ஞானி-10

பொதுவாக நம் கருத்தியல் சூழலில் செயல்படுபவர்கள் இரண்டு வகையிலானவர்கள். அவர்களை நிலைத்தன்மை கொண்டவர்கள், செயலூக்கம் கொண்டவர்கள் [static, dynamic] என இரண்டாகப் பிரித்துக்கொள்வது என் வழக்கம். நிலைத்தன்மை கொண்டவர்களே மிகப்பெரும்பான்மையினர். செயல்தன்மை கொண்டவர்கள் ஒரு சூழலில் தலைமுறைக்குச் சிலர்தான்.

நிலைத்தன்மை கொண்டவர்கள் மிக இளம் வயதிலேயே, இன்னும் சொல்லப்போனால் அவர்களுடைய உருவாக்கக் காலத்திலேயே குறிப்பிட்ட வகையான பார்வையையும் அதிலிருந்து ஒர் உறுதியான கருத்தியல் நிலைப்பாட்டையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். பின்பு வாழ்க்கை முழுக்க அவர்கள் அதில் எந்நிலையிலும் அந்தப் பிடியை விட்டுவிடுவதில்லை. அந்நிலைத்தன்மை அவர்களுக்கு தன்னடையாளத்தை அளிக்கிறது. அது ஒரு  ‘தெளிந்தநிலை’யும் கூட. எந்த விஷயத்திலும் அவர்களுக்கு ஐயம் இருப்பதில்லை.  எதிலும் உறுதியான, மாறாநிலைபாடை எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னியல்பாக எடுத்துவிட முடிகிறது.

கூடவே, நிலைத்தன்மை கொண்டவர்களால் அதே முடிவுகளை எடுக்கும் பெருந்திரளுடன் கலந்துவிட முடிகிறது. அவர்களில் ஒருவராக ஆகுந்தோறும் தன்னை ஓர் அமைப்பின், ஒரு பொதுப்போக்கின் கூறாக உணரும்போது அழுத்தமான தன்னம்பிக்கையை அடைகிறார்கள். சூழலில் ஒலிக்கும் இந்த தன்னம்பிக்கைக் குரல்கள் எந்த சிந்தனையாளனுக்கும் மிகப்பெரிய தடையாக அமைவன. ஒரு சூழலின் கருத்தியக்கத்தில் இந்த நிலைத்தன்மை கொண்டவர்களின் ஒட்டுமொத்தமான விசை என்பது வாழ்நாள் முழுக்க ஆக்கபூர்வச் சிந்தனையாளர்கள் எதிர்த்து போராடவேண்டிய எதிர்நிலையாக அமைகிறது, அதேசமயம் பொதுச்சமூகத்திற்கு அதன் கருத்தியல் சட்டகங்களை அளிப்பதாகவும் அது திகழ்வதனால் அதற்கு ஒரு தவிர்க்கமுடியாத பங்களிப்பும் உள்ளது.

நிலைத்தன்மை கொண்டவர்கள்தான் எப்போதும் அதீத நிலைபாடு எடுப்பவர்கள், முத்திரை குத்துபவர்கள், தொடர்ந்து காழ்ப்பு நிலையிலும் எதிர்ப்பு நிலையிலும் இருந்துகொண்டிருப்பவர்கள். ஆக்கபூர்வமாகச் சிந்திப்பவர்கள் இவர்களை கையாள்வது மிகக்கடினம். ஏனெனில் இவர்களிடம் எந்த விதமான உரையாடலையும் எவரும் தொடங்க இயலாது, எந்த தர்க்கத்துக்கும் இவர்களிடம் சொல்லிப்பழகிய விடைகள் இருக்கும். சிந்தனையாளர் இவர்களைச் சந்திக்கும்போது இவர்களிடமிருந்து திரும்பத்திரும்ப அந்த ஒற்றைவரிகளை, அவற்றை நிலைநிறுத்தும் தர்க்கவிளையாட்டுகளை, அவை தோற்கும்போது வசைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்களை சிந்தனையாளர்கள் எப்போதும் தவிர்த்துவிடுகிறார்கள், ஆகவே இவர்கள் சிந்தனையாளர்களை வென்றுவிட்டோம் என மேலும் தன்னம்பிக்கை கொள்கிறார்கள்.

அதோடு இன்னொன்று உண்டு, நிலைத்தன்மை கொண்டவர்கள் சிந்தனையாளர்களை வரையறை செய்துகொண்டே இருப்பார்கள். தங்களுக்குப் புரிந்த, தங்கள் வசதிக்குரிய வகையில் அந்த எளிய வரையறையை அமைத்துக்கொண்டு; அதை மூர்க்கமாக பிரச்சாரம் செய்வார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகுதி என்பதனால் எந்தச் சிந்தனையாளரைப் பற்றியும் சூழலில் ஒருவகை ஒற்றைவரியை உருவாக்கி பரவலாக நிலைநிறுத்த இவர்களால் முடியும். க.நா.சு, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஞானி என எவரை எடுத்துக்கொண்டாலும் ஒருசில ஒற்றைவரிகள் இவர்களால் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

