ஞானி-18

ஞானியின் மெய்யியல் தேடல்களைப்பற்றி நான் அவரிடம் பலவாறாக விவாதித்திருக்கிறேன். இந்தியமரபு, தமிழ்மரபு என்பது பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது, பழங்குடிவாழ்விலிருந்து அல்லது அதற்கும் முந்தைய அரைக்குரங்கு வாழ்விலிருந்து வந்தது, தொன்மங்கள் ஆழ்படிமங்களாக மாறி நம் மனதைக் கட்டமைப்பது, அதை புறக்கணித்து ஒரு சிந்தனையை இங்கே உருவாக்கிவிடமுடியாது, அதை நமக்காக பழக்கி அதன் உகந்த பகுதியுடன் நாம் இணைந்து நம்மை வளர்த்துக் கொள்வதன் மூலமே அது சாத்தியம் என்று ஞானி சொன்னார்.

இரண்டு உவமைகளை அந்நாளில் அவர் பயன்படுத்தினார், அவையெல்லாம் பேச்சில் வந்து அப்படியே சென்றுவிட்டவை. நான் புனைவெழுத்தாளன் என்பதனால்தான் அவை அவரிடம் வந்தன, மற்றபடி அவருடைய கட்டுரைகள் எல்லாம் அரசியல்வாசகர்களுக்காக எழுதப்பட்டவை

பூமியிலுள்ள செல்களுக்குள் உறையும் மைட்டோகாண்டிரியன் என்பது பூமிக்கு வெளியிலிருந்துவந்த ஓர் அன்னிய உயிரியாக இருக்கலாம் என்று ஒரு அறிபுனைவை ஞானி படித்திருந்தார். அது செல்களுக்குள் புகுந்து, செல்லின் பகுதியாக ஆகி வாழ்கிறது.  அது இல்லாமல் செல் வாழமுடியாது, அது செல் இன்றி வாழமுடியாது. ஆனால் மைட்டோகாண்ட்ரியன் தனியானது, தனக்கென வாழ்க்கை கொண்டது. ஒரு புதியசிந்தனை ஒரு பண்பாட்டில் அவ்வண்ணம்தான் வாழமுடியும், அப்படி ஊடுருவிக் கலது இணைந்து வாழாத வரைக்கும் அங்கே அது நீடிக்கமுடியாது. மார்க்சியம் இந்திய மெய்யியலில் ஊடுருவி இங்குள்ள ஒவ்வொரு சிந்தனையிலும் ஒரு பகுதியாக உறையவேண்டும், அதேசமயம் தன் தனித்தன்மையையும் இலக்கையும் அது கைவிடக்கூடாது என்றார் ஞானி.

யானையை மனிதன் வென்றதே இல்லை, அதை அச்சுறுத்தி அடக்கி பயில்கிறான். யானை ஒருபோதும் மனிதனை ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் எருது மனிதனை ஏற்றுக்கொண்டது, ஏனென்றால் எருதை மனிதன் மாற்றியமைத்திருக்கிறான். இன்றிருக்கும் எருது மனிதனின் உருவாக்கம், அது காட்டுக்குச் சென்று வாழமுடியாது. யானை காட்டுக்குச் சென்றால் ஆறுமாதத்தில் வனவிலங்காக மாறிவிடும். மனிதன் இல்லாமல் எருது வாழமுடியாது, எருது இல்லாமல் மனிதனும் வாழமுடியாது. ருஷ்யாவின் மதத்தை அங்கிருந்த கம்யூனிசம் யானையை அடக்குவதுபோல அடக்கியது, அது ஓர் எல்லையில் அவர்களை தூக்கி காலில்போட்டு மிதித்தது, மீண்டும் தன் நிலைக்கே மீண்டது. எருதுபோல மதத்தை மார்க்ஸியம் ஆட்கொள்ளவேண்டும், மாற்றியமைக்கவேண்டும், என்றார் ஞானி

“ஏற்கனவே இந்தியாவின் தொன்மையான மதமரபிலிருந்து எம்.என்.ராயும் தேவிப்ரசாத் சட்டோபாத்யாயாவும் உருவாக்கிகொள்ள முயன்ற தொடர்ச்சிதானே அது?” என்று நான் கேட்டேன். “ஆம் கொள்கை அளவில் அதுதான்” என்று ஞானி சொன்னார். “ஆனால் எம்.என்.ராயும் தேவிபிரசாத்தும் மார்க்சியத்துக்கு உகந்த, அல்லது மார்க்சியத்தால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க, மார்க்சியத்துடன் ஒத்துப்போகக்கூடிய இந்திய தத்துவப் பகுதிகளைக் கண்டடைவதில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார்கள். மார்க்சியம் அடிப்படையில் ஒரு பொருள்முதல்வாதம் என்பதனால் இந்திய சிந்தனையில் என்னென்ன பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருக்கின்றன என்று பார்த்தார்கள். எம்.என்.ராயின் லோகாயாதாவும் சரி, தேவிப்பிரசாத்தின் இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும் என்ற நூலும் சரி ,அந்தகோணத்தில்தான் இந்திய மரபை ஆராய்கின்றன”

