ஞானி-8

ஞானி-7

சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையேயான என் ஊசலாட்டத்தில் நான் ஞானியுடன் அணுக்கமானது என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் பிரசுரமானபோது. காலச்சுவடு முதல் இதழில் சுந்தர ராம்சாமியின் செயல்திட்டம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதனுடைய கட்டமைப்பிலேயே தத்துவம், அரசியல் கோட்பாடு வரலாற்றாய்வு ஆகிய மூன்றுக்கும் இலக்கியத்துக்கும் சமானமாக  இடம் அளிக்கப்பட்டிருக்கும். டி.டி.கோசாம்பி குறித்தும் எம்.என்.ராய் குறித்தும் மற்ற வரலாற்று ஆசிரியர்களைக் குறித்தும் தத்துவ சிந்தனையாளர்களைக் குறித்தும் விரிவான பதிவுகள் அன்று காலச்சுவடு இதழில் இருந்தன. தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் அதற்கு முன்பு அவ்வாறு பதிவானதில்லை.

அதற்கான காரணம் உண்டு தமிழ் சிற்றிதழ்ச்சூழலில் செல்லப்பா காலத்திலிருந்தே ஓர் இலக்கிய அடிப்படைவாதம் திகழ்ந்தது. இலக்கியவாதிக்கு இலக்கியம் மற்றும் இலக்கியக்கோட்பாடு அன்றி அதற்கப்பால் எது தெரிந்தாலும் அது சுமையே என்ற எண்ணம் சூழலில் இருந்தது. திரைப்படம் சம்மந்தமான ஒரு கட்டுரையை வெங்கட் சாமிநாதன் எழுத்து இதழுக்கு எழுதி அனுப்ப அதை தன்னுடைய சிற்றிதழில் பிரசுரிக்க முடியாதென்று செல்லப்பா மறுத்திருக்கிறார். இசை, பரதநாட்டியம், சிற்பக்கலை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளை செல்லப்பா தொடர்ந்து நிராகரித்திருக்கிறார் அவை தன்னுடைய எல்லைக்குள் வராதவை என்பது மட்டுமல்ல, ஒர் இலக்கியவாதிக்கு அவையெல்லாம் தேவையும் இல்லை என்ற எண்ணம் அவருக்கு வலுவாக இருந்தது. இன்றைய மார்க்சியர்களின் மரபுமறுப்புவாதம் பிற அனைவரையும்விட செல்லப்பாவிடம் வலுவாக இருந்தது என்பது பலருக்கு தெரியாதது.

ஏனென்றால் மார்க்ஸியர்களைப் போலவே செல்லப்பாவும் நவீனத்துவர். அவர் இலக்கியத்தை நவீன இலக்கியத்திலிருந்துதான் தொடங்குகிறார் பாரதியிலிருந்துதான் அவருக்கு இலக்கிய வரலாறே தொடங்குகிறது. [அதற்கு முன்பிருந்தவர்களில் எவர் ஸ்மார்த்த பிராமணர் என்று உறுதியாகத் தெரியாததே அதற்குக் காரணம் என்று ஞானி ஒருமுறை சொன்னார்] அதற்கு முன்பான மரபிலக்கியம் பற்றியோ, சிற்பக்கலை பற்றியோ, இசை பற்றியோ, நடனம் பற்றியோ, மெய்யியல் பற்றியோ அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. அவை நவீன எழுத்தாளனுக்கு எவ்வகையிலும் தேவையில்லை என்ற உறுதி அவருக்கு இருந்தது. ந.முத்துசாமி பற்றிய ஒரு பேச்சில் ‘பொம்மனாட்டிகள் ஜம்ப் பண்றதை ஒக்காந்து பாத்துண்டிருக்கான்’ என்று செல்லப்பா சொன்னார் என்று ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார். அவர் உத்தேசித்தது பரதநாட்டியத்தை. அதுவும் அலர்மேல்வள்ளியின் ஆடலை.

அவ்வாறுதான் வெங்கட் சாமிநாதன் எழுத்து இதழைவிட்டு வெளியேறினார். கசடதபற குழுவும் அவ்வாறு வெளியேறியதே. கசடதபற குழுவே இலக்கியத்துடன் ஓவியத்தையும் திரைப்படத்தையும் சேர்த்து பேச விழைந்த  இளைஞர்களால் உருவாக்கப்பட்டது என்று சுருக்கமாக சொல்லலாம், ஆனால் அங்கும் நாட்டுபுறவியல், மானுடவியல் போன்றவற்றுக்கு இடமில்லாமல் இருந்தது. கடைசியில் வெங்கட்சாமிநாதன் யாத்ராவை தொடங்கி அவரே எழுதி அவரே வெளியிட்டார். “அச்சிட்டதாலே அ.கா.பெருமாள் படிப்பார். அப்செஷன் இருக்கிறதனாலே பிரமிள் படிப்பார். மத்தபடி யார் படிப்பாங்கன்னு தெரியல்லை. கண்டிப்பா வெ.சா படிக்க மாட்டார், படிச்சிருந்தா அவரோட நடை இம்ப்ரூவ் ஆகியிருக்குமே” என்று சுந்தர ராமசாமி சொன்னார்.

