அன்புள்ள ஜெ,
தொழில் முறையாக ஆலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், நூற்பு, நெசவு,சாய ஆலைகளை கட்டி கொடுக்கும் பொழுது அங்கு நிறுவப்படும் இயந்திரங்களை பார்க்கிறேன். ஐரோப்பிய இயந்திரஙகளின் செய் நேர்த்தியும், வடிவ ஒழுங்கமைவுகள் , அழகு எல்லாம் ஒரு படி மேலாக இருக்கின்றன. இந்த ஐரோப்பிய இயந்திரங்களை பிரதி செய்து உருவாக்கப்படும் சீன, இந்திய இயந்திரங்களில் இந்த வடிவ நேர்த்தி தவறுகிறது. இயந்திர வடிவமைப்பில் மட்டுமல்ல, ஐரோப்பிய ஆசனங்கள், உள் அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள் இவைகளின் நேர்த்தியும், தனித்தன்மையும், பிற தயாரிப்புகளை விட மேன்மையான அழகுணர்வோடு இருக்கின்றன.
நூற்பு ஆலையில் நூலை திரிக்கும் பாபின்களில் ராய்ட்டர் மிஷினில் இருப்பதற்கும், லட்சுமி மிஷினில் இருப்பதற்கும் இருக்கும் வித்யாசம் கிராமிய கலைக்கும், க்ளாசிக் ஆர்ட்க்கும் இருக்கும் வித்யாசம் போல. மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. ஓவிய மரபு, கைவினைகள், கவின் கலைக்கு ஐரோப்பா தன்னை நூற்றாண்டுகளுக்கு ஒப்புக்கொடுத்து இந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தி இருக்கிறது என்று சொல்லலாமா? கவின் கலைகளில் , சிற்பங்களில், முன்னோடியாக இருந்த நம் கலையின் பிரதிபலிப்பு ஏன் நம் கட்டிட வடிவமைப்பில், இயந்திர வடிவமைப்பில் பிரதிபலிப்பதில்லை?.
சீனாவில் உள் அலங்காரத்திற்கான பொருட்களை வாங்க சென்றிருந்த போது கோங்ஷி விற்கு அருகில் லூவர் மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு மிக அழகாக இருந்த பொருட்களில் பலவும் ஐரோப்பிய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டவை. என்னுடன் உடன் வந்த பொறியாளர்களும், சரி, கிழக்கத்திய நாகரீகத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களும் தேர்வு செய்த கட்டில்கள், ஆசனஙகள், இருக்கைகள், மேசைகள், விளக்குகள், ஓவியங்கள் பெரும்பாலனவை ஐரோப்பிய கலை இயக்கங்களின் அடியொற்றியவை மட்டுமே. சீன, வியட்நாமிய, இந்தோனேசிய, இந்திய கலைவடிவங்களிலும் செவ்வியல் படைப்புகளுக்கு மட்டுமே ஆதரவு இருந்தது.
இந்த மன நிலை ஐரோப்பிய கலை சுவைஞர்கள், கலை விமர்சகர்களால் கட்டமைக்கப்பட்டதா? என்னுடைய வாடிக்கையாளர்களும் சரி, சக பொறியாளர்களும் சரி, பிற கிழக்கத்திய வாடிக்கையாளர்களும் மனதார விரும்பித்தான் அந்த பொருட்களை தேர்வு செய்கிறார்கள். இயந்திரங்களில் இருந்து உள் அலங்காரம் வரை க்யூபிஸம், யூரோப்பியன் க்ளாசிக், கோத்திக், இன்ன பிற மறு மலர்ச்சி கால ஓவிய மரபை தான் தேர்கிறார்கள். இந்த மன நிலையின் பின் உள்ள காரணம் என்ன?
நம் ஓவிய மரபு, சிற்ப மரபு இவைகளின் தாக்கம் ஏன் நம் நவீன கட்டுமானம், இயந்திர வடிவமைப்பு இவைகளில் பிரதிபலிக்கவில்லை?
