ஞானி-5

ஞானி ஆழமாக நம்பி, சொல்லிக்கொண்டே இருந்த ஒன்று உண்டு, மார்க்ஸியம் ஒரு மதம் அல்ல. அது ஒரு படைப்பூக்கம் கொண்ட தத்துவப் பார்வை. அதன் முக்கியத்துவம் என்பது அது எல்லாக் காலத்திற்கும் உரிய உண்மைகளைச் சொன்னது என்பதனால் அல்ல, அது தொடர்ந்து விரிவாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு அடிப்படைத் தரிசனத்தை [vision] முன்வைப்பதனால்தான். “மார்க்ஸியதோட கிரியேட்டிவிட்டிதான் அதை ஜெயிக்க முடியாததா ஆக்குது. அதை மறுக்க மறுக்க அது பதில்களாக பெருகும். அழிக்க அழிக்க முளைச்சு வரும். ஒரு மார்க்ஸ் இருந்தா ஒழிச்சிடலாம், மார்க்ஸ் அவரை மாதிரி பலநூறு மார்க்ஸ்களை உருவாக்கினவர்” என்று அவர் சொன்னார்.

“நான் சொல்லிட்டிருக்கிற மார்க்ஸியம்ங்கிறது மார்க்ஸோட தத்துவம் இல்லை, அரசியல் செயல்திட்டம் இல்லை, மார்க்ஸிய விஷன், அதோட கிரியேட்டிவிட்டி. அதனாலேதான் நான் காந்தியும் பெரியாரும் இணைஞ்ச மார்க்ஸியத்தைப் பேசுறேன். க்ரீன்பாலிடிக்ஸும் மார்க்சியமும் இணையமுடியும்னு சொல்றேன். ஷூமாக்கரும் ஃபுகோக்காவும்கூட மார்க்ஸுக்கு அன்னியர்கள் இல்லைன்னு சொல்றேன்” என்றார் ஞானி

ஆனால் அன்றும், பிற்பாடும், இன்று சமகாலத்தில் கூட, இயந்திரத்தனமாக இலக்கியப் படைப்புகளையும் தத்துவங்களையும் அணுகும் பெரும் பாமரக் கும்பலுக்கு ஞானி என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. புரிவதற்கு வாய்ப்பே இல்லை என்பது உண்மை. ஏனென்றால் இயந்திரவாத அணுகுமுறை என்பது எளிய ஏற்பு- மறுப்புகளால் ஆனது, அதற்குத் தேவையான மாறாத ஒற்றைவரி மேற்கோள்கள் கொண்டது. அவற்றைப் பேசிக்கொண்டிருப்பவர்களின் உச்சகட்ட அறிவின் எல்லையே அதுதான்.

இலக்கிய – கலைச்செயல்பாடுகள் ஏதோ வகையில் இலக்கியப் படைப்பின் அழகியலையும் மெய்யியலையும் உணர்வுநிலைகளையும் தானும் அடைந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியவை. அதற்கு அப்பால் இருப்பவர்கள் அவற்றை வேறேதோவாகத்தான் பார்க்கிறார்கள். ஆகவே அவர்களுடன் எந்த உரையாடலும் எந்நிலையிலும் இயல்வதே அல்ல. ஆகவே அன்று ஞானியின் தன் தேடல்களுக்காக மிகக்கடுமையாக வசைபாடப்பட்டார்.

“விலை போய்விட்டார்” என்பது எப்போதுமிருந்த குற்றச்சாட்டு. “அது என்ன விலை?” என்று நான் ஞானியிடம் கேட்டேன். “அதான் மார்க்ஸியப்பார்வை, பொருளியல் அடிப்படை இல்லாம யோசிக்கவே முடியாது. எல்லாத்துக்குமே விலை உண்டுன்னா, கருத்துக்கும் கருத்துவேறுபாட்டுக்கும் எங்கியோ ஒரு விலை உண்டுதானே?” என்று ஞானி சிரித்தார். “ஒருத்தர் நம்ம தோழர்தான், அவரோட அண்ணாகூட பங்காளிச்சண்டை. இவர் அவரை திரிபுவாதி, ஃபிலிஸ்டைன், நிகிலிஸ்டுன்னு வைவார். அப்ப அவரு கவுண்டர் இல்லியான்னு நான் ஒருமுறை கேட்டேன். குழம்பிட்டார்”

