ஞானி-13

விஷ்ணுபுரம் நாவல் வெளிவருவதற்கு ஞானியின் பேருதவி இருந்தது நூற்றுஐம்பது பிரதிகள் முன்விலைத்திட்டத்தில் பணம் கட்டி வாங்கப்பட்டால் மட்டுமே அந்த பெரிய நாவலை வெளியிட முடியும் என்று அகரம் [அன்னம்] பதிப்பகத்தார் கூறினர். அவர்களும் பொருளியல் நெருக்கடியில் இருந்த பொழுது அது. உண்மையில் அன்றைய வாசிப்புச் சூழலில் எண்ணூறு பக்கம் கொண்ட நாவல் என்பது மிக அபாயகரமான வெளியீட்டு முயற்சி.

நான் அன்றிருந்த நண்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி உதவிகோரினேன்.ஞானி ஐம்பது பிரதிகளுக்கு மேல் முன்விலை திட்டத்தில் பதிவு செய்து உதவினார்.எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்னன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் உதவி அதற்கு இருந்தது.ஒருவழியாக நூற்றைம்பது பிரதிகளை எட்ட ஆறுமாதம் தேவைப்பட்டது.

நாவல் வெளிவந்த பிறகு ஞானி ஒருவாரத்திற்குள் மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். நாவலைக் குறித்த சிறந்த விமர்சனங்களில் ஒன்று அது. நாவலின் கருத்தியல் உள்ளடக்கம் சார்ந்து அணுகுவதே அவரது வழக்கமான முறை என்றிருக்க, அக்கடிதத்தில் அவர் நாவலின் கட்டமைப்பையும் பெரிதும் விரும்பியிருந்தார். அந்நாவலில் கதையோட்டத்தில் முதலில் நிகழ்காலம் பின்னர் இறந்தகாலம் அதன் பின் எதிர்காலம் என்ற அமைப்பு இருந்தது தொன்மமாக இன்றிருப்பவர்கள் நேற்று மனிதர்களாக இருந்தார்கள், இன்றைய மனிதர் நாளை தொன்மங்களாக மாறினார்கள். அந்த தொன்ம உருவாக்கத்தின் விதிகளை, விதியின்மைகளை, அழகை, அபத்ததை அந்நாவலின் அந்த வடிவச் சுழற்சி காட்டியது. ஞானி அதைச் சுட்டிக்காட்டி ‘ ஒரு நாவல் செய்யவேண்டியது அதுதான், அதன் வடிவமே ஒரு கருத்துவெளிப்பாடாக அமையலாம், அதன் அழகியலே அதன் செய்தி’ என்றார்.

வேடிக்கை என்னவென்றால் ,அன்று முதிராப் பின்நவீனத்துவம் பேசிக்கொண்டிருந்த பலருக்கு வாசித்தபின்னரும்கூட நாவல் இப்படி காலத்தால் முன்னும் பின்னும் நகர்கிறது என்பதே தெரியாமல் இருந்தது. நாவல் வெளிவந்து ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப்பின் பொ.வேலுச்சாமி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அவர் நாவலின் காலத்தை வரிசையான ஒழுக்காக எடுத்துக்கொண்டு, அதன் விளைவாக உருவான  ‘முரண்பாடு’களை என் பிழைகளாகக் ‘கண்டடைந்து’ விரிவாக விவாதித்து அடித்து நொறுக்க முயன்றிருந்தார்.அன்று நாவல் வெளிவந்ததுமே சுடச்சுட வந்த கட்டுரைகள் பலவற்றுக்கான சிறந்த சான்று அக்கட்டுரை.

