கோதையின் தொட்டிலில்

இந்த ஊரின் பெயர் எலமஞ்சரி லங்கா. லங்கா என்றால் ஆற்றைடைக்குறை என்று பொருள். கோதாவரி ஒரு மூன்று பெரும் பெருக்குகளாக இங்கே ஓடுகிறது. ஒவ்வொரு பெருக்குக்கும் நடுவே மிகப்பெரிய வண்டல்திட்டுக்கள். கோதையை நோக்கி இரு ஆறுகள் வந்து கலக்கின்றன. அந்த இரு ஆறுகளும் வலமும் இடமும். கோதையின் மூன்று பெருக்குகளும் நேர்முன்னால். கோதையின் உயர்ந்த கரைமேல் நீர்வெளியை நன்றாகப்பார்க்கும்படி தூண்கள்மேல் கட்டப்பட்ட ஓய்வுமாளிகை இது.

பகலில் வெளியே வெள்ளி அருவி போல பொழிந்துகொண்டிருந்தது வெயில். கோதாவரியின் நீர்வெளி உருகிவழியும் வெள்ளி. ஆனால் இந்த மாளிகையில் குளிர்சாதனத்தை இதுவரை ஒருமுறைகூட போடவில்லை. மின்விசிறியை போடுவதே குறைவு. படுக்கையறை கூரைமுக உயரமானது. தரையில் கருங்கல். ஆகவே குளிர் உள்ளேயே இருந்தது. வெளியே கோதையை நோக்கிய கூடத்தில்தான் பெரும்பாலும் பகல்முழுக்க இருக்கிறோம். முழுவாழ்க்கையையே அங்கே வாழலாம். வானில்மிதக்கும் ஓர் உப்பரிகை. மெத்தையிடப்பட்ட இருக்கைகள் படுக்கைகள் .சலிக்காத கோதை வெளி.

நானும் தனசேகரும் இங்கே வந்து இப்போது வெறும் மூன்றுநாட்கள்தான். ஆனால் இங்கேயே மாதக்கணக்காக இருப்பது போல் இருக்கிறது. ஓர் ஊரில் வந்து சுற்றிப்பார்த்துவிட்டுச்செல்வது ஒருவகை அனுபவம் என்றால் அங்கேயே தங்கியிருப்பது இன்னொருவகை. முதல்பார்வையின் மனக்கிளர்ச்சி அடங்கி மனம் இயல்பாகும்போதுதான் காட்சிகள் ஆழமாக நம்முள்ளே செல்லும். அங்கெ நாம் பார்ப்பவை ஒரு வழக்கமாக ஆக வேண்டும். பெரிய விஷயங்களை விட்டுவிட்டு சின்னச்சின்ன விஷயங்களை நாம் கவனிக்க ஆரம்பிக்கவேண்டும். எனக்கு காசி அப்படி உள்ளே இறங்கிய ஊர்.

நான் எழுதிக்கொண்டிருக்கும் கதைக்கு எப்படியோ ஒருபெரும் நதி முன்னால் இருந்தாகவேண்டியிருக்கிறது. நதி காலம்போல. பண்பாடு போல அழியாத ஒரு ஒழுக்கு. மனிதர்களை சிறியவர்களாக அர்த்தமற்றவர்களாக ஆக்கும் நிரந்தரம் அது. அதன் கரையில் நின்றால்தான் வரலாறு புரிகிறது. சென்றகாலத்தில் மூழ்க முடிகிறது. நான் என்பதில் இருந்து எழுந்து மானுடம் என உணர முடிகிறது.