ஞானி சொன்னார் “படைப்பிலக்கியத்தின் அழகியலை மட்டுமே பார்க்கும் பார்வைகூட மார்க்ஸியத்துக்கு அன்னியமானது இல்லை. படைப்பிலக்கியம் தெளிவான அரசியல்நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டியதில்லை. மார்க்ஸ் சொன்னார், ‘பட்டுப்பூச்சி என்ன காரணத்துக்காகப் பட்டிழையை உருவாக்குகிறதோ அதே காரணத்துக்காகத்தான் மில்டன் பாரடைஸ் லாஸ்ட்டை எழுதினார்’னு. மில்டன் எழுதினது ஒண்ணும் புரட்சிகர இலக்கியம் இல்லை. சொல்லப்போனா அது மத இலக்கியம். இன்னும் சொல்லப்போனா சம்பிரதாயப் பார்வையை முன்வைக்கிற மத இலக்கியம். இன்னும் கறாரா சொன்னா தாந்தேயோட பார்வையை திருப்பிக்கொண்டுவர்ர மீட்பு இலக்கியம். ஆனா அதை ஏற்கிறதிலே மார்க்ஸுக்கு எந்த தடையும் இல்லை” பின்னாளில் விஷ்ணுபுரம் நாவலை அவர் ஏற்றுக்கொண்டதைப் பற்றிய கூச்சல்கள் எழுந்தபோதும் ஞானி இதே பட்டுப்பூச்சி மேற்கோளைச் சொல்லியிருக்கிறார்.

ஞானி எழுப்பிக்கொண்ட கேள்விகள் இரண்டு என மீண்டும் தொகுத்துக் கொள்ளலாம். ஒன்று, மார்க்ஸியத்தின் ஒழுக்கவியல், அறவியல் என்ன? அவற்றை வடிவமைக்கும் மெய்யியல் என்ன, அதன் வேர்கள் பண்பாட்டில் எங்குள்ளன? இரண்டு, மார்க்ஸியம் ஏன் இந்தியச் சூழலில் மக்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது, ஏன் இங்குள்ள பண்பாட்டுக்குள் அதனால் ஊடுருவமுடியவில்லை? அவர் பேசிய பண்பாட்டு மார்க்சியம் அல்லது மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் அல்லது கடைசியாக முன்வைத்த மார்க்ஸியத் தமிழியம் என்பது இக்கேள்விகளுக்கு அவர் வெவ்வேறு காலகட்டங்களில் கண்டடைந்த விடைகளே.

Milovan Đilas

ஞானியின் அணுகுமுறை மிலான் ஜிலாஸ், அண்டானியோ கிராம்ஷி முதல் அல்தூசர் வரை மேலைமார்க்ஸிய முன்வைத்த நவமார்க்சிய கோட்பாடுகளை நோக்கி முன்னகர்ந்தது. இக்கருத்துக்களை ஞானி எந்த அளவுக்கு பிரக்ஞை பூர்வமாக தொடர்ச்சியாக பயன்படுத்தினார் என்பது ஆய்வுக்குரியது. இவ்வாசிரியர்களை அவர் உள்வாங்கிக்கொண்டார், அவர்களிடமிருந்து மேலே சிந்தித்தார் என்பதே சரி. அவருடையது மேற்கோள் மார்க்ஸியம் அல்ல. ‘எது நம்மோட கருத்தா ஆகிறதோ அதுதான் நம்மை உண்மையிலே பாதிச்சது. படிச்சு ஞாபகப்படுத்திச் சொல்றதுங்கிறது ஒரு அறிவுப்பயிற்சி மட்டும்தான். பேராசிரியர்கள் பண்ணவேண்டிய வேலை.”

நான் அவரை சந்தித்த பின்னர் அவர் எனக்கு இரண்டாவதாக எழுதிய நீண்ட கடிதத்திலேயே அண்டானியோ கிராம்ஷியைபற்றித்தான் குறிப்பிட்டிருந்தார். அண்டோனியோ கிராம்ஷி மார்க்சியத்தின் பண்பாட்டுப் பார்வையில் ஒரு முதன்மையான மாற்றத்தை உருவாக்கியவர். மார்க்சியக் கோணத்தில் பொருளியல் நடவடிக்கைகளான உற்பத்தி விநியோகம் ஆகியவை அடித்தளம். பண்பாடு அரசு ஆகியவை மேற்கட்டுமானம். அடித்தளமாற்றத்தை மட்டுமே மேற்கட்டுமானம் பிரதிபலிக்கும். அடித்தளத்தில் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரவும் முடியும். மேற்கட்டுமானம் என்பது ஒருவகையில் நுரை போன்றது, நுரையை உண்மை என்று நம்பமுடியாது.