ஆனால் யாத்ராவின் பார்வையில் கூட வரலாற்றாய்வுக்கோ தத்துவ ஆய்வுக்கோ இலக்கியத்தில் இடமில்லாமல் இருந்தது. பின்னர் ’படிகள்’ இதழில் கே.கே.பிள்ளையின் வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தது தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழலில் அதிர்ச்சியையே உருவாக்கியது.  இலக்கியம் என்பது யதார்த்த அழகியல் சார்ந்ததாக, நிகழ்காலம்  சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அன்று பொதுவாக இருந்தது. அவ்வகையில் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு ஒரு பெரிய புதிய காலடி. ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டு, அதில் திகழ்ந்த காலகட்டத்திலும்கூட சுந்தர ராமசாமிவின் அணுகுமுறையிலிருந்த நவீனத்துவப் பிடிவாதம் புதியவற்றை தடுப்பதை நான் உணர்ந்தேன்.

சுந்தர ராமசாமி நவீனத்துவம் உருவாக்கிய கனகச்சிதமான வடிவம், புறவயமான சுருக்கமான மொழி, உணர்ச்சி கலவாத வெளிப்பாட்டுமுறை ஆகியவற்றை மிகவும் வலியுறுத்துபவராக இருந்தார். அவை நவீனத்துவ காலத்துக்குரியவை என்றும்; இலக்கியம் அதைக் கடந்துவிட்டது என்றும் நான் கருதினேன். அவ்வெண்ணத்தை எனக்கு ஆற்றூர் ரவிவர்மா அளித்துக்கொண்டே இருந்தார். ஏனென்றால் அவர் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நவீனமொழியியல் கற்பிப்பவர், மொழியியலிலேயே நவீனத்துவத்தை கடக்கும் சிந்தனைகள் தோன்றின. பக்தினும் ரோலான் பார்த்தும், ஆற்றூர் வழியாகவே அறிமுகமாயினர்

இலக்கியம் இலக்காக்குவது அறிவார்ந்த ஒரு புரிதல் நிலையை அல்ல, மெய்யியல் வெளிப்பாட்டு நிலையை என்றும், ஆகவே  அது வாசகனில் நிகழ்த்துவது உன்னதமாக்கலை என்றும், வடிவமீறலும் மொழிமீறலும் கொண்டே அதை இயற்றமுடியும் என்றும், கறாரான கச்சிதமான வடிவங்கள் இலக்கியத்தை அறிவார்ந்த செயல்பாடாகச் சுருக்கிவிடுகின்றன, இலக்கியம் என்பது அறிவைக்கடந்த ஆழ்மன தொடர்பாடல் மட்டுமே என்றும் நான் தொடர்ந்து சுந்தர ராமசாமியிடம் விவாதித்தேன். இச்சொற்களில் அல்ல, ஆற்றூர் ரவிவர்மா அளித்த சொற்களில்.

குறைந்தபட்சம் நான் எழுதவந்தது என் ஆன்மிகத் தேடல்களையும் தத்துவத் தேடல்களையும், பண்பாட்டுச் சிக்கல்களையும்தான். அன்றாடத்தின் அழகுகளையும் நுட்பங்களையும் மட்டும் எழுதுவதில் எனக்கு ஆர்வமில்லை.ஆகவே என் எழுதுதளம் தொன்மங்கள், பித்துநிலைகள், மீறல்கள் பற்றியே. தமிழ்ச்சூழலை என்றும் ஆட்டுவிக்கும் பாலியல் ஒழுக்கச் சிக்கல்கள் எதுவும் எனக்கில்லை. நான் உருவாக்க விரும்பியது உன்னதமாக்கலை [sublimation] மட்டுமே. உன்னதமாக்கலை அறுதி இலக்காகக் கொண்ட காவியமே என் கனவு. நிகர்க்காவியமே என் கலைவடிவம்.

அன்று நான் என் நண்பர்களான பாவண்ணன், சுரேஷ்குமார இந்திரஜித் அனைவரிடமும் இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன். அன்றெல்லாம் நீளநீள கடிதங்களே விவாதத்தின் வழி. நான் எல்லாருக்கும் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு நாளில் சாதாரணமாக இருபது பக்கம் வரை கடிதங்களே எழுதுவேன். தமிழிலும் மலையாளத்திலும். சுரேஷ்குமார இந்திரஜித் நான் 1989ல் எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் பிரசுரித்திருந்தார். அதிலேயே என் கருத்தை தெளிவாகச் சொல்லியிருந்தேன்.கடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்

நாட்டாரியல் பண்பாட்டுக்கூறுகளையும் மரபார்ந்த செவ்வியல் கூறுகளையும் புனைவிலக்கியத்தில் கொண்டுவர வேண்டுமெனில் நவீனத்துவத்தின் புறவயமான, கட்டுப்படுத்தப்பட்ட, தரப்படுத்தப்பட்ட மொழியை உடைத்து வெளிச்சென்றே ஆகவேண்டும்; அதன் இறுக்கமான வடிவ உருவகங்களை தகர்த்தே ஆகவேண்டும் என்றேன். ‘மொழிமேல் கட்டுப்பாடு’ [லேங்குவேஜ் மேலே கண்ட்ரோல்] என்பது சுந்தர ராமசாமியின் பிரியமான சொற்றொடர். கட்டுப்படுத்துவது எது என்று நான் கேட்டேன். அது பிரக்ஞை, அது ஏன் புனைவை ஆளவேண்டும்?

