இடம் ,ஒரு கேள்வி

ஜெயமோகன் அவர்களுக்கு,
சென்னையில் யாருக்கும் அடையாளமில்லை. காலையிலும்,மாலையிலும் செல்லும் மின்சார ரயில்களும், பேருந்துகளும், ஆட்டோகளும் முழுக்க அடையாளமற்ற மனித வெளி.
எங்கும் இரைச்சல். யாருக்கும் யாரையும் தெரியாது.மன்மோகன்சிங் கருனையால் உருவான உலகமயமாக்கலால் உருவாகியிருக்கும் நகரமயமாக்கல். அலுவலகம் , சாலைகள் எங்கும் கண்கானிப்பு. இந்த சுழலில் வாழும் மனிதர்களுக்கு அவர்கள் இருப்புதான் உண்மை. அவன் தன் இருப்புசார்ந்துதான் உலகத்தை பார்க்க முடியும்.
அவன் பார்வையில் இந்த உலகம் அர்த்தமற்றதாகவும், அபத்தமானதாகவும் தோன்றுவது இயல்பானதே. நீங்கள் காஃப்கா,காம்யூ போன்றவர்கள் இரண்டாம்தர எழுத்தாளர்கள் என்கிறிர்கள்.   புத்தகங்கள் கூட பண்டங்களாகி விட்ட சுழல்.
லேரி பேக்கர் , காந்தி ,மாசனோபு போன்றோரின் வாழ்க்கை இதற்கு எதிர்திசையில் அறைகூவல் விடுகின்றன. ஆனால் இன்றைய நகரத்து மனிதனிடம் காம்யுவின் ‘அந்நியன்’ நாவலையும் , மாசனோபுவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’  நூலையும் கொடுத்தால் அவனால் ஏதோடு தன்னை பொருத்திக் கொள்ள முடியும்.   அப்படியே தன் நோக்கில் மாற்றம் ஏற்பட்டாலும் அதை நடைமுறை வாழ்க்கையோடு எங்கனம்
பொருத்திக் கொள்வது. வாழ்க்கையில் நடைமுறை படுத்த முடியாத நோக்கை வைத்துக்கொன்டு என்ன செய்வது. அழகியல், கவித்துவம் என்பது போல ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’  அற்புதமான கோட்பாடு என்று சொல்லிக் கொள்ளலாம்.
கிராமம் ,சிறுநகர் சேர்ந்த வாழ்க்கையில் யாருமே தனியர்கள் அல்ல.குழுக்கள். அங்கே காஃப்காவும் ,காம்யூம்  செல்லுபடியாக சாத்தியமில்லை.ஆனால் நகரத்தில் காஃப்காவும் ,காம்யூம் மட்டுமே செல்லுபடியாக முடியும். என் கேள்வி இதுதான் . வாழ்க்கை சுழலை மீறிய வாழ்க்கை நோக்கை  வைத்துக்கொண்டு என்ன செய்வது.
நன்றி,
ச.சர்வோத்தமன்.
அன்புள்ள சர்வோத்தமன்,
நித்யாவின் ஒரு வரி உண்டு. விதைமீது பாறையை தூக்கிவைத்தால் என்ன ஆகும்? விதை பாறையை புரடிப்போடும் — பல வருடங்கள் ஆகும் அவ்வளவுதான்.
எந்த ஒரு சிறிய இடத்திலும் மனிதன் தன் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதவாழ்க்கை என்பது புறச்சூழல்களினால் நிகழ்வது மட்டுமல்ல. அதேயளவுக்கு அது அகச்சூழல்களினாலும் நிகழ்கிறது. மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி அவர்களால் கற்பனைசெய்யபப்டுவதேயாகும்.
அந்த அகப்பிரபஞ்சத்தில் ஒரு மலர்ச்சி நிகழும் என்றால் அதை புறப்பிரபஞ்சமும் பிரதிபலிக்கத்தான் செய்யும். நீங்கள் இன்றைய நகர்மைய உலகத்தின் இயந்திரத்தன்மையைச் சொன்னீர்கள். பெரும்போர்களால் உலகம் உலுக்கபப்ட்டிருந்த  முந்தைய நூற்றாண்டுகளை விட எத்தனையோ மேலானது அல்லவா இது?
ஒரு செடி பூக்க எத்தனை மண் தேவை? கைப்பிடி கூட தேவையில்லை. டீஸ்பூன்கூட தேவையில்லை. ஒரு மரக்கிளையில் இருந்த நத்தை ஓட்டின் குழிவில் தேங்கிய மண்ணில் ஒருசெடி முளைத்து சிறிய சிவந்த மலருடன் பொலிந்து நிற்பதை நான் கண்டிருக்கிறேன்
நான் கா·ப்கா காம்யூ போன்றவர்களை இரண்டாம்தர எழுத்தாளர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே சொன்னவர்கள். அதனால் முழுமையை நோக்கிஎழும் மானுட சேதனையின் சித்திரத்தை உருவாக்க முடியாதுபோனவர்கள். ஆயினும் அவர்களின் அலவில் அவர்கள் முக்கியமான எழுத்தாளர்களே.
சரி, நகரத்தின் இயந்திர இரைச்சலில் சிக்கி வாழும் ஓர் ஆத்மா காம்யூவின் அன்னியனை அல்லது கா·ப்காவின் கோடையை படித்தால் என்ன ஆகப்போகிறது? அச்சுழற்சி அர்த்தமற்றது என்றும் அபத்தம் என்றும் புரிந்துகொள்ளும், அவ்வளவுதானே? அதற்குப்பின்? அதற்குப்பின் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள என்ன செய்யலாம்? அங்கிருந்துதான் என் தேடல் ஆரம்பிக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஜெ
முந்தைய கட்டுரைஅஞ்சலி ,நாகேஷ்
அடுத்த கட்டுரைதமிழிசை ஒரு கடிதம்