அதன்பின் பழ அதியமான் ஏற்பாட்டில் அ.மார்க்ஸ் பங்குகொள்ள சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பொ.வேலுச்சாமியை நேரில் நேரில் பார்க்கையில் அந்த கட்டுரையின் அபத்தம் பற்றி அவரிடம் சொன்னேன். தான் சரியாக படிக்கவில்லை, ஆகவே அக்கட்டுரையை திரும்ப பெறுவதாக கூறினார். அவர் அதை எங்கும் சேர்த்துக்கொள்ளவில்லை. அந்த விவாதத்தில் பேசிய ராஜன் குறையும் நாவலை அகரவரிசைப்படியே எடுத்துக்கொண்டு  ‘வரலாற்றுப்பிழைகளை’ சுட்டிக்காட்டினார். அவர் அதற்குமுன்பே என் நண்பர், அதன்பின் அவரை ஒரு  பொதுவெளி நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அந்தக் கூட்டத்தில் அ.மார்க்ஸ், அ.மங்கை, பழ.அதியமான் போன்றவர்கள் அந்நாவலை அவர்களுக்குரிய வரட்டுவாத அளவுகோல்கொண்டு நிராகரித்திருந்தனர்- அது இந்துத்துவப் பிரச்சார நாவல், அவ்வளவுதான் விமர்சனம். அ.மார்க்ஸ் அதற்குச் சொன்ன முதன்மைக் காரணம், அது புத்தகக் கண்காட்சியில் இந்துத்துவநூல்களை விற்கும் கடையில் வைத்து விற்கப்பட்டது என அவர் கேள்விப்பட்டார் என்பது. அ.மங்கை அதில் விஷ்ணுவின் உடல் புகழப்பட்டிருப்பது அதை ஆணாதிக்க பிரதியாக ஆக்குகிறது என்றார். அதியமான் அதில் இந்து தெய்வங்கள் பாராட்டப்பட்டிருப்பது, அட்டையில் விஷ்ணு இருப்பது ஆகியவற்றை ஆய்வுச்சான்றாகச் சுட்டிக்காட்டினார்.அது மெட்டாபிக்‌ஷன், அதன் ஆசிரியர்கள் அதற்குள்ளேயே வருகிறார்கள், அவர்களின் உணர்வுகளும் கருத்துக்க்ளும்தான் அவையெல்லாம் என்று நான் சொல்லிச் சலித்து கடைசியில் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டேன்.

ஆனால் பத்தாண்டுகளுக்குப் பின்னர் பொ.வேல்சாமியின் அக்கட்டுரையை வளர்மதி என்பவர் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த விமர்சனக்கட்டுரை என்ற அடைமொழியுடன் தனது வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். பலர் மகிழ்ந்துகொண்டாடியிருந்தனர். தமிழில் வேடிக்கைகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை.இங்கே ஒருவர் முற்போக்கு தரப்பு என்று ஒன்றை எடுத்துவிட்டால் அவருடைய எல்லாப் பிழைகளும் மன்னிக்கப்படும், அவர் எதையும் படிக்கவேண்டியதில்லை, படிக்காவிட்டால் என்ன அவர் முற்போக்காகத்தான் இருக்கிறார் என்று கூறும் வாசகர்களின் வட்டம் அவருக்கு உருவாகி விடுகிறது.

பொ.வேலுசாமியின் கட்டுரை பற்றியும் அ.மார்க்ஸ், ராஜன்குறை ஆகியோரின் விமர்சனங்கள் பற்றியும் ஞானியிடம் சொன்னேன். ‘பொ.வேல்சாமி லீனியராக படிக்கவேண்டிய வரலாற்றை நான்–லீனியரா படிச்சு குழப்பிக்கிறார். நான்–-லீனியராக படிக்கவேண்டிய நாவலை லீனியரா படிக்கிறார், பரவாயில்லை அந்த மட்டுக்கும் ஒரு தெளிவு அவருக்கு இருக்கத்தான் செய்யுது” என்றார் ஞானி. “அ.மார்க்ஸ் The Grapes of Wrath நாவலிலே ஒரு வர்ணனையிலே வர்ர ஒரு ஆமை மாதிரி. வழியிலே எங்கியோ போய்ட்டு இருக்கும். தூக்கி சுழற்றி எப்டிப்போட்டாலும் திரும்ப சரியா அதே திசைக்கே போகும்”