பொதுவாக எதையும் படிக்காமல், வெறுமே செவிவழிச் செய்திகளை நம்பி இலக்கியமும் கருத்தியலும் பேசிக்கொண்டிருக்கும் பாமரக்கூட்டம் அந்த ஒற்றைவரிகளை அறிந்திருக்கும், எவரைப்பற்றிக் கேட்டாலும் “ஓ, தெரியுமே. அந்தாள் இப்டித்தானே” என்று சொல்வார்கள். சென்றகாலத்தில் ஒற்றைவரி வரையறைகள் இருந்தன, இன்று அந்த ஒற்றைவரி சம்பந்தமே இல்லாத ஒரு நையாண்டியாகவோ வசையாகவோ உள்ளது. சிந்தனைகளை அறியவிரும்புபவர்கள் அந்த ஒற்றைவரிகளைக் கடந்தே அந்தச் சிந்தனையாளர்களை வந்தடையவேண்டும்.

உண்மையில் அது ஒரு முதல்கட்டத் தேர்வு. ஒரு வாசகன் இந்த ஒற்றைவரிகளைக் கடந்து, அவர்களின் சிந்தனைகளின் உட்சிக்கல்களையும் பரிணாமகதியையும் புரிந்துகொள்ளமுற்பட்டால் மட்டுமே அவன் சிந்தனையுலகுக்குள் வருகிறான். அதாவது ஒருவன் சூழலில் நிறைந்திருக்கும் நிலைத்தன்மை கொண்டவர்களை கடந்தாலொழிய சிந்தனைக்குள் நுழையமுடியாது. அவர்களைக் கடக்காதவன் சிந்தனைக்குள் வராமலிருப்பதும் நன்று.

இன்னொரு ஆச்சரியமென்னவென்றால் க.நா.சு, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஞானி போன்ற முதன்மையான பெருஞ்சிந்தனையாளர்களைப்பற்றி அவர்களைச் சிறுமைசெய்யும் ஒற்றைவரிகள் இவர்களால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கையில்; சாரமில்லாத பொதுப்பிம்பங்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட புகழ்மொழிகள் புழக்கத்திலிருக்கின்றன. காந்திக்கு சூழலில் வசைகள் நிறைந்திருக்கின்றன, ஆனால் அத்தனை சாதியத்தலைவர்களுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் புகழ்மொழிகள் மட்டுமே சுற்றில் இருக்கின்றன.

செயலூக்கம் கொண்ட சிந்தனையாளர்கள் தங்களுக்குள்ளிருந்து எழும் அடிப்படை வினாக்களால் இயக்கபடுபவர்கள். அது அவர்களுக்கே உரிய வினா. அந்த வினாவானது அவர்கள் ஒரு சமுதாயத்தின் பகுதியாக இருப்பதனால் அந்தச் சமூகத்தின் கேள்வியாகவும் அக்காலகட்டத்தின் சிக்கலாகவும் இருக்கும். அவர்கள் கண்டடையும் தீர்வுகள் அச்சமூகத்திற்கும் அக்காலகட்டத்திற்கும் உரியவையாகவே இருக்கும். ஆனால் அவர்கள் செயல்படுவது எப்போதும் தனித்தே. அவர்கள்  அதற்கான விடைகளை தங்களை சூழ்ந்திருக்கும் சமூகத்திலிருந்தும், தங்கள் தனிவாழ்விலிருந்தும், வரலாற்றிலிருந்தும் ,தத்துவத்திலிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அவர்கள் வாழ்வில் எப்போதுமே ஒரு இருநிலை இருக்கும். ஊசலாட்டங்கள் ,தயக்கங்கள் ,உணர்வெழுச்சிகள், தளர்வுகள், குழப்பங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். எப்போதுமே மறுதரப்பின் உண்மையை பார்ப்பதற்கான செவிகள் கொண்டிருப்பார்கள். மறுதரப்பை ஏற்று, அதை தங்களுக்கு நிகராக எதிர்நிலையில் நிறுத்துவதற்கான முயற்சியை அவர்கள் செய்வார்கள் மறுதரப்பை அக்கறை எடுத்து பயின்று, அத்தரப்பு கூறுவதைவிட தெளிவாக விளக்கவோ வரையறுக்கவோ இவர்கள் முயல்வார்கள். ஏனெனில், அதன் பின்னர் தான் இவர்கள் அதை புரிந்துகொண்டு எதிர்க்க முடியும்.

விளைவாக, மறுதரப்பினரிடம் தனிப்பட்ட நட்புகளும் இயல்பாக இவர்களுக்கு அமையும். தன் எதிர்த்தரப்பை எளிமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, வசைபாடி மறுக்கும் நிலைச்சிந்தனையாளர்களின் இயல்பு இவர்களிடம் இருப்பதில்லை. இவர்கள் மறுதரப்பினருடன் போரில் இல்லை, விவாதத்தில் இருக்கிறார்கள். விளைவாக மறுதரப்பினரிடமிருந்து தாங்கள் ஏற்பதென்ன என்பதையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆகவே இவர்கள் நிலைச்சிந்தனையாளர்களால் திரிபாளர்கள், ஃபிலிஸ்டைன்ஸ் என்று வசைபாடப்படுவார்கள். எதிரிகளுடன் சமரசம் செய்துகொண்டவர்கள், விலைபோய்விட்டவர்கள் என அவதூறு செய்யப்படுவார்கள். இரட்டைநாக்கு கொண்டவர்கள், முரண்பாடுகொண்டவர்கள், குழப்பவாதிகள் என்று முத்திரையடிக்கப் படுவார்கள்.