ராஜமாணிக்கம் திருப்பூர்
அன்புள்ள ராஜமாணிக்கம்,
நாம் சேர்ந்தே சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். அந்நாடுகளின் நகரத்தெருக்கள், கிராமத்தின் அமைப்பு ஆகியவற்றை நினைவுகூருங்கள். அங்கே சென்று கண்பழகிவிட்டபின் திரும்பி இந்தியா வரும்போது முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு என்ன என்று எண்ணிப்பாருங்கள். கண்களுக்குள் குப்பைக்கூடை ஒன்றை கவிழ்த்ததுபோல, இல்லையா?
முன்பொருமுறை அமெரிக்காவிலிருந்து நேரடியாக மும்பை வந்திறங்கினேன். அது மழைக்காலம். முப்பையின் கட்டிடங்கள் எல்லாம் கருமையான பாசிபடிந்தவை. மழையின் ஈரத்தில் அவை சாணிக்குவியல்கள் போல தெரிந்தன.அடுக்குமாடி வீடுகள் எல்லாமே பாழடைந்து இடிந்து நின்றிருந்தன. ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டிலும் ஒரு பால்கனி. அவற்றில் எல்லாம் உடைந்த பழையபொருட்களை குவித்திருந்தனர். விளைவாக அவை செங்குத்தான குப்பைக்குவியல்கள் போலிருந்தன. அவற்றின் நடுவே சாணியில் நெளியும் புழுக்கள் போல மனிதர்கள்.
நமக்கு இந்த ஊர்கள் கண்ணுக்குப் பழகிவிட்டிருக்கின்றன, ஆகவே உண்மையிலேயே தெரிவதில்லை. ஆனால் சற்று விலக்கத்துடன் ஒருநடை நாம் வாழும் இடங்களைச் சுற்றிப்பாருங்கள். வீடுகளுக்கு எந்த அழகியல்வடிவும் இருப்பதில்லை. பெரியவீடுகள்கூட கண்டபடி கட்டப்பட்டு, தகரக்கூரைகள் எல்லாம் போட்டு இஷ்டத்துக்கு சுற்றிலும் மறைக்கப்பட்டு, எந்தவிதமான அழகுணர்வும் இல்லாத அமைப்புக்களாகவே இருக்கும். கண்களில் அறையும் வண்ணங்கள், சாணிப்பவுடர் என ஆபாசமான ஒரு பச்சைமஞ்சள் நிறம் பூசிய முற்றங்கள்.
இங்கே எந்த உயர்தர தெருவிலும் இடிபாடுகளும் பாழடைந்த கட்டிடங்களும் இருக்கும். அத்தனை சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அவை உரிந்து தோல்செதில்களாக தெரியும். சாலைகளில் குப்பைமலைகள், கட்டிட இடிபாடுகள் குவிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் அவர்களால் வெளியே கொண்டுபோடப்பட்ட துருப்பிடித்த உடைந்த பொருட்கள் கிடக்கும். அழகான பங்களாக்களின் முன்னால்கூட அசிங்கமான தட்டிகளை கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.
பெரும்பாலான வீடுகளின் உட்பகுதிகள் கூட தேவையற்ற பொருட்களை அள்ளிக்குவித்து குப்பைக்கூடை போலவே தென்படும். அலங்காரம் என்றபேரில்கூட கண்ணைப்பறிக்கும் வண்ணங்களால் கொடூரமான சூழலை உருவாக்கியிருப்பார்கள்.
