ஞானி-17

ஞானி பேசுகையில் அவர் குரல் மேலெழுந்து வராமல், தாழ்ந்து தாழ்ந்து செல்வது ஒரு விந்தையான அனுபவம். அவர் துயரடைவது போலவோ நம்பிக்கை இழப்பது போலவோ தோன்றும். ஆனால் உண்மையில் எதிரில் இருப்பவரை பார்க்க முடியாமல் இருப்பதனால் தன் சிந்தனைகளை தானே பார்த்து. அதன் தர்க்கங்க்ளுக்குள் உள்ளே சுழன்று கொண்டிருப்பதன் விளைவு அது. ஒரு கட்டத்தில் அவருடைய உரைகள் நீண்ட தன்னுரையாடல்களாக ஆகிவிட்டன. மனம் நேரடியாக நாவில் வெளிப்படுவது போல. ஆகவே அவற்றில் ஒரு ஒழுங்கு இருக்காது.பெரும்பாலும் உரையாடல்களில் ஒழுங்கை உருவாக்குபவர் எதிரிலிருப்பவர்தான். அவருக்கு புரியும்வகையில்  அடுக்கும்பொழுதுதான் புறவயமான ஒழுங்கு உருவாகிறது. ஞானியின் பேச்சில் ஒரு அகவயமான ஒழுங்குதான் இருக்கும். அவரை நன்கு அறிந்தவர்களால் தான் அவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

தமிழியம் சார்ந்து ஞானி செயல்பட தொடங்கிய பின்னர் நான் அவருடன் நேரடியான தொடர்புகளை குறைத்துக்கொண்டேன். குறையநேர்ந்தது என்பதே உண்மை.எனக்கும் அவருக்குமான பொதுவான களங்கள் மிகவும் குறைந்து வந்தன. நேரடியாகச் சொல்லவேண்டும் என்றால் அவர் ஈவேரா மீது கொண்ட புதிய பற்றை என்னால் எவ்வகையிலும் ஏற்க முடியவில்லை. ஈவேராவின் சிந்தனைகள் எந்த பண்பாட்டுக்கும் எதிர்மறைவிசைகள் என்றே நினைக்கிறேன். அவை மூர்க்கமானவை, அடிப்படையற்ற காழ்ப்புகளால் ஆனவை, சிந்தனைக்கு எதிரான பாமரத்தனத்தை வளர்ப்பவை. இன்றுவரை இந்த எண்ணத்தில்தான் என் மனம் நிலைகொள்கிறது. ஞானியுடனான இந்த முரண்பாட்டை என்னால் தீர்த்துக்கொள்ளவே முடியவில்லை.

கோவைசெல்லும்போது எப்போதாவது ஞானியைச் சந்திப்பேன்.ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் இருந்தால் எழுதுவேன். முன்பிருந்த தொடர்உரையாடல் முற்றாகவே நின்றுவிட்டது.  ஞானி என்னை அவருடைய உள்ளத்திலிருந்தும் சற்று விலக்கி விட்டார் என்று உணர்ந்தேன். உளக்கசப்புகள் எதுவும் இல்லை, இயல்பான விலக்கம்தான் அது, ஞானியின் புதிய நண்பர்கள் அவரை முழுமையாகவே தங்கள் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். அவர்களுக்கு தமிழறிஞர் ,மார்க்சிய அறிஞர் என்ற முகம் கொண்ட ஓர் ஆளுமை தேவைப்பட்டது. அவருக்கும் அவர்கள் வெளியுலகமாக அமைந்தனர்

ஞானி தமிழியர் அளிக்கும் தரவுகளினூடாக தமிழகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.முன்னர் இருந்த தமிழ்த்தேசியம் சார்ந்த பற்று ஒரு தீவிரநிலைபாடாக மாறியது. நேரடியான விருப்புவெறுப்புகள் உருவாகலாயின. அந்த பார்வை ஒவ்வொருமுறை நான் சந்திக்கும்போது விரிந்து விரிந்து ஒருவகையான அடிப்படைவாதமாகவும் அது சார்ந்த கடுமையான காழ்ப்புகளாகவும் மாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஞானி ‘பார்ப்பனர்’ ‘வடுகர்’ போன்ற சொற்களை பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்.

