும். காந்தி மட்டுமல்ல ஆரிய சமாஜமும் இதற்காக மிகக் கடுமையாக உழைத்தது. ஒருவிதத்தில் காந்தியால் மேல்சாதியினரின் மனச்சாட்சியை உலுக்க முடிந்ததற்கும் அதனுடன் உரையாட முடிந்ததற்கும் காரணம் ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம் ஆகியவை உருவாக்கிய சூழலும். பொதுவாக காந்தி பக்தர்கள் மறந்துவிடும் விஷயம் இது. ஏனெனில் காந்தியை அவதார புருஷராக காட்ட இந்த வரலாற்றுச்சூழல் உதவாதல்லவா!

இந்த மிஷினரி ஆதரவு தலித் அமைப்புகள் குறித்து ஜெயமோகனுடம் வேறுபட வேண்டியுள்ளது சொல்வது போல அடிப்படைவாத அமைப்புகள் அல்ல அவை. அரசியல்-இறையியல் அமைப்புகள். இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களே இலக்கிய உரையாடல்கள், அமர்வுகளை நடத்தி வருபவர்கள். ஒரு முறை இவர்களுக்கு போட்டியாக அவர்கள் ஜெயமோகன் நடத்திய ஊட்டி இலக்கிய கூட்டத்தை நினைத்த போது எவ்விதமாக மூர்க்கமான எதிர்வினையாற்றினார்கள் என்பதை ஜெயமோகனே மறந்திருக்க முடியாது. ஆனால் இவர்கள் அடிப்படைவாதிகள் அல்ல. இவர்களுடன் நீங்கள் தத்துவம், இலக்கியம் சமூகம், அரசியல் குறித்தெல்லாம் உரையாட விவாதிக்க முடியும். உதாரணமாக ஜெயமோகனே பதிவு செய்திருக்கும் சுந்தர ராமசாமியின் அனுபவம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரை அழைத்து ஒரு புறம் நிகழ்வுகள் நடக்கின்றன. அவர் விபத்தாக தங்கிவிட்ட அந்த அரசரடி இறையியல் கல்லூரி சார்ந்த தலித் விடுதியில் ’எங்களுக்கு ஹரிஜன் என்று பெயர் வைக்க நீயாரடா நாயே’ என பாடல் சொல்லிக் கொடுத்ததை கேட்க நேரிடுகிறது..

கிறிஸ்டோபர் ஜாஃப்பர்லாவின் தலித் விடுதலை குறித்த நூல்கலை படித்தால் இந்த கட்டுடைப்பை எப்படி ஐரோப்பிய அரசியல் அமைப்புகள் செய்கின்றன என தெளிவாக தெரியும். உதாரணமாக புலேயையும் ஈவெராவையும் ஜாஃப்பர்லா தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான சின்னங்களாக அவர் முன் வைக்கிறார். நாராயணகுருவை மறைமுகமாக தாக்கி அவரைப் போல புலே ‘சமஸ்கிருதமயமாக்கும் பொறிகளில் சிக்கவில்லை’ என கூறுகிறார். ஈவெரா மேற்கின் உன்னதமான புத்தாக்க எண்ணங்களால் தாக்கமடைந்தவர் என்கிறார். இவர் காந்தி வைக்கம் சத்தியாகிரகத்தை கைவிட்டு மேல்சாதி இந்துக்களுடன் சமரசம் செய்து கொள்ள தன்னை சனாதனி என பிரகடனப்படுத்திக் கொண்டதாக கூறுகிறார். உதாரணமாக ஜாஃப்பர்லோவின் வார்த்தைகளில் : ”வைக்கம் சத்தியாகிரகத்தில் பிராம்மணர்கள் காட்டிய உறுதியான எதிர்ப்பு மற்றும் தங்கள் சாஸ்திரங்கள் மூலம் தங்கள் சமூக நிலை குறித்து அவர்களுக்கு இருந்த வைராக்கியமான நம்பிக்கை காந்தியின் உறுதிப்பாட்டை அரித்துவிட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகு காந்தி தன்னை சனாதனி ஹிந்து – அதாவது வைதீக ஆச்சாரவாதிகளின் சனாதனமான ஹிந்து தருமத்தை பின்பற்றுபவர் என அறிவித்துக் கொண்டார். அதற்கு பிறகும் அவர் தீண்டத்தகாதவர்களின் கோவில் நுழைவு போராட்டத்தை – கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற பார்வையில் – ஆதரித்தார். ஆனால் அது மேல்சாதி ஹிந்துக்களின் மனம் கோணாத விதத்தில் இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்.” (Dr Ambedkar and untouchability: analysing and fighting caste, 2005 பக்.60-61)

