அன்புள்ள ஜெயமோகன்
அவர்களுக்கு வணக்கம்.நலமா? நீங்கள் பிஸியாக இருப்பீர்கள்.எனக்கு உங்களைத் தொந்தரவு செய்யும் எண்ணம் துளியும் இல்லை.ஆனால் நான் உங்களுடன் பேசியாகவேண்டும்.எனவே இந்த மின்னஞ்சல்.இது உங்களைத் தொந்தரவு செய்யாது.நல்லபிள்ளையாக அமைதியாக உங்கள் இன்பாக்ஸில் சுருண்டிருக்கும்.நீங்களாக விரும்பி எழுப்பினால் அன்றி அது அசையாது.கருவறைக் கதவைத் தட்டித்தான் கலாட்டா செய்யக்கூடாது,நடையில் காத்திருக்கலாம் அல்லவா??
அனல் காற்று படித்து முடித்து விட்டேன்.சற்றும் திமிரமுடியாதபடி என்னை அழுத்திவிட்டது.இரவு நாவலை போல் சாவதானமாக என்னால் உங்களுடன் எதிர்வாதம் செய்யமுடியாது.’வோடபோன்’ நாய்க்குட்டி போல்,அதி தீவிரத் தொண்டன் போல்,மனமொத்த ஒரு கூடலைப் போல்,என் மனம் உங்கள் எழுத்துக்கள் பின்னால் எந்த எதிர்ப்பும் இன்றி மிக இலகுவாக,இசைந்து ,வாய் மூடிப் பின்தொடர்ந்தது.
எத்தனை நுட்பமான மனஉணர்வுகள்!!அந்தரத்தில் கயிற்றில் நடப்பது போன்ற மிகக் கவனமாகக் கையாளப்பட்ட கதா பாத்திரங்கள்!! யாரையுமே வெறுக்க முடியாதபடி அவர்கள் பக்கமுள்ள நியாயங்கள் அப்பப்பா!!நீங்கள் சொல்ல முனைந்த உணர்வுப் போராட்டங்களாளை 100 %என்னால் உணரமுடிந்தது.நான் பித்து பிடித்தவள் போல் ஆகிப்போனேன்.சொல்வதற்கு எந்தக்காரணமும் இல்லாமல் ஒருத்தி இரவு 11 .30 மணிக்கு கையில் புத்தகத்தோடு அழுதுகொண்டிருந்தால் அவளை அப்படித்தானே நினைப்பார்கள்?என் எண்ண அலைகள் முட்டி மோதி அங்கும் இங்கும் புரட்டிப்போட்டு நான் களைப்படைந்து விட்டேன்.உறக்கத்திலும் ஓயாமல் நடக்கும் சம்பாசனைகள் .எனக்கு பயமாக இருக்கிறது.புலிவாலைப் பிடித்துவிட்டேனோ??நான் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும்.சற்று காலம் நான் உங்கள் எழுத்துக்களைப் படிக்கக்கூடாது.ஆனால் தீச் சுவாலையாய் என் முன்னே உங்கள் புத்தகங்கள்.
‘ தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ….’
என்றும் அன்புடன்,
சுஜாதா செல்வராஜ்,