தமிழகம் சங்ககாலம் முதல் தொடர்ச்சியாக தமிழரல்லாதவர்களால் ஆக்ரமிக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, வறுமைகொண்ட ஒரு பகுதி என்றும்; இப்பொழுதும் தமிழகத்தின் நிலப்பகுதியின் செல்வம்; அரசியல்; அதிகாரம் போன்றவை தெலுங்கர்கள் போன்றவர்களிடமே இருக்கின்றன என்றும் ஞானி கருதலானார். முன்பு மு.கருணாநிதி, சி.என்.அண்ணாத்துரை ஆகியோர் பற்றி நல்லெண்ணம் கொண்டிருந்தவர் பின்னர் அவர்கள் அனைவருமே தெலுங்கு முகங்கள் என்று சொல்லத்தொடங்கினார்.

அக்காலத்தில் ஒருமுறை நான் அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது மலையாளிகள் குடியேறி கோவையை அழித்துவிட்டதாகக் கூறினார். கோவையின் தெலுங்கர்கள் கோவைக்கு மிகப்பெரிய சுமை என்றும், கோவையின் பலபகுதிகளில் ராஜஸ்தானிகள் மார்வாடிகள் உட்பட வட இந்தியர்கள் ஆக்ரமித்துவிட்டார்கள் என்றும் பேசிக்கொண்டிருந்தார். ஓர் ஆரம்பநிலை அரசியல்இளைஞனுக்குரிய வேகமும் அதற்கான தர்க்கமும் கொண்டிருந்தார்.  “தமிழகத்தை உண்ணிப்பூச்சிகள் மாதிரி ரத்தம் உறிஞ்சி அழிக்கிறாங்க. இன்னிக்கு தமிழகம் வெளிறி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கு” என்று ஞானி கூறினார்.

நான் அவரிடம் முன்பு தமிழ்த்தேசிய பற்று பற்றி விவாதிப்பதில்லை. அது அவருடைய தனிமையைப் போக்கும் ஒரு எளிய உலகம் என நினைத்தேன். அந்த தீவிரத்தைக் கண்டபின் மூன்றுமுறை விவாதித்தேன். “வரலாறெங்கும் தொடர்குடியேற்றங்கள் வழியாகத்தான் நாகரிக வளர்ச்சியும் பரிமாற்றமும் நிகழ்ந்துள்ளது? தேசஎல்லைகள் உருவாகாதிருந்த காலகட்டத்தில், தேசஎல்லைகள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் குடியேற்றங்களினூடாகவும் படையெடுப்புகளினூடாகவும் மக்கள் இன்னொரு இடத்திற்கு செல்வதென்பது காற்று உலாவுவது போன்ற ஒன்றாகதானே இருந்தது? வளம் மிக்க நிலங்களுக்கு புதிய மக்கள் சென்று சேர்வதும் வறண்ட இடங்களை விட்டு செல்வதும் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நிகழ்ந்த ஒன்று. இவ்வாறு செல்பவர்கள் செல்லுமிடத்தில் நிலம்திருத்தி தொழில் வளர்த்து வளர்ச்சியை உருவாக்குகிறார்களே ஒழிய, அழிவை அல்ல” என்றேன்

“சென்றகாலங்களில் மக்கள் தொகை என்பது பெரும்செல்வமாக இருந்தது. சங்ககாலத்தின் மக்கள் தொகை அவ்வண்ணமே நீடித்திருந்தால் தமிழகத்தில் இன்று காணும் ஏரிகளும் வயல்களும் உருவாகியிருக்காது. தமிழகத்தின் பிற்காலச் சோழப்பேரரசு போன்ற அமைப்புகள் உருவாகியிருக்காது. தமிழ் பண்பாடென்று சொல்லக்கூடிய எதுவுமே உருவாகியிருக்காது. இது எந்த பண்பாட்டுக்கும் பொருந்துவதே. பண்டைய காலத்தில் பழங்குடிகளை தாக்கிச் சிறை பிடித்துக்கொண்டு வந்து தங்கள் பழங்குடிகளுடன் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொள்ளும் வழக்கம்தான் இருந்தது. தங்கள் பழங்குடிகளுக்கு வருபவர்களை வரவேற்று சேர்த்துக்கொள்ளும் வழக்கம் உலகெங்கும் இருந்தது. நீங்க்ள் சொல்லிக்கொண்டிருக்கின்ற அந்நியரை விலக்குதல் என்னும் மனநிலை மிகச்சிறிய பழங்குடிகளின் இயல்பு. அப்பழங்குடிகள் அவ்வாறே எந்த வளர்ச்சியும் இன்றி காட்டு மக்களாகவே நீடிக்கிறார்கள்” என்று நான் சொன்னேன்.