இதற்குள் ஒரு நாளொழுங்கு உருவாகிவிட்டிருக்கிறது. காலையில் ஐந்தரைக்கு எழுகிறேன். உடனே ஒரு பச்சை டீ. பரஞ்சோதி என்ற தயாரிப்பாளர் இலங்கையில் இருந்து கொண்டுவந்தது. உலகின் மிகச்சிறந்த டீ என்றார். உண்மைதான். இத்தனை மென்மையான சுவையை நான் அறிந்ததில்லை. மென்மை கொள்ளும்தோறும் மேன்மையடையக்கூடியதுதான் சுவை போலும். அதன்பின் ஒரு நீண்ட காலை நடை. கோதையின் நீர்வெளியில் உதயம் எழுவதை பார்ப்பேன். அந்தக்காலைநேரத்தில் கோதையில் செம்படவர்கள் படகுகளில் சென்று இரவு விரித்துவைத்த வலைகளை எடுத்துக்கொண்டிருப்பார்கள். வலைகளை இழுத்துச்சேகரித்து துள்ளும் மீன்களை பிடித்து கூடைக்குள் போட்டுக்கொண்டு புன்னகை செய்வார்கள்

கோதையை நம்பி ஒரு மீனவச்சமூகமே உள்ளது. ஆற்றுக்கரைமுழுக்க அவர்களின் கிராமங்கள்தான். தமிழகத்தில் நமக்கு வீராணத்தில்மட்டும்தான் நன்னீரை நம்பி வாழும் மீனவச்சமூகம் உள்ளது. நம் ஆறுகளெல்லாமே கோதையுடன் ஒப்புநோக்க ஓடைகள்தான். காவேரி கொஞ்சம் பெரிய ஓடை.

கோதையில் பரவும் வெயிலை அளாவியபடி படகுகள் செல்கின்றன. கொக்குகளின் படைகள் நீர்மேல் பறந்து சதுப்பு பரவிய ஆற்றிடைக்குறைகளில் அமர்கின்றன. எருமைகளின் படைகள் சிறிய கூட்டங்களாக நீரில் நீந்திசென்று சதுப்புகளில் ஏறி மேய்கின்றன. கரைகள் முழுக்க அடர்ந்த தென்னைமரக்கூட்டங்கள். தென்னைமரங்களால் ஆன தொடுவானம். அவற்றில் பறவைக்கூச்சல்கள். கூட்டம்கூட்டமாக எழும் குருவிகள். உயிர்வெளி. கோதை உயிரின் பெரும்பெருக்கு.

ஏழுமணிக்கு திரும்பிவந்து இன்னொரு பச்சை டீ. அதன்பின் ஒன்பதுவரை எழுத்து. நடமாடுவது தெரியாமல் நடமாடும் ஒரு வயதான பணியாளர் மட்டும்தான் துணை எங்கள் இருவருக்கும். அவர் ஊருக்குள் சென்று காலையுணர்வுடன் மெல்ல திரும்பி வருவார்.அதை உண்டபின் மீண்டும் எழுத்து. பன்னிரண்டரை வரை. நடுவே சிறிய இடைவேளைகளில் உப்பரிகைமேலேயே எளிய உடற்பயிற்சிகள் செய்வேன். இங்கே இருந்தபடி ஒருநாளில் எத்தனைநூறு முறைகோதையைபார்ப்பேன் என்றே சொல்லமுடியாது. காலையில் சூரியன் பரவிய கோதையை. மாலையில் சூரியன் அணையும் கோதையை. எப்போதும் கண் அதன் மேலேயே இருந்துகொண்டிருப்பதை ஒரு ஆச்சரியமாகவே நினைத்துக்கொள்கிறேன்

இந்தப்பகுதி எலமஞ்சரி ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி பிரம்மாண்டமான தென்னந்தோப்புக்குள் உள்ளது. சுற்றி வீடே இல்லை. தோட்ட ஊழியர்களின் சில குடில்கள் உள்ளே இருக்கின்றன. காலையிலேயே ஆங்காங்கே வேலைகள் ஆரம்பித்துவிடுகின்றன. நல்ல வண்டல். ஆகவே தென்னைகள் செழித்து தளதளக்கின்றன. சுற்றிலும் பெரிய பாத்திகளைக் கட்டி கோதைநீரை மோட்டாரால் ஏற்றி தேக்கி புலியிறால் வளர்க்கிறார்கள். அந்த பாத்திகளில் நீரை ஓர் மின் யந்திரத்தால் கலக்கிக்கொண்டே இருப்பார்கள். மெல்லிய இயந்திர உறுமல் இந்தப்பகுதியின் இயற்கையுடன் கலந்து பகல் முழுக்க ஒலிக்கிறது