துல்லியமான மொழி, வடிவம் என்று நாம் கூறுவது என்ன? பெரும்பாலும் அது வாசகரை மனதில்கொண்டு நம்மால் உருவாக்கப்படுவது. இலக்கணம் என்பதே தொடர்புறுத்துவதை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட விதிகள்தான். அது தன்னியல்பாக வரலாம், ஆனால் அதையே ஒரு கட்டுப்பாடாகக் கொண்டால் அது செயற்கையான வெளிப்பாடாகவே அமையும். கனவுக்கு வடிவஇலக்கணம் அமைக்கமுடியாது. கனவு அதைக் காண்பவன்பொருட்டு வடிவம்கொள்வது அல்ல, தன்னிச்சையானது.

1988-90 ல் நான் எழுதிய நான்கு சிறுகதைகள் நவீன தமிழிலக்கியத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கின. அவற்றில் இரண்டு ஞானி நடத்திய நிகழ் சிற்றிதழில் வெளிவந்தவை. நிகழ் சிற்றிதழில் நான் எழுதிய ‘படுகை’ ‘போதி’ ஆகியவை வெளிவந்தன. பொன்.விஜயன் நடத்திவந்த ‘புதிய நம்பிக்கை’ சிற்றிதழில் நான் எழுதிய ‘மாடன் மோட்சம்’ வெளிவந்தது.  சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இலக்கிய மலரில் ‘திசைகளின் நடுவே’ வெளிவந்தது. இந்த நான்கு வகையான கதைகள் இன்றுவரையிலான என்னுடைய எழுத்தின் நான்கு வகைமாதிரிகளைக் காட்டுபவை என்று இப்போது தோன்றுகிறது.

அவை அன்று விரிவாகக் கவனிக்கப்பட்டன. மூத்த எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, அசோகமித்திரன் ஆகியோர் அக்கதைகளைப்பற்றிய பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்கள். அன்றைய முற்போக்குத் தரப்பிலும் அக்கதைகள் பேசப்பட்டன. அக்கதைகளினூடாக என் பெயர் கவனிக்கப்பட்டது. அன்று கதைகளை வெளியிட ஊடகங்கள் குறைவு, சிற்றிதழ்கள் மட்டுமே. ஆனால் எல்லா சிற்றிதழ்களும் என்னிடம் கதைகளைக் கேட்டன. கணையாழி இதழிலிருந்தேகூட கதைகேட்டு கடிதங்கள் வரலாயின.

அதற்கு முன்னரே ஒரிரு கதைகளை நான் காலச்சுவடு, கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எழுதியிருந்தேன். தீபம் இதழில் நான் எழுதிய ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’ போன்ற நல்ல கதைகள் கவனிக்கப்படவில்லை. இன்று அவை கிடைப்பதுமில்லை. அசோகமித்திரன் என்னுடைய ‘நதி’ என்னும் கதையை கணையாழியில் வெளியிட்டதைத்தான் என் இலக்கிய உலக நுழைவு என்று சொல்லவேண்டும். அதன்பிறகு காலச்சுவடு இதழுடன் சேர்ந்து பணியாற்றினேன். காலச்சுவடில் சில கவிதைகளும் ஒரு கதையும் [வலை] வெளியாகின.

ஆனால் அவை எல்லாம் ஏற்கனவே இங்கு எழுதப்பட்டுக் கொண்டிருந்த இலக்கியப்படைப்புகளின் தடம் பிடித்து எழுதப்பட்டவை. நிகழ் இதழிலும் புதிய நம்பிக்கையிலும் வெளிவந்த கதைகள்தான் தமிழில் முன்பு இல்லாதவை. ஒரு புதிய எழுத்தாளனின் வருகையை அறிவிப்பவை. அக்கதைகள் நிகழ் இதழில் வெளிவந்தமைக்கு காரணம் அன்றைய இலக்கியச் சூழலின் தேக்கநிலை, அதிலிருந்து புதியதை தேடி எழுந்த ஞானியின் ஆர்வம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்வாறு விழைவுடன் மேலெழும் ஒருபகுதி உண்டு. ஒரு கிழங்கில் இருந்து ஒருபகுதி முண்டு ஆக எழுந்து முளைத்துச் செடியாவது போல.அந்த உயிர்த்துடிப்பு கொண்ட பகுதி எது என்று முளைப்பதற்கு முன்பு அக்கிழங்கை பார்க்கும் ஒருவர் சொல்ல முடியாது. இலக்கிய விமர்சனத்துக்காக தொடங்கப்பட்ட எழுத்து சிற்றிதழ் புதுக்கவிதையை உருவாக்கியது போலத்தான் மார்க்ஸியக் கோட்பாட்டு விமர்சனத்துக்காக தொடங்கப்பட்ட நிகழ் இலக்கியத்தில் புதிய வழிகளை திறந்ததும் நிகழ்ந்தது. பின்பு வெகுஜன நாடகத் தளத்திலிருந்து வந்து கோமல் சுவாமிநாதன் சுபமங்களா இதழ் வழியாக அதைப்போன்ற ஒரு புதிய தொடக்கத்துக்கு வழி வகுத்தார்.