நம் நகரங்களில் கொஞ்சமாவது கண்ணுக்கு அழகான ஒன்றாவது உண்டா? வளர்ந்த நாட்டை விடுங்கள், பூட்டானின் திம்பு அளவாவது ஒழுங்கும் அழகும் கொண்ட ஒருநகரம் இந்தியாவில் உண்டா? ஒருநகரின் ஒரு சிறுபகுதியாவது கண்ணுக்கு அழகாகப் பேணப்படுவதுண்டா? நான் முப்பதாண்டுகளுக்கு முன் சென்ற ஜெய்சால்மரும் உதய்பூரும் நகர்மையங்களிலாவது சற்று அழகாக இருந்த ஊர்கள். இன்று அவை மற்ற ஊர்கள் போலவே குப்பைக்கூடைகள். அந்நகரங்களின் வாழ்வே சுற்றுலாப்பயணிகளை நம்பித்தான். அதன்பொருட்டுக்கூட அந்த ஊர்களை கொஞ்சம் அழகாக பராமரிக்க அவர்களுக்கு தோன்றவில்லை
நம் கிராமங்கள் எப்படி இருக்கின்றன? பெரும்பாலான ஊர்களில் தெருக்கள் என்பவை குப்பையும் சாக்கடையும் கலந்தவை. ஒவ்வொருவரும் வீட்டுமுன்னரே குப்பைகளை போடுவார்கள். இடிபாடுகள், பாழடைந்த குட்டிச்சுவர்கள். வீடுகளின் அமைப்புகளைக் கண்டால் நல்லவேளை கண்களுக்கு வாந்தி வருவதில்லை என்று தோன்றும்.
இது வறுமையால் அல்ல. நான் பார்த்ததிலேயே அழகான கிராமம் முன்பு ராசிபுரம் அருகே சென்ற ஒரு பழங்குடிச் சிற்றூர். ஊரே தூய்மையாக, அமைதியாக, அழகும் ஒழுங்கும் கொண்டதாக இருந்தது. எளிய மண்வீடுகள்தான் அனைத்தும். அங்கிருந்த ஒரே ஆபாசமான கட்டிடம் அரசால் கட்டப்பட்ட பொதுக்கூடம்தான்.
நான் சமீபத்தில் கண்ட அழகான இல்லங்கள் மேகாலயாவில் உள்ள பழங்குடிகளின் மரவீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பூந்தொட்டிகள். பூக்கள் சூழந்த அழகான சிறு மூங்கில்கூடுகள் அவ்வீடுகள். உட்புறம் குறைவான பொருட்களுடன் மிகமிக அழகாகப் பேணப்பட்டவை. ஊர்களில் குப்பைகள் மிகமிகக்குறைவு. அங்கிருந்து ஒருவர் பார்வதிபுரம் வந்து நான் வாழும் சூழலை பார்த்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார் என்று கூசினேன்
நமக்கு அழகுணர்வே இல்லை என்பதுதான் உண்மை, ஏனென்றால் நாம் நம் மரபார்ந்த அழகுணர்வை இழந்துவிட்டோம், நவீன அழகுணர்வை கற்றுக்கொள்ளவே இல்லை. நீங்கள் சொல்லும் அழகான ஊர்கள் எவையும் இன்றில்லை. எஞ்சியிருப்பவை கோயில்கள், அவை பாழடைய விடப்பட்டிருக்கின்றன
அழகான கோயில்களை, சிலைகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். நாம் செல்லுமிடங்களிலெல்லாம் அக்கோயில்கள்மேல் குமட்டும் வண்ணங்களைப் பூசி கண்ணால் பார்க்கமுடியாதபடிச் செய்திருக்கிறார்கள் இல்லையா? எந்த கோயிலிலாவது அக்கோயிலின் அழகும் அமைப்பும் கருத்தில் கொள்ளப்பட்டு திருப்பணியும் பராமரிப்பும் நடந்துள்ளதா? கான்கிரீட்டில் கட்டிடங்களை ஆலயங்களுக்குள் கட்டி மஞ்சள் டிஸ்டெம்பர் அடிக்கிறார்கள். இரும்புச்க் கம்பிகளைக் கட்டி சிறைக்கொட்டடி போல ஆக்குகிறார்கள். ஏர்கூலர் பைப்புகள் சாக்கடைக்குழாய்கள் போல புகைபடிந்து கோயில்களுக்குள் ஊடுருவியிருக்கின்றன. பார்க்கவே அசிங்கமான ஓவியங்களை சுவர்களில் வரைந்து மாட்டியிருக்கிறார்கள்.
