ஞானி-16

பின்தொடரும் நிழலின் குரல் நாவல் குறித்தும் சுந்தர ராமசாமி குழப்பமான நிலைகொண்டிருந்தார். முதலில் அந்நாவல் குறித்து மிகஉற்சாகமான, பரவசமான எதிர்வினையை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய மாடியில் ஒருநாள் அமர்ந்து அதைப்பற்றி நீண்ட உரையாடல் நிகழ்த்தியது நினைவிருக்கிறது. அந்நாவலில் வீரபத்ரபிள்ளை முதல்முறையாக கட்சி அலுவலகம் செல்லும் காட்சியை ‘கிளாஸிக்!”என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கே.கே.எம் கொடியேற்றும் காட்சியை வாசித்து பழைய நினைவுகளில் ஆழ்ந்து மெய்சிலிர்ப்படைந்ததாகச் சொன்னார்.எம்.என்.கோவிந்தன் நாயர் பற்றி நிறையப் பேசினார்.

ஆனால் மேலும் சில நாட்களுக்குப்பின் அவர்களை சூழ்ந்திருந்தவர்களின் மறுப்புச்சிந்தனை அவரை ஆட்கொண்டிருக்கலாம், அல்லது அதன் பிற்பகுதியின் அமைப்பு அவருக்கு உவப்பில்லாமல் இருந்திருக்கலாம், அந்நாவலை தான் படித்து முடிக்கவில்லை என்ற நிலைபாடை எடுத்தார். கடைசிவரைக்கும் அதையே கூறிக்கொண்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து வழக்கம் போல அதிலிருந்த தத்துவவிவாதங்கள் மற்றும் மிகைகற்பனைகள் கொண்ட பகுதிகள்மேல் தன்னுடைய ஒவ்வாமையை தெரிவித்தார். “அந்த நாவல் ரெண்டுபக்கமும் பேசுது. அது என்ன சொல்லவருதுன்னு தெளிவா இல்லை. மார்க்ஸிய நாவலாகவும் இருக்கு மார்க்சிய எதிர்ப்பு நாவலாகவும் இருக்கு…” என்றார். அதை அன்று பலர் சொல்லியிருந்தார்கள்.

“சார், இது ஒரு போஸ்ட்மாடர்ன் டெக்ஸ்ட், நான் ஒரு கிராண்ட் நெரேஷனை உத்தேசிக்கலை. நான் ஒரு கருத்துப்பரப்பை மட்டும்தான் உருவாக்க விரும்பறேன். அதிலே எல்லாம் இருக்கும்.நான் வலியுறுத்துறதுன்னு ஏதுமில்லை, நான் கேட்கிற கேள்விகளும் சில பயணங்களும் மட்டும்தான் இதிலே இருக்கு. விஷ்ணுபுரமும் இதே அமைப்பிலேதான் இருக்கு” என்றேன். “அந்த மெட்டஃபிக்‌ஷ்டன் வடிவம் எதுக்கு?”என்றார். “அதுதான் இந்த நாவலோட பன்முகத்தன்மையை உண்டுபண்ணுது. எதையும் குறிப்பாச் சொல்லவந்த நாவல் இல்லை இது” என்றேன்.

ஞானி என்னிடம் “அந்த நாவல் காட்டுற அறப்பிரச்னை அவருக்கு உண்மையிலே ஒருகாலத்திலே இருந்திருக்கு. எனக்கும் அவருக்குமான வேறுபாடு இதுதான். அடிப்படையில் மார்க்சியத்தில் இருக்கும் இந்த அறப்பிரச்னையைக் கண்டதுமே அப்டியே அதை கைவிட்டுட்டு முன்னகர்ந்தவர் அவர். நான் அப்டி செய்யலை. மார்க்சியம் என்பது ஒரு அடிப்படையான கனவு, அது இல்லாம மானுடத்தின் மீட்பு வேறில்லைன்னு நினைச்சேன். ஆகவே அதன்மேல் அதன் நடைமுறையிலிருந்து உருவாகும் இந்த பழியும் திரிபும் களையப்படவேணும்னு நினைச்சு மார்க்சியத்தை மறுவார்ப்பு செய்யவும் நம்ம சூழலில் புதிதாக அதை கண்டடையவும் வாழ்நாளை செலவிட்டேன். நான் என்னைப்போல ஒருவருக்கு அந்நாவல் கொடுக்குற அர்த்தம் அவருக்கு கெடைக்காது.  நீங்க டார்க்னெஸ் அட் நூன் மாதிரி கூர்மையா மார்க்சியத்தை போட்டுச்சாத்தியிருந்தா ஒருவேளை அவர் திருப்தி அடைஞ்சிருப்பார்”என்றார். அது உண்மை என்றுதான் இன்று நான் நினைக்கிறேன்.