கோமல்

அதே சமயம் சுந்தர ராமசாமி நவீன இலக்கியத்தின் தலைமைந்தர்களில் ஒருவராக இரண்டு தலைமுறைக்காலம் நீடித்தவராயினும்; நவீனத்தமிழிலக்கியம் குறித்த விரிவான புரிதலும், தொடர்ந்து அடிப்படைகளை தெளிவாக முன்வைக்கும் திறனும் அதனால் கவரப்பட்ட ஓர் இளைஞர்சுற்றமும் கொண்டவராக இருந்தாரெனினும்; புதியன எதையுமே அவரால் உருவாக்க இயலவில்லை. காலச்சுவடு அடையாளம் கொண்ட தமிழ் எழுத்தாளர் என எவருமே இல்லை.

உண்மையில் புதியனவற்றை மறுக்கும் மிகப்பெரிய தடையாகவே அவருடைய உறுதியான ஆளுமை இருந்தது. ஏனெனில் இலக்கியம் என்பது குறித்தும், படைப்புவடிவம் குறித்தும், மாறாத கொள்கைகள் அவரிடம் இருந்தன. அவருடைய சிந்தனைக்களம் முழுக்கமுழுக்க நவீனத்துவத்தின் எல்லைக்குள்ளேயே. ஆகவே அடுத்து எழுந்த இலக்கிய அலையில் ஒரே வீச்சில் அவர் பின்னடைய நேரிட்டது.

அவருடைய ஆழமான தன்னம்பிக்கையையும் அதிலிருந்து எழுந்த தருக்கையும் அந்தப் புதிய எழுச்சி கூர்மையாக புண்படுத்தியது. அது இயல்பானதென்றும், அதுவே வளர்ச்சி என்றும், அத்தனை தெரிந்தும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை தனக்கெதிரான மறுப்பாக மட்டுமே அவரால் எடுத்துக்கொள்ள முடிந்தது. இது ஒரு வகையான தந்தையர் உளச்சிக்கல். இவ்வுளச்சிக்கலை பெருக்குபவர்கள் இலக்கியத்தில் ஆழமான வாசிப்போ அதன் இயக்கமுறை குறித்த அறிவோ இல்லாதவர்கள். அவர்கள் இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டு அவரைச் சூழ்ந்தார்கள். அவர்களுக்கு அவர் தேவைப்பட்டார், அவருக்கு அவர்கள் ஆறுதலாக இருந்தனர்.

ஆனால் உண்மையில் அவருக்கு அவர்களால் ஆறுதல் அளிக்கவும் இயலவில்லை. ஏனெனில் தன் ஆழத்தில் உண்மையில் என்ன நிகழ்கிறது என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இச்சூழலில் இருக்கவும் முடியாமல். இங்கிருந்து விலகவும் முடியாமல் ஒரு நீண்ட தத்தளிப்பை அடைந்தார். இக்காலகட்டத்தில்தான் இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் சுந்தர ராமசாமி அவருடைய வழக்கமான நிதானத்தை இழந்து பதற்றத்துடனும் மிகையான உணர்வுகளுடனும்  மேடைகளிலும் கடிதங்களிலும் கட்டுரைகளிலும் எதிர்வினையாற்றியிருக்கிறார். புதிய விமர்சனச் சிந்தனைகளை முன்வைத்தவர்களை ‘செரிக்காமல் சாணி போடுபவர்கள்’, ’ஐரோப்பிய அடிமைகள்’ என்றெல்லாம் அவரைப்போன்ற ஒருவர் எழுதியது என்பது அந்த பதற்றத்தின் சான்று.

பின்னர் சுந்தர ராமசாமி இந்தியநிலத்திலேயே இருக்க இயலாதவரானார். அவருடைய இறுதிக்காலத்தின் தனிமையும் துன்பங்களும், இன்று நான் உணரக்கூடிய சில ஆளுமைச்சரிவுகளும் இந்த நிலைகுலைவிலிருந்து வந்தவை. அவை ஒருவகையில் தவிர்க்கமுடியாதவை என்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு உணர்கிறேன். இன்று எனக்கு அவ்வாறு நிகழுமெனில் முடிந்தவரை எளிதாக என்னை அத்தகைய உணர்வு அலைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டுமென்று எனக்கே சொல்லிக்கொள்கிறேன்.

என் பார்வைகளுக்கான இடம் காலச்சுவடில் இல்லை என்பதை அப்போதே புரிந்துகொண்டேன். கதைகளின் புதியவெளிகளை அன்றிருக்கும் சிற்றிதழ்ச்சூழலைக் கடந்தே உருவாக்கமுடியும் என எண்ணினோம். அன்று அது குறித்த புரிதலுடன் இருந்தவர்கள் நானும் கோணங்கியும். நாங்கள் வெவ்வேறு களங்களில் அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் மேலும் சில ஆண்டுகளுக்குபிறகே பின்நவீனத்துவம் சார்ந்த கோட்பாடுகள் எங்களுக்கு அறிமுகமாயின. அதற்குப்பின்னர்தான் நாங்கள் பேசிக்கொண்டிருப்பது பின்நவீனத்துவ சிந்தனைகளைத்தான் என்ற புரிதலை அடைந்தோம்.

