யானைடாக்டர்- கதை தொன்மமாதல்

அன்புள்ள ஜெ..

சில மாதங்களுக்கு முன்எங்கள் பகுதி ஆலய விழாவை ஒட்டி பட்டிமன்றம் நடந்தது. அதில் ஒரு பேச்சாளர் இப்படி பேசினார்

“நடுவர் அவர்களே ..  ஜெயமோகன் என்ற டாக்டர் தன் அனுபவங்களை யானை டாக்டர் என ஒரு நூலாக எழுதியிருக்கிறார். அதைப்படித்தால் யாரும் காடுகளில் மது பாட்டில்களை எறிய மாட்டார்கள்.” என உருக்கமாக பேசி கதையை அழகாக விளக்கினார்

நீங்கள் எழுதிய கதையைப்போல இன்னொரு டாக்டரும் எழுதியிருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கும் உங்கள் பெயர் என்பது கூடுதல் ஆச்சர்யம்

யானை டாக்டர் கதைக்கு குழந்தை வரைந்த ஓவியம்

அதன்பின் பல மேடைகளில் வீடியோ உரைகளில் யானை டாக்டர் கதையை கேட்கிறேன்.   “”யாரோ ஒரு டாக்டர் “” எழுதிய நூல் என உங்கள் பெயர் இல்லாமல் மேற்கோள் காட்டப்பட்டதும் உண்டு..

(நான் சொல்வது இலக்கிய மேடைகளல்ல)..   கதையை அழகாக பிழையின்றி விளக்குகிறார்கள். ஆனால் எழுதியவரைப் பற்றி சரியாக தெரியவில்லை

படைப்பாளியை மிஞ்சி அவன் படைப்பு வளர்வதை எப்படி உணர்கிறீர்கள்

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்,

நிகாஸ் கசண்ட்ஸகீஸின் வரி ஒன்று உண்டு ‘தொன்மம் ஆக மாறுவதே ஒரு இலக்கியப் படைப்பு அடையும் உச்சம்’. இன்னொரு வரி கி.ராஜநாராயணன் சொன்னது. ‘எழுதப்பட்டதாக இருந்தாலும் ஒரு கதை வாய்மொழியில் திகழும்போது மட்டுமே காலத்தை கடக்கிறது’

இரண்டு கூற்றுகளும் ஒன்றின் இரு வடிவங்கள். ஒரு கதை விரிந்த சமூகத்தால் ஏற்றெடுக்கப்படுகிறது. அது அக்கதையை தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறது. அதற்கு அதன் பின் ஆசிரியன் என ஒர் ஆளுமை இல்லை. அதன் ஆசிரியன் அந்தச் சமூகமேதான். அதுதான் தொன்மம். ஒருவகையில் கதையின் வீடுபேறு அது. ஆகவே அந்தக்கதை இப்படி ஆவதில் மகிழ்ச்சியே

ஒரு படைப்பு தொன்மம் என்று ஆவது எப்போது?

அ.அது மிக அதிகமானபேரிடம் சென்றடையும்போது.

ஆ.அவர்களின் பேச்சினூடாக அது வளரும்போது.

இ.வெவ்வேறு கலைவடிவங்கள் வழியாக அதற்கு மறுஆக்கங்கள் உருவாகும்போது.

ஈ. அது சொல்லிச் சொல்லி அனைவரும் அறிந்தபின் ஒரு சுருக்கமான நினைவூட்டலாலேயே இன்னொருவரால் உணரப்படும்போது. ஒற்றைப்படிமமாகச் சுருங்கும்போது.