ஞானி மார்க்சியத்திலிருந்து ஒரு  ‘தமிழ்மார்க்சியம்’ நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. அதன் அடிப்படையான மெய்யியல் என்ன, அதை தமிழ்ச்சூழலில் எவ்வாறு வகுத்துக் கொள்ளமுடியும் என்பதே அவருடைய கேள்வியாக இருந்தது. “இதான் அடிப்படைக் கேள்வி. ஜீவா முதல் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் வரை எவ்ளவு மாமனிதர்கள். எவ்வளவு பெரிய தியாகங்கள். அதெல்லாம் ஏன் இங்க உள்ள சாமானிய ஜனங்களுக்குப் புரியலை? ஏன் அவங்க பேசினது இங்க உள்ளவங்களுக்குப் போய்ச் சேரலை?” அதற்கான விடையாக அவர் கண்டடைந்தது காந்தியம், பெரியாரியம்.

“காந்தியும் பெரியாரும் இங்க உள்ள சாமானிய ஜனங்கள் கிட்ட உரையாடினவங்க. எப்டி? இங்க ஏற்கனவே இருந்த மெய்யியலோட வளர்ச்சியும் நீட்சியுமா அவங்க வந்தாங்க. காந்தி ஜைன மரபோட நீட்சி. அடிகள்னு அவரை தமிழ் மனசு நினைச்சது அதனாலேதான். பெரியார் இங்க உள்ள சித்தர் மரபோட நீட்சி” அப்படி ஓர் அடிப்படை மெய்யியல்சார்ந்த உரையாடலை இங்கே மார்க்சியம் நிகழ்த்தவில்லை என்பதே அதன் தோல்வி என்பது ஞானியின் எண்ணம். ஆகவேதான் மார்க்ஸியம் பெரியாரியத்துடனும் காந்தியத்துடனும் ஓர் ஆக்கபூர்வமான இணைப்பை, உள்வாங்குதலை நடத்தவேண்டும் என அவர் எண்ணினார்.

நான் அறிந்தவரை ஞானி 1990 வரைக்கும்கூட ஈவெரா மேல் பெரிய ஈடுபாடு கொண்டவர் அல்ல.ஈவெரா  ஒழுங்கற்ற சிந்தனையும் கோட்பாடின்மையும் கொண்டவர் என்பதே அவருடைய மதிப்பீடு. கீழ்வெண்மணி நிகழ்வில் ஈவெராவின் நிலைபாடு ஞானி உட்பட இடதுசாரிகள் அனைவருக்குமே பெரிய ஏமாற்றத்தையும் கசப்பையும் அளித்தது. ஆனால் 1992க்குப்பின் அவர் மெல்லமெல்ல ஈவெரா பக்கமாகச் சென்றார். கடைசிநாள் வரை ஈவெராவை விடவே இல்லை. ஞானியை ஒரு பெரியாரியர் என்று திட்டவட்டமாகவே சொல்லலாம். வேண்டுமென்றால் ஒரு மார்க்சியப்பெரியாரியர் என்று வகுக்கலாம்

எஸ்.வி.ராஜதுரை

அவர் பெரியாரை ‘மறுகண்டடைவு’ செய்ததில் எஸ்.வி.ராஜதுரைக்கு பெரும்பங்கு உண்டு. ராஜதுரையின் நூல்கள் வழியாக ஞானி ஈவெராவை முற்றிலும் புதிதாக வகுத்துக்கொண்டார். நான் இக்காலகட்டத்தில் ஈவெரா குறித்து ஞானியிடம் மிக விரிவாக விவாதித்திருக்கிறேன். அவர் சொன்ன எதையுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை. ஞானி திரும்பத்திரும்ப “நீங்க பெரியாரை இன்னும் கொஞ்சம் புரிஞ்சுகிடணும். அற்புதமான பல தளங்கள் அவர்ட்ட உண்டு”என்றார்