அ.மார்க்ஸ் அன்று ஞானியை தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டிருந்தார். ஞானியின் அறுபதாம் ஆண்டுநிறைவை ஒட்டி அவர் மனைவி அவரை திருக்கடையூர் கோயிலுக்குக் கூட்டிச் சென்றதையெல்லாம் கூட எழுதி கடுமையாகச் சாடியிருந்தார். ஞானியிடம் அதைப் பற்றி கேட்டேன். “அது மார்க்சியத்திலே எப்பவும் இருக்கிற நஞ்சுதான். இப்ப கேரளத்திலே அம்பதுவருஷம் கட்சியிலே இருந்தவங்களுக்கே அந்தக்கட்சித் தோழர்களே அதை ஊட்டிவிட்டுட்டு இருக்காங்க” அப்போது கே.ஆர்.கௌரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். “இயந்திரவாத அணுகுமுறையை அ.மார்க்ஸ் கடைப்பிடிக்கக்கூடாதுன்னு சொல்லமாட்டேன். இயந்திரம் அதோட செயல்முறையை மாத்திக்கமுடியுமா என்ன?” என்றார் ஞானி.

“இந்த சல்லிசான ஒற்றைப்படைப் பார்வையை வைத்துக்கொண்டு ஓர் இலக்கியப்படைப்பை எப்படி இவ்வளவு தைரியமாக அணுகுகிறார்கள்!” என்று நான் அங்கலாய்த்தேன். “இயந்திரவாத அணுகுமுறைங்கிறது மார்க்சியத்தோட சாதனைகளிலே ஒண்ணு. எவ்ளவு கஷ்டப்பட்டு, எவ்ளவு நட்டு ஸ்க்ரூவை கழட்டி இதை உண்டுபண்ணியிருக்கோம்…உலகம் முழுக்க எத்தனை இலக்கியமேதைகளை கதற அடிச்சிருக்கோம். சும்மா சட்டுன்னு சொல்லிட்டீங்க!” என்றார் ஞானி சிரித்தபடி. “சொல்லுங்க, இதுக்குச் சமானமான இயந்திரவாத அணுகுமுறை அழகியல் விமர்சனத்திலே உண்டா?”

நான் “உண்டு, இலக்கணவாத அணுகுமுறைன்ன்னு அதுக்குப் பேரு. எழுத்துப்பிழை, சொற்றொடர்ப்பிழை, தகவல்பிழை கண்டுபிடிக்கிறது. அதுக்கு முதலிலே மொழின்னா இப்டி இருக்கணும், இலக்கியப்படைப்புன்னா இப்டி இருக்கணும், இதுதான் சரியானதுன்னு ஒரு இடத்திலே எழுத்தை உறையவச்சிரணும். அதை வச்சுகிட்டு எவ்ளவு வேணுமானாலும் தன்னம்பிக்கையா வெளையாடலாம்” என்று நான் சொன்னேன். “கம்பனையே நாங்க அதைவச்சுகிட்டு கதற அடிச்சிருக்கோம். பாரதியை புலம்ப வைச்சிருக்கோம்…” ஞானி குலுங்கிச் சிரித்து “நாங்க படைப்புக்கு பதில் வரலாற்றை ஃப்ரீஸ் பண்ணிடறோம்… நாங்கள்லாம் கொஞ்சம் பெரிய எடம்” என்றார்.

ஆனால் ஞானி அவருடைய நேர்ப்பேச்சுக்களிலுள்ள நகைச்சுவையை, அழகியல்பார்வையை கட்டுரைகளில் வெளிப்படுத்துவதில்லை. அவர் கட்டுரை எழுதுவதே அவருடைய தேடல் நிகழ்ந்த கோட்பாட்டு- தத்துவத்தளத்தில் ஊடுருவிச் செல்வதற்காக மட்டுமே. அவர் இலக்கியப்படைப்புக்களை அதற்கான கச்சாப்பொருளாகவே பயன்படுத்தினார். அதோடு கட்டுரைகளை அவர் சொல்லி எழுதவைப்பதனால் இயல்பாக அவை கொஞ்சம் நீண்டு தளர்வான மொழி கொண்டிருக்கும். பின்னாளைய கட்டுரைகளில் பலவிஷயங்கள் திரும்பத்திரும்ப வரும். ஞானியின் நூல்கள் அவருடைய தொலைதூர நிழல்கள் மட்டுமே.