இந்த நான்கு படிநிலைகளும் வரிசையாக ஒரு கதைக்கு அமையவேண்டும். யானைடாக்டர் அப்படி மாறிக்கொண்டிருக்கும் கதை.சில மாதங்களுக்குமுன் நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு இரண்டாம்வகுப்பு குழந்தை ‘நான் ஒரு கதை சொல்லட்டா?’ என்று கேட்டு என் மடியில் அமர்ந்து ‘ஆனைலாக்டர்’ கதையை சொன்னது. அதன் ஆசிரியை சொன்னகதை. அந்தக்கதையை நான் எழுதினேன் என அந்தவீட்டிலும் எவருக்கும் தெரியவில்லை

குழந்தையின் மொழியில் அந்தக்கதையைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தை கதையில் கொஞ்சம் மாயத்தைச் சேர்த்துவிட்டது. அந்த யானைகளுடன் சிங்கம் புலி ஆகியவையும் சேர்ந்து டாக்டரைப் பார்க்கவந்தன. மூன்று டைனோசர்களும் இருந்தன. அந்த யானைக்குட்டி அவளைப்போன்ற சிறுமியாகவும் மாறிவிட்டது. அன்று நான் அடைந்தது ஒருவகையான பரவசம்.

எந்தக் கதை அப்படி மாறுகிறது? பிரபலமான கதை தொன்மமாக ஆகிறது என்று சொல்லமுடியுமா? பிரபல ஊடகங்களில் வெளிவந்து பல லட்சம்பேரால் வாசிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொதுவான பேச்சாக இருந்த கதைகள் பலநூறு. அவை அக்காலகட்டம் கடந்ததும் மறக்கப்படுகின்றன. கதைகளை பலலட்சம் பேர் வாசித்தால் மட்டும் போதாது. அவர்கள் அதை வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்களில் அது வளரவேண்டும். அதற்கு அக்கதையில் ஆழமான காரணம் இருக்கவேண்டும்.

யானைடாக்டர் எந்த பிரபல வாரஇதழிலும் வெளியாகவில்லை, எந்த வெகுஜன ஊடகமும் அதை முன்வைக்கவில்லை. அக்கதை இந்த தளத்தில் வெளியாகியது, அன்று இன்றிருக்கும் வாசக எண்ணிக்கை இந்த தளத்திற்கு இல்லை. அன்று இணையம் முக்கியமான ஊடகமும் அல்ல. எப்படி அக்கதை இந்த ஏற்பை அடைந்தது?

அந்தக்கதையிலிருந்த ஒரு விழுமியம்தான் அதை ஏற்கவைத்தது. அது வாசித்தவர்களின் மனதை தொட்டது, அவர்கள் அதை பரப்பினார்கள். வெவ்வேறு சூழியல் அமைப்புக்கள் அக்கதையை அச்சிட்டு வினியோகம் செய்தன. பல பொது இடங்களில் எனக்கே, என்னை எவரென்று தெரியாமல், யானைடாக்டர் கதையின் இலவசப்பிரதியை தன்னார்வலர் அளித்திருக்கிறார்கள்.

வெவ்வேறு காரணங்களால் அதை அச்சிட்டு வினியோகம் செய்திருக்கிறார்கள். தென்காசியில் ஓர் இஸ்லாமிய நண்பர் அவர் வளர்த்த யானை வெறிநாய் கடித்து இறந்தபோது அந்த யானையின் நினைவாக யானைடாக்டர் கதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வினியோகம் செய்திருக்கிறார்

அந்த ஏற்புதான் முக்கியமானது.சமூகத்தால் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விழுமியத்தைச் சொன்னால் அந்த ஏற்பு அமையாது. சமூகம் அறிந்திராத, ஆனால் அறிந்ததும் ஏற்கக்கூடிய ஒன்றாக அந்த ஏற்பு இருக்கவேண்டும். அதனூடாக அச்சமூகம் சற்று முன்னகரவேண்டும்

அதோடு அந்த விழுமியம் மரபுடன் எப்படியோ தொடர்புகொண்டிருக்கவேண்டும். மறைந்திருக்கும் பண்பாட்டு நினைவுகளை அது தொடவேண்டும்.அதை திட்டமிட்டெல்லாம் செய்யமுடியாது. இயல்பாக நிகழவேண்டும்.