நிலைச்சிந்தனையாளர்கள் ஒருவகை ராணுவத்தின் வீரர்களே ஒழிய அவர்கள் எத்தனை நூல்கள் படித்திருந்தாலும், எத்தனை எழுதியிருந்தாலும், எத்தனை போற்றப்பட்டாலும், சிந்தனைப்பரப்பில்  அவர்களுக்கு எந்த இடமும் இல்லை. எத்தனை குழப்பங்களுக்கு ஆளாலும், ஏராளமான தன்முரண்கள் கொண்டிருந்தாலும், எப்படியெல்லாம் மறுக்கப்பட்டாலும், எவ்வளவு வசைபாடப்பட்டாலும் , செயலூக்கம் கொண்ட சிந்தனையாளர்கள்  மட்டுமே சமகாலச் சிந்தனையை கட்டமைக்கிறார்கள், முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஆகவே அவர்கள் மட்டுமே ஒரு சூழலின் கருத்தியல் செயல்பாட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்களை சார்ந்தே ஒரு சூழலின் விவாதம் அமையவேண்டும், எத்தனை கூச்சலிட்டாலும் ஓர் நிலைச்சிந்தனையாளனைச் சுற்றி சூழலின் விவாதம் அமைய வாய்ப்பே அளிக்கலாகாது, அது அழிவையே உருவாக்கும்.

ஞானி செயலூக்கம் கொண்ட சிந்தனையாளர். ஆகவே நான் அறிந்த காலம் முதல் அவர் நிலைச்சிந்தனையாளர்களால் கடுமையாக வசைபாடப்பட்டு பழிசுமத்தப்பட்டவராகதான் இருந்தார். வாழ்வின்  ஏதேனும் ஒரு தருணத்தில் அவர் வசைபாடப்பட்டவராக அல்லாமல் ஆனாரென்றால் அவருடைய கடைசி பத்து பதினைந்து ஆண்டுகளைத்தான் சொல்லவேண்டும். இன்று அவர் அனைத்து தரப்பிலிருந்தும் அஞ்சலி செலுத்தப்படுபவராகவும் வரைமுறையில்லாமல் புகழப்படுபவராகவும் பலராலும் ஆசான் என்று ஏற்கப்படுபவராகவும் இருக்கிறார் என்றால் அந்த கடைசி பதினைந்து ஆண்டுகாலத்து ‘போர்நிறுத்தத்தின்’ விளைவாகவே.

ஞானியின் செயல்தன்மைதான் நிலைத்தன்மை கொண்ட எளிமையான சிந்தனையாளர்களை ஞானியை அணுகமுடியாதவர்களாக, அணுகினாலும் ஒற்றைப்படையான தீர்ப்புகளை சொல்ல வைப்பவராக ஆக்கியது. அவருடைய மறைவுக்குப் பின்னரும் அத்தகைய ஒற்றைப்படையாக்கலும் வசைகளும் விமர்சனங்களும் அவர்மேல் வந்தன. அது தனிப்பட்ட வஞ்சத்தால் அல்ல, இயல்பிலேயே அவர்களுக்கு ஞானியை புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்று மட்டுமே அதற்கு பொருள். இயந்திரவாத அணுகுமுறைக்கு என்றுமே எதிராக இருந்த ஒருவரை சாவின்போது மட்டும் இயந்திரவாத சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன? அவர் இயந்திரவாத அணுகுமுறைமேல் முன்வைத்த விமர்சனத்தைக்கூட அவர்கள் இயந்திரவாத அணுகுமுறையைக்கொண்டே மதிப்பிடுவார்கள்.

ஞானி செயல்பட்ட கருத்தியல் தளத்தை நாம் அவருடைய மொத்த வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு மூன்று கட்டங்களாக வகுத்துக்கொள்ள முடியும் என்று இதுவரைச் சொல்லிவந்தேன். முதல் கட்டத்தில் அவர் மார்க்சியச் சம்பிரதாய சிந்தனைகளிலிருந்து மேலெழுந்து புதிய சிந்தனைகளை உருவாக்கக் கூடியவராக, மார்க்சியத்தின் புதிய வாய்ப்புகளை தேடிச்செல்பவராக இருந்தார். அப்போது இயந்திரவியல் மார்க்சியத்திற்கான எதிர்வினைகள் அவரிடமிருந்து எழுந்தன. ஆகவே அன்றைய கட்சிசார் மார்க்சியர்களாலும் இயந்திரவியல் அணுகுமுறை கொண்டவர்களாலும்மிக உக்கிரமாக எதிர்க்கப்பட்டார்.