நான் எழுதிய படுகை என்னும் கதை சுந்தர ராமசாமிக்குத்தான் முதலில் அனுப்பப்பட்டது. அது ஒரு நாட்டுப்புறத் தொன்மம் – ஆனால் என்னால் கற்பனையாக உருவாக்கப்பட்டது. அதாவது அக்கதை தன்னை நாட்டாரியல் தொன்மமாக பாவனை செய்துகொள்கிறது. நாட்டார்ப் பாடல்களில் இருக்கும் தாளம் கொண்ட மொழி அதில் பயின்று வந்தது. அது பூடகத்தன்மை நோக்கி செல்லவில்லை, மாறாக வெளிப்படையான உணர்ச்சிக்கொப்பளிப்புடன் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் படிமங்களையும் அள்ளி அள்ளி முன்வைத்து, அவற்றை முடைந்தும் கலைத்தும் விளையாடியது

அது மென்மையான உள்ளடங்கிய மொழியில் பேசும் நவீனத்துவக் கதை அல்ல. பின்நவீனத்துவ கதைக்கான பீறிடலும் அத்துமீறலும் கொண்டது. பின்நவீனத்துவ இலக்கியத்துக்கு பொதுவான வடிவமாகிய metafiction என்ற தன்மை கொண்டது. தமிழில் எழுதப்பட்ட முதல்கட்ட metafiction கதைகளில் ஒன்று என்று அதைச் சொல்வேன். கதைசொல்லியே கதைசொல்வது, கதைக்குள் கதை திறந்துகொள்வது என அதன் வடிவம் அமைந்தது. [ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னோடியான புதுமைப்பித்தனே அதற்கும் முன்னுதாரணக்கதைகளை எழுதியிருக்கிறார்]

அன்றைய வழக்கமான கதைகள் ஒற்றைப்படையான நகர்வு கொண்டவை. ஆனால் கதை சொல்லிக்குள் கதைசொல்லி என்ற அமைப்பும், இரண்டு மூன்று  வெவ்வேறு கதைகள் ஒரு கதைக்குள் பின்னிக்கொள்ளும் அமைப்பும் கொண்டது படுகை. இரண்டு வேறுபட்ட விஷயங்களையும் அது சொல்கிறது. பலவகையிலும் அன்றிருந்த அத்தனை கதை இலக்கணங்களையும் அது உடைத்து முன்னால் சென்றது.

சுந்தர ராமசாமி  அந்தக்கதையை வாசித்து திகைத்து போய்விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். என்னிடம் “இதை எப்படி ஒரு நவீனச்சிறுகதை என்று சொல்ல முடியும்? நவீனக் கதைக்கு தேவையான எந்த வடிவஒழுங்கும் இதில் இல்லை. இந்த இலக்கணங்கள் நவீன இலக்கியம் தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டு வந்தது. அதை கடந்து எப்படி எழுதமுடியும்?” என்று அவர் கேட்டார்.

நான் அவரிடம் அவ்வாறு நவீன இலக்கியத்திற்கு ஒரு மாறாத அடையாளம் இல்லை என்று விவாதித்தேன். படுகை கதைக்கு முன்னுதாரணமாக வந்த தமிழ்கதைகள் என்றால் புதுமைப்பித்தனின்  ‘கபாடபுரம்.’ ‘பிரம்மராக்ஷஸ்’ போன்ற கதைகளை குறிப்பிட முடியும். அவை நவீனத்துவம் பின்னர் உருவாக்கிக்கொண்ட வடிவக்கச்சிதம், கட்டுப்பாடான் மொழி, புறவயமான நடை எதுவுமே கொண்டவை அல்ல. அவை நான்குபக்கமும் சிதறிக்கிடப்பவை என்றேன். ஆனால் சுந்தர ராமசாமி அவை புதுமைப்பித்தன் எழுதிய சிதைவுண்ட கதைகள் என்றார்.

நான் அத்தகைய கதைகள் அன்று மேலைநாடுகளில் எழுதப்படுகின்றன என்று சொல்லி அத்தகைய சில கதைகளை அவருக்கு நகலெடுத்து அனுப்பினேன். ஆனால் சுந்தர ராமசாமியால் அந்த கதைகளையும் ஏற்கமுடியவில்லை. ஓராண்டுக்கு மேலாக அவர் படுகை கதையை தன் கையிலேயே வைத்திருந்தார். அதன்பிறகு நான் அவரிடம் அதை வெளியிடவேண்டாம் என்று சொல்லி ஞானிக்கு எந்த முகவுரைக் குறிப்பும் இன்றி அனுப்பினேன்.