அழகியல் என்பது தன் தளம் அல்ல, ஆகவே அதற்குள் நுழையலாகாது என ஞானி எண்ணினார். ஆகவே நான் மார்க்ஸியக் கோட்பாடு பற்றி ஏதாவது சொன்னால், ‘இது உங்க ஏரியா இல்லியே, இங்கவந்து நீங்க மாமூல் வசூலிக்கக்கூடாது” என்று சொல்வார். பெரும்பாலும் “ஆமா சார், சபலப்பட்டுட்டேன்” என்று ஜகா வாங்கிவிடுவேன். ஞானி திரும்பத்திரும்பச் சொன்னது ஒன்றுண்டு, எழுத்தாளர் இலக்கணம், கோட்பாடுகள் ஆகியவற்றை கற்று மறந்துவிடவேண்டும். “அதெல்லாமே களவுதான்… கற்று மற”என்றார். “ஆனா அந்த நாய்க்கு ஒருத்டவை பிஸ்கட் போட்டுட்டா விடாம கூடவே வரும்…ஆர்ட்லே அதெல்லாம் அப்டி பின்னாடி வந்திட்டிருந்தா மட்டும் போரும்”

ஞானி எப்போதுமே கலைஇலக்கியங்களில் இயல்பாக இருப்பவர், அவர் வாசித்தவற்றில் பெரும்பகுதி அவைதான். இருபத்துநான்கு மணிநேர மார்க்ஸியர்களை ஞானி கேலிசெய்வதுண்டு.“சின்னப்பிள்ளைங்க குஞ்சை பிடிச்சு கசக்கிட்டிருக்கிற மாதிரி எந்நேரமும் மார்க்சியத்தை பிடிச்சிட்டிருக்கவேண்டியதில்லை. அது பாட்டுக்கு கிடக்கட்டும், தேவை வரும்போ அதுவே செயல்படும்”என்று ஒருமுறை என்னுடன் வந்த ஒரு நண்பரிடம் சொன்னார்.

கோட்பாட்டாளர்களின் மிதமிஞ்சிய மேற்கோள்பித்து, திருகல்மொழி, ஒர் எளிய விஷயத்தையே சிக்கலாக்கி விவாதப்பொருளாக்குவது ஆகியவற்றை ஞானி எப்போதுமே வேடிக்கையாகவே பார்த்தார். “சின்னப்பிள்ளை பீய போட்டு அதிலேயே சறுக்கி வெளையாடுறதை மாதிரி” என்றார். “சொல்றதை தெளிவாச் சொல்லணும் அதேசமயம் அது மூர்க்கமானதா இல்லாமலும் இருக்கணும். நீ சொல்றதை சகமார்க்ஸியனே புரிஞ்சுக்கலைன்னா ஜனங்கள்ட்ட எப்டி பேசுவே?”

ஞானி மேற்கோள்களை கூடுமானவரை பயன்படுத்துவதில்லை. கட்டுரை எழுத எண்ணினால் மேற்கோள்களை சீராக குறித்து வைத்திருப்பார்- ஆனால் அவை கட்டுரையில் இருக்காது. “மார்க்ஸியர்கள் ரெண்டுவகை. சுத்தி கேக்க ஆளிருக்கோ இல்லியோ மக்கள்கிட்டே பேசிட்டிருக்கோம்னு நினைச்சுகிடறவங்க ஒருவகை.தங்களை கல்வியாளர்களா கற்பனை பண்ணிக்கிடறவங்க இன்னொரு வகை.இந்த ரெண்டாம் கூட்டம்தான் மேற்கோள் பித்தெடுத்து அலையறவங்க. எழுதுறதெல்லாம் ஆய்வுக்கட்டுரைன்னு நினைச்சுகிடறாங்க.சரி, அவங்களுக்கும் நம்மளைமாதிரியே வாசிக்க யாருமில்லைங்கிறது வேணுமானா ஒரு ஆறுதல்”