ஒருகட்டத்தில் “நீங்க தமிழரில்லை, அதான் பெரியாரைப் புரியலை உங்களுக்கு” என்றார் ஞானி. “இங்க தமிழ்நாட்டு கிராமங்கள் ஒவ்வொண்ணிலும் கிட்டத்தட்ட பெரியாரை மாதிரி ஒரு கிழடு உக்காந்திட்டிருக்கும். ஞானமும், கிறுக்குத்தனமும்,அக்கறையும், வாய்த்துடுக்குத்தனமும் எல்லாம் கலந்த ஒண்ணா இருக்கும் அது. அந்த கிழடுகளோட ஒரு பொதுவடிவம்தான் பெரியார். அவர் தமிழகச் சித்தர்களோட நீட்சி. சித்தர்களிட்ட்ட இருக்கிற எகிறி அடிக்கிறதன்மை, நிலையில்லாம அங்கங்க அப்பப்ப தோணுறமாதிரி வெளிப்படுற தன்மை எல்லாமே அவர்ட்ட இருக்கு. பெரியார் இந்த மண்ணிலே ஆதிநாள்முதல் இருந்திட்டிருக்கிற ஒரு மெய்யியலோட சமகால வெளிப்பாடு”

“முரண்பாடுகளை வைச்சு பெரியாரை மதிப்பிட்டா போய்ச்சேரமுடியாது. முரண்பாடுகளை வைச்சு காந்தியைக்கூட மதிப்பிட முடியாது. பெரியாரை அவரோட எதிர்ப்பை வைச்சு மதிப்பிடுங்க. அவரோடது எதிர்ப்பின் மெய்யியல்” என்று ஞானி சொன்னார். “அவரை அளக்க போஸ்ட்மாடர்ன் டூல்ஸ்தான் வேணும். அவரைப் போய்ச்சேர சம்பிரதாய மார்க்ஸியர்களாலே ஏன் முடியலைன்னா, மார்க்ஸியம் அவங்க கிட்ட மாடர்னிஸமாத்தான் இருக்கு. அந்த எடத்திலே நின்னுட்டுது அது. ஒரு மாடர்னிஸ்டுக்கு பெரியார் பிரிமிட்டிவான ஆள்னு தோணும். போஸ்ட்மாடர்னிஸ்டுக்கு அவர் ஒரு எதிர்ப்பாளர், எதிர்ப்பையே மெய்யியலாகவும் தத்துவமாகவும் கொண்டவர்னு தெரியும்”

”எஸ்.வி.ஆர் பெரியாரை அவருக்கேத்தமாதிரி எடிட் பண்ணி முன்வைக்கிறார். அது பெரியார் இல்லை. இன்றைக்கு தேவையான அளவுக்கு மறுவார்ப்பு செய்யப்பட்ட இன்னொரு பெரியார்” என்று நான் சொன்னேன். “ஆமா, புத்தரும் ஏசுவும் மார்க்ஸும் எல்லாம் அப்டி திரும்ப வார்க்கப்பட்டவங்கதான். அவங்க தங்களோட காலத்துக்கு எதிர்வினை பண்றாங்க. அதிலே இருந்து எல்லாக்காலத்துக்குமானதை நாமதான் திரட்டி எடுக்கணும். அப்டி எடுக்கப்படாத சிந்தனையாளன்னு ஒருத்தர் பேரைச் சொல்லுங்க’ என்றார் ஞானி. “அப்டிப்பாத்தா எஸ்.வி.ஆரும் வ.கீதாவும் செஞ்சிருக்கிறது மகத்தான பணி. வே.ஆனைமுத்து பண்ணியிருக்கிற வேலைக்குச் சமானமானது. பெரியார் தமிழ்நாட்டோட சிந்தனையிலே தவிர்க்கவே முடியாத முகம்”

பெரியாரை தக்கவைத்துக்கொள்ள ஞானி எல்லாவகையான முயற்சிகளையும் மேற்கொண்டார். “பெரியாரோட காழ்ப்புகளை ஏற்றுக்கொள்றீங்களா?”என்று நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன். “அது காழ்ப்பு இல்லை. நம்ம கிராமத்திலே ஒரு பெரியவர் கெட்டவார்த்தை சொல்றார். ஒரு சித்தர் வசைபாடுறார். அதையெல்லாம் அப்டியே நேர்ப்பொருளிலே எடுத்துக்கிடக்கூடாது. அவரோட பெர்சனாலிட்டி அது” என்றார். “பெரியாரிட்ட இருந்தது மெய்யியல் அல்ல, மெய்யியல் மறுப்பு மட்டும்தான்”என்று நான் ஒருமுறை சொன்னேன். “மெய்யியலோட எல்லா சாத்தியங்களும் மெய்யியலிலேயே அடக்கம். பெரியார் எதிர்மெய்யியலோட ஆள்”என்றார் ஞானி. “சார்வாகமும் ஸ்கெப்டிசிசமும் நிகிலிசமும் தத்துவங்கள் இல்லை, தத்துவ மறுப்புகள். ஆனா மெய்யியல் தரிசனங்கள்’