வைக்கம் சத்தியாகிரகம் 1924 இல் தொடங்கியது. பல உச்சங்களையும் தளர்வுகளையும் சந்தித்து 1936 இல் கோவில் நுழைவை ஏற்படுத்தியது. தொடர்ந்து அது அலை அடித்தது போல ஒரு வேகத்துடன் தென்னிந்தியாவில் பல முக்கியமான கோவில்களில் கோவில் நுழைவுகளை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியது. ஆனால் காந்தி தன்னை சனாதனி ஹிந்து என அறிவித்ததோ 1921 இல் (Young India , ஜூன் 10, 1921).

இந்த ஜாஃப்பர்லா பிரெஞ்சு அரசு தெற்காசியா குறித்து கொள்கை நிலைபாடுகளை நிர்ணயம் செய்யும் அதிகார பலம் கொண்ட அமைப்பொன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். இவரே அவுட்லுக் முதல் ஆங்கில தனியார் சானல்கள் வரை இந்து தேசியம், தலித் விடுதலை ஆகியவை குறித்து இவரே அதிகார பூர்வ அறிவியக்க குரலாக முன்வைக்கப்படுகிறார். இப்படி பல தாக்குதல்கள், கட்டுடைப்புகள் இணைந்து ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மிக மோசமான தாக்குதல்களாக அவை உரு பெற்றதும் பொது அரங்கில் வைக்கப்படுகின்றன.

இதில் ஹிந்துத்துவம் என்கிற பெயரில் வெற்று வெறுப்பு கூச்சலையும் சாதிய மேன்மைவாதத்தையும் கொண்டு காந்தியை தாக்கும் இணைய உலகில் மட்டுமே வலம் வரும் நியோ-ஹிந்துத்துவர்களையும் குறிப்பிட வேண்டும். ஹிந்துத்துவம் குறித்த எவ்வித வரலாற்று அறிவும் இல்லாத இவர்கள் சாதி பிரச்சனை என வரும் போது காந்தியை மேற்கோள் காட்டுவார்கள். இஸ்லாமிய எதிர்ப்பு என்றால் சாவர்க்கரையும் அம்பேத்கரையும் தூக்கிப் பிடிப்பார்கள். ஆனால் சாவர்க்கரும் அம்பேத்கரும் சாதியத்தை வேரும் வேரடி மண்ணுமாக களைந்திட முன்வைத்த பார்வையை சாமர்த்தியமாக தவிர்த்து மௌனம் சாதிப்பார்கள். மேற்கத்திய சக்திகள் சமைக்க விரும்பும் மேல்சாதி, பாசிச வெறுப்பியக்க ஹிந்துத்துவ வடிவக்காத்துக்கு சிறந்த உதாரணங்களாக அந்த சக்திகளால் இவர்களே முன்னெடுத்து வைக்கப்படுவார்கள். ஒரு நல்ல உதாரணமாக காந்தி குறித்து வெளிவந்த ‘Gandhi and his freedom struggle Eclipse of the Hindu nation” எனும் நூலை உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் மேற்கத்திய இறையியல்-அதிகார சக்திகளின் விளையாட்டு காந்தியுடன் நிற்கவில்லை. அம்பேத்கரின் பெயரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் அது, இந்திய பண்பாட்டை முழுமையாக வெறுத்து ஒதுக்காத எவரையும் ஏற்றுக்கொள்வதில்லை.

