அஞ்சலி : சா.கந்தசாமி

சா.கந்தசாமி

தமிழில் கசடதபற இலக்கிய இயக்கம் முன்வைத்த அழகியலின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் சா.கந்தசாமி. ‘மினிமலிசம்’ என்று கூறப்படும் சுருக்கவாத அழகியலை நம்பி, அதை வலியுறுத்தியவர் அவர். வர்ணனைகள், விவரணைகள் இல்லாத சுருக்கமான கூறுமுறை கொண்டதும் அன்றாட மொழிக்கு மிக அருகே அமைவதுமான மொழிநடை அவருடையது.

கதை என்னும் வடிவமே வாழ்க்கையை உருமாற்றிவிடுகிறது, கதைச்சுவாரசியம் வாழ்வுண்மைகளை நெருங்கமுடியாமல் வாசகனை விலக்குகிறது என்று நம்பி ‘கதையை கதையிலிருந்து வெளியேற்றுவதே தன் அழகியல்’ என்று அறிவித்துக்கொண்டவர் சா.கந்தசாமி. நிகழ்ச்சிக்கோவைகளால் மட்டுமே ஒரு மைய உணர்வை அல்லது புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லும் தன்மை கொண்டவை அவருடைய ஆக்கங்கள்.

சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், ந.முத்துசாமி மூவரும் இணைந்து உருவாக்கியது கசடதபற இலக்கிய இயக்கம். அது மரபுஎதிர்ப்புத் தன்மை, கற்பனாவாதமறுப்பு அழகியல், தத்துவ விலக்கம் ஆகிய மூன்று அடிப்படைகளைக் கொண்டது. மரபை விலக்கிக்கொள்வது அல்லது பகடி செய்வது அவர்களின் அணுகுமுறை. எந்தவிதமான உணர்வெழுச்சியோ நெகிழ்ச்சியோ இல்லாத புனைவுமுறைகொண்டவர்கள். படைப்பில் தத்துவார்த்தமான பார்வை ஒரு சுமை, அது வாழ்க்கையை காட்டுவதற்கு தடை என நம்பியவர்கள்.சா.கந்தசாமி அழகியல்கோட்பாட்டு ரீதியாக அசோகமித்திரனிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவர். அதை அசோகமித்திரன் பதிவுசெய்திருக்கிறார்

சா.கந்தசாமியின் படைப்புக்களை அவர் முன்வைத்த அழகியல் பார்வையின் உதாரணங்களாகச் சொல்லலாம். ‘சாயாவனம்’ அவருக்கு புகழையும் அடையாளத்தையும் உருவாக்கி அளித்த சிறுநாவல், அவருடைய படைப்புக்களில் முதன்மையானதும்கூட. அவர் முன்வைத்த அழகியலின் மிகச்சிறந்த உதாரணம் அது. சாதாரண நிகழ்வுத்தொகுப்பு உணர்ச்சியில்லாமல், செய்திகளாகவே சொல்லப்பட்டிருக்கும், ஆனால் ஒட்டுமொத்தமாக அது வாழ்க்கையின் ஓர் உண்மையைக் கூர்மையாகச் சுட்டவும் செய்யும். ’தொலைந்துபோனவர்கள்’,’அவன் ஆனது’, ’சூரியவம்சம்’ ஆகியவை அவருடைய குறிப்பிடத்தக்க நாவல்கள். தக்கையின்மீது நான்கு கண்கள் போன்று சுருக்கவாத அழகியல்கொண்ட சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார்

நான் எழுதவந்த காலம் முதலே அழகியல்கோட்பாடு, இலக்கியப்பார்வை ஆகிய அடிப்படைகளில் முற்றிலும் எனக்கு எதிரானவராக சா.கந்தசாமி இருந்தார். 1990 ல் ரப்பர் நாவலுக்கான விருதைப்பெற்றுக்கொண்டு நான் தமிழில் உரையாற்றிய முதல்மேடையிலேயே என் கருத்துக்களை அவர் மறுத்துப்பேசினார். தொடர்ச்சியாக அவருடைய சுருக்கவாத அழகியலின் எல்லைகளைப்பற்றி நான் பேசியிருக்கிறேன்.அது வாழ்க்கை மீதான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைக்க இயலாதது, அடிப்படை வினாக்கள் அற்றது, உன்னதமாக்கல் நிகழமுடியாதபடி அன்றாடஉலகியல்த் தன்மை கொண்டது என்பது என்பார்வை. நவீனத்துவ இலக்கியப்போக்கின் விளைவான  அந்த அழகியலுக்கு எதிரான ஓர் இலக்கியப்போக்கையே நான் உருவாக்கிக்கொண்டேன்.

ஆயினும் எப்போதும் அவருக்கும் எனக்குமிடையே நல்லுறவு நிலவியது. எண்பதுகளில் நேரடியான கடிதப்போக்குவரத்தும் இருந்தது. பின்னர் ஜெயகாந்தனின் அவையிலும் விழாக்களிலும் அவரை சந்திப்பதுண்டு. 2014 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிலும் சா.கந்தசாமி கலந்துகொண்டிருக்கிறார். அன்று அவருடனான உரையாடல் உற்சாகமானதாக இருந்தது. இலக்கியத்துக்குச் சமானமாக வரலாற்றாய்விலும் நாட்டார்கலைவடிவங்களிலும் ஆர்வம் கொண்டவர், காவல்தெய்வங்கள் சுடுமண்சிற்பங்கள் பற்றியும் எழுத்தாளர்களைப்பற்றியும் ஆவணப்படங்களை எடுத்திருக்கிறார்.

சா.கந்தசாமிக்கு அஞ்சலி.

சாயாவனம்
விஷ்ணுபுரம் விருது- சா.கந்தசாமி
ஹராரியின் கலகச்சட்டகம்
மொழிகள் – ஒரு கேள்வி
முந்தைய கட்டுரைஎன் வாசகர்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்