பெரியாரின் பிழையான புரிதல்களைப்பற்றி மேலும் விவாதித்தால் “நீங்க இ.எம்.எஸ்ஸை வைச்சு பெரியாரை புரிஞ்சுகிட முயற்சி பண்ணக்கூடாது” என்று ஞானி சொல்லிவிடுவார். ”இ.எம்.எஸ் பேரறிஞர். பெரியார் முறையான ,சீரான வரலாற்றுப்புரிதல் உள்ளவர் இல்லை. அப்டிப்பாத்தா காந்திகூட அப்டித்தான். காந்தி சொல்ற வரலாற்றை மட்டும் பாருங்க, அப்பப்ப டேட்டால்லாம் தப்பாத்தான் இருக்கும். ஆனால் காந்திகிட்டயும் பெரியார்ட்டயும்ம் வரலாற்றோட சாராம்சம் வந்து சேர்ந்திருந்தது. காந்திகிட்ட அது சமரசப்பாரவையாகவும் பெரியார்ட்ட எதிர்ப்பாகவும் வெளிப்பட்டது. மார்க்ஸியம் காந்தியையும் பெரியாரையும் மார்க்ஸிய மெய்யியலோட ரெண்டு சாத்தியக்கூறுகளாத்தான் பாக்கணும். மார்க்ஸியம் பிற தத்துவங்களை உள்ளிழுத்துச் சமரசம் பண்ணி மேலே போற எடங்களும் உண்டு, எதிர்த்து நிக்கவேண்டிய இடங்களும் உண்டு”

பின்னாளில் அவர் தமிழ்த்தேசியத்தை தீவிரமாகப் பேசியபோது பெரியார் பற்றிக் கேட்டேன். “அவர் கன்னடர் அல்லவா?” ஞானி அதற்கும் பதில் வைத்திருந்தார். “அப்படிப்பார்த்தால் காந்தி குஜராத்தி அல்லவா? கார்ல்மார்க்ஸ் யூதர் அல்லவா? தத்துவஞானிகளுக்கு மதம், சாதி, நாடு என்னும் அடையாளங்கள் இல்லை” என்றார். “தமிழ்த்தேசியம்ங்கிறது ஒரு போராட்ட வடிவம்தான், அதான் கடைசி இலக்கு இல்லை. காந்தியும் பெரியாரும் மார்க்ஸும் அராஜகவாதிகள். அவங்களுக்கு நாடு, அரசுங்கிற அமைப்புகள் மேலே நம்பிக்கை இல்லை. நாம அவங்களை முன்னுதாரணமாக கொண்டு ஒரு அறுதியான தேசியத்தை உருவாக்கலை.தேசியத்தை ஒரு போராட்டக்கருவியாகவே மார்க்ஸியர் நினைக்கணும். ஒரு ஏணிதான் அது. ஏறிப்போய் உக்காருற பரண் இல்லை ”

“மார்க்ஸியர்கள் மாடர்னிஸ்டுகளா நின்னுட்டதனாலேதான் அவங்களாலே சூழியலையும் புரிஞ்சுக்கிட முடியலை. மாடர்னிஸம் மனிதமையம் கொண்டது. மனுஷன் பட்டினிகிடக்கிறப்ப கருங்குரங்கு செத்தா என்னன்னு ஈ.கே.நாயனார் கேட்டார்னா அவர் மாடர்னிஸ்ட், அப்டித்தான் கேப்பார். போஸ்ட்மாடர்ன் பார்வைகொண்ட மார்க்ஸியருக்கு இயற்கைங்கிற ஒருமையை புரிஞ்சுகிட முடியும்” என்றார் ஞானி. “மார்க்ஸியம் போஸ்ட்மாடர்னிஸத்துக்கு எதிரா நிக்கணும்னு அவசியம் இல்லை. மார்க்ஸியம் போஸ்ட்மாடர்னிஸத்திலே இருந்து சில கருவிகளை எடுத்துக்கிட முடியும். பலவிஷயங்களை நிராகரிக்கவும் முடியும்” பின்நவீனத்துவத்தில் உள்ள மையம்தவிர்க்கும் பார்வையை, சிற்றலகுகளில் வரலாற்றை அணுகுவதை நாம் ஏற்கலாம். அது முன்வைக்கும் நம்பிக்கையின்மையையும் பொறுப்பின்மையையும் எதிர்க்கவேண்டும் என்றார் ஞானி.