அதன்பின் அமைப்புசார் செயல்பாடுகளிலிருந்து விலகி கலை இலக்கியத்தின், தத்துவத்தின் தனித்த இருப்பை அங்கீகரிப்பவராகவும்; பண்பாட்டுச் செயல்பாடுகளினூடாக ஒரு மார்க்சியச் செயல்பாடு சாத்தியம் என்று நம்புபவராகவும், கிராம்ஷியிலிருந்து தொடங்கும் நவமார்க்சியராகவும் அவர் வெளிபபட்டார். அப்போது இன்னும் விரிவான ஒரு எதிர்ப்பை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் நவீன தமிழிலக்கியச் சூழலிருந்து மட்டுமே ஏற்பைப் பெற்றார். அத்தனை இடதுசாரி அரசியல்த் தரப்பினராலும் திரிபுவாதி என வசைபாடப்பட்டார். அன்றைய எந்த இடதுசாரி மேடையிலும் அவருக்கு இடமிருக்கவில்லை, 1992 ல் நான் சம்பந்தப்பட்ட ஓர் இடதுசாரி அரங்குக்கு அவரை அழைக்கலாம் என்று சொன்னபோது அமைப்பாளர்கள் பதறிவிட்டார்கள். ஞானிக்கு நவீன இலக்கியக் களத்தில்மட்டுமே அன்று மேடை இருந்தது.

மூன்றாவது காலகட்டத்தில் ஞானி தமிழியக்க ஆதரவாளராக ஆனார். தமிழர்மெய்யியல் ஒன்றை வரையறைசெய்யவும், அதன் வேர்களை  மரபிலிருந்து தேடி எடுத்து அதன் நீட்சியாக மார்க்ஸியத்தை கொண்டுவந்து சேர்க்கவும் முயன்றார். தமிழியக்கவாதிகளின் எதிர்மறை அரசியலின் குரலாகவும் அவர் ஒலித்தார். மிகவும் நோயுற்று, ஓர் எல்லையை தொட்டு மீண்டுவந்தபோது, மாறிய சூழலில் தமிழியக்கமும் எளிமையான குறுங்குழு அரசியலாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்து, மார்க்சியத்தை மீண்டும் சென்றடைந்து, பொதுவான விவாதங்களிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதுவே அவருடைய கடைசிக்காலம், அதை ஒரு கருத்துக்காலகட்டம் என்று சொல்லமுடியாது.

எண்பதுகளில் நான் சந்திக்க நேர்ந்த ஞானி அவருடைய பழைய அரசியல் தோழர்களால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தார். நவீன இலக்கியவாதிகளால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு தங்களுடைய ஏற்புத்தரப்பாகவோ மறுப்புத்தரப்பாகவோ அணுக்கம் கொள்ளப்பட்டு தொடர்ந்து விவாதத்தில் இருந்தார். நான் அவருடன் அதிகமாக விவாதித்தவை இக்காலகட்டத்தின் இலக்கிய அழகியல் மற்றும் மார்க்சிய அறவியல் சிக்கல்கள்தான்.

ஞானியின் தமிழ்த்தேசியப் பார்வையின் அரசியலை  மீண்டும் சொல்லியாகவேண்டும். ஞானி பற்றிய விவாதத்தில் இந்தப் பேசுபொருள் வெவ்வேறு கோணங்களில் வந்துகொண்டே இருக்கும். ஞானியை மார்க்ஸியம், தமிழ்த்தேசியம் ஆகியவற்றுக்கு இடையேயான முரணியக்கத்தால் உருவானவர் என்று வரையறை செய்யலாம்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின் ஞானியிடம் மார்க்சியமெய்யியலுக்கான தேடலும், இலக்கிய ஈடுபாடும்  இன்னும் வீச்சும் வேகமும் கொண்டது. ஆனால் இரண்டாயிரத்துக்குப்பிறகு அவருடைய பார்வைகளில் அழுத்தமான மாறுபாடுகள் வரத்தொடங்கின. அவர் மார்க்சியத்தை ஒரு நுண்அலகு மார்க்சியமாக விளக்கிக்கொண்டார். அதை பண்பாட்டு நடவடிக்கைகளில் பின்னணியாக உறையும் வரலாற்றுப்பார்வையாகவும், தத்துவத்தில் இயங்கியல் பார்வையாகவும் மாற்றிக்கொண்டார். அந்த பண்பாட்டு நடவடிக்கைகளினூடாகவே தமிழ்த் தேசியம் என்னும் அமைப்பை சென்றடைந்தார்.

