சங்க இலக்கிய வாசிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

சில வருடங்களாக சங்க இலக்கியம் வாசிக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறது.

மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு கற்பதைப் போல எனக்குள்ளேயே சொற்களஞ்சியத்தை கட்டமைப்பு செய்வதிலும், இலக்கண விதிமுறைகளை ஒரு மாதிரி அனுமானம் செய்து என் புரிதல் என்னும் சிறிய சட்டத்திற்குள் அடைக்கவும் முற்படுகிறேன் என்று தெளிவாக தெரிகிறது.

வேறு வழிமுறை தெரியாததால் இதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். பலன் ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை. இன்றும் ஒரு சங்க இலக்கிய பாட்டை முழுதாய் வாசித்து அர்த்தம் கொள்ள இயலவில்லை.

உரையின் உதவி இல்லாமல் பாக்களை எப்படி அர்த்தம் கொள்வது?

உங்கள் வழிகாட்டுதல் தேவை.

பின்குறிப்பு:

வெண்முரசு நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். நான் இந்த மாதம் தான் வரிசையை வாசிக்கத் தொடங்கி முதல் பகுதி முடித்துள்ளேன். முதல் அத்தியாயம் தந்த pleasure of text இல் இன்னும் திளைத்துள்ளேன்.

சங்கர் எஸ்

அன்புள்ள சங்கர்

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்க. சங்க இலக்கியம் தமிழில் இருக்கிறது, ஆனால் இன்றைய தமிழில் அல்ல. தொன்மையான மொழிகள் அனைத்துக்கும் பல அடுக்குகள் இருக்கும். பாறை அடுக்குகளைக் கொண்டு காலக்கணிப்பு செய்வதைப்போல நாம் மொழியடுக்குகளைக் கொண்டு காலத்தை வகுக்க முடியும்.

சங்ககாலத்தைய மொழி மிகப்பழையது. இன்றைய சொற்கள் குறைவு, இன்றைய இலக்கண முறையும் குறைவு, இன்றைய சொற்கூட்டு முறை முற்றிலும் இல்லை.

ஆகவே ‘இயல்பாக’ அதை எவரும் வாசிக்க முடியாது. அதற்கு தனியாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அது மொழியின் பழைய சொற்களஞ்சியத்தை, பழைய இலக்கணத்தை, பழைய சொற்கூட்டுமுறையை அறிந்துகொள்வதாகவே இருக்கமுடியும்.

நாம் இன்று சங்கப்பாடல்களை பொருள்கொள்வதேகூட பேரறிஞர்கள் உழைத்து உருவாக்கிய பாதைகளின் வழியாகவே. சங்கப்பாடல்களுக்கு பொருள் உருவாக்கும் முயற்சி, அதாவது உரை எழுதுவது, குறைந்தது நான்கு முறை  தமிழ் வரலாற்றில் நிகழ்ந்துள்ளது.

முதலில் கிபி நான்குமுதல் ஆறாம் நூற்றாண்டுவரையிலான காலகட்டத்தில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டிருக்கலாம். சமணமுனிவர்களின் பணி அது. அப்போது ஓர் உரைக் காலகட்டம் இருந்திருக்கலாம்

அதன்பின் சோழ- பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இரு காலகட்டங்களிலாக உரைகள் எழுதப்பட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை தவிர பிறவற்றுக்கு எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய உரைகள் கிடைத்துள்ளன என்பது அறிஞர்களின் கருத்து. பின்னர் நச்சினார்க்கினியர் காலகட்ட உரைகள். 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில்.

அதன்பின் 19 ஆம் நூற்றாண்டில் அந்நூல்கள் ஏடுகளிலிருந்து அச்சில் வந்தபோது எழுதப்பட்ட உரைகள். [பார்க்க சங்க இலக்கிய உரைகள். தி.சு நடராஜன் ]

இந்த உரைகளின் உதவி இல்லாமல் எவராலும் சங்க இலக்கியங்களை பொருள் கொள்ள முடியாது. ஆகவே உரைகளை தவிர்க்க முயலவேண்டியதில்லை.

அப்படியென்றால் எப்படி உரைகளையே பாடலின் பொருளாகக் கொள்ளவேண்டியதுதானா? எந்த தொல்நூலுக்கும் ஒரு சமூகம் காலந்தோறும் நிகழ்த்திய வாசிப்புகள் ஒருங்கு திரண்டு கூட்டுவாசிப்பு ஒன்று உருவாகி வரும். அப்படி சங்க இலக்கியத்திற்கும் ஒரு வாசிப்பு உருவாகியிருக்கிறது.