ஒருகட்டத்தில் அவர் ஐரோப்பிய மார்க்சியத்தின்மீது அவநம்பிக்கை கொள்ளலானார். “அவங்க ஒரு உடைவை ஒரு திருப்புமுனையை உருவாக்கியிருக்காங்க என்பது உண்மை. ஆனா அவங்க அத்தனை பேருமே கல்வியாளர்கள். மார்க்சியத்தை அத்வைத வேதாந்தம் போல அகாடமிக் எக்சசைஸ் ஆக மாற்றிவிட்டார்கள்” என்று ஞானி என்னிடம் சொன்னார். “ஒருத்தர் மார்க்ஸ் பற்றிப் பேசுறப்ப மேற்கோளா எடுத்துவிட்டாலே சலிப்பா ஆயிடுது. என்ன அவசியம்? பிரச்சினையோட ஆழத்துக்கு போகணும், சிக்கலைப் புரிஞ்சுகிடணும், அதுக்கு எவ்வளவுதேவையோ அவ்வளவுதான் புத்தகஞானம் இருக்கணும். வெற்றுப்புத்தக ஞானம்போல அறிவுக்கும் செயல்பாட்டுக்கும் தடை வேற இல்லை. நான் காந்தி, பெரியார்னு சொல்றதே இந்த புத்தகஞானம், அக்கடமிக் ஞானம் மேலே உள்ள அவநம்பிக்கையாலத்தான்”

ஒருமுறை அல்தூஸர் பற்றிய ஒர் உரையாடல் நடந்தது. அல்தூஸரை மிகுந்த ஆர்வத்துடன் பேசிவந்தவர் ஞானி. ஆனால் அன்று “இந்த மாதிரியான அந்நியக்குரல்களை மேற்கோள் காட்டுறது, அவர்களை வைச்ச்சுக்கிட்டு விவாதம் செய்வது எல்லாமே மார்க்சியம் இனிமேல் அறிவாளிகள் தங்களுக்குள் பேசித்தீர்த்துக்க்க வேண்டிய தத்துவப்பிரச்னை மட்டும்தான்னுறு சொல்றதுக்கு சமானமானது. இன்னும் நெடுங்காலம் இவங்களைப்பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதே நல்லது” என்றார்

ஒரு கடிதத்தில் ”இவர்களால் ஐரோப்பாவில்சிறிய குறுங்குழுக்களை உருவாக்குவதற்கு அப்பால் எதையுமே சாதிக்க முடியாது” என்றார் ஞானி.  “அங்குள்ள உண்மையான பிரச்னையை இவர்கள் உணர்வதே இல்லை. கல்வித்துறைக்குள் ஒடுங்கிக்கொள்வதனால் அங்கு வந்து சேரக்கூடிய ஆர்வமுள்ள ஒரு சிறு இளைஞர்கூட்டத்தை மட்டுமே நம்பி பேசிக்கொண்டிருப்பவர்கள். நான் பேச விரும்புவது ஒரு தமிழ்மார்க்சியத்தை பற்றி. தமிழ் மார்க்சியம் என்பது எப்படி இங்கு வந்த ஒவ்வொரு சிந்தனையும் தமிழ்வடிவம் கொண்டதோ அதைப்போல தனக்கென வடிவம் கொள்வது உலக மார்க்சியத்துக்கு தன் கொடையாக இங்கிருந்து ஒன்றை கொடுப்பது நம் நோக்கமாக இருக்கவேண்டும். உலக மார்க்சியத்தில் ஏதாவது ஒருபகுதியை எடுத்துக்கொண்டு கண்மூடித்தனமாக பின்பற்றுவது அல்ல. அதற்கு மேற்கோள் மனநோயிலிருந்து வெளிவந்தே ஆகவேண்டும்”