கே.தாமோதரன்

“அது ஒரு சிறந்த வழிமுறைதான் என்பதும், அதனூடாக இந்திய தத்துவப் புலத்தில் மார்க்சியத்தை ஒரு வலுவான தரப்பாக நிலைநிறுத்த அவர்களால் இயன்றதென்பதும் உண்மை. கே.தாமோதரன் அதை இன்னும் சற்று முன்னெடுத்து, எவையெவை எல்லாம் அந்தந்த காலப்பின்னணியில் ஒப்புநோக்க முற்போக்காக இருந்தன என்று பார்த்து, வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இருக்கும் முற்போக்கான கூறுகளை தொட்டு அடைகிறார்.கீதையிலும் முற்போக்கான அம்சங்களைக் கண்டடைகிறார். அவை எவ்வாறு உருவாயின ,பின்னர் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டன, அல்லது செரித்துக்கொள்ளப்பட்டன என்று ஆராய்ந்து இன்னும் விரிவான ஒரு சித்திரத்தை முன் வைக்கிறார். நான் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நினைக்கிறேன்” என்றார் ஞானி

ஞானி சொன்னார்:வேத-வேதாந்த மரபிலிருந்து எவையெல்லாம் இங்கு மக்களிடம் ஆழமாக வேரூன்றி, மக்களின் பண்பாட்டு நடவடிக்கையில் ஒரு பகுதியாகவே மாறியிருக்கின்றனவோ அவற்றை எதிர்த்தோ தவிர்த்தோ மார்க்சியம் நிலைகொள்ள முடியாது. ஏனென்றால் அவை மக்களிடமிருந்து தத்துவத்துக்குச் சென்று வளர்ந்து திரும்பி வந்தவை. அவை மக்களிடம் தரிசனமாக உருவாகி மதத்தால் உள்வாங்கப்பட்டு தத்துவம் ஆசாரம் ஆகியவையாக மாற்றப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டவை

அவற்றை தன்னைநோக்கி இழுத்துக்கொண்டும், ஒவ்வாதனவற்றை விலக்கியும் ,அடிப்படைகளைச் செரித்துக்கொண்டும்தான் மார்க்சியம் இங்கு நிலைகொள்ள முடியும். ஏனெனில் அவை பொய் என்றும் சுரண்டலுக்கான கருத்துக்கருவிகள் என்றும் எளிதாகச் சொல்லிவிடலாம். ராகுல சங்கிருத்யாயனுடைய ‘தர்சன் திக்தர்சன்’ என்னும் நூலில் அவர் மிக எளிதாக அவ்வாறு சொல்லி கடந்து செல்கிறார் அதுதான் இயந்திர்வாத மார்க்சிய அணுகுமுறை. அது தோற்றுவிட்டது என்பதைத்தான் இந்தியாவின் யதார்த்தம் காட்டுகிறது

மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு கருத்துநிலை பரவி, கோடானுகோடி மக்களிடம் நம்பிக்கையாகவும் ஆழ்மனப்படிமங்களாகவும் நிலைகொள்கிறது என்றால் அதன் வல்லமை சாதாரணமானது அல்ல. அதை ஆதிக்கத்தின் கருவி என்று சல்லிசாகச் சொல்லமுடியாது. அதை இன்று ஏந்திக்கொண்டிருப்பவர்கள் ஆதிக்கவாதிகள் அல்ல. அவர்க்ளைவிட தீவிரமாக எளியமக்கள் அதை ஏந்திக்கொண்டிருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டே ஆகவெண்டும். இல்லாவிட்டால் காந்தியையும் அம்பேத்காரையும் பெரியாரையும் மார்க்சியர்கள் எதிர்த்து தங்கள் ஆற்றலை வீணடித்தது போல பல மடங்கு ஆற்றலை அந்த எதிர்ப்பில் வீணடிக்க வேண்டியிருக்கும்.ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்கள் காந்தியையும் அம்பேத்காரையும் பெரியாரையும்  ஏற்றுக்கொள்ள நேர்ந்தது போல அவற்றையும் ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று ஞானி சொன்னார்.

எப்படி அவற்றை விளங்கிக்கொள்கிறோம், எப்படி அவற்றை மாற்றியமைத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். அந்த வகையில் பௌத்தம், சமணம், அத்வைதம். விசிஷ்டாத்வைதம்,துவைதம் உட்பட இந்தியாவில் உருவான சிந்தனைகள் அனைத்துடனும் மார்க்சியத்துக்கு ஓர் ஆழமான உரையாடல் இருக்க வேண்டும். அவற்றை எதிர்நிலையில் வைத்து முழுக்க மறுப்பதும், மறுப்பதற்கு உரியவகையில் குறுகலாக வகைப்படுத்திக்கொள்வதும் அசட்டுத்தனம். அவை சமூகக் களத்திலும் சிந்தனைக்களத்திலும் எதிர்க்கப்படாமல் வெற்றிபெற்று நிலைகொள்ளவே அந்த அசட்டுத்தனம் வழிவகுக்கும்.

தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய

ஒரு மெய்யியல் தரிசனத்தை, அல்லது தத்துவநிலைபாட்டை சமூகப்பொருளியல் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் சமூகப்பொருளியல் அடிப்படையில் மட்டும் அவற்றை அறுதியாக வரையறை செய்வது நமக்கு வசதியானபடி அதை திரிப்பதுதான். அது நம்முடைய அறிவுத்தள மாயைதான். அரைநூற்றாண்டாக மார்க்சியர் இங்கே செய்துவருவது இந்த தன்புணர்ச்சியைத்தான். அதையும் இருட்டிலமர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றை மெய்யியல் அடிப்படையில், தத்துவ அடிப்படையில்தான் விளங்கிக்கொள்ளவேண்டும், வரையறை செய்யவேண்டும்

அவற்றுடனான உரையாடலென்பது எல்லா மெய்யியல்- தத்துவ விவாதங்களையும்போல ஏற்பும் மறுப்புமாக  அமையவேண்டும். மார்க்சியம் அவற்றைவிட நவீனமான, அவற்றைவிட முழுமையான மெய்யியலும் தத்துவமும் என்பதனால் அவற்றை மார்க்சியம் வென்று உள்ளிழுத்துக்கொள்ள முடியும். மெய்யியல் தத்துவம் ஆகியவற்றில் மார்க்ஸியம் அவற்றைவிட மேலானதல்ல என்று சொல்பவர் கூட மார்க்ஸியத்தின் மானுடம்தழுவிய அறநோக்கு பலமடங்கு மேலானது என்பதை மறுக்கமுடியாது.

மார்க்சியம் இங்கிருந்த மெய்யியல் -தத்துவ மரபுகளின் இன்றியமையாத நீட்சியாக இங்கு நிகழவேண்டும். பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலானவர்களுடன் அப்படி ஓர் உரையாடலும் நீட்சியும் ஐரோப்பாவில் சாத்தியமென்றால் இங்கும்  அது சாத்தியமே என்றார் ஞானி.

இச்சிந்தனை எஸ்.என்.நாகராஜனிடமிருந்து அவருக்கு வந்தது.தமிழில் மிகமிக பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அல்லது வேண்டுமென்றே அவதூறுசெய்யப்பட்டு, பொதுக்கருத்துச் சூழலில் இருந்து அகற்றப்பட்ட சிந்தனையாளர் எஸ்.என்.நாகராஜன். அதற்கு அவர் பிறந்த சாதியே முதன்மையான காரணம். அதைப்போன்ற எளிய அடையாளங்களைக் கடந்து சிந்திக்கும் ஆற்றல்கொண்டவர்கள் இங்கே மிகமிகச் சிலரே. எஸ்.என் நாகராஜனைப் பற்றி விரிவாக இன்னொரு தருணத்தில்தான் எழுதவேண்டும். ஞானியிடம் மிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவர் எஸ்.என்.நாகராஜன். நண்பராகவும் தத்துவவழிகாட்டியாகவும் எஸ்.என்.நாகராஜன் ஞானிக்குத் திகழ்ந்தார். எஸ்.என்.நாகராஜனின் சிந்தனைகளைப் பற்றி ஞானி தொடர்ந்து என்னிடம் பேசியிருக்கிறார்.

எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸியம் எங்கும் எப்போதும் மாற்றமின்றி செயல்படுத்தத்தக்க ஒரு இரும்புக்கோட்பாடு அல்ல, ஒரு வகை மதநம்பிக்கை அல்ல, அது படைப்பூக்கத்துடன் வளர்த்தெடுக்கப்படவேண்டியது என்று சொன்ன முதல் தமிழ்ச்சிந்தனையாளர். மார்க்சியத்தை ஒரு ‘அறிவியல்கோட்பாடு’ என்று சொல்லி அதை நிரூபணவாத உண்மைபோலவே முன்வைத்துக் கொண்டிருந்தவர்களின் நடுவே எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸியம் என்பது ஒரு மெய்யியல் தரிசனம், மெய்யியல் தரிசனங்கள் சூழலுக்கேற்ப வளர்பவை என்றார். ஆகவே மார்க்சியம் பிறவற்றில் படர்ந்து ,பிறவற்றுடன் இணைந்து உலகைத் தழுவியபடியே இருக்கவேண்டும் என அவர் நம்பினார்.