அனைத்துக்கும் மேலாக அந்த படைப்பு ஒரேசமயம் எளிமையானதாகவும் வாசிக்கவாசிக்க விரிவதாகவும் இருக்கவேண்டும். தொன்மங்கள் அனைத்துக்கும் அந்தப்பண்பு உண்டு. எளிமையான குழந்தைக் கதையாக அதைச் சொல்லலாம். வளர்ந்தவர்களுக்காக இன்னும் சிக்கலாகச் சொல்லலாம். வாசித்தால் அது பெருகும், எண்ண எண்ண அது விரியும்

யானைடாக்டர் கதை இன்று ஒன்றாம்வகுப்பு குழந்தைகளுக்குச் சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. பள்ளிப்பாடமாக உள்ளது. ஆனால் அதன் மூலவடிவை வாசிப்பவர் அதன் உள்ளடுக்குகள் மேலும் மேலும் விரிவதையே காண்பார். அது முழுக்க வாசித்துவிடமுடியாத ஒன்று என உணர்வார். அந்த ஆழம் இல்லை என்றால், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வாசிப்பை அது அளிக்கவில்லை என்றால் அது தொன்மமாக ஆகாது.

இந்த பன்முக அர்த்ததளம்தான் அதை பேச்சில் வளரச் செய்கிறது. இரண்டுநாளில் யானைடாக்டர் கதையின் மூன்று வெவ்வேறு வடிவங்களை பேச்சில் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. அந்த மூன்று வாசிப்புக்கும் அது இடம்கொடுக்கிறது.

யானைடாக்டர் கதையின் பல்வேறு நிகழ்த்துவடிவங்கள் இன்று உள்ளன. பலர் அதை வாசித்திருக்கிறார்க்ள். சொல்லியிருக்கிறார்கள். சொல்லும்போது அது சற்றே உருமாறுகிறது. அது நிகழ்த்துகலைகளின் இயல்பு- எதிரே உள்ளவர்களுக்காக அது உருமாறியாகவேண்டும். அது நாடகங்களாக போடப்படுகிறது.

தமிழில் கூடுதலாக அது சொல்லப்பட்டுள்ளது. கேரளத்தில் அதன் நாடகவடிவங்களே மிகுதி. இவ்வாறு ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும்போதும் அது உருமாறுவதைக் காண்கிறேன், சிலவற்றை அது கைவிடுகிறது புதியசிலவற்றை எற்கிறது. ஆனால் நிகழ்த்துகலைகள் வழியாகவே தொன்மங்கள் நிலைகொள்ளமுடியும்.

ஆசிரியனிடமிருந்து கதை விடுபட்டுச் செல்வது சிறகு முளைத்து குஞ்சு அன்னையை விட்டுச் செல்வதுபோல.கதை தொன்மம் ஆவது கற்சிலையில் இருந்து தெய்வம் எழுவதைப்போல.

ஜெ

யானைடாக்டர் -கடிதம்

யானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம்

யானைடாக்டர்-குழந்தைகளின் படங்கள்

யானைடாக்டர்-ஓர் உரை

யானைடாக்டர்-படங்கள்

யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்

யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்

யானை டாக்டர்-நண்பர்கள்

யானைடாக்டர்- கடிதம்9

யானை டாக்டர் -கடிதம்8

யானைடாக்டர், கடிதங்கள்7

யானைடாக்டர், கடிதங்கள்6

யானைடாக்டர், கடிதங்கள்5

யானைடாக்டர், கடிதங்கள்4

யானைடாக்டர் ஒரு கடிதம்3

யானைடாக்டர் கடிதங்கள்2

யானைடாக்டர்-கடிதங்கள்1

 

 

முந்தைய கட்டுரைசெம்மீன், சேட் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாவியம்- சுசித்ரா