மதியம் உணவு. தீ கலந்த உணவு. ஆனால் மிகச்சுவையானது. சாம்பார் கறிக்குழம்பு இறால்குழம்பு எதுவானாலும் சுவைதான். ஆனால் சாப்பிட்டபின் பாளம்பாளமாக தயிரை விட்டு வாயை ஆற்றவேண்டும். மறுநாளைய விளைவு பற்றி கவலைகொள்ளலாகாது. உண்டபின் உறங்கலாகாது என தனசேகர் வாக்கு. ஆகவே வெயில் பொழிந்து மயங்கிக்கிடக்கும் கோதையைப்பார்த்துக்கொண்டு அரைமணிநேரம் பாட்டு கேட்பேன். மதிய நேரத்தில் வானொலியில் ஒலிக்கும் பாட்டுக்கே ஒரு தனி மயக்கம் உண்டு என சிறுவயதில் நினைத்திருக்கிறேன். இன்று சந்திரபாபுவின் பாட்டுக்களில் இருந்தோம். அதன்பின் நான்குமணிவரை தூக்கம்

மாலை நான்கரைமணிக்கு கிளம்பி ஒரு நடை. கருஞ்சதுப்பு படிந்த நதிக்கரைமேடுகளில், தென்னந்தோப்புகளில், ஊர்ச்சாலைகளில். சூரியன் சிவந்தணையும் கோதையின் கரையில் அமர்ந்து இருள் நிறையும் தோப்புகளில் பறவைகளின் குரல்களை கேட்டுக்கொண்டிருப்போம். அதன்பின் மீண்டும் அறை. மீண்டும் பச்சை டீ. மீண்டும் எழுத்து. ஒன்பதரை வரை. ஒன்பதரைக்கு நான் பழங்கள். ஆப்பிள் வாழைப்பழம். தனா சப்பாத்தியும் குருமாவும்.

அதன்பின் இரவின் மடியில் . இந்த நேரத்துக்கு பழைய பாட்டுகள் போல எதுவுமே பொருந்துவதில்லை. இளையராஜாகூட புதியவர்தான். இரவின் மென்மையுடன் மிகப்பொருந்திப்போகும் குரல்கள் ஏ.எம்.ராஜாவும் சுசீலாவும்தான் என்று தோன்றுகிறது. பட்டுபோல நெளியும், தூய எண்ணைபோல வழியும், இறகுபோல வருடும் குரல்கள். இரவு பதினொருமணிக்கு எரியும் நிலக்கரிபோன்ற நிறத்தில் பிரம்மாண்டமாக கோதையின் மேல் எழுகிறது நிலா. அதிலிருந்து கோதை மேல் விரித்த செம்பட்டுப்பாதை போல தளதளக்கிறது ஒளி

இங்கே விளக்குகளை அணைத்துவிடுவோம். கோதை நீலத்தின் வண்ண மாறுபாடுகளாக ஒளியிலாது இருளில் வழியும். நிலாவில் இருந்து கண்ணெடுக்காமல் பாட்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் காரணமில்லாத நெகிழ்வு ஒன்று உள்ளே நிறைகிறது. அல்லது துன்பம் இல்லாத துக்கம். பன்னிரண்டு மணிவரை. படுக்கச்செல்லும்போது வாழ்க்கையின் மறக்கவியலா நாட்களில் ஒன்றை அந்தரங்கம் குறித்துக்கொள்கிறது.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம் வரிசை கதைகள்-கடிதங்கள்