மார்க்ஸியம் ஐரோப்பாவில் தோன்றியதென்பதனாலேயே அதற்கு ஓர் ஐரோப்பியப்பார்வை, ஐரோப்பியப் பண்பாட்டுப்புலம் உண்டு. அது அப்படியே இந்தியாவுக்கு பொருந்தாது. கீழைநாடுகளுக்காக மார்க்சியம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்றார் எஸ்.என்.நாகராஜன். அதை பேச்சுவாக்கில் ஞானி உள்ளிட்டோர் கீழைமார்க்சியம் என்று சொல்லத்தலைப்பட்டனர். ஞானி கீழைமார்க்சியம் என்னும் தலைப்பில் எஸ்.என்.நாகராஜன் சிந்தனைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார்.

ஆனால் இன்றும்கூட எஸ்.என்.நாகராஜனின் சிந்தனைகளை முழுமையாக அளிக்கும் ஒரு நூல் இல்லை. அவை அவருடைய பேச்சிலேயே நிகழ்ந்து மறைந்துவிட்டன. தொண்ணூறுகளுக்குப்பின் தமிழகத்தில் புத்தெழுச்சிகொண்ட இனக்காழ்ப்பின் அலை அவருடைய மாணவர்களிலேயே அவர்மேல் வெறுப்பையும் விலக்கத்தையும் உருவாக்கி அவருடைய சொற்கள் முற்றாகவே மறையவைத்துவிட்டது.

எஸ்.என்.நாகராஜன் முன்வைக்கும் கீழைமார்க்ஸியச் சிந்தனைகளை என் புரிதலில் இப்படித் தொகுத்துக்கொள்வேன். அறிவதிகாரத்திற்கு மாற்றாக சேவையை, கலைசார்ந்த நெகிழ்வைக் கொண்டது அது. மையப்படுத்தப்பட்ட அதிகாரக் கட்டுமானத்திற்குப் பதிலாக பன்முகத்தன்மை கொண்டதாகவும் துளியலகுகளிலேயே தன் செயல்பாடுகளை நிகழ்த்துவதாகவும் இருப்பது. ’ஆண்தன்மை’க்குப் பதிலாகப் ’பெண்தன்மை’ கொண்டது. கீழைநாடுகளில் உருவான மெய்யியல்களுடன் உரையாடி தனக்கான இடத்தை அவற்றில் கண்டடைவது.

பொதுவாக மார்க்சியத்தின் மெய்யியல் என்பது மனிதசமத்துவம், மானுடசேவை, உலகியலின்பமே மெய்யான வாழ்க்கைநிறைவு அல்லது வீடுபேறு என்னும் மூன்று அடிப்படைகளால் ஆனது என்று எஸ்.என்.நாகராஜன் விளக்கினார். மனிதர் ஒருவரை ஒருவர் சுரண்டி, ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு, அதனூடாக உருவாக்கும் அமைப்புகளினூடாகவே இங்கு பண்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். ஒருநாள் மனிதர்கள் ஒருவரும் ஒருவரை சுரண்டாமல், ஒருவரை ஒருவர் அடக்கி ஆளாமல், அதன் விளைவான அமைப்புகளை உருவாக்கிகொள்ளாமல், ஒத்திசைந்து வாழும் ஒரு வாழ்க்கை இங்கு வரவேண்டும் என்ற கனவு மார்க்சியத்தின் மெய்யியலில் முதல் அடிப்படை. மனிதர்கள் மகிழ்வென உணர்வது சகமனிதனுக்கு உதவும்பொதும் பணியாற்றும்போதும் மட்டுமே .ஆகவே சேவை என்பது மனிதனின் அடிப்படையான விசை. மனிதம் கொள்ளும் உணர்வுகளில் உச்சமானது அது

மூன்றாவதாக மனிதன்  காலகாலமாக உலகில் அடையும் அனைத்து துயரங்களுக்கும் காரணமாக முந்தைய பிறவியின் விளைவு, அல்லது ஊழ்,அல்லது கடவுள் ஆணை என்னும் புறக்காரணி சொல்லப்படுகிறது. மனிதனின் இந்த துயரங்களுக்கு மாற்றாக சொர்க்கம், கடவுளின் காலடியை அடைதல், நற்பிறவி ஆகியவை முன் வைக்கப்படுகின்றன. அவற்றை ரத்து செய்து, மனிதனின் மகிழ்வும் வெற்றியும் நிறைவும் இங்கு மட்டுமே கிடைக்கபெறுபவை ; இங்கு உள்ள காரணிகளால் நிகழ்பவை என்று நிறுவுவது மார்க்சியத்தின் மெய்யியலின் மூன்றாவது கூறு.