ஞானி சொன்னார்: தமிழ்ச்சமணம். தமிழ்பௌத்தம் என்று நாம் சொல்லும்போது இந்திய பௌத்தத்தில் ஒரு கிளையை குறிப்பிடவில்லை, ஒரு வளர்ச்சிநிலையை குறிப்பிடுகிறோம். அவை முழுக்க முழுக்க தனித்தன்மை கொண்டதும் தனக்கென பண்பாட்டு தத்துவ அடையாளம் கொண்டதுமான சிந்தனைமரபாகவே வளர்ந்தன. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் காட்டும் தமிழ்ச்சமணமும் தமிழ்பௌத்தமும் முழுக்கமுழுக்க தமிழ்ப்பண்பாட்டின் உருவாக்கங்கள். தமிழரின் மெய்யியல்மரபில் முக்கியமான இடம் பெறுபவை. அவை பின்னர் இங்கிருந்து வடக்கே சென்று வட இந்தியாவை பாதித்தன.

பக்திஇயக்கம் என்பது இன்று இந்துமதமாக கருதப்படுகிறது என்றாலும் கூட வைதிகமதம் இங்கே வந்த போது அதிலிருந்து தென்னகம் உருவாக்கி எடுத்த தனிப்போக்கு அது. சிரமண மதங்கள்- உழைப்பவர் மதங்கள்- என்று அவை அழைக்கப்பட்டன. சூத்திரர்களின் எழுச்சியாக அது அமைந்தது. தென்னகத்திலிருந்து ஆழ்வார்களின் நாயன்மார்களின் குரலாக எழுந்து வடக்கு நோக்கி சென்று இந்தியா முழுக்கவே ஒரு விடுதலை இறையியலாக அது திகழ்ந்தது. அத்தகைய ஒரு எழுச்சியாக மார்க்சியம் இன்று புதுவடிவம் எடுத்து வரவேண்டும்.

பக்தி இயக்கம் இங்கு இன்று ஓர் அந்நியவரவென்று எவராவது சொல்ல முடியுமா என்ன? ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் விட்டு தமிழ்ப்பண்பாடு உண்டா?அதில் சாரமாக அமைந்திருக்கும் பல மெய்யியல் தரிசனங்கள் வேதாந்தத்திலிருந்தும் வேதமரபிலிருந்தும் பெறப்பட்டவை. அவை இங்கு வந்து இங்குள்ள பழங்குடி வழிபாட்டு முறைகள் அனைத்திலிருந்தும் தங்களுக்குகந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டன. தங்களுடன் முரண்படுபவற்றுடன் உரையாடி, அவற்றை இழுத்தெடுத்து தங்களுக்குள் இடம் கொடுத்து, தங்களை தகவமைத்துக்கொண்டன. மெல்ல மெல்ல இங்குள்ள அனைத்து பண்பாட்டுக்கூறுகளையும் இணைக்கும் ஒரு பெரிய அடித்தளமாக அவை மாறின.

அடிப்படையில் பிராமண -ஷத்ரிய மையம் கொண்டவையாக இருந்த வைதிகமதத்திலிருந்து சூத்திர மையம் கொண்ட ஒன்றாக பக்தி இயக்கத்தை தமிழகம் தனக்குரிய வகையில் உருவாக்கிக்கொண்டது. அதில் வேள்விக்கு பதிலாக ஆலய வழிபாடு இடம் பெற்றது. மந்திரம், சடங்குகளுக்கு பதிலாக கலைகளும் இலக்கியமும் இடம் பெற்றன. இசைப்பாடல்கள், கூத்துகள்  வழியாக அது தன்னை பரப்பியது. பக்தி இயக்கம் இல்லாவிட்டால் இந்தியா இல்லை.

பக்தி இயக்கத்தையே தன்னுடைய வெற்றிக்கொடியாக பிற்காலத்தைய வேதமரபினர் கூறினாலும் கூட ,வேதமரபிற்கு எதிரானது அது. அல்லது வேதமரபிலிருந்து எழுந்து அதற்கு மாற்றாக அமைந்தது . அதன் கதைகள் அனைத்திலுமே ஒரு வேதநிராகரிப்பு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். கண்ணப்ப நாயனார் கதை ஓர் உதாரணம். வேதபண்டிதருக்கு எட்டாத விழுப்பொருள் கண்ணை ஈர்ந்து கொடுக்கத் தயாராக இருந்த வேடனுக்கு வசப்பட்டது என்பதில் தான் அந்தக்கதையின் சாரமே உள்ளது. பக்திக்கதைகள் அனைத்திலுமே இந்த ‘டெம்ளேட்’ அமைந்திருப்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல.