ஞானி என்னிடம் பேசும்போது கூறியனார். ‘இன்று மார்க்சிய வாதி ஒடுக்கப்படுபவரின் சார்பில் நின்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. மார்க்சியம் என்பதே ஒடுக்கப்படுபவனின் எதிர்ப்புக்குரலின் தத்துவமும் அழகியலும் ஆகும். எந்தெந்த தரப்புகள் ஒடுக்கப்படுகின்றன என்று பார்த்தால் முதன்மையாக மதச்சிறுபான்மையினர், சாதிசார் சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்ட மக்கள், மலைப்பழங்குடியினர், பாலியல் சிறுபான்மையினரான விளிம்புநிலை மக்கள் ஆகியோர். அதற்கும் அடுத்தபடியாக ஒருங்கு திரட்டப்படாத தொழிலாளர்கள். ஆனால் இவர்களெல்லாம் தனிப்பட்ட மனிதத்திரள்கள் .ஒரு கருத்தியலாகவும் ஒட்டுமொத்தத் தரப்பாகவும் ஒடுக்கப்படுபவை இந்தியாவில் உள்ள துணைத் தேசியங்கள் எனப்படுபவையே. ஆகவே மார்க்ஸியம் அவற்றுக்கு சாதகமானதாக இருக்கவேண்டும்’

இந்தியாவின் துணைத்தேசியங்கள் எனப்படுபவை உண்மையில் தனித்தன்மை கொண்ட, வரலாற்றுப் பின்னணி கொண்ட, முழுமையான தேசியங்கள். தமிழகம் தங்கள் தமிழ்த்தேசிய அடையாளத்துடன் ஒருங்கிணைத்துக் கொண்டாலொழிய சுரண்டப்படுவதையும் காலப்போக்கில் அடிமைப்படுவதையும் தடுக்கமுடியாது. இந்திய ஒருமைப்பாடெனும் யாப்பில் ஒவ்வொரு தேசியஇனமும் மற்ற தேசிய இனங்களின் ஒட்டுமொத்தத்தால் ஒடுக்கப்படுகிறது என்கிற  விந்தையான நிலைமை நிகழ்கிறது. அந்த ஒட்டுமொத்ததின் மையத்தில் ஓர் இயற்கையான செறிவமைப்பாக [cluster] இந்தித்தேசியம் அல்லது கங்கைசமவெளித் தேசியம் உள்ளது.

இந்திய தேசியயாப்பு ஒருபோதும் தமிழர்கள் போன்றோர்களுக்கு நலம் செய்வதாக அமையாது .ஏனெனில் இந்தத் தேசிய யாப்பில் ஒரேதேசியமாக தங்களை உணரும் கங்கைச்சமவெளி மாநிலங்கள், அதாவது உத்தரப்பிரதேசம் பீகார் பகுதிகள், கூடுதல் இடத்தைப் பெறுவதும் மையஅதிகாரத்தை அடைவதும் ஒருபோதும் தடுக்க முடியாதது. அவ்வாறல்ல, ஒரு நீண்டகால அடிப்படையில் அனைவருக்கும் நிகரான உரிமையிருக்க்கக்கூடிய ஒரு தேசிய ஜனநாயக அமைப்பை இங்கே கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையை நேரு முதலியவர்கள் அளித்தார்கள் .அது அன்று ஏற்கக்கூடியதாக இருந்தது. அதை இடதுசாரிகள் நம்பினார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல. இன்று அது நிகழவில்லை என்பதுடன் அதற்கு நேர் எதிரான போக்கே நீடிக்கிறது

வரலாற்றில் அவ்வாறு நல்லெண்ண அடிப்படையில் எதுவுமே நிகழ்வதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இன்று நாம் பார்க்கும்போது மக்கள் எண்ணிக்கை மற்றும் ஒற்றைப் பண்பாட்டுத் தொகுப்பின் பலத்தால் கங்கைச் சமவெளி மக்கள் ஒரே தேசியக்கோப்பாக மாறியிருக்கிறார்கள். சாதி அடிப்படையில் மத்தியப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஹரியானாவிலும் இருப்பவர்களும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் இணைந்த ஒரு மையத்தேசியம் பாறாங்கல் போல் இந்திய தேசியத்தின் உள்ளே அமர்ந்திருக்கிறது. அது மற்ற அத்தனை தேசியங்களையும் ஒடுக்கும் பேரெடை

இந்தியா என்று நாம் சொல்லும்போது இன்று காஷ்மீர் முதல்  கன்னியாகுமரி வரைக்குமான நிலப்பகுதியை உத்தேசிக்கவில்லை,  அந்த நடுவிலிருக்கும் பாறாங்கல்லையே உத்தேசிக்கிறோம். அந்தப்பாறாங்கல்லை பிறதேசியங்கள் தூக்கி சுமக்க வேண்டுமா வேண்டாமா என்பது தான் முக்கியமான பிரச்சினை.  அந்தச்சுமை பொருளியல், பண்பாடு ஆகிய இருதளங்களிலும் ஆழமாக உணரப்படுகிறது.