“சங்ககாலம் முதல் இங்கு நிகழ்ந்துள்ள குடியேற்றங்களின் விளைவாகவே வரண்ட நிலங்கள் நீர்வளம் பெற்றன. கோவையின் வளர்ச்சிக்கு அங்கு வந்த அயலவர்கள் மிகப்பெரிய கொடையாளர்கள். அவர்கள் இங்கே சுரண்டி உண்ணும் பொருட்டுவரவில்லை. வணிகத்தின் பொருட்டும் தொழிலின் பொருட்டும் வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களால் இங்கு வந்து வளர்ந்த தொழில்கள் என்ன என்பது உங்களுக்குத் தெரியும் இதைப்போல திறன்மிக்க தொழில் நிபுணர்களும் கல்வியாளர்களும் இங்கிருந்து உலகெங்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். மிக அதிகமாக குடியேற்றம் நிகழும் அமெரிக்காவே மிகவும் செல்வாக்கான நாடாக இருந்திருக்கிறது. பஞ்சத்தாலோ வறுமையாலும் அகதிகளாக வருபவர்கள் உண்டு. அவ்வாறு அவர்கள் வருவதற்கான உரிமையும் உண்டு. பூமியின் எப்பகுதியும் அங்கே ஏற்கனவே சென்றுவிட்டவர்களுக்குரிய தனிச்சொத்து அல்ல” என்றேன்

“தமிழகத்தில் இன்று காணும் தொழில்வளர்ச்சியும், பிறபகுதியிலிருந்து தொழிலாளர்கள் இங்கே வரத்தொடங்கியதும், 1992க்குப்பின்பு , தாராளமயமாக்கத்தின் வழியாக உருவான தொழில்வளர்ச்சியின் விளைவாகவே. 1980-களில் தமிழகத்தின் பலபகுதிகளில் பெரியபஞ்சமும் தொழிலின்மையும் வாட்டியபோது ஏறத்தாழ ஐம்பது லட்சம் தமிழர்கள் இந்தியாவெங்கும் பஞ்சம்பிழைக்கப்போய் அந்தந்த நிலங்களிலேயே தங்கிவிட்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே தமிழக மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர் இன்றிருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் மேலானவர்கள். கேரளத்தில் மட்டும் பன்னிரண்டு லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே ஏழுலட்சத்துக்குமேல் இருப்பதாகவும் அரசுக் கணக்குகள் சொல்கின்றன. அவர்கள் கேரளத்தில் பொருளியல் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள். கேரளத்தின் அனைத்து வெற்றிகளிலும் அவர்களுக்கும் பங்குண்டு” என்று நான் சொல்வேன்.

“இன்று ஈழத்தவர்கள் போரிலிருந்து தப்பி அகதிகளாக உலகமெங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸிலும் கனடாவிலும் நார்வேயிலும் ஸ்வீடனிலும் குடியேறும் இலங்கைத்தமிழர்கள் வந்தேறிகளும் வந்தொட்டிகளும் அந்நியர்களும் அல்ல. அவர்கள் அந்நிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றுவர்கள். அவர்கள் அந்நிலத்தின் குடிமக்கள் .அவர்களின் சந்ததிகளுக்கும் உரியதுதான் அந்த நிலம். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் குறுகிய தேசியவாதம் உங்களை மேலும் மேலும் அடிப்படைவாதத்திற்கு தள்ளுகிறது. நீங்க்ள் அடைந்த அனைத்து உளவிரிவையும் இல்லாமலாக்கி உங்களை சிமிழுக்குள் அடைக்கிறது” என்று சொன்னேன்.