அவை கையில் கிடைத்த மூன்றாவது நாள் ஞானி என்னை தொலைபேசியில் அழைத்தார். பெரும்பரவசத்துடன் ‘இதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களிடமும் கோணங்கியிடமும் நான் எதிர்பார்ப்பது இதைத்தான். இதுதான் புதிய கதை, இங்க இருக்கிற எல்லைகளையெல்லாம் கடந்துபோகிற கதை’ என்றார். கோணங்கியை ஏற்கனவே நவீனக் கதைசொல்லி என்று வரவேற்றிருந்தார் ஞானி.

‘தமிழில் நவீன இலக்கியத்தில் நிகழவேண்டியது இதுதான். இதில் அடித்தள மக்களின் வாய்மொழி வரலாறு நேரடியாக வந்து அமர்ந்திருக்கிறது. அடித்தள மக்களைச் சேர்ந்த ஒருவன் கதை சொல்லியாக அமர்ந்திருக்கிறான். அவனுடைய வாழ்க்கையின் அன்றாட எதார்த்தத்தை இது சொல்லவில்லை, அவனுடைய அகவாழ்க்கையையும் அவனுடைய மெய்யியலையும்  சொல்ல முற்படுகிறது. இதில் நான் விரும்பும் அரசியல் உள்ளது, அது சென்ற நூறாண்டுகளில் நிகழ்ந்த முதலாளித்துவம்சார்ந்த வளர்ச்சியை வளர்ச்சியாக அன்றி ஒருவகை ஒடுக்குமுறையாக பார்க்கக்கூடிய மக்களின் அரசியல், அதை சூழியல் அழிவாகப் பார்க்கும் பசுமைஅரசியலின் பார்வை இதில் உள்ளது’ என்று ஞானி எழுதினார்.

‘அதற்கப்பால் இந்தக்கதை ஒரு அர்த்தத்தை உருவாக்காமல் ஒன்றுடன் ஒன்று முரண்படும் அர்த்தங்களின் அடுக்காக, ஒன்றையொன்று மறுத்து பின்னிச்செல்லும் கதைகளின் முரணியக்கமாக உள்ளது. இதுவரை தமிழில் பேசப்படாத பண்பாட்டு நுண்கூறுகளின் தொகையாக உள்ளது. இங்கு இதுதான் உருவாக வேண்டும் என்றூ நினைக்கிறேன். நான் காத்திருந்த கதை என்று தோன்றுகிறது’ என்றார். அதிலிருந்த இசைத்தன்மை கொண்ட நடையைப் பற்றி ‘உடுக்கோசை காதிலே கேக்குது’ என்றார்.

அந்தக்கதை பற்றி அவர் நீண்ட நான்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அந்தக்கதையின் பல்வேறு கூர்மையான வரிகளை எடுத்து எடுத்து பாராட்டி எனக்கு அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக்கதை நிகழ் இதழில் வெளியிடப்பட்டது. அதை ஒரு குறிப்புடன் வெளியிடுவதாக அவர் எனக்குச் சொன்னார். நான் அவ்வாறு பாராட்டுக்குறிப்பு அதற்கு தேவையில்லை, வெறுமே ஒரு கதையாக வெளியிடுவோம், அது என்ன விளைவை உருவாக்குகிறது என்று பார்ப்போம் என்றேன்.

அந்தக்கதை வெளியிடப்பட்ட அடுத்த வாரத்திலேயே இந்திரா பார்த்தசாரதி அந்தக்கதையை குறித்து பாராட்டி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதழொன்றிலும் பதிவு செய்திருந்தார் அன்று எழுதிக்கொண்டிருந்த மூத்த எழுத்தாளர்கள் பலரும் அக்கதை ஒரு புத்தம்புது நிகழ்வென்றும், இலக்கியத்தில் ஒரு திருப்புமுனை என்றும் எழுதியிருந்தார்கள். அன்றைய சூழலில் எழுதிக்கொண்டிருந்த பலரிடமிருந்து அவ்வாறு வியப்பும் மதிப்பும் கொண்ட ஏற்புகள் வந்தன. நிகழ் வெளியிட்டவற்றில் படுகையே மிக அதிகமாக வரவேற்பு பெற்ற கதை.

அந்த எதிர்வினைகள் ஞானிக்கு வியப்பாக இருந்தன. “இதென்ன இவர்கள் இதுவரைக்கும் எழுதிய வடிவத்தை கைவிடுகிறார்களா?” என்று என்னிடம் கேட்டார். “அவர்கள் அனைவருக்கும் ஒரு சலிப்பு இருக்கிறது. எழுதி எழுதி அவர்கள் சென்றடைந்த ஒரு முட்டுச்சந்தில் ஒரு திருப்புமுனையாக அது இருக்கிறது” என்று நான் சொன்னேன்.

சுந்தர ராமசாமி அந்த எதிர்வினைகளை திகைப்புடனும் சற்று பதற்றத்துடனும் பார்த்தார். “இது இலக்கியத்துக்கு சாதகமானதா என்று எனக்கு தெரியவில்லை” என்று என்னிடம் ஒருமுறை சொன்னார். “இப்படி போனால் நாட்டிலுள்ள அனைத்து பேய்க்கதைகளும் நாட்டுபுறக்கதைகளும் இலக்கியமாக வந்து அமர்ந்துவிடும்” என்றார். “எல்லா புராணங்களையும் கதையாக எழுத ஆரம்பித்துவிடுவார்கள்” என்றார்.