இந்த மூன்று மெய்யியல் விதிகள் அடிப்படையில் எந்த இந்தியமெய்யியல் கூறுகள் மார்க்சியத்துக்கு அணுக்கமாக வருகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொள்ளலாம், அதனுடன் உரையாடலை நிகழ்த்தலாம், அவற்றை மார்க்சியம் உள்ளிழுத்துக்கொள்ளலாம், மார்க்ஸியமாகவே மாற்றிக்கொள்ளலாம் என்பது எஸ்.என்.நாகராஜன் கூறுவதாக சுருக்கிக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் பக்தி இயக்கத்தின்போது உருவான வைணவமும், அதன் தத்துவமான விசிஷ்டாத்வைதமும், அதிலிருந்து கிளைத்து பக்திஇயக்கத்தின் பிற்காலத்தில் உருவான வல்லபர், சைதன்யர்,கபீர், குருநானக் போன்றவர்களின் இறுதிக்கட்ட பக்தி இயக்கங்களும்   மார்க்சியத்துக்கு அணுக்கமானவையே என எஸ்.என்.நாகராஜன் சொல்கிறார்.

ஏனென்றால் இம்மரபுகள்  கைங்கர்யம் என்று மக்கள் சேவையை சொல்கின்றன. அவை வீடுபேறு என்னும் கருத்தை முன்வைத்தாலும் கூட வையத்தில் வாழ்வாங்கு வாழ்வது முக்கியம் என்கின்றன. நரசேவையே நாராயண சேவை என்று வலியுறுத்துகின்றன. இங்கு இவ்வாழ்விலேயே சகோரதத்துவம் சமத்துவம் ஆகியவை தேவை என்பதை ஏற்றுக்கொள்கின்றன. எளியோருக்கு மேலே வருவதற்கான வழியாக அன்று அவை அமைந்தன, இந்தியாவின் ஒடுக்கப்பட்ட கோடானுகோடிகளுக்கு சமூகமைய ஓட்டத்தில் இடமளித்தன. இன்றைய இந்தியா இரு பக்தி இயக்கங்களின் உருவாக்கமே. ராமானுஜர் மூலமந்திரத்தை அனைவருக்குமாக கூறினார், திருக்குலத்தோர் என்று தாழ்த்தப்பட்ட மக்களை தன் அமைப்புக்குள் இழுத்துக்கொண்டார் என்பதெல்லாம் சம்த்துவத்துக்கான அடையாளங்களே.

எஸ்.என்.நாகராஜன்

ஆனால் எஸ்.என்.நாகராஜனைப் பொறுத்தவரை ராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும் அவர் உருவாக்கிய வைணவ சம்பிரதாயமும் அப்படியே இன்று செல்லுபடியாகக்கூடியவை அல்ல. அவை தங்களுக்குரிய வரலாற்றுப் பங்களிப்பை ஆற்றி காலத்தால் பின்னகர்ந்துவிட்டவை. உறைந்துபோல் அதிகார அமைப்புகளாக ஆகிவிட்டவை. ஆனால் அந்தப் பார்வையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, அதை உள்ளடக்கிக்கொண்டு வரும் புதிய சிந்தனையாக, மார்க்சியம் தன்னை முன்னெடுத்துக்கொள்ளலாம். மார்க்சியமும் வைணவமும் சந்திக்கும் புள்ளிகள் உள்ளன, அவை வளரவேண்டும்.

வைணவத்தின் இருப்பை மார்க்சியம் அங்கீகரிக்க வேண்டும் என்றோ, மார்க்சியம் தன்னை வைணவமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றோ எஸ்.என்.நாகராஜன் கூற்வில்லை. எஸ்.என்.நாகராஜனின் நீண்ட உரையாடல்களில் அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தியது மார்க்சியமே புதிய வைணவம், வைணவம் மார்க்சியத்துக்குள் அடக்கம் என்று மட்டுமே. அது ஒரு உயர்லட்சியமாக இருக்கலாம், வெறும் கனவாகக்கூட இருக்கலாம், ஆனால் அவர் அதை அழுத்தமாக நம்பி முன்வைத்தார். ஞானி அதிலிருந்து வள்ளலார், நாராயணகுரு போன்றவர்களை மார்க்சியத்துக்குள் கொண்டு வரமுடியும் என்றும், அவர்களின் நீட்சியாக மார்க்சியம் தன்னை நிலைகொள்ள வைக்க முடியும் என்றும் நினைத்தார்.