ஆனால் அவர் முகம்சிவந்து தலைதிருப்பிக்கொண்டார். தொடர்ந்து என்னிடம் இதைப்பற்றி அவர் பேச விரும்பவில்லை. “அதெல்லாம் வேறு, தமிழகத்தில் நடப்பது வேறு” என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். “தமிழகத்துக்கு வந்து இங்கு தமிழர்களின் செல்வத்தை வெளியே கொண்டு செல்லும் சக்தி என்ன?” என்று அவரிடம் கேட்டேன். “இங்குள்ள மலையாளிகளும் மார்வாடிகளும் ஈட்டும் செல்வம் இங்கேயே முதலீடாக ஆகும்போது அவர்கள் ஏன் தமிழகத்தைச் சுரண்டுகிறார்கள் என்று சொல்லவேண்டும்?” ஆனால் ஞானி அக்கேள்விகளை எதிர்கொள்ளவில்லை. “நீங்க அப்டித்தான் சொல்வீங்க”என்றார். அன்று மாலை கோவையில் கலாப்ரியாவுக்கு நாங்கள் எடுத்த விழாவுக்கு வந்து அவர் சொல்லிக்கொண்டிருந்ததையே கேள்வியாகக் கேட்டார்

ஞானி தமிழர்களில் பலருக்கும் இருக்கும் அத்தனை உளக்கோளாறுகளையும் மெல்ல மெல்ல அடைவதை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தியாவுக்கு வந்து இந்திய வணிகத்தை அழித்து, தங்கள் வணிகத்தை சுமத்தி, அரசியல் அதிகாரத்தை அடைந்து, அதைக்கொண்டு வணிகத்தை மேலும் பெருக்கி, வரியாகவும் லாபமாகவும் இங்கிருந்த செல்வத்தின் பெரும்பகுதியை சுரண்டி தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்ற வெள்ளையரின் ஆட்சி இங்கே ஒரு மறுமலர்ச்சியை நிகழ்த்தியது என்றும்; இந்தியவாழ்வில் சாதகமான விளைவுகளை உருவாக்கியது என்றும் ஞானி சொல்லலானார். ஆனால் இந்தியாவில் ஒரு பகுதியில் இருந்து இங்கு வந்து , இங்கு வணிகம் செய்து, அந்த லாபத்தை இங்கேயே மீண்டும் முதலீடாக்கி, இங்குள்ள அனைத்து வளர்ச்சிக்கும் காரணமான வடஇந்தியர்களோ பிற மாநிலத்தவர்களோ சுரண்டுபவர்கள் என்று சொன்னார்.

தமிழர்கள் உலகமெங்கும் குடியேற வேண்டும், அங்கெல்லாம் அவர்களுக்கு அதிகாரமும் உரிமையும் வேண்டும் என்பவர் தமிழகத்தில் குடியேறியவர்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்றார். தெலுங்கர்கள் வந்தொட்டிகள், தமிழக சிந்தனையில் நச்சுபரப்புபவர்கள், என்று சொன்ன அவரே ஈ.வே ராமசாமி தமிழர்களின் தலைவர் ஏனெனில் அவர் ஒருவகையான ’தேசியமார்க்சியர்’ என்றார். ஒரு சிந்த்னையாளனின் சரிவு என்றுதான் அதை நான் கருதுகிறேன். நல்லவேளையாக அந்தக் காலகட்டம் அவரிடம் நீடிக்கவில்லை.

இது அவருக்கு அவரை சூழ்ந்திருந்த அன்றைய தமிழ்தேசியர்கள் உருவாக்கியதா அல்லது வேறு தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து ஏற்பட்ட கசப்பா என்று எனக்குத்தெரியவில்லை. நாமக்கல்லில் ஒரு செம்மொழிக் கருத்தரங்கு நடந்தது. அதன் இடைவேளையில் ஞானியுடன் வந்த ஒருவர் ‘தெலுங்கனுங்க தமிழை அழிக்கிறானுங்க” என்று பெருங்கூச்சல் போட்டார். ஞானியைச் சூழ்ந்திருந்தவர் எவர் என்பதை அன்று கண்டேன். அது மிகப்பெரிய விலக்கத்தை உருவாக்கியது.

இக்காலம் முழுக்க ஞானியுடனான என்னுடைய உறவுகளை மிகக் குறைந்தே வைத்திருந்தேன். அவரை நிராகரித்து எதுவும் எழுதிவிடக்கூடாது என்றிருந்தாலும் கூட ஓரிரண்டு முறை எழுத நேர்ந்தது. புனித தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையை இங்கிருந்த கத்தோலிக்க திருச்சபை தன் மறைமுக அமைப்புகள் மூலம் இங்கே பதிவாக்கத் தொடங்கியதை எதிர்த்து நான் எழுதிய கட்டுரை அதில் ஒன்று.