“சரி, புராணங்களுக்கு இலக்கியத்தில் இடம் கிடையாதா என்ன?” என்று நான் கேட்டேன். “புராணங்கள் நவீன இலக்கியத்துக்குள் நுழையவே முடியாது. அவை நேர்மாறான அழகியலும் தத்துவமும் கொண்டவை. அவற்றை மறுத்துத்தான் நவீன இலக்கியமே தோன்றியிருக்கிறது. அவை வேறொரு காலகட்டத்தில் இருந்து ஒலிப்பவை. ஒரு இலக்கியவாதி அவற்றை பயிலலலாம், நவீன இலக்கியத்தில் அவற்றுக்கு இடமில்லை” என்று சுந்தர ராமசாமி ஆணித்தரமாக ஒரு நீண்ட கடிதத்தை எனக்கு எழுதினார்.

ஹெர்மன் ஹெஸ்

“சரி, பார்லாகர் க்விஸ்டின் பரபாஸ் நாவல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். அன்புவழி என்ற பேரில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்நாவல் சுந்தர ராமசாமிக்கு மிகவும் பிடித்தமானது. [Barabbas, Pär Lagerkvist.]  “அது தொன்மம் அல்ல, வரலாறு” என்றார். “சரி, தாமஸ் மன்னின் மாற்றிவைக்கப்பட்ட தலைகள்? ஹெர்மன் ஹெஸ்ஸின் சித்தார்த்தா?” சுந்தர ராமசாமி “அதெல்லாம் புராண விஷயங்களைப் பேசலை, எக்ஸிஸ்டென்ஷலியச பிரச்சினைகளைப் பேசுது” என்றார்.

”புதுமைப்பித்தனின் சாபவிமோசனம்?” என்றேன். சுந்தர ராமசாமி “அதிலெ உள்ளது இன்றைய கேள்வி” என்றார். “நவீன இலக்கியமே ஐரோப்பியத் தொன்மங்களை மறுஆக்கம் செய்வதனூடாகத்தான் உருவாகி வந்திருக்கிறது, கிரேக்க-அராமிக் தொன்மங்களின் மறு உருவாக்கம் இன்றி ஐரோப்பிய நவீனத்துவமே இல்லை, நீங்கள் சிலாகிக்கும் எந்த எழுத்தாளருக்கும் இருப்பில்லை” என்று நான் வாதிட்டேன்.

ராமசாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “நம்முடைய சூழல் மதத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து வாசகனை வெளியே கொண்டுவருவதற்கான முயற்சியை மட்டும்தான் நவீனஇலக்கியம் செய்ய முடியுமே ஒழிய மரபிலக்கியத்தை நோக்கி திருப்பி வாசகனை கொண்டு செல்வதல்ல” என்று எழுதினார்.

நான் “அவ்வாறல்ல, எந்த நவீன இலக்கியமும் மரபிலக்கியத்தை நோக்கி திரும்பிச் செல்லாது” என்றேன் “ஒரு மரபான பக்தன் நவீன இலக்கியத்தை படித்தான் என்றால் அவனுக்கு புராணத்தை வாசித்த உணர்வு வராது, ஒவ்வாமையும் பதற்றமும் புறக்கணிப்பு மனநிலையும்தான் வரும். ஏனெனில்  நவீன இலக்கியத்தின் விதிகளின்படித்தான் மரபை அது அணுகுகிறது, மரபின்விதிகளின்படி அல்ல” என்றேன். ”மரபை அது மறுகட்டமைப்பு செய்கிறது, விழுமியங்களை ஏற்றுகிறது, ஒருபோதும் அது ‘திரும்ப’ச் சொல்வதில்லை” [இனிநான் உறங்கலாமா எழுதியபோது பி.கே.பாலகிருஷ்ணன் இதே கேள்விகளைச் சந்தித்துச் சொன்ன பதில்கள் இவை]

“எந்த நவீன இலக்கியத்தை விடவும் தொன்மத்தை மறுஆக்கம் செய்யும் கதையே மரபான உள்ளத்தை ஊடுருவி நிலைகுலையவைக்கிறது, உடைத்து மறுஆக்கம் செய்கிறது” என்றேன். ஆகவேதான் சாபவிமோசனம் என்ற கதை ராஜாஜியை கொந்தளிக்க வைத்தது, ‘இதற்கு அவருக்கு என்ன உரிமையிருக்கிறது, மரபை அவர் எப்படி மாற்றலாம்?’ என்று ராஜாஜி கேட்டார். மரபை மாற்றியமைப்பவர்களின் மீதான் மரபுவாதிகளின் கசப்புதான் அந்தக்கதையின் பாதிப்பு என்ன என்பதற்கான சான்று” என்று நான் எழுதினேன்.