உதாரணமாக இதே ஜாஃப்பர்லா அம்பேத்கர் மகாதேவ் கோவிந்த ரானடேயை புகழ்வது அவர் மகர்களுக்கு உதவினார் என்பதற்காக என்கிறார். அதாவது தன் சுயசாதி விருப்பினால் அம்பேத்கருக்கு ரானடேயிடம் அபிமானமிருந்தது ஆனால் ரானடேயினால் உண்மையில் எந்த சமூக மாற்றமும் வரவில்லை என்றும் கூறுகிறார். இதில் ஜாஃப்பர்லா பயன்படுத்தும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கவனியுங்கள்:

ரானடே குறித்து அம்பேத்கர் புகழ்ந்ததை எழுதும் போது:
Ambedkar who was sensitive to the fact that Ranade had drafted for the Mahars the text of the petition which they submitted in 1892 against the ending of army recruitment of their caste, argues that Ranade had a ‘passion for social reform’ but he had to admit that this reformis did not translate into concrete social attitudes.(அடிக்குறிப்பு எண்: 17, மேலே மேற்கோள் காட்டப்பட்ட அதே புத்தகம்)

ரானடே குறித்து புலே தாக்கியதாகக் குறிப்பிடும் போது
In 1885 Phule published a pamphlet attacking Ranade in which he criticized without naming him, his elitism and in particular his disregard of farmers. (அதே நூல் அடிக்குறிப்பு எண் 31) அதாவது புலேயின் தாக்குதல் ஒரு புறவய சரியான பார்வை எனும் தொனி.

அம்பேத்கரின் ரானடே குறித்த பேச்சினை இங்கே காணலாம். இதை படிப்பவர்கள் ரானடே மகர்களுக்கு பெட்டிஷன் எழுதிக் கொடுத்த காரணத்தினால் அம்பேத்கர் ரானடேயிடம் ஒரு மெல்லிடம் கொண்டு அவரை புகழ்ந்தார் என்பது எப்படிப்பட்ட புளுகு என்பதை தெரிந்து கொள்ளலாம். இத்தகைய ஆசாமிகள்தான் தெற்காசிய ஆராய்ச்சி என்கிற பெயரில் சர்வதேச அளவில் வளைய வரும் மகானுபாவர்கள். இவர்களைத்தான் நம் நுனிநாக்கு ஆங்கில ஊடகங்களும் கொண்டாடுகின்றன.

மற்றொரு மேற்கத்திய தலித்திய ஆய்வாளரான கெயில் ஓம்விடட் எம்.சி.ராஜா என்கிற ஹிந்து மகாசபைக்காரர்தான் தென்னிந்தியாவில் தலித்-திராவிட ஒருங்கிணைப்பை உருவாகாமல் ஆக்கினார் என கூறுகிறார்.

ஏன் இதெல்லாம் நிகழ்கிறது என யோசிக்கலாம்.