கி.பி. 4 அல்லது 6-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்தவர் கானாயி தாமஸ் என்று அழைக்கப்படும் சிரியநாட்டு பயணி. அவர்களிலிருந்துதான் இங்கு சிரிய மிஷன்கள் உருவாகி கிறித்துவ மதமாற்றம் தொடங்கியது. இது ஆதாரங்களால் ஆணித்தரமாக நிறுவப்பட்ட செய்தி. ஏசுவின் நேரடி மாணவரான புனித தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பது மிக வெளிப்படையான ஒன்று. வத்திக்கான் இன்னமும் கூட அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்தியாவில் மதம்பரப்புவதற்கு அந்த கதை தேவை என்பதனால் அதை சிறுகச் சிறுக கட்டி பிரபலப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

எழுபது எண்பது வரைக்கும் கூட கானாயி தாமஸ் வந்த மலை என்றே செயிண்ட் தாமஸ் மலை அழைக்கப்பட்டது. 80களில்தான் வந்தவர் புனித தாமஸ் என்று மாறியது அங்கிருந்த அராமிக் கல்வெட்டுகளும் சிரியக் சிலுவைகளும் அகற்றப்பட்டு புதியவை வைக்கப்ப்ட்டன. அங்கு வந்தவர் கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித தாமஸ் என்று நூல்கள் எழுதப்பட்டன. வெளிநாட்டுப் பயணிகளால் போலிப்பதிவுகள் உருவாக்கப்பப்ட்டன.அதன் பொருட்டு நிகழ்ந்த பெரிய கருத்தரங்குகளில் பங்கேற்பாளர்களுக்கு நன்கொடைகள் அளிக்கப்பட்டன.

அந்த கருத்தரங்கு ஒன்றில் ஞானி பங்கெடுத்தார் என்பது எனக்கு மிக கொந்தளிப்பான ஒரு விஷயமாக இருந்தது. வெளிப்படையாக அது ஒரு நேர்மையற்ற செயல் என்று தான் எழுதினேன். அதற்கு ஞானியும் பதிலளித்தார். ஞானி தமிழ்த்தேசியத்துக்கான தேடலில் ஒரு பகுதியே அச்செயல்பாடு என்றார். தாமஸிலிருந்துதான் மொத்தத் தமிழ்ப்பண்பாடும் உருவாகியது என்றும்; தமிழிலுள்ள மொத்த சமயமும் ,மெய்யியலும் ,நெறிநூல்களும், திருக்குறள் உட்பட அனைத்தும் தாமஸின் கொடையே என்றும் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் ஞானி. ஆனால் அவர்கள் நாங்களும் தமிழர்களே என்று சொல்கிறார்கள், ஆகவே அதை ஏற்றுக்கொள்கிறோ என்றார். தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆகவே அவர்கள் நம்மவரே, அவர்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பார்வையை முன்வைத்தார். இதெல்லாம் எனக்கும் அவருக்குமான விலக்கத்தை உருவாக்கின. அவை அனைத்தும் என் வலைத்தளப்பதிவுகளில் உள்ளன.

அன்று ஞானி தான் செல்லும் திசையைபற்றி அறிந்திருந்தாரா என்பது எனக்கே ஐயமாக இருக்கிறது. ஏனெனில் மேலும் பத்தாண்டுகளுக்குபிறகு அவரை சந்திக்கும்போது அவர் தமிழ்த்தேசியத்தால் கைவிடப்பட்டவராக, தமிழ்த் தேசிய அலை சீமானின் காலடியில் சென்று முடிந்ததை ஒட்டி வெட்கமும் குறுகலும் கொண்டவராக இருந்தார். நான் சற்று ஏளனமாக அதைப்பற்றி பேசத்தொடங்கியதுமே  “அதைப்பற்றி பேசவேண்டாமே” என்று சொல்லி என் கையைப் பற்றினார். அதன்பிறகு ஒரு சொல்லும் நான் அதைப்பற்றி அவரிடம் உரையாடியதில்லை.

[மேலும்]

தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்

தமிழியம்,ஞானி:கடிதங்கள்
முந்தைய கட்டுரைஎவருடன் பகை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர்