ஞானி-5
நான் ஞானியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து, அவருடைய மாணவனாக என்னை வெளிப்படுத்திக்கொண்டு, தொடர் உரையாடலிலிருந்த காலங்கள் முழுக்க ஞானி இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை அடையாளம் காண்பவராக, அதன் பண்பாட்டுக்கூறுகளை அறியமுயல்பவராக, அதன் மெய்யியலையும் அழகியலையும் கருத்தில்கொண்டு உரையாடுபவராகவே இருந்தார். ஒரு மண்ணின் தொன்மையான பண்பாட்டின் சாராம்சத்துடன் உரையாடி, அதன் நீட்சியாக தன்னை அமைத்துக்கொள்ளாவிட்டால் மார்க்ஸியம் அம்மண்ணின்மேல் ஓர் அயல்பொருளாகவே நிலைகொள்ளும் என்றும் எத்தனை காலமானாலும் தூக்கி வீசப்படும் என்றும் அவர் கருதினார்.
ஞானியின் இந்த நம்பிக்கை சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் மேலும் வலுப்பெற்றது. 1987 ல் நான் அவரை சந்திக்கும்போதே சோவியத் ரஷ்யாவின் உடைவை அவர் முன் கண்டுவிட்டிருந்தார். பெரிஸ்த்யாய்க்கா, கிளாஸ்நாஸ்த் முதலியவை வெளிப்படுத்திய ரஷ்ய யதார்த்தம் இங்குள்ளவர்கள் பேசிக்கொண்டிருந்ததற்கு நேர்மாறானது. அங்கு அதிகாரப் போட்டியும், ஆதிக்க அடுக்கின் வன்முறையும், சிந்தனை ஒடுக்குமுறையும், அதன் விளைவான தொடர் அழிவுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை பொய்யான செய்திகள் வழியாக ஒரு பொன்னுலகாக இங்கே காட்டிக்கொண்டிருந்தனர்.
[அதேபோல உலகப்போரின் முடிவு வரை ஹிட்லரின் வதைமுகாம்களும் அற்புதமான பயிற்சிநிலையங்களாக உலகின் முன் காட்டப்பட்டன. நான் அவ்வதைமுகாம்களுக்குச் சென்றபோது அங்கே நேரில் வந்து கண்டு நிறைவுபெற்று வாழ்த்து தெரிவித்த இலக்கியவாதிகள், சிந்தனையாளர்களின் கருத்துக்களை அங்குள்ள ஆவணங்களில் கண்டேன். ஹிட்லர் உருவாக்கிய சித்தாந்தம் என ஒன்று இருந்திருக்குமென்றால், அது ஒருவகை மதமாக உலகில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்றால், அங்கே வதைமுகாம்களே இருக்கவில்லை அது ஒரு பொன்னுலகமேதான் என்பதற்கான சான்றுகளாக ஆதரவாளர்களால் அவை இன்றும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்]
உண்மையில் சோவியத் ருஷ்யாவுக்கு எதிரான அவநம்பிக்கை இங்கிருந்த எல்லா மார்க்ஸிய-லெனினியக் குழுக்களிலும் இருந்தது. அவர்கள் மீண்டும் ஸ்டாலினைக் கொண்டாட ஆரம்பித்தது 2000த்துக்குப்பிறகுதான். ஸ்டாலினிசத்தை கைவிடாமல் உறுதியாக இருந்த அமைப்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி மட்டுமே. ரஷ்யாவில் இருந்தது எவ்வகையிலும் மார்க்சியம் அல்ல, சர்வாதிகாரத்தால் ஆளப்பட்ட அரசமுதலாளித்துவம் மட்டுமே என்று ஞானி எண்ணினார். ஆகவே தவிர்க்க முடியாத சரிவு ஒன்றை நோக்கி அவ்வமைப்பு செல்கிறது என்றார். மேலும் பத்தாண்டுகளில் சோவியத்ரஷ்யா பொருளியல் வீழ்ச்சியும் தொடர்ந்து அரசியல் வீழ்ச்சியும் அடையக்கூடும் என்று கூறினார்.
ஆனால் அன்று அது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஏனென்றால் அன்று ரஷ்யா என்பது ஒரு மாபெரும் கற்கோபுரம். உலகமெங்கும் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பி’ன் கோட்டைச்சுவரே அதுதான். இந்தியா சோவியத் ருஷ்யாவை நம்பியே இருந்தது. அங்கே முன்னுதாரணமான ஒரு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று உக்கிரமான பிரச்சாரம் நடைபெற்றது, பரவலாக நம்பப்பட்டது. எனக்கு ஞானி சொல்வது ஒரு மிகையான ‘பயம்காட்டல்’ என்றே தோன்றியது- 1991 வரைக்கும்கூட.
ஆனால் அடித்தளத்தில் விரிசல் விழுந்தால் அது எப்படியானாலும் கட்டுமானத்தை கீழே தள்ளிவிடும் என்று ஞானி சொல்லிக் கொண்டிருந்தார். ஞானி உய்த்துணர்ந்தது போலவே 1992ல் சோவியத் ரஷ்யா வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அது ஞானியை ஆழ்ந்த துயரத்துக்கு ஆளாக்கியது. ஒரு நிலநடுக்கம் போல, ஒரு தனிப்பட்ட இழப்பு போல அவரை பாதித்தது. அவர் நிலைகுலைந்துபோய் எனக்கு எழுதியிருந்தார். ஆச்சரியமென்னவென்றால் சுந்தர ராமசாமியும் அதேபோல உளம்சிதறிப் போயிருந்தார்
அது நான் அருண்மொழியை காதலித்து, திருமணம் செய்துகொண்டு, தேனிலவில் இருந்த காலம். ஞானி எனக்கு அனுப்பிய கடிதங்களை நான் ஒருசில மாதங்களுக்குப் பின்னரே பொறுமையாக வாசித்துப் பார்த்தேன். எனக்கு அந்தத் துயரம் ஏன் என்று புரியவில்லை. அவர் ஒரு கடந்தகால ஏக்கத்தைத்தான் துயரமாகப் பெருக்கிக் கொள்கிறார் என நினைத்தேன். எதிர்பார்த்த வீழ்ச்சி ஏன் துயரத்தை அளிக்கவேண்டும்? முன்னுணர்ந்து, தவிர்க்க முடியாதது என்று அறிந்திருந்தும் கூட அந்த உண்மையில் இருந்து வெளிவருவதற்கு அவருக்கு நீண்ட காலம் பிடித்தது.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பிறகு இந்திய மார்க்சியச் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 93-க்கு பிறகு இங்கே முற்போக்கு முகாம் தளர்வுற்றது. அரசியல் செயல்பாடுகள் சோர்வடைந்தன, குறிப்பாக தொழிற்சங்க அரசியலில் மிகப்பெரிய பின்னடைவு உருவாகியது. விளைவாக கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு சற்று சுதந்திரம் கிடைத்தது. புதியவர்களை உள்ளே கொண்டுவரும் வழியாக இருந்த தொழிற்சங்கவாசல்கள் மூடுவதை கட்சிகள் உணர்ந்தமையால் கலாச்சார அமைப்புக்களை முடுக்கிவிட்டன. கலைஇலக்கிய இரவுகள் போன்றவை பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களையும் நவீன எழுத்தாளர்களையும் உள்ளிழுத்துக்கொண்டு நிகழத்தொடங்கின. ஞானி நீண்ட காலம் சொல்லிவந்தது முற்போக்கு எழுத்தாள சங்கத்திற்குள் நிகழத்தொடங்கியது
நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு சற்று அணுக்கமானவனாக ஆகியதும், என்னுடைய முதல் தொகுதியாகிய ‘திசைகளின் நடுவே’ திருவண்ணாமலை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டின் கலையிலக்கிய இரவு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டதும் எல்லாம் அப்படித்தான். அன்று கலை இலக்கியச் செயல்பாடுகளின் சுதந்திரத் தன்மையும், படைப்புகளின் தனித்தனமையும் சற்று ஊக்குவிக்கப்பட்டன. இலக்கியத்தின் அழகியல் மையப்பேச்சுக்கு வந்தது. ச.தமிழ்ச்செல்வன் ’இலக்கியம் என்பது ஒரு கலாச்சாரச் செயல்பாடு மட்டும்தான். அழகியல்தான் அதன் வெளிப்பாடு’ என்று பேசுவதை நான் என் செவிகளால் கேட்கும் நல்லூழ் அமைந்தது.
ஆனால் இது குறுகிய காலதிற்குத்தான். ஏறத்தாழ அதேகாலகட்டத்தில் பல்வேறு தீவிர இடதுசாரி அமைப்புகள் செயலற்றன. அவற்றுக்குள் உள்விவாதங்கள் உருவாகி அவை உடைந்தன. அவற்றில் தொடர்பு கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்தவர்கள் சிற்றிதழ்ச் சூழலுக்கு வந்து சேர்ந்தனர். உதாரணம் அ.மார்க்ஸ். இவர்கள் அங்கு ஏற்கனவே தாங்கள் பயின்று கொண்டிருந்த கண்மூடித்தனமான வரட்டுவாதத்தை சிற்றிதழ்ச் சூழலுக்குள் செலுத்த ஆரம்பித்தார்கள். அ.மார்க்சின் மானுடநேயச் செயல்பாடுகள் மேல் பெருமதிப்புடனேயே அவர் இலக்கியச் சூழலுக்கு ஒரு பெரும் அழிவுச்சக்தி என்றே இன்றும் கருதுகிறேன். எதிரிகளைக் கண்டடைந்து மூர்க்கமாக எதிர்ப்பதே அறிவுச்செயல்பாடு என்று நம்புபவர்கள், எதிர்மறைச்செயல்பாடு அன்றி எதையும் அறியாதவர்கள் அவர்களைப்போன்றவர்கள்.
மார்க்ஸியத்தை விட்டு விலகி வந்தவர்களில் ஒருசாரார் பெரியாரியம், தமிழியம் என இனவாத, மொழியடிப்படைவாத கருத்துக்களை முன்னிறுத்தினர். சிற்றிதழ்ச் சூழலுக்குள் உக்கிரமான முத்திரை குத்தல்கள் வசைபாடல்கள் இவர்களால் முன்னெடுக்கப்பட்டன. சிற்றிதழ்ச் சூழலில் ஆயிரம் தனிப்பட்ட உளச்சிக்கல்களும் மோதல்களும் இருந்தாலும் அதுவரைக்கும் நுண்ணிய விவாதங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஐம்பதுகள் முதல் நாற்பதாண்டுகள் நடந்த நுட்பமான அழகியல்சர்ச்சைகளும் தத்துவப்பூசல்களும் தனியாகவே பட்டியலிடப்படலாம்.அவை முழுக்க அழிந்து தீவிரமார்க்சியக் குழுக்களுக்குள் உள்ளதுபோன்ற ‘முரட்டடி காட்டடி’ சர்ச்சைகள் தொடங்கின.
தமிழக மார்க்ஸியக் குறுங்குழுக்களுக்குள் மார்க்சியக் கலைச்சொற்களைக் காட்டிலும் கூடுதலாக புழங்குபவை கீழத்தஞ்சையின் நிலப்பிரபுத்துவகாலத்து தாசியுலக வசைச்சொற்கள். டாபர்மாமா, விளக்குபிடித்தல் போன்று ஒரு நூறு சொற்கள் அவர்களிடம் உண்டு. அச்சொற்களைக்கொண்டே அவர்களால் யோசிக்கமுடியும்.அந்த மனநிலை இங்கு மேலோங்கியது.[இன்றும் வினவு அதே மனநிலையில் அதே சொற்களுடன் இயங்குகிறது].1995-96 ஆனபோது தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலுக்குள் தலித்தியம், பெண்ணியம் என வெவ்வேறு துணைப்பிரிவுகள் தொடங்கி முழங்க, முழுக்க முழுக்க அரசியல் விவாதங்களே இலக்கியம் என்னும் பாவனையில் நிகழலாயின.
இவர்களால் ‘அழகியலுக்குப் பதில் அரசியல்’ என்று ஒரு கோஷம் ஏதோ புதிய கொள்கைபோல ஆக்ரோஷமாக முன்வைக்கப்பட்டது. உண்மையில் 1985 முதல் 1995 வரை வெறும் பத்தாண்டுகள்தான் மார்க்ஸியர்கள் அழகியல் என ஒன்று உண்டு என்னும் நிலைபாட்டையே எடுத்திருந்தார்கள், அதுவும் அரைமனதாக. அதற்குமுன் அவர்கள் அழகியலென்பதையே அறியாமல் அரசியல்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
1995க்குப்பின் கட்சிமேலிடம் சுதாரித்துக்கொண்டு கலாச்சார அமைப்புகளின் மேல் கடிவாளங்களை இறுக்கியது. கலாச்சாரத்தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் வெளியே துரத்தப்பட்டு கட்சி விசுவாசிகளும் உள்ளூர் சாதியரசியல்வாதிகளுமான வரட்டுவாதிகள் அங்கே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டனர். கந்தர்வன் முதல் பவா செல்லத்துரை வரை அங்கிருந்த தீவிரப்படைப்பாளிகள் வெளியேறினர். முற்போக்காளர்கள் தாங்கள் சிக்கித்திணறிக்கொண்டிருந்த அழகியலில் இருந்து பின்திரும்பி தங்களுக்கு வசதியான, தங்களுக்குப் பழகிப்போன, அன்றாட அரசியல் பார்வைக்கே சென்றார்கள். ‘அழகியலுக்குப் பதில் மீண்டும் வழக்கமான அரசியல்’ என்பதுதான் அவர்களின் அந்தக் கோஷத்தின் மெய்யான அர்த்தம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு வருவது ஒன்று உண்டு. 1988 வாக்கில் எஸ்.வி.ராஜதுரை சுந்தர ராமசாமிக்கு அணுக்கமானவராக இருந்தார். சுந்தர ராமசாமி எழுதிய ‘க.நா.சு நட்பும் மதிப்பும்’ என்ற நீண்ட கட்டுரைக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய உணர்ச்சிக்கொந்தளிப்பான பாராட்டுக் கடிதத்தை வாசித்த நினைவு வருகிறது. அப்போது மார்க்சிய வரட்டுவாதத்திற்கு எதிராக நவீன இலக்கியத்தை நோக்கிய நகர்வில் இருந்தவர்களில் ஒருவர் எஸ்.வி.ராஜதுரை. அவர் நடத்திய ‘இனி’ முதலிய சிற்றிதழ்கள் அதற்குச் சான்று.எஸ்.வி.ராஜதுரைக்கு இலக்கியம் பிடிகிடைக்கும் என எனக்கு எப்போதுமே தோன்றியதில்லை, அவர் இலக்கியப்படைப்பைப் பற்றிப் பேசவேண்டுமென்றால் அதை ஏற்கனவே எவரேனும் எழுதியிருக்கவேண்டும். அவ்வகையில் அவர் கறாரான அரசு அதிகாரிகளைப்போல, proceedings இல்லாமல் எதையும் செய்யமாட்டார். ஆனால் அன்று அவருடைய ஆர்வம் எனக்கு மதிப்பூட்டுவதாக இருந்தது.
ஆனால் தொண்ணூறுகளில் எஸ்.வி.ராஜதுரை சட்டென்று பார்ப்பனிய எதிர்ப்பு பேச ஆரம்பித்தார். கிட்டத்தட்ட கி.வீரமணியின் குரல். மார்க்ஸுக்குப் பதில் பெரியார். “இதெப்டி?”என்று நான் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன். “அவரோட தொடக்கம் அங்கதானே? சினிமாக்களிலே கதாநாயகனுக்கு மண்டையிலே அடிபட்டு நினைவு மழுங்கிரும். புதிய இடத்துக்கு வந்து புதிய ஆளா இருப்பார். மண்டையிலே மறுபடி ஒரு அடிவிழும். நினைவு தெளிஞ்சு பழைய வீட்டுக்கே போயிருவார். அதே மாதிரிதான், மண்டையிலே ரெண்டாவது அடி விழுந்திருக்கு” என்றார் சு.ரா. எனக்கென்னவோ அது திருவிழாவில் குழந்தையின் நிலை என்று பட்டது, ஒரு கையை விட்டால் இன்னொரு கையை பாய்ந்து பிடித்துக்கொள்ளவேண்டும். இவரும் தாடிக்காரர், குழந்தை குழம்பிவிட்டது.
தமிழக மார்க்ஸியர்கள் அதுவரை ஈவேராவை ஒரு இனவாதசக்தி, பரப்பியவாதி என்றே அடையாளப்படுத்தியிருந்தனர். ஈவேரா மிகமிகக் கடுமையாக மார்க்ஸியர்களைத் தாக்கிக்கொண்டிருந்தார். சொல்லப்போனால் தமிழ்ச்சூழலில் மார்க்சியர்கள் மேல் இவ்வளவு அவதூறுகளை அள்ளிப்பொழிந்த இன்னொரு அரசியலாளரே இல்லை. அவர் தன்னை தெளிவாகவே பிராமணரல்லாத நிலப்பிரபுத்துவவாதிகளின், குறிப்பாக தெலுங்கு- கன்னட நிலவுடைமையாளர்களின் ஆதரவாளராகவே முன்வைத்தார்.கீழ்வெண்மணி நிகழ்வு போன்றவற்றில் ஈவேராவின் நிலைபாடுகள் மார்க்ஸியர்கள் நடுவே கடும்கசப்பை உருவாக்கியவை. ஆனால் தொண்ணூற்றைந்துக்குப் பின் மார்க்ஸியர்கள் பெரியாரியர்களாக ஆகி, தாங்களும் இனவாதக் காழ்ப்புகளைப் பேச ஆரம்பித்தனர்.
இன்றைய மார்க்சியச் இலக்கியச் சூழல் மிகமிகத் தேய்ந்து அனேகமாகக் கண்ணுக்கே தெரியாத ஒன்றாக உள்ளது, சு.வெங்கடேசன் தவிர ஆளுமைகொண்டவர்களே இல்லை, உள்விவாதங்களும் இல்லை. முகநூலர்களே உள்ளனர். ஆகவே அது முன்பு எப்போதுமிருந்ததைவிட மூர்க்கமான இயந்திரவாதப் பார்வையின் பிடியில் இருக்கிறது. இன்று அதற்கு மார்க்ஸியம் முக்கியமே அல்ல, இங்கிருக்கும் பிற அரசியல்கோஷங்களைத்தான் அதுவும் எழுப்புகிறது- குறிப்பாக அது ஒரு திராவிட இயக்கத் துணைக்குறுங்குழுவாக நிலைகொள்கிறது . அன்றாட அரசியலின் கூட்டல்கள் கழித்தல்கள் அன்றி ஏதுமறியாதவர்களால் அது நடத்தப்படுகிறது. இருபதாண்டுகள் ஞானி முயன்று உருவாக்கிய மார்க்ஸிய அழகியலுக்கான தேடலும், மார்க்ஸிய மெய்யியலுக்கான விவாதமும் அனைவராலும் சாக்கடைக்குள் வீசப்பட்டுவிட்டன.
ஆனால், வழககம்போல ஒரு சிந்தனையாளனை முற்றாக அழித்துவிட்டு அவருக்கு சிலைகளை உருவாக்குகிறார்கள். இன்று வரட்டுவாதிகள் ஞானியை மார்க்ஸியமேதை என தொண்டைபுடைக்க கூச்சலிடுவதை கேட்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் அப்படி உண்மையிலேயே கூச்சலிடுவதைக் கேட்டேன். சரிதான், எப்போதும் அது இப்படித்தான் என்று சிரித்துக்கொண்டேன்.சிந்தனை என்பது அடித்தொண்டையில் நிகழ்வது என நம்பும் எளிய ஜனங்கள்.
வரட்டுவாதம் மார்க்சியத்தில் இருந்து என்றுமே மறைவதில்லை-நவமார்க்ஸியம் உருவான ஐரோப்பிய மார்க்சியச் சூழலிலேயேகூட வரட்டுவாதம் ஆற்றலுடனெயே இருந்தது. அதை மேற்கோள்மார்க்ஸியம் என்றும் மார்க்ஸியமதம் என்றும் கேலியாகச் சொல்லலாம். ஞானி அந்த வரட்டுவாதத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதன் விளைவாக அவர் தனிமைப்படுத்தப்படவும் விமர்ச்சிக்கப்படவும் பட்டார். ஆனால் தொண்ணூறுகளில் உக்கிரமாக உருவான புதிய வரட்டுவாதம் எஸ்.என்.நாகராஜனை சாதிவெறியர் என்று வசைபாடியது.பல மேடைகளிலிருந்து அவர் மனம் புண்பட்டு இறங்கி செல்ல வேண்டியிருந்தது. மெல்ல அவரது குரல் தமிழ் சூழலில் ஒலிக்காமல் ஆயிற்று.
ஞானி மார்க்ஸியத்தை திரிக்கிறார், அதன் தூய்மையை அழிக்கிறார், அது ஒரு மாசுமருவற்ற அறிவுயலுண்மை என்ற குரல் எப்போதுமே அவரைச் சுற்றி இருந்தது. ஞானி ஒருமுறை அதைப்பற்றி பேச்சில் சொன்னார். “பொண்டாட்டி கற்பைப்பற்றி கவலைப்பட்டாக்கூட ஒரு நியாயம் இருக்கு. இவனுக அம்மாவோட கற்பைப்பத்தியே கவலைபட்டிட்டிருக்காங்க”
ஒரு வாசகர் முகநூலில் எழுதப்பட்ட ஒரு அஞ்சலிக்குறிப்பை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். “90களில் ஞானி என்னவாறெல்லாம் திட்டப்பட்டார், அதை அவர் சலனமின்றி எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நினைக்க வியப்பாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் திட்டுவதை நிறுத்தியதும், இப்போது நல்ல விதமாக பேசி அஞ்சலி செலுத்துவதும் நல்ல விஷயம்; குற்றம் காண எதுவும் இல்லை. ஆனால் எதையும் மறக்கலாகாது”. [ரோசாவசந்த்]
உண்மைதான். ஞானி இன்று கொண்டாடுபவர்களால் அன்று இழிவுசெய்யப்பட்டார், சாதிய முத்திரை குத்தப்பட்டார். விளைவாக அவர் திறந்த உள்ளத்துடன் நிகழ்த்திய பொதுஉரையாடல்களை மெல்ல மெல்ல சுருக்கிக்கொண்டார். அவர் முன்பு உரையாடிக்கொண்டிருந்த நல்லெண்ணம் கொண்ட சிறிய சூழல் மறைந்து அரசியல்மேடைகளுக்குரிய காழ்ப்புச்சூழல் வந்தமைந்தது. நிகழ் நின்றுவிட்டது. ஞானியின் வாழ்வில் அடுத்த கட்டம் தொடங்கியது.
இந்த மூன்றாம் காலகட்டம் அது தமிழியம் சார்ந்ததாக இருந்தது. தமிழ்நேயம் என்னும் சிற்றிதழை அவர் நடத்தினார். அது சிற்றிதழ் என்பதைவிட ஒரு சிறு தனிச்சுற்றறிக்கை என்றுதான் சொல்லவேண்டும். நவீன இலக்கியத்துடனான ஞானியின் உறவுகள் குறையலாயின. அவர் தமிழியம் சார்ந்தே எழுதவும் படிக்கவும் செய்தார்.
ஞானியின் தமிழியச் சார்பு என்பதை நான் அன்றைய கருத்துப் புலத்தில் வைத்துப் புரிந்துகொள்கிறேன். இன்று பலருக்கும் அந்த விரிவான சித்திரம் இல்லாமலிருக்கலாம். தமிழ்ச்சூழலில் அன்று விவாதங்களினூடாக நிகழ்ந்த ஒரு கருத்தியல் மாற்றம் அது. சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவெங்கும் தேசிய இனங்களைப் பற்றிய விவாதம் உருவாகியது. தமிழகத்தில் அது ஏற்கனவே இங்கிருக்கும் தமிழ்த்தேசியம் குறித்த கருத்துக்களுடன் இணைந்துகொண்டது. பல தீவிர இடதுசாரிக்குழுக்கள் இவ்விவாதம் காரணமாக உடைந்தன. ‘தேசிய இனங்களின் விடுதலையே மார்க்ஸிய எழுச்சிக்கு வழிவகுக்கும்’ என்ற ஒற்றை வரியாக இதை புரிந்துகொள்ளலாம்.
இந்த விவாதத்திற்கு வழிவகுத்தது சோவியத் ருஷ்யாவின் உடைவு நிகழ்ந்தவிதமும் அதன்பின் எழுந்துவந்த துணைத்தேசியங்களின் எழுச்சியும்தான். ஐரோப்பிய ருஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த ரஷ்யத் தேசியங்கள் விடுதலை பெற்றன.சோவியத் ருஷ்யா என்னும் பேரமைப்பு வீழ்த்தப்பட்டதே அதற்குள் அணையாமலிருந்த தேசிய இனங்களின் எதிர்ப்பால்தான் என்று அன்று கருதப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் பீட்டர் சக்கரவர்த்தியால் ராணுவ ஆதிக்கம் வழியாக உருவாக்கப்பட்டது ரஷ்யப்பேரரசு. ஜார் சக்கரவர்த்தியை வீழ்த்தி அந்தப்பேரரசை கைப்பற்றிய போல்ஷெவிக் கம்யூனிஸ்டுக் கட்சி அந்த பேரரசை அப்படியே நிலைநிறுத்திக்கொண்டது.