வெவ்வேறு காலங்களில் இந்தியாவுடைய அரசியல் நிலைபாடுகளை பார்க்கையில் இந்த பிற தேசியங்களின் விருப்பமோ,ஐயமோ, அச்சமோ கருத்தில் கொள்ளப்படாமல்  மையப்பாறாங்கல்லின் விருப்பமே மத்திய அரசை அமைத்திருக்கிறது என்றும், அவர்களின் அதிகாரம் மாநிலங்களின்மேல் மிக இயல்பாக செலுத்தப்பட்டிருக்கிறது என்றும் பார்க்க முடிகிறது. இந்திராகாந்தி வென்று வந்த பெரும்பாலான தேர்தல்களில் அவருடைய வெற்றியை தீர்மானித்தது பசுவட்டாரம் எனப்படும் கங்கை சமவெளிப்பகுதிதான். அதுவேதான் இந்தியா என்று தான் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆனாலும் காங்கிரஸ் எனும் அமைப்பின்மேலுள்ள நம்பிக்கை சற்றே நீடிக்கிறது .ஆனால் எதிர்காலத்தில் கங்கைச் சமவெளிப்பகுதியின்மீது முற்றாதிக்கம் கொண்ட, மதம் சார்ந்த மையப்பண்பாட்டை வலியுறுத்தக்கூடிய கட்சி அதிகார அரசியலின் மையத்திற்கு வருமெனில் அவ்ர்கள் அந்த பாறாங்கல்லை கொண்டு இந்தியாவின் அனைத்து துணைத் தேசியங்களையும் அழுத்தி முழுமையாக ஒடுக்குவார்கள். தமிழகம் கேரளம் கர்நாடகம் போன்ற அத்தனை துணைத்தேசியங்களும் ஈவிரக்கமில்லாமல் உறிஞ்சப்படும். அவற்றின் தனித்த பண்பாட்டுத்தன்மை அழியும். அதைவிட அவற்றின் பொருளியல்சுதந்திரம் பறிக்கப்படும். அவற்றின் நிதி மையஅரசு நோக்கிச் செல்லும், மையத்திலிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதுவுமே கிடைக்காது.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக  மாநிலங்கள் மையத்தால் பொருளியல்சார்ந்து உறிஞ்சப்படுகின்றன. வரிவசூலில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளும் மையஅரசு மாநிலங்களுக்கு அளிப்பது மிகமிகக்குறைவு என்பதுதான் உண்மை. ஆயிரம் ரூபாயை வரியாகக் கொடுத்துவிட்டு மையநிதியிலிருந்து நூறு ரூபாய் திரும்பப் பெற்றுக்கொள்ளும் இடத்தில்தான் தமிழகம் இன்றும் இருக்கிறது எதிர்காலத்தில் இந்த சுரண்டல் இன்னமும் பெருகும்.

ஞானி பண்பாட்டுச் சுரண்டல் பற்றியும் சொன்னார். இந்தியா என்பது ஒற்றைப்பண்பாடுள்ள அமைப்பு அல்ல, கூட்டுப்பண்பாடுள்ள அமைப்புதான். இதிலுள்ள ஒவ்வொரு பண்பாட்டிலும் அந்தக் கூட்டுப்பண்பாட்டின் செல்வாக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அதைவைத்து இந்தியாவின் பண்பாடுகளின் தனித்தன்மை என ஏதுமில்லை, அவை ஒன்றே என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் அப்படி புறப்பாதிப்பு இல்லாத பண்பாடு என எதுவுமே உலகில் இருக்கமுடியாது

ஐரோப்பா ஒரே பண்பாட்டுவெளி. ஆனால் அதற்குள் பிரான்ஸும் ஜெர்மனியும் ரஷ்யாவும் வேறுவேறு பண்பாடுகள்தான். ஜெர்மனியர்களான வாக்னரும் பீத்தோவனும் இல்லாமல் பிரெஞ்சுப்பண்பாடு இல்லை. ஆனால் பிரெஞ்சுப்பண்பாடு தனியானதும்கூட. ஐரோப்பியப் பண்பாடு பிரான்சுக்கு கொடுத்ததை மறுக்கவேண்டியதில்லை- ஐரோப்பியப்பண்பாட்டில் பிரெஞ்சுப்பண்பாட்டின் கொடையும் பெரிது. ஆனால் பிரெஞ்சுப்பண்பாடு தனித்து இயங்குவதனால்தான் அங்கே அதன் இலக்கியமும் கலையும் செழிக்கமுடிகிறது. பொதுவான வாசகனே பார்க்கமுடியும், பிரெஞ்சு இலக்கியம் வேறு ஜெர்மானிய இலக்கியம் வேறு. அழகுணர்வும் உணர்ச்சிநிலைகளும் வேறு’

கலையும் இலக்கியமும் சுதந்திரத்தால்தான் வளரும். மெய்யியல் தன்னுரியமையால்தான் வளரும் அவ்வாறு வளர அது வெளியே இருந்து வேர்ச்சத்தையும் வெயிலாற்றலையும் எடுத்துக்கொள்ளலாம், ஆனாலும் அது தனக்கான நிலத்திலேயே வளரமுடியும். அதன்மேல் பொதுவாக திகழும்  தொகுப்படையாளத்தைப் போட்டால் அது குறுக ஆரம்பித்துவிடும். தமிழ்மெய்யியலின் அடிப்படையாக உள்ள இந்துசமயக்கூறுகளும், சமண பௌத்தக் கூறுகளும் வெளியே இருந்து வந்தவையே. ஆனால் அவற்றை பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த ஒரு தமிழ்ப்பண்பாட்டுக்கூறு உண்டு

