சிங்கப்பூர் நினைவுகள்-கடிதம்

 

சிங்கப்பூரில் அன்று

அன்பு ஜெ. நலம்தானே? ’சிங்கப்பூரில் அன்று’ நினைவுக்குறிப்பை வாசித்தேன். பதினான்கு வருடங்கள் தாவி எண்ணங்கள் எங்கேயோ சென்றுவிட்டன.

முதன்முதலில் உங்களைச் சித்ரா வீட்டில்தான் நான் சந்தித்தேன். நானும் ரமேஷும் வந்திருந்தோம். இப்போது பார்த்தாலும் வரும் இயல்பான புன்முறுவலோடு ப்போதும் வரவேற்றீர்கள். வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற முத்தமிழ் விழாவில் நீங்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் இன்றும் மனதிலாடுகின்றன. நீங்கள், அருண்மொழியக்கா, சித்ரா – ரமேஷ், சுப்ரமணியன் ரமேஷ் மற்றும் நான் என அனைவரும் செந்தோசா தீவுக்குச் சென்றோம்.

எம்.கே.குமார்

டால்பின் கண்காட்சிக்கு நுழைவுச்சீட்டு வாங்கினால் கடல் உயிரின கண்காட்சிக்கு அனுமதி இலவசம் எனச்சொல்லப்பட, நான் ஏனென்று தெரியாமல் இரண்டிலும் ஒன்று வாங்கிக்கொண்டு வந்தேன். தன்அறைக்குள் சென்றுவர வழியாக, ’பெரிய பூனைக்கு ஒரு பெரிய ஓட்டையையும் குட்டிகள் போய்வர இன்னொரு சிறிய ஓட்டையையும் போட்ட ஐன்ஸ்டீன்போல’ என என்னைப் புகழ்ந்தீர்கள்.

அடுத்தநாள் சந்திப்பின்போது, எலக்ட்ரானிக் பொருட்களையும் மற்ற சிறுசிறு கைவினைப்பொருட்களையும் வாங்கிக்குவித்துவிட்டு வந்து நம்முடன் சேர்ந்துகொண்ட அருண்மொழியக்காவின்மேல் நீங்கள் கடுமையாக விசனப்பட்டீர்கள். உங்கள் கோபத்தைப் பார்த்து எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ’விடு ஜெயன் விடு ஜெயன்’ என அவர் சொல்லிக்கொண்டிருந்தார். போலியற்ற அன்பும், அது உருவாக்கும் கோபமும் புரிதலும் என, தாங்கள் இருவரின்மேலும் இன்னும் அந்நியோன்யத்தையும் சொந்தகுடும்பத்தினர் போன்ற ஒரு மனப்பிணைப்பையும் அது என்னுள்ளே உருவாக்கியது.

படைப்பாளி – வாசகன் என்பதைத்தாண்டி பாசாங்குகளற்ற ஒரு நிறைவுசூழ் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்த கணங்களை எல்லோருக்கும் எப்போதும் கையளிக்கிறீர்கள் என்பதை இன்றும் உணர்கிறேன். அப்போது நான் எழுதிய பதிவுகளை இங்கே பகிர்கிறேன். அன்புடன், எம்.கே.குமார்.

http://yemkaykumar.blogspot.com/2006/08/blog-post.html?m=1

https://yemkaykumar.blogspot.com/2006/08/blog-post_02.html

முந்தைய கட்டுரைதேனீ, வனவாசம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்