அண்டானியோ கிராம்ஷி கலாச்சாரம், அரசு ஆகியவற்றிற்கு தனக்கே உரிய இயக்கவிதிகளும் முரணியக்கமும் உண்டு என்று நம்பினார். அவை தங்களுக்குரிய வெவ்வேறு முரணியக்க விசைகளைக் கொண்டு தாங்களே இயங்குகின்றன. அவற்றை எப்படி பொருளியல் அடித்தளம் பாதிக்கிறதோ அதே போல  அவற்றால் மீண்டும் பொருளியல் அடித்தளத்தை பாதிக்கவும் மாற்றியமைக்கவும் முடியும். ஆகவே பண்பாட்டு – பொருளியல் அடித்தளத்தில் எந்த அளவிற்கு மாற்றத்திற்கான உழைப்பு தேவையோ அதே அளவுக்கு அதற்கு இணையாகவே மேற்கட்டுமானம் எனும் பண்பாட்டுத் தளத்திலும் மாற்றத்திற்கான உழைப்பும் மாற்றத்திற்கான முற்போக்கு செயல்பாடுகளும் தேவை என்றார்.

இருபதாண்டுகளுக்குப் பின் அவரைச் சந்திக்கப்போன ஈரோடு கிருஷ்ணனிடம் ஞானி சொன்னார். “பொருளாதார அடித்தளம்தான் கலாச்சாரம்கிற மேற்கட்டுமானத்தை உண்டு பண்ணுது, ஆனால் அப்றம் கலாச்சாரம்தான் பொருளாதார அடித்தளத்தை தாங்கி நின்னுட்டிருக்கு” ஞானியின் கலாச்சார ஈடுபாடு என்பது அவர் நம்பிய மார்க்ஸியப்புரட்சியுடன் தொடர்புள்ள செயலே ஒழிய வெறும் கலாச்சாரச் செயல்பாடு அல்ல. அதில் அவருக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது, கடைசிவரை.

இக்கருத்து அக்காலத்தில் எஸ்.என்.நாகராஜன் வழியாக வந்தடைந்திருக்கலாம். ஞானி அவற்றை பரிசீலித்துக்கொண்டு இருந்தார். ஞானியின் முதற்கடிதம் வழியாகவே அண்டானியோ கிராம்ஷி என்ற பெயரை நான் அறிந்தேன். நான் அன்று இருந்த மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கக் கம்யூனில் அண்டானியோ கிராம்ஷி முற்றிலும் விலக்கப்பட்ட பெயர்.

அன்றெல்லாம் நாளெல்லாம் இ.எம்.எஸ். தேசாபிமானி நாளிதழில் நாள்தோறும் எழுதும் குறிப்புகளையும் சிந்தா வார இதழில் எழுதும் கட்டுரைகளையும் பாடநூலாகப் பயின்று கொண்டிருந்தோம். ஒருமுறை கூட இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு அண்டானியோ கிராம்ஷியின் பெயரை சொல்லவில்லை. அவரது மறைவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு புத்தகத்தில் அண்டானியோ கிராம்ஷியை குறிப்பிட்டிருந்தார். எங்களுக்கு வகுப்பெடுக்க வந்த பி.கோவிந்தப்பிள்ளை அண்டானியோ கிராம்ஷியை குறிப்பிட்டதில்லை. நவமார்க்சியர் அனைவருமே அந்த பாடத்திட்டத்திற்கு வெளியே தான் இருந்தார்கள்.

ஆனால் அன்று கட்சிக்கு அணுக்கமானவராகவும் ஆனால்  சுதந்திர மார்க்சிய சிந்தனையாளராகவும் இருந்த ‘சிந்தா ரவி’ என்னும் மார்க்ஸிய ஆய்வாளர் கிராம்ஷியைப்பற்றி சுருக்கமான தெளிவான ஒரு மலையாளநூலை எழுதியிருந்தார். நான் அந்த நூலை படித்தேன். அதன்பிறகு அண்டானியோ கிராம்ஷியை பற்றி எங்களுக்கு வகுப்பெடுக்க வந்த பி.கோவிந்தப்பிள்ளையிடம் ஐயங்களைக்கேட்டேன்.

கிராம்ஷி

ஆனால் பி.கோவிந்தப்பிள்ளை எங்களிடம் ‘அது குழப்பும் மார்க்சியம், அது ஒருவகையான அறிவார்ந்த தர்க்க விளையாட்டும் அதனடிப்படையிலான கோட்பாட்டுக் கட்டமைப்பும்தானே ஒழிய அதற்கு நடைமுறை மதிப்பில்லை என்று சொன்னார். மார்க்சியம் என்பது ஓர் அரசியல் செயல்பாடு, மார்க்சியத்தின் அனைத்துக்  கோட்பாடுகளும் நடைமுறை அரசியல் களஅனுபவத்தில் இருந்து வந்தாலொழிய அதற்கு பொருள் கிடையாது என்றார். அவர் சொல்லிவந்தது தொழிற்சங்க – கட்சி அரசியலேதான். பின்னாளில் கட்சியிலிருந்து வெளியேறியபின் இ.எம்.எஸ் ஸ்டடி சர்க்கிள் என்னும் அமைப்பை உருவாக்கி தூயமார்க்ஸியம் பேசலானார்.

ஆனால் ஞானியின் கடிதங்கள் தொடர்ச்சியாக அண்டானியோ கிராம்ஷியைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தன. அவருடைய உள்ளம் நவீன இலக்கியத்தை ஏற்கும் நிலையை அடைந்திருந்தது. நவீன இலக்கியத்தின் தன்னிச்சையான செயல்பாடுகளை, அதன் அழகியல் அக்கறைகளை, அதன் உணர்வுநிலைகளை, அது தானே உருவாக்க்கூடிய தரிசனங்களை, ஏற்கும் நிலையில் இருந்தார். மெய்யியல் என்பது இலக்கியத்தின் அடிப்படை  என்றும், இலக்கியத்திற்கே உரிய மெய்யியல் வெளிப்பாடு ஒன்று உண்டு என்றும், அவர் ஏற்றுக்கொண்டார்.

அவ்விவாதங்களின் விளைவாக 1990ல் நான் அண்டோனியோ கிராம்ஷி குறித்து சில அடிப்படைக் குறிப்புகளை எழுதியிருந்தேன், ஆனால் மார்க்சிய விவாதங்களுக்குள் செல்லாமல் இலக்கியவாதியின் எல்லைக்குள் நின்றே அவருடைய அணுகுமுறைகளைப் பற்றி எழுதியிருந்தேன், நிகழில் எழுதினேன் என நினைவு.

அக்காலகட்டத்து ஞானி முற்றிலும் வேறுபட்ட தளங்களை சேர்ந்த அறிதல்களை மார்க்சியத்தின் பொருட்டு இணைக்க முடியுமா என்று பார்ப்பவராக இருந்தார். மார்க்சியம் உலகளாவிய ஒரு தரிசனமாக மாறவேண்டுமெனில், அனைத்து மக்களும் மார்க்சியத்துக்குள் வந்து தங்களிடத்தை கண்டடையவேண்டுமெனில், அது இறுக்கமான விதிகளாலான ஒரு நிறுவனமாக இருக்கக்கூடாது; தொடர்ந்து அனைத்து கலாச்சாரத் தரப்புகளுடனும் உரையாடும் ஒரு மையத்தரிசனமாகவே தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஞானி நினைத்தார்.

இந்தப்பார்வையின் அடிப்படையில் தான் புதுமைப்பித்தனை, மௌனியை,  சுந்தர ராமசாமியை, ஜானகிராமனை ஞானி அணுகினார். ஞானியைபொறுத்த அளவில் அவருடைய எல்லா   சிந்தனைகளுக்கும் அடிப்படையாக அமைவது மார்க்சியமே. ஆனால் மார்க்ஸியம் அவருக்கு மாறாத சிந்தனைச் சட்டகம் அல்ல, அது ஒரு பாதை. அதனூடாகச் செல்வதே முக்கியம். அது அவருக்கு மதநம்பிக்கை அல்ல, அது மானுடகுலம் அதன் நீண்ட மெய்த்தேடல் வழியாகக் கண்டடைந்த ஒரு தரிசனம்

மார்க்சியம் எங்கு வெல்கிறது, எங்கு தோற்கிறது என்பதே அவருடைய பார்வையை தீர்மானித்தது. மார்க்சியம் தன்னை ஒரு இறுக்கமான கட்டமைப்பாக மாற்றிக்கொள்ளும்போது அவ்விதிகளை உறுதியாக கடைபிடிப்பவர்கள், அதற்கப்பால் செல்லும் அனைவரையும் தண்டிக்க தயங்காதவர்கள், தலைமைப் பொறுப்பில் வருகிறார்கள். தன்னியல்பாக அது சர்வாதிகாரம் நோக்கி செல்கிறது, அழிவுதன்மை அடைகிறது. மார்க்சியம் ஒரு அடிப்படையான மனிதத்தரிசனமாக மாறி தன்னுடன் உரையாடும் அனைத்து தரப்புகளையும் தன்னுள் இழுத்துக்கொண்டு, தனக்குரியவகையில் உருமாற்றிக்கொண்டு, தொடர்ந்து தன்னை வளர்த்துக்கொள்ளும்போது அது வெல்ல முடியாததாக ஆகிறது என அவர் நினைத்தார்.

மார்க்சியம் வாலி போல் இருக்கவேண்டும் என்று அவர் ஒருமுறை சொன்னார் எதிர்ப்படுபவர்களின் ஆற்றலில் பாதியை அது தான் எடுத்துக்கொள்ளவேண்டும். [சகோதரருடன் சண்டைபோட்டுச் சாகவேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று நான் கேட்டேன்] மார்க்சியத்தின் அடிப்படை இலக்காக இருப்பது மானுடவிடுதலை, அதற்கு தேவையான் பொருளியல் விடுதலை அப்பொருளியல் விடுதலையை சாத்தியமாக்கக்கூடிய ஒட்டுமொத்த அமைப்பின் மாற்றம், அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஏற்கக்கூடிய உளவியல் மாற்றத்தை உருவாக்கும் பண்பாட்டு மாற்றம். எவ்வகையிலேனும் அந்தப் பண்பாட்டு மாற்றத்திற்குப் பங்களிக்கக்கூடிய அனைத்து ஆக்கங்களும் அதனால் ஏற்கப்படவேண்டும்.

பி.கோவிந்தப்பிள்ளை

இந்தகோணத்தில் அணுகியமையால் அவரால் இலக்கியத்தின் அத்தனை தரப்புகளுடனும் ஆக்கபூர்வமான ஒரு உரையாடலை தொடங்க முடிந்தது. அது ஒருவகையில் தமிழக மார்க்சிய இயக்கத்தின் உச்சத்தருணம், பொற்தருணம் என்றுதான் சொல்வேன். அது நீண்டநாட்கள் நீடிக்கவில்லை, என்பதும் மார்க்ஸியத் தரப்பு ஞானி போன்றவர்களுக்கு இடமேயில்லாமல் ஆனது என்பதும் வரலாறு. இரண்டாயிரத்துக்குப்பின் மார்க்ஸியத் தரப்பு சுருங்கி குறுங்குழுமனநிலை கொள்ளத் தொடங்கியது. அதன் பார்வைவிரிவுகள் மறைந்தன.இன்று மார்க்ஸியநோக்கில் எழுதும் விமர்சகர்களில் ஓர் இலக்கியவாசகன் குறைந்த அளவிலேனும் பொருட்படுத்தவேண்டிய எவருமில்லை, இலக்கியத்தளத்தில் ஓரு மிகஎளிய வாசகனுக்குத் தெரிந்ததற்குமேல்  எதையாவது சொல்லக்கூடியவர்களும் எவருமில்லை.

அதோடு இன்று மேலும்மூர்க்கமாக இயந்திரவாதம் திரும்பி வந்திருக்கிறதுது. சொல்லப்போனால் அறுபதுகளின் மனநிலைக்கும் பின்னால் செல்ல ஆரம்பித்தனர் மார்க்ஸியர். போதிய வாசிப்போ, மக்கள்பணிசெய்த அனுபவமோ, உண்மையான நம்பிக்கையோ இல்லாதவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கலாயின. அவர்கள் வெறும் ஊடகவிற்பன்னர்கள், முகநூலர்கள். விளைவாக மார்க்ஸியம் அதன் முரணியக்க வரலாற்றுப் பார்வையை எல்லாம் கைவிட்டுவிட்டு திராவிட இயக்கத்தின் சிறுமைநிறைந்த இனக்காழ்ப்புகளை எல்லாம் தூக்கிச் சுமக்கலாயிற்று. இன்று அக்குரல்களைச் செவிகொள்ளும் வாசகன் தன் நுண்ணுணர்வை முற்றாகவே இழந்து வெறும் பூசலாளனாக, காழ்ப்பாளனாக, இலக்கியத்தையே உணரமுடியாதவனாக ஆவான்.

உண்மையில் மார்க்ஸியத் தரப்பில் இன்று ஞானிக்கு தொடர்ச்சியே இல்லை, அவர்களிடம் அவருடைய செல்வாக்கு என்று அனேகமாக ஏதுமில்லை. அவருடைய செல்வாக்கும் பங்களிப்பும் நவீன இலக்கியவாதிகளிடம்தான் நீடிக்கின்றன.

என்னைப்பொறுத்தவரை அந்த காலகட்டத்தில் நான் மாற்றுத்தரப்பு அல்லது என்னுடன் என்னை மறுதலிக்கும் தரப்பு என்று நினைத்தவர்களிடம் கூட மிக நேர்மையான  ஒரு உரையாடலை முன்னெடுக்க முயன்றிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரடியாக கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலரை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அவர்களின் அனைத்து திறன்களையும் பங்களிப்புகளையும் அங்கீகரித்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் பலரைப்பற்றி என்னுடைய ஆரம்ப உளப்பதிவுகள் சற்று மிகையாகவே இருந்தன. அதைப் பதிவு செய்திருக்கிறேன். பலரிடம் ஓர் உரையாடலை தொடங்கும்பொருட்டு அவர்களைப் பாராட்டி, அவர்கள் தரப்பையே தொகுத்து அவர்களுக்கே எழுதி, மேற்கொண்டு விவாதிக்க உளப்பூர்வமாக முயன்றிருக்கிறேன்.

சிந்தா ரவி

ஆனால் ஞானி ஒருவரைத்தவிர மார்க்சியர்கள் என்று நான் நம்பிய எவரிடமும் எந்த வகையான உரையாடலையும் தொடங்க என்னால் இயலவில்லை என்பதைச் சொல்லியாகவேண்டும். பெரும்பாலானவர்களிடம் சலிப்பும் பின்னர் கடுமையான வெறுப்பும் விலக்கமுமே உருவாகியது.  தி.க.சி அவர்களுடன் தனிப்பட்ட நல்லுறவு மட்டுமே இருந்தது. மார்க்ஸியர்களில் ஒருசாரார் இயந்திரத்தனமாக ஐந்தாறு வரிகளுடன் நின்றுவிடுபவர்கள். இன்னொரு சாரார் மார்க்சியத்தை ஒரு முகமூடியாக கொண்டவர்கள், அடியில் குறுகிய பற்றுகளையும் தன்னலநோக்கங்களையும் அதன்விளைவான காழ்ப்புகளையும் மட்டுமே சிந்தனையாகக் கொண்ட வெறும் நபர்கள். முதல் வகையினருக்கு உதாரணமாக தி.க.சிவசங்கரன் போன்றவர்களை கூறுவேன். இரண்டாம் வகையினருக்கு உதாரணமாக பலர் உள்ளனர், பெயர்சுட்டும் தகுதியும் அற்றவர்கள்.

இவர்கள் இருசாரார் மீதும் தொடர்ந்து நான் அடைந்த ஏமாற்றங்கள் மார்க்சியத்தின் எல்லையே அதுதான் என்ற எண்ணத்தை நோக்கி என்னைத் தள்ளின, விதிவிலக்காக அமைந்தவர் ஞானி. நான் ஞானியை என் ஆசிரியராக எண்ணுவது இதனால்தான். அவருடைய அக்காலத்தைய மார்க்ஸியநோக்குடன் என்னால் உடன்பாடுகொள்ள முடியவில்லை என்றாலும் உரையாட மட்டுமே முடிந்தது. பிற்காலத்தைய தமிழ்த்தேசியக் கொள்கைகளுடன் உரையாடவும் இயலவில்லை. ஆனால் அவர் எனக்கு அணுக்கமான ஆசிரியராகவே நீடித்தார்.

ஞானி 1988 முதல் 2005 வரை தொடர்ந்து என்னிடம் உரையாடலில் இருந்தார் என்னுடைய சிந்தனைகளுக்கு ஐயங்களுக்கு விளக்கமும்மறுப்பும் அளித்துக்கொண்டிருந்தார். என்னுடைய பார்வையை பல்வேறு திசைகளில் கூர்மைப்படுத்தினார். சமூக இயக்கம் பற்றி நான் இன்று நம்பும் அடிப்படை மார்க்சியக் கோட்பாடுகள் அனைத்துமே ஞானியில் இருந்து உருவாகி வந்தவை. மார்க்சியத்தின் அரசியல் நடைமுறைகளை மறுப்பவனாக இருக்கையில் கூட மார்க்சியத்தின் வரலாற்று இயங்கியல் மீது எனக்கு இருக்கும் ஈடுபாடு ஞானி உருவாக்கியது