இன்று இதை எழுதும்போது சட்டென்று ஏக்கமாக உணர்கிறேன். அந்த நகைச்சுவையும் நையாண்டியும் கொண்ட ஞானியை கடைசி இருபதாண்டுகளில் பெரும்பாலும் இழந்துவிட்டோம். அவருடைய நோயும் தனிமையும், அல்லது அவர் மார்க்சியத்தின்மீதான இலட்சியநம்பிக்கையை இழந்து கோட்பாடாக அதைப் பற்றிக்கொண்டது, அல்லது இரண்டும் சேர்ந்து அவருடைய நகைச்சுவையை இல்லாமலாக்கிவிட்டன. ஆனால் விஷ்ணுபுரம் விழாக்களுக்கு அவர் வந்து நண்பர்களுடன் பேசும்போது இயல்பாக பழைய ஞானியின் சிரிப்பும் நையாண்டியும் கிளம்பி வரும். ஒருவரின் சொற்பொழிவைப் பற்றிச் சொன்னார் “ஆம்புளைங்களுக்கும் மல்டிப்பிள் ஆர்கஸம் வரும்னு இன்னிக்கு தெரிஞ்சுது” அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் அவர் பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அப்படிப்பட்ட புகைப்படங்கள் அரிது.

விஷ்ணுபுரம் பற்றி அன்று வந்துகொண்டிருந்த விமர்சனங்களில் மிகப்பெரும்பாலானவை விஷ்ணுபுரத்தில் எளிய தகவல்பிழைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள். ஆரம்ப கட்டத்தில் இந்த தவறுகளுக்கு நான் விளக்கங்கள் அளித்துக்கொண்டிருந்தேன். விஷ்ணுபுரத்தில் கற்பூரம் பற்றி வருகிறது, கற்பூரம் பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் கொண்டு வந்த பொருள், ஆகவே கற்பூரம் விஷ்ணுபுரத்தில் வரமுடியாது என்றொரு ஆய்வுக்கட்டுரை வந்தது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாடல் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று நான் அவருக்கு ஒரு பதில் எழுதினேன். விஷ்ணுபுரம் பச்சைமிளகாய் பற்றி பேசுகிறது, அது ஆப்ரிக்காவிலிருந்து பதினாறாம்நூற்றாண்டில் வந்தது என்று இன்னொரு கட்டுரை. ஆனால் காந்தார மிளகாய் பற்றிய குறிப்புகள் ஆயுர்வேதநூல்களில் முன்னரே உள்ளன என்று நான் எழுதினேன்.

ஒரு கட்டத்தில் சலிப்புற்றேன். அப்போது ஞானி என்னிடம் “அந்த நாவலின் தகவல்பிழைகள் என்று சிலவற்றை சுட்டிக்காட்டி அதைப்பற்றி விவாதத்திற்கு உங்களை இழுக்கிறார்கள். அந்த விவாதத்திற்கு இறங்குவதினூடாக வாசகர்கள் அனைவரையும் தகவல்பிழைகளை சரிபாருங்கள் என்ற கட்டாயத்திற்கு கொண்டு தள்ளுகிறீர்கள்.அது நீங்களே வாசகர்களை திசைதிருப்புவது. அதை செய்யாதீர்கள்” என்றார். அதன்பின் ஒரு வரிக்குக்கூட நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்குத்தேவையே இல்லை, வாசகன் என்பவன் கூட்டாகப்பார்த்தால் ஒரு பேருருவன், அவனுக்குள் நிகழும் விவாதங்கள் பிரம்மாண்டமானவை, ஆகவே அவன் அனைத்தும் அறிந்தவன் என்று கண்டுகொண்டேன்.