ஸ்டாலின் தன்னை சக்கரவர்த்தி பீட்டரின் மறுவடிவம் என்றே காட்டிக்கொண்டார். அலெக்ஸி தல்ஸ்தோய் எழுதிய ‘சக்கரவர்த்தி பீட்டர்’ என்ற நாவல் ஸ்டாலினின் ஆணைப்படி எழுதப்பட்டது.[தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கிறது] தேசிய இனங்களின் தன்னுரிமையை வாக்களவில் ஏற்று அவற்றை ராணுவத்தால் கட்டுப்படுத்தி ஆட்சி செய்தது சோவியத் ருஷ்யா. அந்த தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளங்கள், தேசிய மனநிலைகளை அழிக்க அவ்வரசு எழுபத்தைந்தாண்டுகளாக கடுமையாக முயன்றது, ஆனால் அவை கம்யூனிஸத்தால் எவ்வகையிலும் கரைத்தழிக்கப்படவில்லை. அவை பெருகி சோவியத் ருஷ்யாவை வீழ்த்தின என்றனர் தேசியவாதிகள்.
இந்தியாவும் பல்வேறு தேசிய இனங்களின் தொகுதி, அவை தன்னுரிமையை நாடுகின்றன, அவற்றின் அந்த விழைவை புறக்கணித்து இந்தியாவில் மார்க்ஸிய விடுதலை பற்றிப் பேசமுடியாது என்று மார்க்ஸியர்களில் ஒருசாரார் நினைக்கத் தொடங்கினர். தேசிய இனங்களின் விடுதலைக்கான சமருடன் இணைந்து போரிடுகையிலேயே மார்க்ஸியம் மக்களாதரவைப் பெறமுடியும் என்றனர். உண்மையான பொருளியல் உரிமை என்பது முதலில் தேசிய இனங்கள் தங்கள் விடுதலையை அடைந்து அதன்பின்னர் பொதுவுடைமை நோக்கிச் செல்வதிலேயே உள்ளது என்று வாதிட்டனர்.
ஆனால் தேசிய இனங்களின் விடுதலை என்னும் கருத்து அடையாள அரசியலுக்கும், நிலப்பிரபுத்துவகால மரபுகளை மீட்டுக்கொண்டு வரும் மீட்புவாதத்திற்கும், அதனூடாக தேசியச் சிறுபான்மையினருக்கு எதிரான காழ்ப்புக்கும், ஒட்டுமொத்தமாக ஃபாஸிசத்திற்கும் இட்டுச்செல்லும் என்று இன்னொரு சாரார் கருதினர். இந்தியாவிலுள்ள தேசியஇனங்கள் எல்லாமே அந்தந்த இடங்களிலுள்ள பெரும்பான்மையான மையச்சாதிகளால், அவர்களின் பண்பாட்டுக்கூறுகளால் அடையாளப்படுத்தப்பட்டவை, ஆகவே அவை சிறுபான்மைச் சாதிகளுக்கு எதிரானவை என்றனர்.
நடைமுறையில் தமிழ்த்தேசியம் உட்பட இங்கே பேசப்படும் எல்லா தேசியவாதங்களும் பெரும்பான்மைவாதங்களே. அவை தங்கள் தேசிய அடையாளங்களாக முன்வைப்பவை எல்லாமே சென்ற காலத்தையவை, நிலப்பிரபுத்துவத்தின் விளைவுகள், கடந்தகால ஏக்கங்களால் கண்டடையப்பட்டவை. பொற்காலங்களை இறந்தகாலத்தில் தேடுவது என்பது அடிப்படைவாதம் நோக்கியே கொண்டுசெல்லும் என்பது அவர்களின் தரப்பாக இருந்தது.
இனம்-மதம்-மொழி எதுவானாலும் அடையாள அரசியலே மார்க்ஸியத்துக்கு எதிரானது. மார்க்ஸியத்தின் முதல் எதிரியே ஃபாஸிசம்தான். அது முதலாளித்துவத்தின் நேரடியான கொடூர முகம். இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் கூட தேசிய இனப்போராட்டங்கள் அனைத்திலுமே ஃபாசிச உள்ளடக்கம் உள்ளது. தேசியப் போராட்டம் என்பதை வர்க்கப்போராட்டத்தை விலக்கிவிட்டு, இன-மொழி-வட்டார அடிப்படைவாதங்களுடன் சமரசம்செய்துகொண்டபடித்தான் நடத்தமுடியும். அது ஒடுக்குவோருக்கு ஆதரவாகவும் உழைப்போருக்கு எதிராகவுமே அமையும்.இதுவே செவ்வியல் மார்க்ஸியத்தின் நிலைபாடு.
இந்த விவாதம் ஓரிரு ஆண்டுகளிலேயே முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதில் இரண்டாம்தரப்பு, அதாவது செவ்வியல் மார்க்ஸியத்தின் தரப்பு, முற்றாகவே தோல்வியடைந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆனால் நானறிந்தவரை கேரளத்திலும் கர்நாடகத்திலும் அவ்வாறு நிகழவில்லை, அங்கே செவ்வியல்மார்க்ஸியத்தின் நிலைபாடே வலுவாக உள்ளது.
தேசிய இனக்கொள்கை அடைந்த இந்த வெற்றிக்கான காரணங்கள் பல. முதன்மைக் காரணம், ஞானி உட்பட பெரும்பாலான மார்க்ஸியர்கள் ஏற்கனவே திராவிட இயக்க அரசியலில் இருந்து வந்திருந்தனர், அங்கே எளிதாகத் திரும்பிச் சென்றனர் என்பது. சுந்தர ராமசாமி சொன்னதுபோல மண்டையில் இரண்டாவது அடிவிழுந்ததனால் வந்த ‘தெளிவு’. இன்னொன்று, அன்று நிகழ்ந்துகொண்டிருந்த ஈழவிடுதலைப் போராட்டத்தின் விளைவாக உருவான உணர்ச்சிகரமான தமிழ்த்தேசியவெறி.
ஞானி மார்க்ஸியத்தை சுருக்கிக்கொண்டு தமிழ்த்தேசியத்திற்குள் சென்றார். அவர் அங்கே சென்றமைக்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, அவர் மார்க்ஸியத்தின் மெய்யியல் என்னும் வினாவால் கொண்டுசெல்லப்பட்டார். தமிழ்பண்பாடு சார்ந்த ஒரு மெய்யியலை மார்க்ஸியத்துக்கு உருவாக்கிக்கொள்ள முடியும் என்று எண்ணினார். ஏற்கனவே சொன்னதுபோல, வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலானவர்களை உள்ளே அமைத்துக்கொண்ட மெய்யியல். அதற்கு தமிழ்த்தேசியம் ஒரு களம் என எண்ணினார்.
இரண்டாவதாக, மார்க்ஸியம் ஒரு குறுங்குழுவாதமாக தனிமைப்படாமலிருக்கவேண்டும் என்றால் அது இங்குள்ள தேசிய இனப்போராட்டத்துடன் இணைந்துகொள்ளவேண்டும் என அவர் நினைத்தார். அது ஈழத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் என்று என்னிடம் சொன்னார். ஈழப்போராட்டத்தில் ஈழத்தமிழ்த்தேசியத்தை அங்கீகரிக்க மறுத்த மார்க்ஸியர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு அழிந்தார்கள் என்று சொன்னார்
அதைவிட தனிப்பட்ட காரணம் ஒன்று இருந்தது. அன்று அவர் கண்தெரியாமல் மிகமிகச் சோர்வுற்ற நிலையில், தனிமையில் இருந்தார். பழைய மார்க்சிய நண்பர்களால் முழுமையாகக் கைவிடப்பட்டார். அவரை நாளும் வந்து சந்திப்பவர்களாக தமிழ்த்தேசியர்களே இருந்தனர். அவர்கள் அவருக்குத் தேவைப்பட்டார்கள். நானே கூட அவர்களாவது அவருக்கு எஞ்சுவது நல்லது என்றே நினைத்தேன்
ஞானியை ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சியும் சோர்வடையச் செய்தது. ஆனால் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அளவுக்கு அல்ல. அவர் அதன் காரணங்களை முன்புபோல கூர்மையாக அலசி ஆராயவில்லை. மாறாக, அது சர்வதேசச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்னும் எளிய விடைகளுடன் ஆறுதலடைந்தார். கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இருந்த வன்முறை பற்றி ஒருகாலத்தில் உளம்சோர்ந்திருந்தவர், ஈழப்போராளிகளின் சகோதரச்சண்டைகளை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை, அவை சிறிய முரண்பாடுகள் என்று எடுத்துக்கொண்டார். ஒரு மதநம்பிக்கை போல தமிழியத்தைப் பற்றிக்கொண்டார்.
இரண்டாயிரத்திற்குப் பின் தமிழ்த்தேசியக் குழுக்கள் படிப்படியாகப் பொருளிழந்தன. பின்னர் தமிழ்த்தேசியத்தின் குரலாக சீமான் எழுந்துவந்தார். பழைய மார்க்சியர்களுக்கு சீமானின் அரசியலில் இடமேதும் இல்லாமலாகியது.அது முற்றிலும் வேறான ஒரு பரப்பரசியல்.ஞானி தமிழ்த்தேசிய அரசியலையும் பெரும்பாலும் கைவிட்டுவிட்டு ஒரு தமிழாய்வாளராகவே ஒடுங்கிக்கொண்டார். ஒரு பிடிவாதமான நம்பிக்கையாக மார்க்ஸியத்தைச் சொல்லிக்கொண்டார். “என் வாழ்வும் சாவும் மார்க்ஸியத்துடனேயே” என்று அவர் அடிக்கடிச் சொல்லிக்கேட்டிருக்கிறேன்
தமிழியக் காலகட்டத்திலும் அவருடன் நிறையப் பேசியிருக்கிறேன். மார்க்ஸியத்தை ஒரு ஒப்புக்கான பேச்சாக வைத்துக்கொண்டுதான் அவர் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்த்தேசியம் பேசியபடி அவருடன் இருந்தவர்கள் எவருக்கும் மார்க்ஸியம் பற்றிய அக்கறை இருக்கவில்லை. அது ஞானிக்குச் சிக்கலாகவும் இருக்கவில்லை.
அவர்களில் ஒருவர் ஒருமுறை ‘தமிழ்த்தேசிய முதலாளிகள் வளர்ந்தாலொழிய தமிழ்த்தேசியம் வளரமுடியாது. மார்க்ஸியர்கள் தொழிற்சங்கப்போராட்டம் வழியாக தமிழ்த்தேசிய முதலாளிகளை பலவீனப்படுத்துகிறார்கள். இந்தியதேசிய முதலாளிகளின் சூழ்ச்சி இது. தமிழ்த்தேசியர்கள் நம் முதலாளிகளை ஆதரிக்கவேண்டும், அவர்களுக்கு எதிராக போனஸ், ஊதிய உயர்வு கோரும் தொழிலாளர்களை எதிர்க்கவேண்டும்’ என்றார். ஞானி அதை ஒப்புக்கொண்டதுபோல பேசாமலிருந்தார்
அன்று இந்த ‘தமிழ்த்தேசிய முதலாளிகளின் தேவை’ அதிகமாகக் பேசப்பட்டது. அதிலிருந்த அபத்தம் ஞானிக்கு உறைக்கவில்லை என்பது எனக்குச் சோர்வூட்டியது. நான் அவரிடம் அதைப்பற்றிப் பேசினேன். “இது வேற பாதை. இதிலே இலக்கியத்துக்கெல்லாம் இடமில்லை. நீங்க உங்க பாதையிலே போங்க’ என்றார். பிறிதொருமுறை அவர் என்னிடம் “நீங்க என்ன இருந்தாலும் வெளியாள்” என்றார். அதன்பின் நான் அதைப்பற்றிப் பேசவில்லை.
இன்னொருமுறை அவர் கோவையிலிருந்த மலையாளிகளின் ‘ஆதிக்கம்’ பற்றி காழ்ப்பின்மொழியில் பேசினார். ஞானியிடமிருந்து அப்படி ஒரு பேச்சு எழுந்தது திகைப்பளித்தது. நான் கோவை மலையாளி சமாஜம் கல்லூரியில் ஓர் உரைக்காக அன்று வந்திருந்தேன். அதற்கு முந்தைய வருடம் அங்கே ஜெயகாந்தன் வந்திருந்தார். ஞானி “நீங்க வந்தது சரி, ஜெயகாந்தன் ஏன் வந்தார்?”என்றார்.
தமிழியத்துக்குள் சென்றபின்னர் ஞானியின் அணுகுமுறை மீண்டும் இயந்திரவாதப் பார்வை கொண்டதாக, சற்று இறுக்கமானதாக ஆகியது. அவர் என்றுமே ‘பார்ப்பன எதிர்ப்பு’ எல்லாம் பேசியவர் அல்ல, அவர் அச்சொற்களை பயன்படுத்தத் தொடங்கினார்.அதன்பின்னர் அவர் நவீன இலக்கியப் படைப்புகளை பெரும்பாலும் கூர்ந்து படிக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அவருடைய இலக்கியக் கருத்துக்கள் அவருடைய நிலைபாடுகளைச் சார்ந்தே அமைந்தன.
ஆனால் நான் அவரது மாணவன் என்பதனால் என்னுடைய படைப்புகளை கூர்ந்து படித்துவந்தார். கொற்றவை நாவலுக்கு ஒரு தமிழ்நேயம் வெளியீடாக ஒரு தனிச் சிறப்பிதழ் வெளியிட்டார். அவர் என் படைப்புகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை வேறு எவர் படைப்புகளுக்கும் அளிக்கவில்லை என்று இன்று அவருடைய பதிவுகளிலிருந்து அறியலாம். முதன்மையாக அவரைக் கவர்ந்தது என்னுடைய தனித்தமிழும், தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளும்தான்
வெண்முரசு நாவல் வரிசையில் பிரயாகை வரைக்கும் படித்திருந்தார். கடைசிநாட்களில் அவர் அவற்றை கேட்பதற்கான வசதிகளை நம் கோவை நண்பர்கள் உருவாக்கி கொடுத்தனர். அவர் அடிப்படையில் இலக்கிய வாசகர் என்பதனால் அப்படைப்புகளின் அழகும் நுட்பமும் அவரை கவர்ந்தது. குறிப்பாக அதிலிருந்த தனித்தமிழ். ஆயினும் தமிழ்ச்சூழலில் இருந்து வெகுவாக விலகியே அவர் கடைசி நாட்களில் இருந்தார்.
[மேலும்]
சக்கரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்
ஞானி-4
ஞானி-3