அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல்

அன்புள்ள ஜெ

அ.முத்துலிங்கம் அவர்களுடனான உரையாடல் ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது. அவருடைய பதில்களில் இருந்த ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டவேண்டும்.

பொதுவாக எழுத்தாளர்கள் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது இரண்டு வகைகளில் பதில்சொல்வார்கள். கேள்விக்கு அப்போது தனக்குத் தோன்றும் ஒரு நினைவையோ எண்ணத்தையோ பதிலாகச் சொல்வார்கள். அல்லது அவர்கள் சொல்லிவரும் ஒன்றை சொல்வார்கள். அ.முத்துலிங்கம் அவர்கள் பதில்சொல்லும்போது அப்படி அல்லாமல் அந்தபதிலால் வாசகனுக்கு மகிழ்ச்சியும் பயனும் இருக்கவேண்டும், அவன் எதையாவது கற்கவேண்டும் என நினைக்கிறார். ஆகவே பதில்களை கூர்மையாக அந்த கோணத்திலேயே அமைக்கிறார். கேள்வி எதுவாக இருந்தாலும் பதில் எப்போதுமே ஒரு அழகான அனுபவம் அல்லது கதையுடன் வாசகனுக்காகச் சொல்லப்படுவதாக உள்ளது. இது முக்கியமானது. ஒரு பதில்கூட சமாளிப்பாகச் சொல்லப்படவில்லை.

அதேபோல எழுத்தாளர்கள் எதிலும் கமிட் ஆகிவிடக்கூடாது என்று ஜாக்ரதையாக இருப்பார்கள். நான்லாம் ஒண்ணுமே இல்லீங்க என்றபாணியில் பேசுவார்கள். அந்த வழக்கமெல்லாம் அ.முத்துலிங்கம் அவர்களிடம் இல்லை. கச்சிதமான பதில்கள். நான் பல ஆண்டுகளாக அவரை வாசித்து வருபவன். ஆனால் இந்த நேர்காணல் வழியாக அவருடைய ஆளுமையை உணர்ந்தேன். நன்றி

விஜயகுமார் எம்

***

அன்புள்ள ஜெ

அ.முத்துலிங்கம் அவர்களுடன் நடத்தப்பட்ட காணொலி பேட்டி கச்சிதமாக இருந்தது. தொழில்நுட்பக்குளறுபடிகள் இல்லை. நேரடியான ஆழமான உரையாடல். அவருடைய நகைச்சுவைத்திறனும் இயல்பான மனநிலையும் பேட்டியில் வெளிப்பட்டது. கேள்விகேட்டவர்களும் அவருடைய படைப்புக்களை விரிவாக வாசித்தவர்களாக, அரிதான கதைகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி கேட்பவர்களாக இருந்தனர். ஒரே ஒரு விதிவிலக்கு கனடாவிலிருந்து கேட்ட இலங்கைத் தமிழர். அவர் இந்த வட்டத்துக்குரியவரே அல்ல. அவரை ஒன்றும் செய்யவும் முடியாது.

ஓர் எழுத்தாளரை ஆழமாக வாசித்த வாசகர்களின் கேள்விகள் அவருக்கு மிகமிக கௌரவம் அளிப்பவை. அ.முத்துலிங்கம் சொல்லிய எல்லா பதில்களுமே முக்கியமானவை. ஆழமானவை, நகைச்சுவைகொண்டவையும்கூட. சிறுகதைக்கான அவருடைய வரையறை முதல் இலக்கியப்படைப்புக்களை உருவாக்கும் முறைவரை முக்கியமான பேச்சு.

எஸ்.நாகராஜன்

***

அன்புள்ள ஜெ

அ.முத்துலிங்கம் அவர்களின் இணையப்பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது. அவருடைய பதில்கள் அழகானமுறையில் தொகுத்து அளிக்கப்பட்டவை. அவர் நாம் கேள்வி கேட்டதுமே சரியான ஒருவடிவை மனசுக்குள் உருவாக்கியபின்னரே விடையைச் சொல்கிறார். ஒரு பதில்கூட ஒரு கச்சிதமான தொடக்கமும் அதற்குரிய முடிவும் கொண்டதாக இல்லாமலில்லை. இது மிகமிக அரிதான பண்பு. அவருடைய மனம் எத்தனை கூர்மையானது என்று தெரிந்தது. கேள்வி முடிவதக்கு முன்னதாகவே அவர் பதிலுக்குச் செல்கிறார். அற்புதமனா உரையாடல்

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ

அ.முத்துலிங்கம் அவர்களின் பேட்டி மிக்ச்சிறப்பாக இருந்தது. இந்த வீடடங்குக் காலகட்டத்தில் ஸூம் மீட்டிங்குகளால் சலித்துப்போயிருக்கிறேன். விதிவிலக்காக ஆழமான உற்சாகமான உரையாடல் அ.முத்துலிங்கத்திடம் அமைந்தது. அவருடைய பதில்கள் எல்லாமே ஆழமானவை. அவரை வாசித்து ரசித்து ரசித்து கேள்விகேட்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால் சில குறைகள். இவை பொதுவானவை. எதையுமே வாசிக்காத ஒருவர், இலக்கியச்சூழலிலேயே இல்லாதவர், கனடாவிலிருந்து உள்ளே வந்துவிட்டார். அவர் ஈழத்தவர் ஆதலால் உங்களுக்கு அவரை தெரிந்திருக்கவில்லை.உங்களால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவர் நாலைந்து வரி சொன்னதுமே வெட்டிவிட்டிருக்கவேண்டும். அவரை அவ்வளவு உளறவிட்டது பெரிய தப்பு

அதேபோல எந்த எழுத்தாளரிடமும் கேட்கும் பொதுவான கேள்விகள் ஒன்றிரண்டு வந்தன.  ஒருவர் உலக இலக்கியம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதுபோல ஏதோ கேட்டார். ஒரு எழுத்தாளரிடம் அவரிடம் மட்டுமே கேட்கும் கேள்விகளையே கேட்கவேண்டும்.

அதேபோல ஈழ எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஈழநாவல்கள் பற்றிய விமர்சனக்கேள்வியை கேட்டார். பொதுவாக அ.முத்துலிங்கம் அவர்கள் எந்த விமர்சனமும் சொல்வதில்லை, ஆகவே அவரிடம் விமர்சனக்கேள்வியே கேட்கக்கூடாது. அதிலும் நமது முடிவைச் சொல்லி, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பது சரியானது அல்ல

ஸூம் மீட்டிங் சில சிக்கல்கள்கொண்டது. நேர்ப்பேச்சு போல அல்ல அது. அதன் நேரம் டிஜிட்டல்நேரம். ஆகவே நாம் யோசித்து தயங்கி கேட்டால் மறுமுனையில் இருப்பவர் பொறுமையிழப்பார். இரண்டு நிமிடம்கூட நீண்டநேரமாக தெரியும். அது சில வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தெரியவில்லை. ஸூம் மீட்டிங்கில் ஏற்கனவே கேள்வியை எழுதி தொகுத்து சுருக்கமாக கேட்கவேண்டும். தெளிவாகவும் கேட்கவேண்டும். அதை ஒருவர் சரியாக கேட்டார்.

நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

***

முந்தைய கட்டுரைசாவி, ஆபகந்தி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?