கஸன்ஸகிஸ்

இது எங்களுக்கிடையே ஒரு தொடர்விவாதமாக அன்று  நிகழ்ந்தது. இன்றுவரை வெவ்வேறு களங்களில் இந்தக்கேள்விகளும் பதில்களும் எதிர்கொண்டிருக்கிறேன். என்னுடைய மூன்றாவது தலைமுறையிலிருந்து இயந்திரவாத அணுகுமுறை கொண்டவர்கள் இதே கேள்விகளையே என்னிடம் கேட்கிறார்கள். சுந்தர ராமசாமிக்கு ஐரோப்பாவில் மரபிலக்கியத்தை மறுஆக்கம் செய்த புனைவுகள் சிலவற்றை நான் அனுப்பினேன். குறிப்பாக அப்போது சுடச்சுடப் பேசப்பட்ட நிகாஸ் கசந்த்சகஸீன் The last temptation of Christ. அந்நாவலை அவருக்கு எர்ணாகுளத்திலிருந்து வாங்கி அனுப்பினேன்.

அன்று அந்நாவலை ஒட்டி கிறிஸ்துவின் ஆறாம்திருமுறிவு என்னும் நாடகம் போடப்பட்டு, அது கேரளத்தில் மதவாதிகளால் எதிர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டது. [அதை நிகழ்த்திய பி.எம்.ஆண்டனி பின்னர் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். வேறு பல வழக்குகளில் சிக்கி நீண்டநாள் சிறையிலிருக்க நேர்ந்தது] அந்த நாடகத்தை ஒட்டி நடந்த தொடர் விவாதம் அந்நாவல் மேல் கவனத்தை ஈர்த்திருந்தது. [மீறலும் ஓங்குதலும் ]

பி.கெ பாலகிருஷ்ணன்

நான் சுந்தர ராமசாமிக்கு எழுதினேன், “எந்த நவீனபாணி எழுத்தும் உருவாக்காத சலனத்தை இந்தக்கதை ஏன் உருவாக்குகிறது? இது ஏன் சமூகத்தின் சிந்தனையின் நரம்பில் தொட்டு துடிக்கவைக்கிறது? ஏனெனில் இதில் ஒரு மறுஆக்கம் இருக்கிறது. இது மொண்ணையான மரபுஏற்பு அல்ல. இது மறுப்பு-வளர்ச்சி. எல்லா வளர்ச்சியும் மறுப்புதான், எல்லா மறுப்பும் ஒருவகையில் வளர்ச்சியும் கூடத்தான். ஆகவே மரபை புறக்கணிப்பதென்பது ஏற்கனவே நம்முள் இருந்துகொண்டிருக்கும் ஒரு பேருருவை கண்டும் காணாமல் நடிப்பது மட்டுமே”.

“நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் அது இல்லாமல் ஆவதில்லை. நீங்கள் அதனுடன் உரையாடாவிட்டால் அதை மறைத்துவிடமுடியாது. அதனுடன் உரையாடல் என்றேனும் இன்றைய சமூகம் தொடங்கித்தான் ஆகவேண்டும்” என்று எழுதி கொஞ்சம் அத்துமீறி “நீங்கள் உங்களுக்குள் கொண்டிருக்கும் மரபான நம்பிக்கைகள் என்னென்ன என்று எனக்குத்தெரியும். அவற்றை உடையாமல் காத்துக்கொள்ள நினைக்கிறீர்களா என்ன?” என்று எழுதினேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை, ஆனால் கொஞ்சம் புண்பட்டார் என பின்னர் அறிந்தேன்.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தான் எம்.டி.வாசுதேவன் நாயர் அவருடைய இரண்டாம் ஊழம் [தமிழில் இரண்டாமிடம், ஆ.மாதவன் மொழியாக்கம்] நாவலை மாத்ருபூமியில் தொடராக வெளியிட்டுக்கொண்டிருந்தார். அது உருவாக்கிய அலைகளை சுந்தர ராமசாமி பார்த்தார். “எம்.டியின் எந்த நூலுக்கும் இந்த அளவு எதிர்வினை வந்ததில்லை, இந்த அளவுக்கு அவை வாசிக்கப்பட்டதுமில்லை. இவ்வளவுக்கும் அவர்தான் மலையாளத்தின் எப்போதைக்கும் புகழ்பெற்ற எழுத்தாளர்” என்று அவர் என்னிடம் சொன்னார்.

“அதற்கு காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் அந்த தொன்மங்களை ஒட்டி தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகளை, கனவுகளை, அழகியலை அது மாற்றி அமைக்கிறது, நவீன இலக்கியத்தின் பணியே அதுதான்” என்று நான் அவருக்கு மறுமொழி அளித்தேன். “நான் உத்தேசிப்பது அந்த ஊடுருவலைத்தான். வெறும் அன்றாடச் சித்தரிப்பு எத்தனை ஆற்றல்கொண்டதாக இருந்தாலும் அந்த மாற்றத்தை வாசகனிடம் உருவாக்குவதில்லை. அன்றாடநிகழ்வு அப்படி ஒரு ஆழ்மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்றால் மிகமிக அரிய, மிகமிக குறியீட்டுத்தன்மை கொண்ட ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும். அது அடிக்கடி நடைபெறுவதில்லை”

[மேலும்]

ஞானி-6
ஞானி-5
ஞானி-4
ஞானி-3
ஞானி-2
ஞானி-1,

முந்தைய கட்டுரைஅரசியலும் இலக்கியமும் -கடிதம்
அடுத்த கட்டுரைஉடல்நான்