இவ்வாறுதான் ஒரு பண்பாடு தன்னிலிருந்து இன்னொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும். அதுவே நீடித்து நிற்பதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஓர் உடலில் பொருத்தப்படும் ஒருபொருள் அவ்வுடலில் ஏற்கனவே இருக்கும் தசைகளுடன் உயிரூட்டமான உறவை உருவாக்கிக்கொண்டு அதன் உறுப்பாக மாறினாலொழிய அது அங்கு நீடிக்காது. மார்க்சியத்திற்கு ஐரோப்பிய வரலாற்றில் அவ்வாறு தொடர்ச்சி இருக்கிறது. பிளேட்டோவிலிருந்து மார்க்ஸ் வரைக்கும் தவிர்க்க முடியாத ஒரு தொடர்ச்சியை உருவாக்கலாம். அவ்வாறு ஒரு தொடர்ச்சி இங்கு அதற்குக் கிடையாது அவ்வாறு ஒரு தொடர்ச்சியை இங்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றால் மார்க்ஸுடன் உரையாடும் இங்குள்ள தரப்புகள் என்ன என்று கண்டுபிடிக்கவேண்டும். அவ்வாறு கண்டுபிடித்து அங்கிருந்து ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொண்டால் ஒழிய மார்க்ஸியம் இங்குள்ள இயல்பான தத்துவங்ளில் ஒன்றாக மாறாது என்று ஞானி சொன்னார்

தமிழ் பௌத்தம் சமணம் இரண்டும் எவ்வாறு தமிழகத்திற்கு தன்னை உருமாற்றிக்கொண்டன என்பதை மிக விரிவாக அவர் ஆராய்ந்தார்.ஜ்தமிழகத்துக்கு வரும் பௌத்தம் ஏன் மணிமேகலை நீலகேசி போன்ற பெண் தெய்வங்களை கொண்டதாக ஆகிறது? போதிசத்வர்களுக்கும் இணையான இடம் எப்படி தாராதேவிக்கும் யக்ஷிக்கும் அமைகிறது? சிலம்பு ஏன் கண்ணகியின் கதையைச் சொல்கிறது? ஏன் கவுந்தியை முன்வைக்கிறது?இங்கே ஏன் அம்பிகாயக்‌ஷி போன்ற சமணப்பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டன? ஏனெனில் இது பெண்தெய்வங்களை வழிபட்டு வந்த நிலம் .அந்தப் பெண்தெய்வங்களை உள்வாங்கும் பொருட்டு சமணமும் பௌத்தமும் சிலவகையான உருமாற்றங்களை அடைந்தன.

ஞானி சொன்னார்: அந்த உருமாற்றம் மார்க்சியத்தில் நிகழவில்லை எனில் நீண்டகால அளவில் அது தேய்ந்து ஒரு குறுங்குழுவாக ஆகும் நான் உயிரோடு இருப்பேன் என்றால் 2020 வாக்கில் மார்க்சியம் மிகச் சிலருடைய நம்பிக்கையாகவும், பெரிய இந்திய அரசியல் கட்சிகளில் ஒட்டிக்கொண்டு பரிதாபமாகத் தங்கி வாழும் ஒரு சிறிய கட்சியாகவும் நீடிப்பதைக்காணும் துயரம் எனக்கு வரும்.மிகச்சிறு குழுவாக இருப்பதனாலேயே அக்குழு மிக ஆக்ரோஷமாக கூச்சலிடுவதாகவும், தனக்குள் பூசலிட்டுக்கொள்வதாகவும் ஆகும். அது தன்னை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற பதற்றத்தில் மேலும் இறுகி, உரையாடல்களுக்கே வாய்ப்பில்லாததாக அனைவரையும் அகற்றுவதாக ஆகும்.

நான் “முள்ளம்பன்றியின் முள் அதன் துணிச்சலைக் காட்டவில்லை, பயத்தைக் காட்டுகிறது’ என்றேன். ஞானி வருத்தமாக முகத்தை தடவியபடி அமர்ந்திருந்தார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைதோல்பாவை நிழற்கூத்து
அடுத்த கட்டுரைஇலக்கிய வாசகனின் பயிற்சி