ஞானியினூடாகவே இந்தியாவின் முதன்மையான மார்க்சியர்கள் பலருடைய நூல்களை படிக்க முடிந்தது. அன்று அவர் அந்நூல்களை எனக்கு தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். நான் கோவை வந்து அவரை சந்தித்து இரண்டு நாட்கள் தங்கி உரையாடிவிட்டு நாகர்கோவில் சென்று சுந்தர ராமசாமியை சந்தித்து ஊருக்கு செல்வதுண்டு. அல்லது திரும்ப மறுவழியில் வருவேன். அவர்கள் இருவருமே நான் இரு புள்ளிகளிலுமாக அலைந்துகொண்டிருப்பதை அறிந்துகொண்டிருந்தார்கள்.

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் உட்பட மார்க்சிய அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த அத்தனை பேரையுமே இடதுசாரி அமைப்புகள் துரோகிகள் என்று முத்திரை குத்தி வடிகட்டி வசைப்பாடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் ஞானி சுராவின் படைப்புகளைப்பற்றி மிக விரிவான விமர்சனங்களை முன் வைத்தார். மார்க்சிய அடிப்படையில் சுராவின் உலகை பகுப்பாய்வு செய்தார். ஒரு சம்பிரதாயமான மார்க்சிய பார்வையில் குபராவோ ஜானகிராமனோ சுந்தர ராமசாமியோ நிலப்பிரபுத்துவ விழுமியங்களை சார்ந்தவர்கள், நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்துபவர்கள், நிலப்பிரபுத்துவ அழகியலை முன் வைப்பதினூடாக புரட்சி அழகியலுக்கு மாறான ஒன்றை நிறுவுபவர்கள், ஆகவே முற்றாக எதிர்த்து மறுக்கப்படவேண்டியவர்கள் என்றுதான் கொள்வார்கள்.

ஆனால் ஞானி இவர்களை   அணுகியதில் மிக நுட்பமான ஒரு மேலதிகப் பார்வை இருந்தது. ஒரு பண்பாடு ஒரு நிலையிலும் முற்றாகவே ஒற்றை திசையானதாக இருக்காது. மிக விரிந்த ஒரு பண்பாட்டுப் புலமெனில் அதற்குள்ளாகவே ஆதிக்க பண்பாட்டுக்கூறுகளும் இருக்கும் ,எதிர்ப்பண்பாட்டு கூறுகளும் இருக்கும். அதற்குள்ளாகவே நிலைத்தன்மையை விரும்பும் பண்பாட்டுக்கூறுகள் இருக்கும், மாற்றத்துக்கான  பண்பாட்டுக்கூறுகளும் இருக்கும். மாற்றத்துக்கான பண்பாட்டு கூறுகளை அனைத்து தளத்திலும் அடையாளம் கண்டு கொண்டு அவற்றை தொகுத்துக்கொள்வது மார்க்சியத்தின் கடமைகளில் ஒன்று, அதை செய்வதற்கு அறிவுக்கூரும் நுண்ணுணர்வும் வேண்டும்

ஒட்டுமொத்தப் மரபையே பண்பாட்டு இயக்கத்தையே நிராகரித்தால் மார்க்சியம் ஒருவகையான அடுக்களைப் பேச்சாகவே முடிந்துவிடும் என்றார் ஞானி. குபரா கு.அழகிரிசாமி சுந்தர ராமசாமி ஜானகிராமன் போன்றவர்களின் படைப்புகளில் மரபார்ந்த நிலைத்தன்மை கொண்ட பண்பாட்டுக்கூறுகள் உள்ளன,  மாற்றத்துக்கு எதிரானவை அவை. ஆனால் கூடவே மாற்றத்துக்கான பண்பாட்டுக்கூறுகளும் எதிர்ப்புக்கான பண்பாட்டுக்கூறுகளும் வலுவாகவே உள்ளன என்று அவர் கூறினார். அவை அவ்விரு சரடுகளின் முரணியக்கத்தால் நெய்யப்பட்டவை.

