சார்,
பகுதி பகுதியாக மீண்டும் ’கலையின் வெற்றி’ கடிதத்தைச் சிலமுறை படித்தேன். என்னென்னவோ நினைவுகள், உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகின்றன.
என்னுடைய 20 வயதில் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்தவுடன் அப்பாவுக்கு இதயத்தில் ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. அதுவரை ஜலதோஷம்கூட வந்திராதவர் துவண்டு போய்விட்டார், அவருடைய கவலையெல்லாம் என்னைப் பற்றியும், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என் தங்கையைப் பற்றியும்தான். அதன்பின் மனதளவில் ஒரு குழந்தைபோல நடந்துகொள்ளத் தொடங்கினார். ஏற்கெனவே ஒரு அரைவேக்காடான எனக்கு, அம்மா, அப்பா, தங்கை என எல்லோரையும் அரவணைத்துச் செல்வது மிகுந்த சிரமாக இருந்தது. ஆனால் எனக்கு எப்போதுமே ஒரு நம்பிக்கை உண்டு, பெரியவர்களின் ஆசிர்வாதம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்பதுதான் அது. உண்மையில் முகம்கூடத் தெரியாத பலருடைய ஆசீர்வாதமும் எனக்கு இருப்பதாக நம்புகிறேன், அதுதான் இன்னும் என்னை வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறது.
அப்பா இறந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. சென்ற வருடம் அம்மாவிற்கு நான்காவது முறையாகப் பக்கவாதம் வந்து எழுந்துகூட உட்கார முடியவில்லை. சுத்தமாக நினைவுதப்பி இருந்தபோதும், எல்லோருக்கும் இடையில் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். நான் வாழ்ந்ததற்கான அடையாளமே அந்த ஒரு நொடிதான் என்று தோன்றுகிறது. இப்போது அம்மா நடக்கத் தொடங்கிவிட்டாலும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு குழந்தைபோன்றுதான் தோன்றுகிறாள். தினமும் டயாப்பர் போட்டுவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு போட்டு, தூங்க வைத்து…பெற்றால்தான் பிள்ளையா?
சமீபத்தில் என் அப்பாவின் நண்பரொருவரைச் சந்தித்தபோது (எழுபது வயது அவருக்கு), அவர் தன் தந்தையை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுவதாகச் சொன்னார்.
இதுதான் நம் பாரம்பரியம் என்று நினைக்கிறேன். அந்தத் தொன்மையான பாரம்பரியத்தின் ஒரு கண்ணி நான் என்று நினைக்கும்போது, நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப் பட்டவன் என்று புரிகிறது.
இதையெல்லாம் உணரவும், பேசவும் வைத்த இளையராஜாவுக்கும், உங்களுக்கும் நன்றி!
ஆனந்த் உன்னத்
கலையின் வெற்றி-கடிதம்