அற்புதமான சிற்பங்கள்மேல் கந்தலாடையைச் சுற்றி வைக்கிறார்கள். அப்படிச் செய்யக்கூடாது, அது ஆகமவிரோதம் என சிற்பிகள் கூவிச் சலித்துவிட்டனர். சிற்பங்களில் அச்சிற்பத்தின் ஆகமரீதியான அமைப்பின்படி ஆடை பொறிக்கப்பட்டிருக்கும்.அனலாடையும் புனலாடையும் மலராடையுமெல்லாம் உண்டு.அதற்குமேல் எண்ணைபடிந்த கந்தலைச் சுற்றிவைக்கவேண்டியதில்லை. பூசைக்கு இருக்கும் மையச்சிலைக்கு வழிபாட்டின் ஒருபகுதியாக மலர்கள், அணிகளுடன், ஆடையும் சார்த்தப்படலாம். ஆனால் அவை அன்றே நீக்கமும் செய்யப்படவேண்டும் என்பதே ஆகமநெறி.
தமிழகம் தவிர எங்கும் இப்படி சிலைகளில் கந்தல்சுற்றும் வழக்கம் இல்லை. அதுவும் சென்ற பத்தாண்டுகளாகத்தான் இவ்வழக்கம் தொடங்கியிருக்கிறது. நடராஜர் கோவணத்தை தார்ப்பாய்ச்சிக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்க ஒருவருக்குக் கூட கண்கூசவில்லை.
சிலைகள் மேல் பெயிண்டால் நாமமும் விபூதிப்பட்டைகளும் வரைகிறார்கள். அகோரவீரபத்ரனுக்கு அண்டர்வேர் வரைகிறார்கள். சமீபமாக கருங்கல்சிலைகளின் முகங்களில் வெள்ளையாக கண்களும் சிவப்பாக வாய்களும் பெயிண்டால் வரையும் வழக்கம் உள்ளது. நினைவிருக்கும், சிற்பங்களின்மேல் ஏணிகளை சாய்த்துவைத்திருந்தவர்களிடம் நாம்போய்ச் சண்டைபோட்டிருக்கிறோம். நம் சிற்பக்கலைச்சாதனைகள் ‘பக்தர்களால்’ நாள்தோறும் சூறையாடப்படுகின்றன.
சமீபத்தில் வேளிமலை குமாரகோயில் போயிருந்தேன். சென்ற இரண்டு ஆண்டுகளில் ஒரு வழக்கம் உருவாகியிருக்கிறது. கோயிலில் கொடுக்கும் சந்தனத்தை வாங்கி சுவரில் சூலம்போன்ற எதையோ வரைவது.ஏதோ வட இந்தியச் சுற்றுலாப்பயணி செய்ய அதை அத்தனைபேரும் பின்பற்ற மொத்தக்கோயிலிலும் சுவர்கள் முழுக்க, சிற்பங்கள் மேலெல்லாம் ஆயிரக்கணக்கான மஞ்சள் அடையாளங்கள்.ஏதோ பூச்சிப்படையெடுப்பு போல தோன்றியது.
நம் ஆலயங்கள் கலைக்கூடங்கள், அவை பாழடைந்து இருண்டு கிடக்கின்றன. நம் மகத்தான கலைச்செல்வங்கள் அழிகின்றன. இதைச் சொன்னால் ‘கோயில்னா சாமிகும்பிடத்தான்’ என்றும் ‘கோயில்னா அது பூர்ஷுவா கலாச்சாரம்’ என்றும் ‘கோயில்னா பார்ப்பனியம்’ என்றும் மூன்று குரல்கள் சேர்ந்து வரும். மூன்றுமே காசுபணம் எண்ண மட்டுமே தெரிந்த உலகியல்வெறியின் மூன்று முகங்கள். நாம் எப்படி நமது இறந்தகாலத்தின் கலைவெற்றிகள்மேல் உரிமைகொண்டாட முடியும்?