“அந்நாவல் ஒரு மெய்யியல் உருவகத்தை முன்வைக்கிறது, அதன் அடிப்படையில் ஒரு படிமக்கட்டமைப்பை உருவாக்குகிறது, உணர்வு ரீதியாக ஒரு சித்திரத்தை வரைகிறது, அனைத்திற்கும் மேலாக எழுதப்பட்ட வரலாற்றுக்கும் மேலாக இன்னொரு வரலாற்றைப் புலத்தை உருவாக்கிக் காட்டுகிறது, அதன்வழியாக எழுதப்பட்ட வரலாற்றின் விதிகளை அங்கே கொண்டுசென்று ஆராய்கிறது. அதை தமிழ் வாசகர்கள் அடைவதற்கு இன்னும் நெடுநாட்கள் ஆகும். ஒருவேளை அடுத்த தலைமுறை வாசகர்களே அங்கு வந்து சேரமுடியும்” என்று ஞானி என்னிடம் சொன்னார்

“அவர்கள் வந்து சேர்வதற்கு மிக தடையாக அமைவது இந்த தலைமுறையில் திரும்பத் திரும்ப எளிமையான அசட்டு முற்போக்குக் கதைகளையோ, ஆண்பெண் சரசக்கதைகளையோ வாசித்துப்பழகிய இந்த வாசகர்களின் வட்டம்தான்.  சிறுபத்திரிகை உலகின் இலக்கியவாசகர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான உறவுக்கதைகளையும் சல்லாபக்கதைகளையும் வாசிக்க ஆசைப்படும் மெல்லுணர்வாளர்கள்தான். கொஞ்சம் பாவனை செய்பவர்கள், அவ்வளவுதான். அவர்களிடம் அந்த நாவலை ஒப்படைக்க கூடாது. அவர்கள் சத்தம் போடுவதை எவரும் கவனிக்க போவதில்லை. அவர்களை எதிர்த்துப்பேசி நீங்கள் அவர்களை கவனிக்க வைத்துவிடக்கூடாது” என்றார்.

“விவாதிக்காம கோட்பாடும் தத்துவமும் வளராது. விவாதிச்சா கலை வளராது. கலையைப்பத்தி விவாதிக்கவே முடியாது. கலையோட உருவாக்கம், அதோட அரசியல்பின்புலம், அதோட கொள்கை இப்டி விவாதிக்கிறதெல்லாம் உண்மையைச் சொல்லப்போனா கலையைப்பத்தின விவாதமே கெடையாது. அதெல்லாம் கோட்பாட்டுவிவாதம்தான்” என்றார் ஞானி. “விவாதிக்க விவாதிக்க கோட்பாடுகள் சிக்கலா ஆகும், கலை ஈஸியா ஆகும். கலையை ஈஸியானதா ஆக்குறது கலையோட செயல்பாட்டுக்கே நேர் எதிரானது”

அந்நாளை நன்றாக நினைவுறுகிறேன். அன்று மதியம் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே ஏற்கனவே ஓர் ஈழநண்பர் இருந்தார். அவர் இன்றில்லை. அவர் மார்க்சிய ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர். அவர் நான் செல்லும்போது புலிகளை விமர்சித்துக்கொண்டிருந்தார், அந்த பேச்சினூடாக தமிழ்த்தேசிய உருவகத்தை கடுமையாக விமர்சித்தார். ஞானி மெல்லியகுரலில் அவரை மறுத்துக்கொண்டிருந்தார். அந்நண்பர் “வரலாறு, வரலாறு”என்றே பேசிக்கொண்டிருந்தார்.