ஞானி மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் என்றோ கீழை மார்க்சியம் என்றோ இதை வரையறுக்க முயன்றார். இந்த அணுகுமுறை வேறுவேறு வகையில் எம்.என்ராய் முதல் கே.தாமோதரன், தேவிபிரசாத் சட்டோபாத்யாய, இ.எம்.எஸ் வரை மார்க்ஸிய அறிஞர்கள் பலரால் முன்வைக்கப்பட்டது. இந்திய மெய்யியல் மரபில் மார்க்ஸியத்திற்கு ஏற்புள்ளவற்றை கண்டடைந்து உள்வாங்கிக்கொண்டு விரிவாக்கும் நோக்கம் அவர்கள் அனைவருக்கும் இருந்தது. ஞானி அதை தமிழ்ச் சூழலில் விவாதித்து விரிவாக்கம் செய்துகொண்டார். அவ்வகையிலேயே கே.தாமோதரன் போன்றவர்களுக்கு சங்கரரிலும் விவேகானந்தரிலும் கூட ஏற்புள்ள கூறுகள் தெரிந்தன. அவர்களின் பார்வையில் வரலாற்றின் முரணியக்கத்தில் அவர்கள் முற்போக்கானவர்களாகப் பட்டனர்.

இந்தக் கரு சார்ந்து நிகழ்ந்த ஓர் உரையாடல் நினைவில் எழுகிறது. 1987ல் இ.எம்.எஸ் சங்கரன் நம்பூதிரிப்பாடு ஆதிசங்கரர் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் ஓர் உரையை ஆற்றினார். அதில் அவர் இந்திய சிந்தனையில் சங்கரரின் பங்களிப்பு குறித்துப் பேசும்போது சங்கரர் வாழ்ந்த ஏழாம்நூற்றாண்டின் சூழலில் மானுடசமத்துவம், உயிர்களுடனான ஒத்திசைவு ஆகியவற்றை முன்வைக்கும் ஒரு முற்போக்கு அம்சம் சங்கரரின் அத்வைதத்தில் இருந்தது என்றும், அந்த அம்சம்தான் பக்தி இயக்கத்தின் தத்துவ அடிப்படையாக அமைந்து சிரமண [உழைக்கும்] சாதிகளின் எழுச்சியாக மாறியது என்றும், பின்னர் பத்தொன்பதாம்நூற்றாண்டில் இந்திய மறுமலர்ச்சி நிகழ்ந்தபோது நவீன அத்வைதமாக மீண்டும் முன்னெழுந்துவந்தது என்றும் சொன்னார். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துமதத்திற்குள் நவீன மானுடசமத்துவம் சார்ந்த அறவியலை முன்வைத்துப் பேசியவர்கள் பெரும்பாலானவர்கள் அத்வைதிகளே என்று சுட்டிக்காட்டினார்.

விவேகானந்தர், நாராயணகுரு, சட்டம்பி சாமி, வாக்படானந்தர் போன்ற அத்வைதிகள் கேரளத்தின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பங்கை குறிப்பிட்ட இ.எம்.எஸ் அதை சங்கர அத்வைதத்தில் இருந்து தொடங்கவேண்டும் என்றார். மனீஷிபஞ்சகம் போன்ற பாடல்கள், சங்கரர் குறித்த கதைகள் எல்லாமே அன்றைய சூழலில் மானுட சமத்துவ அறவியலை முன்வைத்தவர் அவர் என்றே காட்டுகின்றன. உதாரணம், சாதிய ஒதுக்கால் தன் அன்னைக்கு தானே சிதையொருக்கினார் என்னும் கதை; சண்டாலனை கால்தொட்டு வணங்கினார் என்னும் கதை. அக்கருத்து அன்று விவாதத்தை உருவாக்கியது. பின்னாளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஈ.எம்.எஸின் கருத்து ஒன்றும் புதியது அல்ல, கே.தாமோதரன் போன்றவர்கள் முன்பு முன்வைத்ததே. அது சங்கரருக்கான ஏற்பு அல்ல. இ.எம்.எஸ் சங்கர அத்வைதம் காலாவதியானது என்றும், காலப்போக்கில் ஒடுக்குமுறை ஆயுதமாக திரிபு அடைந்தது என்றும்தான் சொன்னார். ஆனால் அவரை எதிர்த்தவர்கள் சங்கர அத்வைதத்தை எப்படி மார்க்ஸியர் ஏற்கமுடியும் என்ற ஒற்றைவரியையே அவரை நோக்கி முன்வைத்தனர். கே.தாமோதரனோ இ.எம்.எஸ்ஸோ முன்வைத்த இந்தத்தரப்பு ஒரு கொள்கையளவில்கூட விவாதிக்கப்படவே இல்லை. இன்று இந்துமெய்யியலுக்கு முழுமையாக இந்துத்துவர் உரிமைகொண்டாடும்போது கேரளத்தில் ஒருசிலர் இ.எம்.எஸ் சொன்ன பாதை ஒருவேளை சரிதானோ என எண்ணுகிறார்கள்.