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் ஒரு பௌத்த மடாலயத்தின், கிறித்தவ தேவாலயத்தின் அழகும் ஒழுங்கும் இன்று நம் ஆலயங்களில் உண்டா? ஒரு ஆலயத்திற்குச் சென்றுவிட்டு அருகே இருக்கும் சர்ச்சுக்குச் சென்றால் முகத்தில் அறையும் வேறுபாட்டை காண்கிறோமே, ஏன்? அவர்கள் அதை அழகாகவும் சுத்தமாகவும் வைக்கவேண்டும் என நினைக்கும்போது நாம் ஏன் இப்படி வைத்திருக்கிறோம்?
நாம் இன்று தாழ்வுபட்டு குவிந்திருக்கும் ஒருவகை மானுடப்பதர்கள். நம் அருங்காட்சியகங்களில் எங்காவது எவராவது கலைப்பொருட்களை நின்று ரசிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? எந்த அடிப்படையில் ஒரு சமூகமாக நாம் அழகுணர்வுகொண்டவர்கள் என நினைக்கிறோம்? நம் கல்விமுறையில் அழகியல் உண்டா? நம் வீடுகளில் நாம் எவ்வகையிலேனும் நாம் அழகியலை அடுத்த தலைமுறைக்கு அளிக்கிறோமா? மரபார்ந்த கலையை விடுங்கள் நவீனக்கலையை?
ஐரோப்பாவுக்கு அல்லது ஜப்பானுக்கு ஒருமுறை சென்றுவாருங்கள், அவர்களின் அழகுணர்வு என்றால் என்ன என்று புரியும். அது அவர்களின் அன்றாடவாழ்க்கையில் கலந்துள்ளது. அவர்களின் மரபு மிகச்சிறப்பாகப் பேணப்படுகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் அழகும் ஒழுங்கும் உள்ளது. அது ஒரு தேசியப்பழக்கம், அப்படி இல்லாமல் அவர்களால் வாழமுடியாது
டோக்கியோ தெருக்களில் நடக்கையில் அடுக்குமாடிகளில் தெரிந்த மிகச்சிறிய பால்கனிகளை பார்த்துக்கொண்டே சென்றேன். அத்தனை பால்கனிகளும், ஆம் ஒன்றுகூட விடாமல் அத்தனையும், அழகானவை. மிகமிகச் சிறிய பால்கனியிலெயே ஒரு சின்னஞ்சிறு தோட்டமும் இருவர் அமர்ந்து டீ குடிப்பதற்கான மேஜைநாற்காலிகளும் இருந்தன. அந்தச் சின்ன இடத்தில் செடிகளை அடுக்கடுக்காக வளர்த்து தோட்டத்தை உருவாக்கும் கலை அங்கே வளர்ந்திருக்கிறது
நேற்று பேசிக்கொண்டிருந்தேன், இத்தாலி ஒப்புநோக்க ஐரோப்பாவில் வறிய நாடு. அங்குள்ள ஒரு வறுமையான மீனவச்சிற்றூரின் அமைப்பும் இல்லங்களும் இந்தியாவின் கணக்கில் ஓர் உயர்தர, ஆடம்பர நகருக்குச் சமானமானவை. அப்படி ஒர் ஊர் அழகாக இருக்கவேண்டுமென்றால் அந்த மக்களுக்கு அதைப்பற்றிய கூட்டுப்பிரக்ஞை தேவை, அவர்களின் அரசு அதை நடைமுறைப்படுத்தவேண்டும்.
அழகுணர்வு என்பது ஓர் ஆடம்பரம் அல்ல, அது ஒரு அவசியத்தேவை. அது வாழ்க்கையை இனிதாக்குகிறது. நான் சென்ற ஆண்டு என் உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். ஒரு சிறு அறையில் பழைய துருப்பிடித்த பொருட்கள் குவிக்கப்பட்டதன் நடுவே அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். கொடியில் கந்தலாடைகள். எங்கும் தூசி. அவருடைய மனம்தான் அந்த அறை. அறை அழகுற இருந்தால் மனம் அதை பிரதிபலிக்கும். அவர் நோயுற்று நலிந்துகொண்டிருந்தார். பின்பு மறைந்தார்.