அந்தப் பண்பாட்டுக்கூறை ஒரு தேசியஅடையாளமாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அது தூய்மைவாதமாக அமையவேண்டியது இல்லை. தமிழ்த்தூய்மையை பேசுவது அடிப்படைவாதம். தமிழ்ப்பண்பாட்டின் சாராம்சமான பகுதி வைதிகம்,வேதாந்தம், பௌத்தம், சமணம், இஸ்லாம் உட்பட எல்லாவற்றில் இருந்தும் தரிசனங்களையும் தத்துவங்களையும் எடுத்துக்கொண்டுள்ளது. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்ப்பண்பாட்டையும் மெய்யியலையும் உருவகிக்கவேண்டும்

எந்த தேசியஅடையாளமும் தொன்மையானது அல்ல, தேசியம் என்ற கருத்தே அண்மைக்காலத்தையது. பண்பாடுதான் தொன்மையானது. இந்தியநிலத்தில் இருந்த பொதுப்பண்பாட்டிலிருந்து இந்துமறுமலர்ச்சிவாதிகளால் உருவாக்கப்பட்டது இந்திய தேசியம். ஆனால் இயல்பாக அதில் இருந்தது கங்கைவெளிப்பண்பாடே. அதைப்போல தமிழ்ப்பண்பாட்டிலிருந்து தமிழ்த்தேசியம் வரையறை செய்யப்படவேண்டும். அதற்கான உரிமை தமிழருக்கு உண்டு.தமிழ்ப்பண்பாட்டின் தொன்மையும் தனித்தன்மையுமே அதற்கு அடிப்படை

அந்தத் தேசியம் இந்தியப்பெருந்தேசியத்தில் கூட்டுறுப்பாக இருக்கலாம், தனியாகவும் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் அதன் பிரிக்கமுடியாத பகுதியாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது சுரண்டலுக்கே வழிவகுக்கும். ஒருவழிப்பாதையாகவே அது அமையும். காலடியில் கிடப்பவன்மேல் எவருக்குமே மதிப்பு வராது. நமக்குரியதை நாம் கேட்டுப்பெறவேண்டும் என்றாலும்கூட நாம் ஒரே திரளாக ஆகவேண்டும், அதற்கு தமிழ்த்தேசிய அடையாளம்வேண்டும்

அதைவிட முக்கியமாக, தமிழருக்கான மெய்யியல் தனியுரிமை வழியாகவே மலரமுடியும். தேசியத்துக்கான மெய்யியல் என்றுதான் தேடல் தொடங்கியது, ஆனால் மெய்யியலுக்காகவே தேசியம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. மெய்யியல் என்பது ஆழுள்ளத்தில் உறையும் தொல்படிமங்களால் [myth ]ஆனது. அதைத்தான் ஆழ்படிமங்களாக [archetypes] ஆக்கிக்கொள்ள முடியும். அவற்றிலிருந்தே அன்றாடப்படிமங்கள் [images] உருவாகும். அந்த தொல்படிமங்களின் தனித்தன்மை பண்பாட்டு மேலாதிக்கத்தால் அழியும். ஆகவே ஆதிக்கதேசியம் முதலில் அழிப்பது மெய்யியலைத்தான்.

அன்றாடத்தில் உள்ளது நம் மனம். ஆழ்மனம் தொன்மையில் உள்ளது. மனிதர்கள் அன்றடத்தால் இழுக்கப்பட்டு தங்கள் தொன்மையில் இருந்து  பிரிக்கப்படுகிறார்கள்.அன்றாடத்தில் உழல்கிறார்கள். அன்றாடத்தை கடந்து தொன்மைக்குச் செல்வதே தியானம் என்பது. அந்த தொன்மை பலவற்றுடன் இணைந்தே உள்ளது. ஆனால் அடையாளம் காணமுடியாமல் அது மாற்றப்பட்டிருந்தால் எவரும் ஆழ்நிலைப் பயணத்தில் ஆழத்திற்கு திரும்பிச் செல்லவேமுடியாதபடி ஆகிவிடும். ஆகவே தொன்மையை சென்றடைய தனித்தன்மை அவசியம்.

தமிழரின் மெய்யியலை வகுப்பது உரிமைக்காக மட்டும் அல்ல. பொருளியல் உரிமை, பண்பாட்டு உரிமை எல்லாம்கூட அடிப்படையில் மெய்யியல் உரிமைக்காகத்தான். வீடுபேறு என்று சொல்லப்படும் பெருநிலை மனிதர்களுக்கு உண்டு. அது இயற்கையுடன் இயைந்து மொத்தப் பிரபஞ்சமாகவும் தன்னை உணரும் பெருமனதை அடைதல். அதற்கு தொன்மைதேவை, அத்தொன்மையானது தனித்தன்மைகொண்ட தேசியத்தாலேயே பேணப்படமுடியும், அந்த தேசியம் தன் பொருளியலுரிமையை தக்கவைத்துக்கொண்டால் மட்டுமே நிலைகொள்ளமுடியும். அவ்வாறு தன்னுரிமை அடையும் தேசியத்திற்குள்ளே மட்டுமே உழைப்பாளர் உரிமைகொள்ள முடியும்.