சுந்தர ராமசாமியின்  ‘கோயில் காளையும் உழவு மாடும்’ என்ற கதையை சுட்டி அவர் ஒருமுறை என்னுடன் உரையாடினார். அக்கதை ஒரு நாட்டுப்புறக் கதைபோலிருக்கிறது. அக்கதையின் உருவாக்கம் அல்ல மார்க்ஸியரின் கவனத்திற்குரியது, அதன் ஏற்புதான். அது வாசகனால் ஏன் உணர்வுபூர்வமாக ஏற்கப்படுகிறது? அதில் இருவர் வருகிறார்கள். மரபு துறவு என்னும் உயர்நிலையாக கருதும் தளத்தில் இருப்பவருக்குச் சமானமாக பலன்கருதாது உழைப்பவர் காட்டப்படுகிறார், அல்லது ஒருபடி மேலாகவே அவர் காட்டப்படுகிறார். கதை அதை வாசகன் ஏற்கும்படிச் செய்கிறது

ஆனால் உண்மையில் அந்த விழுமியம் நம் மண்ணில் இல்லை. இங்கே உழைப்பு ஒரு அருஞ்செயலாக கருதப்பட்டதில்லை, எந்த நிலப்பிரபுத்துவச் சூழலிலும் உழைப்பு கொண்டாடப்படுவதில்லை. அதை ஒரு கருத்தாகச் சொன்னால் சராசரி தமிழர்கள் ‘அதெப்டி, அவன் ஒரு கிணறுதானே வெட்டினான்?’என்று கேட்பார்கள். ஆனால் கதை நாட்டாரியல்சூழலில் சொல்லப்படுவதனால், பல்வேறு பண்பாட்டு உட்குறிப்புகளினால் அந்த உழைப்பு ஒரு தவம் என்று மாறிவிடுகிறது.

அவன் வெட்டியது கிணறு அல்ல ஒரு பாதைதான் என்றால்கூட அந்த மதிப்பு வந்திருக்காது என்றார் ஞானி. அந்த கிணறுவெட்டுபவன் ஒரு காந்தியத் தொண்டனாக, மார்க்ஸியத் தொண்டனாக இருக்கலாம். அக்கதை சுட்டுவது அவர்களை, ஆனால் அவர்களை அது சுட்டுவதை வாசகனின் மனம் அறிவதே இல்லை. இந்தப் பண்பாட்டுக்கூறுகளின் நெசவைத்தான் இலக்கியப்படைப்பில் வாசகன் கவனிக்கவேண்டும். இவை எப்படி கலைஞனால் மறு ஆக்கம் செய்யப்படுகின்றன என்று பார்க்கவேண்டும். அந்த மாற்றங்கள் வழியாக நம் பண்பாட்டின் ஆழத்திலேயே ஊடுருவமுடியும். அக்கதை தமிழ் முற்போக்கு எழுத்தின் முன்னுதாரணமான ஆக்கம் என்று ஞானி சொன்னார்.

அவர் அதேபோல சுட்டிப் பேசியது ஜானகிராமனின்  ‘பரதேசி வந்தான்’. அந்தக்குரல் மரபின்குரலாக மாறுவேடமிட்டு ஒலிக்கும் மாற்றத்தின் குரல். மரபான பண்டாரம் சொல்வதாக அந்த கதை வரும்போது, காலபைரவன் என்ற மரபுத்தொன்மம் அதில் ஏற்றிக்காட்டப்படும்போது அது ஏற்பைப் பெறுகிறது. அதை ஒரு அரசியல்தொண்டர் சொல்லியிருக்கலாம்.ஓர் ஏழை விவசாயிகூட சொல்லியிருக்கலாம். ஆனால் அதற்கு தொன்மப்பின்புலம் தேவையாகிறது

இவ்வகைக் கதைகள் பண்பாட்டுக்குள் உறையும் எதிர்ப்பை, அவ்வெதிர்ப்பை உருவாக்கும் விழுமியங்களைப் பதிவு செய்ப்வை; அந்தப்பண்பாட்டுக்கூறுகள் மார்க்சியத்துக்கு முக்கியமானவை ,தவிர்க்க கூடாதவை. மார்க்சியர்கள் அவற்றை உள்ளிழுத்து கற்று மேலும் வலுவாக முன்னிறுத்துகையில் மட்டுமே உண்மையான கலாச்சார உரையாடலை மக்களிடம் நிகழ்த்தமுடியும், வெல்ல முடியும் என்று ஞானி கருதினார்

[மேலும்]

பரதேசி வந்தான் தி ஜானகிராமன்

 

முந்தைய கட்டுரைகாந்தி காட்சிகள்
அடுத்த கட்டுரைதனிமைக்கால இசை