அழகைப்பற்றிச் சொன்னீர்கள், ஒரு பொருள் அழகாக இருந்து சற்றே விலைகூடுதலாக இருந்தால் அதை வாங்குபவர்கள் எத்தனைபேர்? அழகான பொருளின் மதிப்பை இங்கே உணர்கிறார்களா? விளம்பரங்களேகூட அழகாக இல்லாமல் அறையும்படி இருந்தால்தான் வெற்றிகரமாக உள்ளன என்கிறார்கள்.
நமக்குத்தேவை அழகுபற்றிய ஒரு விழிப்புணர்வு. நாம் குப்பைக்கூடையில் வாழ்கிறோம் என்னும் தன்னுணர்வு. நாம் எப்படி குப்பையோடு குப்பையாக வாழ்கிறோம் என நாம் உணர்வோம் என்றாலே அழகுகுறித்து யோசிக்க ஆரம்பிப்போம். அதன்பின் குப்பையை வீச நம் கை தயங்கும்
அழகைப்பற்றிப் பேசுவதொன்றும் ஏழ்மைக்கும் எளிமைக்கும் எதிரானது அல்ல என்று உணர்வோம். செய்வன ஒவ்வொன்றையும் திருந்தச் செய்வதன் இன்னொரு பெயரே அழகுணர்வு. அழகு என்றால் மிகச்சரியான ஒத்திசைவுகொண்ட வடிவம் என்று பொருள். அதுவே மிகத்திறமைவாய்ந்ததும்கூட
நான் பிஎஸ்என்எல் காலகட்டத்தில் பார்த்திருக்கிறேன். அழகாக ஒன்றைச் செய்பவரே நேர்த்தியாகச் செய்கிறார், அவரே எளிதாகவும் செய்கிறார். அழகுணர்வு இல்லாதவர் கச்சாமுச்சாவென்று செய்கிறார், ஆகவே உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்கிறார்.அழகுணர்வு என்பது ஒரு மனநிலை. அது பொருளில் வெளிப்படுவதையே அழகு என நாம் காண்கிறோம்.
ஒரு தொழிலாளியின் வீடு குப்பைமேடாக இருக்குமென்றால் அவர் அழகுணர்வுடன் எதையும் உருவாக்க முடியாது. திருத்தமாகப் பணியைச் செய்யமுடியாது. அவரிடம் அழகைப் புரியவைக்கவே முடியாது. நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் அழகை எதிர்பார்த்தோமென்றால், கட்டாயமாக்கினோம் என்றால் மட்டுமே நாம் நேர்த்தியையே அடையமுடியும்.
நேர்த்தி என்பதை ஒரு நிபந்தனையாக ஆக்குங்கள், உங்களால் எத்தனை பேரை ஊழியர்களாக வைத்திருக்கமுடியும் என்று பாருங்கள். ஒரு பொருளை ஸ்க்ரூடிரைவரால் கழற்றும்போது அந்த ‘நட்’களை சீராக ஓர் இடத்தில் வைத்து சரியாக திரும்ப எடுப்பவர்கள் எத்தனைபேர் என்று பாருங்கள். நான் இதை தனியாகவே கவனித்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் தேடுவதிலேயே நேரம்செலவிடுவார்கள். உதவியாளர்கள் இருந்தால் அவர்களிடம் கூச்சலிடுவார்கள்
நான் அமெரிக்கா சென்றபோது இரண்டுமுறை பிளம்பர்கள் வேலைசெய்தை பார்த்தேன். ஒருமுறை ஒரு கட்டிடப்பணி நடப்பதைக் கண்டேன். உழைப்பில் இருந்த பயிற்சிபெற்ற நேர்த்தி என்னை பிரமிப்படையவைத்தது. அழகு என்பது அந்த நேர்த்தியின் விளைவுதான். அதற்கு நாம் பயிற்சி எடுக்கவேண்டும். அதற்குமுன் நம்மிடம் அழகுணர்வு இல்லை, ஆகவேதான் நேர்த்தி இல்லை,அதை பயிலவேண்டும் என்று உணரவேண்டும். குறைந்தது அதைப்பற்றி பேசவாவது தொடங்கவேண்டும்
ஜெ