வாசகனாக நம் பணி அதை முழுமையாக தவிர்ப்பது அல்ல, அது இயல்வதுமல்ல. நாம் செய்யவேண்டியது நம் வாழ்க்கை, ரசனை ஆகியவற்றின் அடிப்படையில் நமக்கான தனிவாசிப்பு ஒன்றை கூடுதலாக உருவாக்கிக்கொள்வது மட்டுமே

அதற்கு நாம் குறைவாக விளக்கம் அளிக்கும் உரைகளை வாசிக்கவேண்டும். சொற்பொருள் கொள்ளும்பொருட்டு அகராதிகளை நம்பவேண்டும். வாசிக்கும் பாடல்களை கவிதைகளாக, அதாவது அறுதியான பொருளை அளிக்காமல் நம் கற்பனையை கொண்டு வளர்த்துக்கொள்ளவேண்டியவையாக, வாசிக்கவேண்டும்

புலியூர் கேசிகன்

விரிவான ஆய்வுரைகளை தவிர்த்துவிடுங்கள். எளிமையாக பொருள் அளிக்கும் தெளிவுரைகள் உதவியானவை. எனக்கு அன்றும் இன்றும் புலியூர் கேசிகன் உரைகளே சிறந்தவை, இலக்கிய வாசகனுக்குரியவை என்ற எண்ணம் இருக்கிறது

ஆனால் கவிதைவாசிப்பு எந்த அளவுக்கு அந்தரங்கமானதோ அந்த அளவுக்கு கூட்டுரசனைக்கும் உரியது. அந்தரங்கமாக நாம் ரசிக்கலாம். ஆனால் இணையான ரசனையுள்ளவர்களுடன் விவாதிப்பதும், ரசனைசார்ந்த நூல்களை வாசிப்பதும், கவிதையனுபவத்தைப் பெருக்கும்

சங்க இலக்கியத்தை வாசிப்பதற்குச் சில விதிமுறைகள் உள்ளன, அவற்றை சுருக்கமாகச் சொல்கிறேன்

அ. சங்க இலக்கியப்பாடல்களை ‘காலக்கண்ணாடி’  ‘அன்றைய வாழ்க்கையைச் சொல்பவை’ என்றெல்லாம் அணுகக்கூடாது. அவை நேரடியால ‘பதிவுசெய்யப்பட்ட’ யதார்த்தங்கள் அல்ல. அவை நிகழ்த்துகலைக்காக, குறிப்பாக நடனத்துக்காக உருவாக்கப்பட்டவை. விறலியும் பாணனும் வேடமிட்டு ஆடுவதற்கு உரியவை. ஆகவே மறைமுகமாகவே அவை அக்கால வாழ்க்கையின் சில குறிப்புகளை அளிக்கின்ரன.

ஆ.ஐந்து திணைகளும் ஐந்துவகையான ஆடல்முறைகள் என்றே கொள்ளவேண்டும். அந்தந்த திணைக்குரிய தெய்வம், விலங்குகள், மனிதர்கள் வகுக்கப்பட்டிருந்தனர். ஒரு திணை ஓர் உணர்வுக்குரியதாக இருந்தது. யதார்த்தமாக எடுத்துக்கொண்டு குறிஞ்சித்திணையில் குறவர்கள் கணவர்களை பிரிவதே இல்லையா என்று கேட்கக்கூடாது

இ. சங்கப்பாடல்களை அப்படி ஆடப்படும் ஒரு சிறு இசைநாடகத்தின் ஒரு கதாபாத்திரத்தின் ஒரு வசனம் என்று எடுத்துக்கொள்வது சிறந்த வாசிப்பு. அந்த உரையாடல்பகுதி எவரால் எவரிடம் ஏன் சொல்லப்பட்டது என நாம் கற்பனை செய்துகொள்ளலாம்

ஈ.சங்கப்பாடல்களில் உள்ள இயற்கைவிவரணை, வர்ணனைகள் ஆகியவை அந்த காட்சியை ஆடிக்காட்டுவதற்கு அவசியமானவை, ஆடுபவர்கள் அவற்றை தங்கள் அபிநயம் மூலம் மேலும் விரிவாக்குவார்கள்– இன்றும் கதகளியில் இந்த வழிமுறை உண்டு. இதை மனோதர்மம் என்பார்கள்.

உ. ஆனால் அந்த வர்ணனைகள் வெறும் காட்சிச்சித்தரிப்புகள் அல்ல, அவை குறியீடுகள். அந்தப்பாடலில் வரும் உணர்ச்சிகளை கவித்துவமான படிமங்களாக அந்த வர்ணனைகள் காட்டுகின்றன. அப்படி உணர்ச்சிகளை அந்த இயற்கைக்காட்சிகள்மேல் ஏற்றிக்கொண்டு கற்பனைசெய்வது வாசகன் செய்யவேண்டியது. சங்கப்பாடல்கள் அளிக்கும் கவிதையனுபவம் என்பது அதுவே

ஜெ

சங்க இலக்கியம் பயில
சங்க இலக்கியம் வாசிக்க…
ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்
மரபிலக்கியம் – இரு ஐயங்கள்
சங்கக் கவிதைகள் நாட்டுப்புறப்பாடல்களா?
சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2
சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1
காடும் குறிஞ்சியும்
பூவிடைப்படுதல்-1
பூவிடைப்படுதல் 2
பூவிடைப்படுதல் 3
பூவிடைப்படுதல் 4
பூவிடைப்படுதல் 5
எரிமருள் வேங்கை
சங்க இலக்கிய தத்துவம்:கடிதங்கள்
சங்கச்சித்திரங்கள் – விமர்சனம்
சங்கசித்திரங்கள் -கடிதம்
சங்க இலக்கியம் – கடிதங்கள்
முந்தைய கட்டுரைகருமேனியனின் கனவு
அடுத்த கட்டுரைநட்பின் அழகியல்-ஸ்ரீனிவாசன்