“நடக்கப்போலாமா?”என்றார். காளீஸ்வரா நகரில் அவருடைய கையைப் பற்றிக்கொண்டு நெரிசலான சாலையில் நடந்தேன். ஞானி மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். ஈழ நண்பர் “வரலாறு…”என ஆரம்பிக்க “வரலாற்றை விடுங்க, அது நமக்கு பொண்ணுகுடுத்து பொண்ணு எடுக்கலை”என்றார் ஞானி. “இவரு ஒரு நாவல் எழுதியிருக்கார். விஷ்ணுபுரம்னு பேரு. படிச்சிருக்கீங்களா?” அவர் “இல்லை”என்றார். “படிங்க, அதிலே நேரடியா வரலாறே இல்லை. ஆனா அதிலேதான் நம்ம வரலாற்றோட பல அடிப்படைகளை பேசியிருக்கார்”

ஞானி  ‘சமாந்தர வரலாற்றுத் தளம்’ என்ற வரியை அந்தநாள் பேச்சில் பேசியே கண்டடைந்து அதை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தார். ஒரு வரலாற்றை உண்மையிலேயே அந்த வரலாறு நடக்கும் களம் வழியாக அணுகுவதென்பது வரலாற்றாய்வு. அந்த வரலாறுக்கு ஒரு டம்மி வரலாறு செய்து வரலாற்றின் விதிகளை அங்கே விளக்குவது சமாந்தர வரலாற்றுத்தளம். நெட்டி மரத்தில் ஒரு கோட்டையை சிறிதாக கட்டி அதன் அமைப்பை விளக்குவது போல.

விஷ்ணுபுரத்தில் ஒரு வரலாற்றுச் சித்திரம் உள்ளது, அது மெய்யான வரலாற்று சித்திரம் அல்ல. அது சமாந்தர வரலாறு. அது இந்திய வரலாறும் தமிழக வரலாறும்தான். அந்த மையவரலாற்றின் அடியில் அழியாத உயிர்த்துடிப்புடன் இருக்கும் பழங்குடிகளின் மற்றும் தலித் மக்களின் வரலாறு உள்ளது. அவர்களிடமிருந்து இந்திய- தமிழ்ப் பண்பாடு உருவாகிவந்து ,பொலிந்து, தங்களுக்குள் மோதி வலுவிழந்து, அழிந்து மீண்டும் அவர்களை சென்றடையக்கூடிய ஒரு சுழற்சி அந்நாவலில் உள்ளது, மீண்டும் அவர்களிடமிருந்து அந்த நாவல் முளைத்தெழக்கூடும் என்ற கனவுடன் அந்த நாவல் முடிகிறது.

ஞானி இந்த சுழற்சிக்கட்டமைப்பு பற்றி நிறைய பேசியிருக்கிறார். விஷ்ணுபுரத்தின் வெவ்வேறு கதைமாந்தர்களை பற்றி தனித்தனியாக என்னிடம் விவாதித்திருக்கிறார் ஞானியின் அந்த தொடர் உரையாடல் எனது நாவலை நானே சரியாக புரிந்துகொள்ளவும், ஒருகட்டத்தில் அதிலிருந்து நான் விலகுவதற்கும் வழிவகுத்தது.

அன்று கண்ட அந்த ஈழ நண்பரின் முகமும் மறக்காமலிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகள் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார், கொல்லப்படுவது வரை. அவர் எனக்குச் சொன்ன பெயர் அவருடைய பெயர் அல்ல, ஆகவே அதைச் சொல்வதில் பொருளில்லை

அவருக்குச் சில உதவிகள் செய்தேன், சட்டவிரோதமானவை. அவர் பத்மநாபபுரம் வந்து என்னுடன் தங்கியிருந்தார். ஊட்டிக்கும் வந்து குருகுலத்திலும் தங்கியிருந்தார்- அவர்களுக்கும் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்திருந்தது. அவர் என்னை மீண்டும் ஈழச்சிக்கல்களை கூர்ந்து கவனிக்கச் செய்தார். குறிப்பாக ஈழப்போராட்டத்தின் உள்முரண்களை, கசப்புகளை அவரே நம்பகமாகச் சொன்னார். அவரிடமிருந்தே பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் தொடக்கம்

[மேலும்]

கோவை ஞானி நூல்கள்

முந்தைய கட்டுரைஇளைஞர்களுக்கு ‘சுதந்திரத்தின் நிறம்’ : விலையில்லா 300 பிரதிகள்
அடுத்த கட்டுரைநஞ்சின் சிரிப்பு