இந்தியச் சிந்தனைச் சூழலில் இந்தியமரபு, இந்துமரபு சார்ந்த ஓர் ஒவ்வாமை கடுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஐரோப்பியப் பார்வைக்குள் உள்ளடங்கியிருக்கும் கிறிஸ்தவ முன்முடிவுகள் காரணம் என்பதை மறுக்கமுடியாது. இந்தியமரபிலிருந்து, இந்து மரபிலிருந்து ஏதேனும் ஒன்றை சற்று ஏற்கமுடியும் என்று எவர் சொன்னாலும் இந்திய அறிவியக்கத்தின் ஒருபகுதி அலையென பொங்கிவந்து அப்படிச் சொல்பவரை அடிப்படைவாதி என்று முத்திரைகுத்தி வசைபாடுகிறது. அது இந்திய மார்க்சியத்தின் முதலாசிரியரான இ.எம்.எஸ்ஸே ஆனாலும் சரி. ஆனால் கிறிஸ்தவ மரபுடனான எல்லா உறவாடல்களையும் அந்த அறிவுத்தரப்பு முற்போக்கானதாக காண்கிறது.

நெடுங்கால ஆய்வுத்தொகை உதவிகளால் சிறுகச்சிறுக இந்தியச் சிந்தனைத்தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நுண்ணமைப்பு இது.  நடைமுறையில் இந்த மூர்க்கம் இந்தியமரபு, இந்துமத விழுமியங்களின் காவலர்களாக தங்களை நிறுத்திக்கொள்ள இந்துத்துவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அவர்கள் அதை ஒற்றைப்படையாக ஆக்க, அரசியல் கருவிகளாக திரிக்க வரலாற்றுச் சந்தர்ப்பத்தை அளிக்கிறது.

நான் அது சார்ந்து ஞானியிடம் பேசினேன். முதலில் ஞானி இ.எம்.எஸின் கருத்து ஒரு சம்பிரதாயமான ஏற்பு என்றும், அது மார்க்ஸிய கோட்பாட்டுக்கு உகந்தது அல்ல என்றும்தான் சொன்னார். நான் அன்று அதற்கு விரிவான பதில்களை எழுதினேன். அதில் நாராயணகுரு இல்லையேல் கேரளத்தில் மார்க்ஸியத்திற்கு அடித்தளமே இல்லை என்று சொல்லியிருந்தேன். ஐயன்காளி போன்றவர்களின் தத்துவமே அத்வைதம் என்னும்போது, தீண்டாமை போன்றவற்றுக்கு எதிராக எழுந்த தொடக்ககால அமைப்புக்கள் எல்லாமே அத்வைதசபைகள் என்னும்போது, இ.எம்.எஸ் எப்படி ஒட்டுமொத்தமாக அவர்களை நிராகரிக்கமுடியும் என்று கேட்டிருந்தேன். ஏற்கனவே துஞ்சத்து எழுத்தச்சன் போன்றவர்களைப் பற்றி எழுதியபோது இ.எம்.எஸ் பக்தி இயக்கத்தின் முற்போக்குப் பங்களிப்பு குறித்து எழுதியிருந்த பகுதிகளை ஞானிக்கு மொழியாக்கம் செய்து அனுப்பியிருந்தேன்.

[எண்பதுகளின் தொடக்கத்தில் இ.எம்.எஸ் துஞ்சத்து எழுத்தச்சன் பற்றிச் சொன்னவற்றை சுந்தர ராமசாமி ஜே.ஜே.சிலகுறிப்புகளில் பகடி செய்து எழுதுகிறார். முல்லைக்கல் மாதவன்நாயரின் நாவலில் பழைய திருவிதாங்கூர் இளவரசி உம்மிணித்தங்கை சேடிப்பெண்களுக்கு கரமொழிவாக நிலங்கள் வழங்குகிறார். அது முற்போக்குதான் என்று மார்க்ஸியர் சொல்கிறார்கள். கொஞ்சம் கடந்த காலம் என்றால் மனிதாம்பிமானமும் முற்போக்கே என்று ஜே.ஜே.நையாண்டி செய்கிறான்]

ஓராண்டுக்குப் பின் இன்னொரு விவாதம் உருவாகியது. ஜெயகாந்தன் ஓரு மேடையுரையில் தமிழ்மார்க்சியம் வள்ளுவரையும், திருமூலரையும், தாயுமானவரையும் வள்ளலாரையும் ஏற்றுக்கொள்ளாது என்றால் அதை தமிழ் உள்ளம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், அது எப்படி தமிழருக்குரிய சிந்தனையாக  ஆகமுடியும் என்று கேட்டிருந்தார். அதையொட்டி தமிழ்ச்சூழலில் ஒரு சிறுவிவாதம் நிகழ்ந்தது.வழக்கம்போல கடிதங்களில்தான். ஞானியின் எண்ணங்களைக் கோரி நான் கடிதம் எழுதியிருந்தேன்.