ஞானியின் தமிழ்த்தேசியம் சார்ந்த கருத்துக்களை சுருக்கமாகவும் கூர்மையாகவும் தொகுத்துரைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இவற்றை அவர் தன் நூல்களில் சற்று தளர்வாகவும், தொடர்ச்சியின்மையுடனும் சொல்லியிருக்கிறார். சொல்லி எழுதுவிப்பதன் சிக்கல்கள், முறையாக மறுதொகுப்பு செய்யப்படாமையின் போதாமைகள் அவர் நூல்களில் உண்டு.

ஞானியுடனான விவாதத்தில் இ.எம்.எஸ் கேரளதேசியம் என்பதை வரையறை செய்தவர்களில் ஒருவர் என்று ஒருமுறை சொன்னேன். ஞானி அதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு எனக்கு எழுதியிருந்தார். இ.எம்.எஸ்தான் கேரளத்தின் பண்பாட்டுத்தேசியத்தை வரையறைச் செய்ய முயன்ற முன்னோடி. அவருடைய ’கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி’ என்ற ஆரம்பகால நூல் அவ்வகையில் செவ்விலக்கியத் தகுதி கொண்டது. ஆனால் பின்னர் இ.எம்.எஸ். அந்த நூலில் அவர் முன்வைக்கும் பண்பாட்டு அடையாளங்களில் பல ஒடுக்கும் அடையாளங்கள், உயர்சாதிப் பண்பாட்டுக்கூறுகள் என நிராகரித்து; தேசியம் என்பதே பிளவுபடுத்தும்தன்மை கொண்டது என மதிப்பிட்டார்.

ஆனால் 1990களுக்குப் பின் நீண்டகாலம் அச்சில் இல்லாதிருந்த இ.எம்.எஸின் ’கேரளம் மலையாளிகளுடே மாத்ருபூமி’ மறுபதிப்பு கண்டது. அது ஒரு அடிப்படைநூல் என பயிலப்பட்டது. நான் அந்நூலைப்பற்றி ஞானிக்கு எழுதிய மிகநீண்ட கடிதத்தின் முதல்பகுதியை நீண்ட இடைவேளைக்குப் பின்  தட்டச்சு செய்து கட்டுரையாக வெளியிட்டேன். எஞ்சிய முக்கால்பங்கை  தட்டச்சு செய்யவில்லை, ஒத்திப்போட்டேன். அக்கடிதமே காணாமலாகிவிட்டது. எட்டு பகுதிகளாக உத்தேசிக்கப்பட்ட அக்கட்டுரை வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இணையத்தில் அதை எவரும் கவனிக்கவில்லை, நான் ஆர்வமிழந்தேன்

ஞானி “இதுவரை இ.எம்.எஸை இந்தக்கோணத்திலே பார்த்ததே இல்லை. எப்படி இளம் மார்க்ஸ் முக்கியமோ அப்படி இளம் இ.எம்.எஸும் முக்கியம்” என எனக்கு எழுதினார். “கேரளதேசியத்தை இ.எம்.எஸ் முழுக்கமுழுக்க மலையாளமொழி சார்ந்து வரையறைசெய்கிறார். மதத்தின் இடத்தில் மொழியை வைக்கிறார். மொழியிலும்கூட அதன் அடித்தளமக்களின் இடத்தை சார்ந்தே தன் பார்வையை உருவாக்கிக்கொள்கிறார். துஞ்சத்து எழுத்தச்சன் என்னும் மக்கள் கவிஞரை முன்னிறுத்துகையில் பழைய மதக்கவிஞர்களை நிராகரிக்கிறார். இதுதான் சரியான பார்வை’ என்று ஞானி எழுதினார். அக்கட்டுரை அவரிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது ,அதை அவரே சொல்லியிருக்கிறார். [இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்]

ஓராண்டுக்கு முன் ஞானியை நான் நேரில் சந்திக்கும்போது  ‘வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது அதை சுள்ளிகளை வைத்து தடுக்க முயன்று கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் இப்போது உணர்ந்து எந்த பயனும் இல்லை. ஒற்றைத்தேசியம் வெற்றிபெறுகிறது. அதற்கெதிரான எல்லாச் சக்திகளும் வெறும் குறுங்குழுக்களாக மாறி ஒருவரை ஒருவர் கிழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருங்கிணைந்த ஒட்டுமொத்தமான எதிர்ப்போ, அதற்கான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்போ தலைமையோ இன்றில்லை’ என்றார்.

ஞானியின் மெய்யியல் நாட்டங்களை அவர் பேசிய தமிழ்த்தேசியவாதக் கொள்கைகளின் பின்புலம் இன்றி புரிந்துகொள்ள முடியாதென்பதனால் இப்பின்னணியை விரித்துரைத்திருக்கிறேன்

[மேலும்]

இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்

இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

முந்தைய கட்டுரைஇரண்டு கவிப்பிரகடனங்கள்
அடுத்த கட்டுரைசோர்வு, மீள்தல்