இந்த இறையியல்-அரசியலுக்கு பின்னால் இருப்பது அதிகார வேட்கை. அடிப்படைவாதம் அல்ல. இலத்தீன் அமெரிக்க இடதுசாரி இயக்கங்களிலிருந்து வத்திகான் கற்றுக்கொண்ட பாடம் அது. மூன்றாம் உலக நாடுகளில், ஆயுதப் போராட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம் கத்தோலிக்க சபை ஒரு முக்கிய அதிகார தரகர் ஆக முடியும். இதில் இரண்டு லாபங்கள் உண்டு. ஒன்று: மதச்சார்பற்ற இடதுசாரி இயக்கத்தை தனது பிடியில் வைப்பது. பின்னர் அதனை கிறிஸ்தவ வலதுசாரியின் தொலைக் கட்டுப்பாட்டில் வைப்பது. பிலிப்பைன்ஸில் இது கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. மார்க்கோஸுக்கு எதிராக இடதுசாரி மக்கல் இயக்கம் எழுந்த போது, வாட்டிக்கனின் வெரிட்டாஸ் வானொலி இடதுசாரிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது. அமெரிக்க உளவுத்துறையைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்த விஷயம் இது. அடுத்து ஒரு கட்டத்தில் மதச்சார்பற்ற இடதுசாரிகள் தங்கள் இயக்கத்தில் தாங்களே புறந்தள்ளப்பட்டு இயக்கக் கட்டுப்பாடு முழுக்க கத்தோலிக்க மதபீடத்துக்கு கட்டுப்பட்ட விடுதலை இறையியலாளர்களிடம் போயிருப்பதை உணர்ந்தார்கள். பிறகு சிஐஏ உதவியுடன் வெரிட்டோஸ் நேரம் நிச்சயித்து மார்கோஸை வெளியேற்றியது. இன்று பிலிப்பைன்ஸின் அரசியல் மேற்கின் வலதுசாரிகளால் நிச்சயிக்கபப்டுவதுடன், ஒரு மதச்சார்பற்ற இடதுசாரிகள் வலு பெற்றிருந்தால் பிலிப்பைன்ஸில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் வெளியேறும் அபாயமும் வெற்றிகரமாக தடுக்கப்பட்டுவிட்டது. இன்று பிலிப்பைன்ஸின் விடுதலை இறையியலாளர்கள் இந்திய மாவோயிஸ கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு சர்வதேச மேடைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஐரோப்பியத்தில் இழந்த மக்கள் கட்டுப்பாட்டை காலனியாதிக்க விடுதலை பெற்ற நாடுகளில் பெற்றுவிட வத்திக்கானும் வலதுசாரி கிறிஸ்தவமும் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த இயக்கத்தில் மிகப் பெரிய ஐக்கானிக் தடை கல்லாக இருப்பவர் காந்தி. ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த பண்பாட்டு ஆன்மிக விழுமியங்களை அடிப்படையாக கொண்டெழும் எந்த சமூக சீர்திருத்தமும் குறையுள்ளதாக மேற்கத்திய ஆய்வாளர்களாலும் அவர்களின் இந்திய உதவியாளர்கள், தகவலாளிகளாலும் அடையாளப்படுத்தப்படும். அதில் விவேகானந்தர் மட்டுமல்ல, நாராயணகுருவும், அய்யா வைகுண்டரும், பின்னர் அவர்களின் இறுதிக்கட்ட ஆட்டத்தில் அம்பேத்கருமே பலியாவார்கள்.

இங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு பெரிய போர். இந்த நாட்டை முகம் மாற்ற வேண்டும் அல்லது/அத்துடன் சின்னாபின்னப்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போர். இத்தாக்குதல்களில் நாம் ஆற்றும் ஒவ்வொரு அறிவார்ந்த எதிர்வினையும் முக்கியத்துவம் கொண்டவை. இத்தாக்குதல்களை வெறும் மலின பிரச்சாரம் அல்லது அடிப்படை வாத உளறல் என புறந்தள்ளும் சௌகரியம் (luxury) நமக்கில்லை. இதனை மீண்டும் நினைவுறுத்தியுள்ளீர்கள். நன்றி.

பணிவன்புடன்
அநீ

பின்குறிப்பு:
காலனிய காலம் முதல் இன்றுவரை மேற்கத்திய சக்திகள் எப்படி இந்தியா மீதான கட்டுப்பாட்டுக்கும் தலையிடலுக்கும் ஏதுவாக இத்தகைய கதையாடல்களை வளர்த்து வருகிறது அதற்கு எப்படி நிறுவன பலத்தை உருவாக்கியுள்ளது என்பதை அண்மையில் ராஜீவ் மல்கொத்ராவும் நானும் இணைந்து எழுதிய ‘Breaking India’ எனும் நூல் விவரிக்கிறது. இதைப் போன்ற பல ஆதாரங்கள் அந்நூலில் உள்ளன. இந்நூல் குறித்த விவரங்களை www.breakingindia.com எனும் இணையதளத்தில் காணலாம்.

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருமறுப்பு