திருவள்ளுவர், ஜைனர்களின் படம்

இம்முறை ஞானி யோசிக்கலானார். அவரால் வள்ளுவரையும், வள்ளலாரையும் விலக்க முடியவில்லை. அதையொட்டி மீண்டும் மரபான ஞானியர்களை, அவர்களின் தத்துவங்களை மார்க்ஸியர் எதிர்கொள்வது எப்படி என்னும் வினா எழுந்தது. ஞானி அவர்களை வரலாற்றில் வைத்து பார்க்கவேண்டும் என்றும், அவர்களின் பங்களிப்பு சாராம்சத்தில் என்னவாக இருந்தது என்பதையே கருத்தில்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார். அத்வைதம், சங்கரர் குறித்த அவருடைய பார்வையின் மாற்றம் நிகழ்ந்தது அப்போதுதான்.

நேரில் பேசும்போது ஞானி சொன்னார். “ஹெகலை முற்போக்காக எடுத்துக்கொள்ள முடியும் என்றால் சங்கரரையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியும். மனிதசிந்தனை ஒரு முரணியக்கம். அதன் முன்னேற்றத்தில் ஒரு தத்துவசிந்தனை ஆற்றிய பங்களிப்பென்ன என்பதுதான் முக்கியமானது” பிறகு அவர் புன்னகைத்து  “இங்கே ஒருத்தர்ட்ட சொன்னேன். அவர் ஆதிசங்கரர் சாதியை அங்கீகரிச்சவர்னு சொல்லி பொங்கிட்டார். விவேகசூடாமணியிலே ஒரு வரி சாதியை அங்கீகரிக்கிறாப்ல இருக்காம். நான் கேட்டேன், அடிமைமுறையை அங்கீகரிச்ச பிளேட்டோவை என்ன செய்யறது? தூக்கிப்போடலாமா?போட்டா கூடவே மார்க்சியத்தையும் போட்டிரவேண்டியிருக்கும்”

வேதாந்தத்திலும் அத்வைதத்திலும் எவையெவை மார்க்சியத்துடன் உரையாடக்கூடியவை? மானுடன் ஒரு உயிர்த்துளி மட்டுமல்ல, ஓர் உற்பத்தியாளனும் நுகர்பவனும் மட்டுமல்ல, அவன் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே என்னும் தரிசனத்தை. அதை ஒரு தன்னுணர்வாகவே ஒருவர் அடையமுடியும். பிரபஞ்சக்கூறு என்ற வகையில் அனைத்து மானுடரும், அனைத்து உயிரும் நிகரே என்னும் பார்வையை ஏற்கமுடியும். அனைத்தையும் தர்க்கபூர்வமாக புறவயமாக முன்வைத்து விவாதிக்கும் அதன் அறிவுத்தன்மையை ஏற்கமுடியும். ஆனால் மார்க்சியம் வேதாந்தத்தையும் அத்வைதத்தையும் நிராகரிக்கும் இடங்கள் மிகுதி. அவற்றை விவாதிக்கவேண்டும்

ஞானி தன்னுடைய தியான அனுபவங்களைை எழுதியிருக்கிறார். கடவுள் நம்பிக்கை பற்றி அவர் எழுதவில்லை, கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை என்றுதான் எழுதியிருக்கிறார். ஏனென்றால் கடவுளனுபவம் என்று விளக்கப்படும் அந்த பிரபஞ்ச இணைவு நிலை [அல்லது அத்வைத நிலை, இரண்டின்மைநிலை] மனிதர்களுக்கு இன்றும் சாத்தியமாகிறது, அது தேவையாகிறது. அந்நிலையை மார்க்ஸியம் தன்னுள் வைத்து விளக்கியாகவேண்டும். ஞானி சொல்வது அதையே.

ஆனால் ஒன்று சொல்லவேண்டும், நேர்ப்பேச்சில் நாம் அறியும் ஞானியின் வீச்சு கடிதங்களில் இருக்காது. கடிதங்களில் நாம் காணும் ஞானியைக்கூட அவருடைய கட்டுரைகளில் காணமுடியாது, கட்டுரைகளில் இருக்கும் ஞானியைக்கூட மேடையுரைகளில் காணமுடியாது. ஞானியை இன்றையதலைமுறையினர் கோவையின் அரங்க உரைகளிலேயே பெரும்பாலும் கண்டிருப்பார்கள். நூல்களில் சிலர் வாசித்திருப்பார்கள். அவர் உரையாடல்களில் முழுமை நிகழ்ந்த ஆளுமை. எம்.கோவிந்தன் அப்படிப்பட்டவரே. பல அசல்சிந்தனையாளர்கள் அப்படி உரையாடல்களிலேயே நிகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எவருடன் உரையாடுகிறார்கள் என்பதும் முக்கியம். அவர்களை தேடிச்சென்று உரையாடுபவர்கள் அமையவேண்டும். அவர்கள் அவர் கூறுவதை எதிர்கொண்டு பெற்றுக்கொள்பவர்களாக அமையவேண்டும்.

[மேலும்]

ஞானிக்கு இயல் விருது…

முந்தைய கட்டுரைகடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைஎன்றும் புதியவை என…